மரணமும் மறுமையும் -20

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

(மஹ்ஷரில் மனிதர்களின் நிலை-1)

கேள்விக் கணக்கை எதிர்நோக்கியபடி மஹ்ஷரில் நின்று கொண்டிருக்கும் மக்களின் நிலைகள் மற்றும் அடையாளங்கள் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் அறிவித்திருக்கும் செய்திகளை வரிசையாகத் தெரிந்து கொள்வோம்.

ஒன்றுத் திரட்டப்படும் இடம்

يَوْمَ تُبَدَّلُ الْاَرْضُ غَيْرَ الْاَرْضِ وَالسَّمٰوٰتُ‌ وَبَرَزُوْا لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ

அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும், வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும். ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள்.

(அல்குர்ஆன்: 14:48)

உலக அழிவுக்குப் பிறகு அனைவரும் உயிர் எழுப்பப்படுவர். அப்போது மக்கள் எந்த இடத்தில் ஒன்று திரட்டப்படுவார்கள் என்பது குறித்து இந்த வசனம் பேசுகிறது.

அறிஞர்களிடமிருந்து, இந்த வசனத்திற்கு இரண்டு வகையான விளக்கம் தரப்பட்டுள்ளது.

  1. இந்தப் பூமி அல்லாத வேறொரு சமதளத்தில் மக்கள் ஒன்று திரட்டப்படுவார்கள்.
  2. இதே பூமியில் தான் மக்கள் ஒன்று சேர்வார்கள். எனினும் இப்போதைய நிலையில் பூமி இராது. வேறு நிலைக்கும் மாற்றியமைக்கப்படும். இது தான் அதிகமான அறிஞர்களின் கருத்து.

உலக அழிவின் போது இந்தப் பூமி எவ்வாறு மாறும் என்பதை நபி (ஸல்) அவர்கள் இங்கு உவமைப்படுத்திக் கூறியுள்ளார்கள். மக்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு விசாரணைக்காக நிறுத்தப்படும் இடம் (மஹ்ஷர்) ரொட்டியைப் போன்று சமதளமாகவும் செந்தரையாகவும் இருக்கும்.

يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى أَرْضٍ بَيْضَاءَ عَفْرَاءَ، كَقُرْصَةِ النَّقِيِّ، لَيْسَ فِيهَا عَلَمٌ لِأَحَدٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று, தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் அனைவரும் ஒன்று திரட்டப்படுவார்கள். அந்தப் பூமியில் (மலை, மடு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது.

அறிவிப்பாளர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)
(முஸ்லிம்: 5380)

يَوْمَ نَـطْوِىْ السَّمَآءَ كَطَـىِّ السِّجِلِّ لِلْكُتُبِ‌ ؕ كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِيْدُهٗ‌ ؕ وَعْدًا عَلَيْنَا‌ ؕ اِنَّا كُنَّا فٰعِلِيْنَ

எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.

(அல்குர்ஆன்: 21:104)

குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில்..

وَكَانُوْا يَقُوْلُوْنَ اَٮِٕذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ – اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَ‏

“நாங்களும் முந்தைய எங்களின் முன்னோர்களும் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும்போது உயிர்ப்பிக்கப்படுவோமா?” என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

قُلْ اِنَّ الْاَوَّلِيْنَ وَالْاٰخِرِيْنَ‏ – لَمَجْمُوْعُوْنَ ۙ اِلٰى مِيْقَاتِ يَوْمٍ مَّعْلُوْمٍ‏

“முந்தையவர்களும், பிந்தையவர்களும் அறியப்பட்ட ஒரு நாளின், குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று திரட்டப்படுவார்கள்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 56:49-50)

சூரியன் அருகில் கொண்டுவரப்படும்

மறுமை நாளில் சூரியன் மக்களுக்கு அருகில் ஒரு மைல் தொலைவில் நெருங்கி வரும். அப்போது மக்கள் தங்களின் செயல்களுக்கேற்றவாறு வியர்வையில் மூழ்குவார்கள். சிலரது வியர்வை கணுக்கால் வரையிலும், சிலரது வியர்வை முழங்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை இடுப்பு வரையிலும், சிலரது வியர்வை வாய் வரையிலும் எட்டிவிடும்.

تُدْنَى الشَّمْسُ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الْخَلْقِ، حَتَّى تَكُونَ مِنْهُمْ كَمِقْدَارِ مِيلٍ – فَيَكُونُ النَّاسُ عَلَى قَدْرِ أَعْمَالِهِمْ فِي الْعَرَقِ، فَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى كَعْبَيْهِ، وَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى رُكْبَتَيْهِ، وَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى حَقْوَيْهِ، وَمِنْهُمْ مَنْ يُلْجِمُهُ الْعَرَقُ إِلْجَامًا

“மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு அருகில் கொண்டுவரப்படும். எந்த அளவுக்கென்றால், அவர்களுக்கும் அதற்கும் இடையில் ஒரு மைல் தொலைதூரமே இருக்கும். அப்போது மக்கள் தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் மூழ்குவார்கள். சிலரது வியர்வை அவர்களின் கணுக்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை முழங்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை இடுப்பு வரையிலும், சிலரது வியர்வை வாய் வரையிலும் எட்டிவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.

