மரணமும் மறுமையும் – 21 (மஹ்ஷரில் மனிதர்களின் நிலை 2)

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

மறுமை நாளில் மனிதர்கள் அனைவரும் இறைவன் நிற்பார்கள். சூரியன் தலைக்கு அருகில் கொண்டு வரப்படும். கடுமையான வியர்வையில் மனிதர்கள் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருப்பார்கள், மனிதர்கள் பல்வேறுபட்ட நிலைகளில் கொண்டு வரப்படுவார்கள், போன்ற தகவல்களை கடந்த உரையிலே பார்த்தோம்.

அதில் மீதம் உள்ள சில தகவல்களையும், சொர்க்கம் அல்லது நரகம் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன், மஹ்ஷரில் சில கூட்டத்தாருக்கு வேதனை தரப்படும். அது தொடர்பான செய்திகளை இந்த உரையில் பார்ப்போம்.

பிறரது சொத்தை அபகரித்தவர்

أَنَّ سَعِيدَ بْنَ زَيْدٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ :

سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : مَنْ ظَلَمَ مِنَ الأَرْضِ شَيْئًا طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டாரோ அவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார்.

அறி: சயீத் பின் ஸைத் (ரலி),
நூல்: (புகாரி: 2452)

மோசடி செய்பவர்களின் நிலை

இறையச்சம் இல்லாமல் பிறருக்குரிய பொருளாதாரத்தை, பொருட்களை மோசடி செய்து சுகபோக வாழ்க்கை வாழும் மக்கள் பலர் இருக்கிறார்கள்.

அடுத்தவர்களுக்குச் சொந்தமானதை அபகரிக்கும் மோசடிக்காரர்கள் சமுதாய மக்களிடத்தில் இருந்து மறைந்து கொள்ளலாம்; தங்களது மோசடியை மறைத்துக் கொள்ளலாம். ஆனால் மறுமை நாளில் இவ்வாறு தப்பிக்க இயலாது. இவர்களின் முகத்திரையை மற்றவர்களின் முன்னிலையில் வல்ல இறைவன் கிழித்தெறிவான்.

இத்தகைய மோசடி மன்னர்களுக்கு பல இழிவான நிலைகளைக் கொடுத்து                                      கேவலப்படுத்துவான். மோசடிக்காரர்கள் தாங்கள் செய்த மோசடிப் பொருட்களைச் சுமந்து கொண்டிருப்பார்கள். அவர்களை இனம் காட்டும் விதமாக அவர்களுக்கு அசிங்கமான முறையில் கொடி ஒன்று குத்தப்பட்டிருக்கும்.

இவ்வாறான வெட்கக்கேடான நிலையில் வெட்டவெளி மைதானத்தில் மற்றவர்களுக்கு மத்தியில் உலா வந்து கொண்டிருப்பார்கள். இந்த அவலத்தை அறிந்து கொண்டால் நிச்சயமாக யாரும் மோசடி செய்வதற்குக் கடுகளவும் நெருங்க மாட்டார்கள் என்பதே உண்மை.

وَمَا كَانَ لِنَبِىٍّ اَنْ يَّغُلَّ‌ؕ وَمَنْ يَّغْلُلْ يَاْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيٰمَةِ‌ ۚ ثُمَّ تُوَفّٰى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ

மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தவர் மோசடி செய்த பொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 3:161)

مَنِ اسْتَعْمَلْنَاهُ مِنْكُمْ عَلَى عَمَلٍ فَكَتَمَنَا مِخْيَطًا فَمَا فَوْقَهُ كَانَ غُلُولاً يَأْتِى بِهِ يَوْمَ الْقِيَامَةِ ». قَالَ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ أَسْوَدُ مِنَ الأَنْصَارِ كَأَنِّى أَنْظُرُ إِلَيْهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اقْبَلْ عَنِّى عَمَلَكَ قَالَ « وَمَا لَكَ ». قَالَ سَمِعْتُكَ تَقُولُ كَذَا وَكَذَا. قَالَ « وَأَنَا أَقُولُهُ الآنَ مَنِ اسْتَعْمَلْنَاهُ مِنْكُمْ عَلَى عَمَلٍ فَلْيَجِئْ بِقَلِيلِهِ وَكَثِيرِهِ فَمَا أُوتِىَ مِنْهُ أَخَذَ وَمَا نُهِىَ عَنْهُ انْتَهَى

