21) பாதிக்கப்பட்டோருக்கு நலம் நாடுதல்

நூல்கள்: பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்

நாம் நலமாக இருக்கிறோம்; நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதால் சமுதாயத்தைப் பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் இருந்துவிடக் கூடாது. புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களிலோ அல்லது வேறு ஏதாவது விசயத்திலோ யாரேனும் பாதிக்கப்படும்போது. அவர்களின் துயர் துடைப்பதற்கு கொஞ்சமாவது உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு இன்னல்கள் நீங்கி நலமாக வாழ நாம் அதரவு அளிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பழங்களை விலைக்கு வாங்கிய ஒருவர் (நஷ்டமடைந்து) பாதிக்கப்பட்டார். அவருக்குக் கடன் அதிகமாகிவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். “இவருக்குத் தர்மம் செய்யுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே மக்கள் அவருக்குத் தர்மம் செய்தனர். அது அவரது கடனை அடைக்கப் போதுமான அளவுக்குத் தேறவில்லை. எனவே, அவருக்குக் கடன் கொடுத்தவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவரிடமிருந்து) கிடைப்பதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதைத் தவிர உங்களுக்கு வேறெதுவுமில்லை’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: (முஸ்லிம்: 3170)

நபி (ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்: ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். (செய்யும்படிக் கட்டளையிட்ட ஏழு செயல்கள்) இவைதாம்: 1. நோயாளிகளை நலம் விசாரிப்பது 2. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது 3. தும்மியவருக்கு அவர், ‘அல்ஹம்து லில்லாஹ்’ (‘அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’ என்று) சொன்னால், ‘யர்ஹமுக் கல்லாஹ்’ – (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று துஆ செய்வது 4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது 5. அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு உதவுவது 6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது 7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி), நூல்: (புகாரி: 2445)