21) அல்லாஹ் அல்லாதவர்களின் மீது சத்தியம் செய்ய வேண்டாம்
கஅபாவின் மீது சத்தியமாக என்று ஒரு மனிதர் சத்தியம் செய்வதை இப்னு உமர் (ரலி) செவியுற்றார்கள். அப்போது யார் அல்லாஹ் அல்லாததைக் கொண்டு சத்தியம் செய்கிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான் என்று நபியவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.
நூல்: (அபூதாவூத்: 3829)
இப்னு உமர் (ரலி) அவர்கள் அவர்கள் கூறியதாவது:
“எவர் சத்தியம் செய்ய விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில் குறைஷிகள் தம் முன்னோர்கள் மீது சத்தியம் செய்து வந்தார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள் “உங்கள் முன்னோர்கள் மீது சத்தியம் செய்யாதீர்கள்’என்று சொன்னார்கள்.
நூல்: (புகாரி: 3836)
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் தமது வாகனத்தில் பயணம் செய்தபடி தம்முடைய தந்தை பெயரால் சத்தியம் செய்து கொண்டிருந்த போது அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றடைந்தார்கள். “அறிந்து கொள்ளுங்கள்: உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான். (ஆகவே) சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்” என்று சொன்னார்கள்.
நூல்: (புகாரி: 6646)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் சத்தியம் செய்யும் போது லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறி விட்டாரோ அவர் (அதற்குப் பரிகாரமாக) லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்.
அறிவிப்பவர். அபூஹூரைரா (ரலி)
நூல். (புகாரி: 4860)