அதீ பின் அமீரா அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்திருந்து, பின்னர் அவர் ஓர் ஊசியையோ அதை விடச் சிறியதையோ நம்மிடம் (கணக்குக் காட்டாமல்) மறைத்துவிட்டால் அது மோசடியாகவே அமையும். அவர் மறுமை நாளில் அந்தப் பொருளுடன் வருவார்” என்று கூறியதை நான் கேட்டேன்.

அப்போது அன்சாரிகளில் ஒரு கறுப்பு நிற மனிதர் எழுந்து, -அவரை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது – “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தாங்கள் ஒப்படைத்திருந்த பணியை நீங்கள் (திரும்ப) ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அவர், “தாங்கள் இன்னின்னவாறு கூறியதை நான் கேட்டேன்” என்றார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் இப்போதும் அவ்வாறே கூறுகிறேன். நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்தால், அவர் அதில் கிடைக்கும் சிறியதையும் அதிகத்தையும் (நம்மிடம்) கொண்டுவந்து சேர்க்கட்டும். பிறகு எது அவருக்கு வழங்கப்படுகிறதோ அதை அவர் பெற்றுக்கொள்ளட்டும். எது அவருக்கு மறுக்கப்படுகிறதோ அதிலிருந்து அவர் விலகிக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

நூல்: (முஸ்லிம்: 3743) , 3266

عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ:

إِنَّ الْغَادِرَ يُنْصَبُ لَهُ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ فَيُقَالُ هَذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்படும். அப்போது “இது இன்னார் மகன் இன்னாரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)” என்று கூறப்படும்.

அறி: இப்னு உமர் (ரலி),
நூல்: (புகாரி: 6178) , 6177

யாசகம் கேட்பவர்களின் நிலை

குறித்த நேரத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டும்; மற்றவரிடம் கைநீட்டி சம்பளம் வாங்க வேண்டும் என்பதற்குச் சோம்பல்படும் சிலர், பிறரிம் யாசகம் கேட்பதையே தொழிலாகக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஆரோக்கியமான கை கால்கள் இருந்தும் உழைக்காமல் யாசகம் கேட்டு ஊரெங்கும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி மற்றவர்களுக்கு மத்தியில் சுயமரியாதை இழந்து குறுக்கு வழியில் கஷ்டப்படாமல் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பிச்சையெடுப்பவர்கள், மறுமையில் மிகவும் மோசமான நிலையைச் சந்திப்பார்கள். நல்ல விதமாக இருந்தும் பிச்சையெடுக்கிறோமே? நாலுபேர் நம்மை ஏளனமாகப் பார்ப்பார்களே? என்ற நாணமில்லாதவர்கள், மறுமையில் முகத்தில் சிறிதளவும் சதையின்றி அருவருப்பான தோற்றத்தில் மக்களுக்கு மத்தியில் இருப்பார்கள்.

உடலெங்கும் சதை இருந்து, முகத்தில் மட்டும் கொஞ்சம் கூட சதையில்லாமல் வெறும் எலும்பாக இருந்தால் எந்தளவிற்கு சகிக்க முடியாத தோற்றமாக இருக்கும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.

مَا يَزَالُ الرَّجُلُ يَسْأَلُ النَّاسَ حَتَّى يَأْتِيَ يَوْمَ الْقِيَامَةِ لَيْسَ فِي وَجْهِهِ مُزْعَةُ لَحْمٍ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவு கூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளன்று வருவான்.

அறி: இப்னு உமர் (ரலி),
நூல்: (புகாரி: 1474) , 1475

ஜகாத் கொடுக்காதவர்களின் நிலை

மறுமையில் மஹ்ஷர் தண்டனையில் அதிகமாக கூறப்பட்டுள்ளது ஜக்காத் கொடுக்காதவனுக்கு உரிய தண்டனையே ஆகும்.

மார்க்கம் கூறும் கடமைகளுள் முக்கியமான ஒன்று ஜகாத் ஆகும். முஸ்லிம்களாக இருப்பவர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்கும்பட்சத்தில் தங்களது செல்வத்தில் இருந்து சிறு பகுதியை பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். இந்தப் பொதுநலத்தைப் போதிக்கும் ஒப்பற்ற திட்டமே ஜகாத். ஆனால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் பெரும் பொடும்போக்காக இருக்கிறார்கள்.

ஜகாத் எனும் கடமையை மனம் போன போக்கில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு ஜகாத் விஷயத்தில் கடமையை புறக்கணித்தவர்கள், தூதரின் போதனைக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் மறுமையில் மோசமான நிலையில் இருப்பார்கள். இத்தகையவர்களை மஹ்ஷரிலேயே அல்லாஹ் அடையாளம் காட்டுவான்.

எதற்கெல்லாம் இவர்கள் ஜகாத் கொடுக்கவில்லையோ அவற்றை சுமந்து கொண்டிருப்பார்கள். ஜகாத் கொடுக்கப்படாத செல்வங்களால் சூடுபோடப்படுவார்கள். முறையாக ஜகாத் கொடுக்கப்படாத செல்வம் உருமாற்றப்பட்டு அதனால் வேதனைப் செய்யப்படுவார்கள். இதை முஃமினாக செல்வந்தர்கள் கவனத்தில் கொள்வார்களா? தங்களை மாற்றிக் கொள்வார்களா?

تَأْتِي الإِبِلُ عَلَى صَاحِبِهَا عَلَى خَيْرِ مَا كَانَتْ إِذَا هُوَ لَمْ يُعْطِ فِيهَا حَقَّهَا تَطَؤُهُ بِأَخْفَافِهَا وَتَأْتِي الْغَنَمُ عَلَى صَاحِبِهَا عَلَى خَيْرِ مَا كَانَتْ إِذَا لَمْ يُعْطِ فِيهَا حَقَّهَا تَطَؤُهُ بِأَظْلاَفِهَا وَتَنْطَحُهُ بِقُرُونِهَا وَقَالَ وَمِنْ حَقِّهَا أَنْ تُحْلَبَ عَلَى الْمَاءِ قَالَ ، وَلاَ يَأْتِي أَحَدُكُمْ يَوْمَ الْقِيَامَةِ بِشَاةٍ يَحْمِلُهَا عَلَى رَقَبَتِهِ لَهَا يُعَارٌ فَيَقُولُ يَا مُحَمَّدُ فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ بَلَّغْتُ ، وَلاَ يَأْتِي بِبَعِيرٍ يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ لَهُ رُغَاءٌ فَيَقُولُ يَا مُحَمَّدُ فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ بَلَّغْتُ.

உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்ற வில்லையாயின் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அது போலவே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லை என்றால் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து தனது குளம்புகளால் அவனை மிதித்துத் தனது கொம்புகளால் அவனை முட்டும்.

மேலும் உங்களில் யாரும் கியாமத் நாளில் கத்திக் கொண்டிருக்கும் ஆட்டைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, (அபயம் தேடிய வண்ணம்) முஹம்மதே என்று கூற, நான் “அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை” என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன்.

மேலும் யாரும் (கியாமத் நாளில்) குரலெழுப்பிக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, முஹம்மதே என்று கூற, நான் “அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை” என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 1402)

தீர்ப்பு வழங்கும் வரை இந்த தண்டனை

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ، أَوْ وَالَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ ، أَوْ كَمَا حَلَفَ – مَا مِنْ رَجُلٍ تَكُونُ لَهُ إِبِلٌ ، أَوْ بَقَرٌ ، أَوْ غَنَمٌ لاَ يُؤَدِّي حَقَّهَا إِلاَّ أُتِيَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ أَعْظَمَ مَا تَكُونُ وَأَسْمَنَهُ تَطَؤُهُ بِأَخْفَافِهَا وَتَنْطَحُهُ بِقُرُونِهَا كُلَّمَا جَازَتْ أُخْرَاهَا رُدَّتْ عَلَيْهِ أُولاَهَا حَتَّى يُقْضَى بَيْنَ النَّاسِ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எனது உயிர் எவன் கையிலுள்ளதோ’ அல்லது “எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ’ அவன் மீது ஆணையாக! ஒருவனுக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து அவற்றிற்கான ஸகாத்தை அவன் நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெரிதாகவும் கொழுத்ததாகவும் வந்து அவனைக் (கால்) குளம்புகளால் மிதித்துக் கொம்புகளால் முட்டும்.

அவற்றில் கடைசிப் பிராணி அவனைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவன் மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்படும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்.

அறி: அபூதர் (ரலி),
நூல்: (புகாரி: 1403) , 4659, 1403, 1460

مَنْ آتَاهُ اللَّهُ مَالاً فَلَمْ يُؤَدِّ زَكَاتَهُ مُثِّلَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ لَهُ زَبِيبَتَانِ يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ يَأْخُذُ بِلِهْزِمَتَيْهِ ، يَعْنِي شِدْقَيْهِ ، ثُمَّ يَقُولُ أَنَا مَالُكَ أَنَا كَنْزُكَ ثُمَّ تَلاَ {لاَ يَحْسِبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ} الآيَةَ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்கு காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும்.

மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக்கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை – அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக்கொண்டு, “நான் தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்’ என்று சொல்லும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பிறகு,

“அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர், “அது தங்களுக்கு நல்லது’ என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்” (அல்குர்ஆன்: 3:180) எனும் இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 1403) , திர்மிதீ (2938)

மஹ்ஷரிலே சூடு போடும் தண்டனை:

ஏற்கனவே, சூரியன் தலைக்கு அருகில் கொண்டு வரப்பட்டு கடுமையான வெப்பத்திலும் வியர்வையிலும் சிரமப்பட்டு கொண்டிருக்கும் அந்த நிலையில், ஜகாத்தை சரியாக கொடுக்காதவர்களுக்கு நெருப்பால் சூடு போடப்படும்.

“பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும்.

அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி),
நூல்: (முஸ்லிம்: 1803)

இந்த கடுமையின் நடுவே அர்ஷின் நிழல்

எங்கு பார்த்தாலும் வெயிலும் வேதனையும் வியர்வையுமாக, அல்லாஹ்வின் வேதனையில் ஒரு கூட்டம் இருக்கும் போது, மற்றொரு சாரார் அர்ஷின் நிழலில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் இவ்வுலகத்தில் நேர்மையாக நடந்தவர்கள். மறுமையை நம்பி நன்மையும் செய்தவர்கள்.

سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ

அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் (அடைக்கலம்) அளிப்பான்:

  1. நீதி மிக்க ஆட்சியாளர்.
    2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.
    3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.
    4. அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகிலிருந்து) பிரிந்து சென்ற இருவர்.
    5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோதும், “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” என்று கூறியவர்.
    6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.
    7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல்: (புகாரி: 660)

அடுத்த அடுத்த உரையிலிருந்து மனிதர்கள் செய்த செயல்களின் பதிவேடு வழங்கப்படுதல் மற்றும் சாட்சிகளை இறைவன் கொண்டு வந்து விசாரித்தல் போன்ற பல தகவல்களை வரிசையாக காண்போம்.