அறிவிப்பாளர்: மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள்,
(முஸ்லிம்: 5497)

يَعْرَقُ النَّاسُ يَوْمَ القِيَامَةِ حَتَّى يَذْهَبَ عَرَقُهُمْ فِي الأَرْضِ سَبْعِينَ ذِرَاعًا، وَيُلْجِمُهُمْ حَتَّى يَبْلُغَ آذَانَهُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமைநாளில் மனிதர்களுக்கு (அவர்களின் தலைக்கருகில் நெருங்கி வரும் சூரியனால்) வியர்வை ஏற்படும். அவர்களின் வியர்வை தரையினுள் எழுபது முழம் வரை சென்று, (தரைக்கு மேல்) அவர்களின் வாயை அடைந்து, இறுதியில் அவர்களின் காதையும் அடையும்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 6532)

உலகமே இருப்பினும் கொடுக்க விரும்புவார்கள்

وَلَوْ اَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِى الْاَرْضِ لَافْتَدَتْ بِهٖ‌ؕ وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَ‌ۚ وَقُضِىَ بَيْنَهُمْ بِالْقِسْطِ‌ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏

(அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; வேதனையைக் கண்டதும் உள்ளூரக் கவலைப்படுவார்கள். அவர்களுக்கிடையே நீதியாகத் தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 10:54)

காட்சிகள் பலவிதம் – காஃபிர்களின் நிலை

காஃபிர்களுக்கும், இஸ்லாத்தை ஏற்று பின்னர் இறைவனுக்கு இணை வைத்தவர்களுக்கும் மறுமை நாளில் மஹ்ஷரில் குறிப்பிட்ட சில அடையாளங்கள் இருக்கும். இவர்களின் முகமெல்லாம் கருத்து, புழுதிப் படிந்து, சோகமாக இருக்கும்.

وَوُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ عَلَيْهَا غَبَرَةٌ  تَرْهَقُهَا قَتَرَةٌ
اُولٰٓٮِٕكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ

அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும். அதைக் கருமை மூடியிருக்கும். அவர்களே (ஏக இறைவனை) மறுப்போரான பாவிகள்.

(அல்குர்ஆன்: 80:40-42)

يَّوْمَ تَبْيَضُّ وُجُوْهٌ وَّتَسْوَدُّ وُجُوْهٌ  ؕ فَاَمَّا الَّذِيْنَ اسْوَدَّتْ وُجُوْهُهُمْ اَكَفَرْتُمْ بَعْدَ اِيْمَانِكُمْ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏
وَاَمَّا الَّذِيْنَ ابْيَـضَّتْ وُجُوْهُهُمْ فَفِىْ رَحْمَةِ اللّٰهِ ؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏

அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கறுத்திருக்கும். “நம்பிக்கை கொண்ட பின் (ஏக இறைவனை) மறுத்து விட்டீர்களா? நீங்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் இவ்வேதனையை அனுபவியுங்கள்!” என்று முகங்கள் கறுத்தவர்களிடம் (கூறப்படும்).

(அல்குர்ஆன்: 3:106),107)

முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவன்

أَنَّ رَجُلاً قَالَ يَا نَبِيَّ اللهِ يُحْشَرُ الْكَافِرُ عَلَى وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ قَالَ أَلَيْسَ الَّذِي أَمْشَاهُ عَلَى الرِّجْلَيْنِ فِي الدُّنْيَا قَادِرًا عَلَى أَنْ يُمْشِيَهُ عَلَى وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ قَالَ قَتَادَةُ بَلَى وَعِزَّةِ رَبِّنَا.

ஒருமனிதர் “அல்லாஹ்வின் தூதரே! இறைமறுப்பாளன் மறுமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “இந்த உலகில் அவனை இரு கால்களினால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?” என்று (பதிலுக்குக்) கேட்டார்கள்.

அறி: அனஸ் (ரலி),
(புகாரி: 4760)

குருடனாக, ஊமையாக, செவிடனாக சிலர்

ஒவ்வொரு முஸ்லிமும், தம்மிடம் மார்க்கம் சம்பந்தமாக ஒரு செய்தி சொல்லப்படும் போது அந்தச் செய்தி சரியா? தவறா? என்று ஆராய்ந்து பார்க்கும் பழக்கம் கொண்டவராக இருக்க வேண்டும்.

பெரும்பாலான முஸ்லிம்கள் இவ்வாறு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம்; இந்த இரண்டுக்கு உட்பட்டே நமது அமல்கள் இருக்க வேண்டும் என்று மார்க்கச் செய்திகளை நாம் எடுத்துரைக்கும் போது காது கொடுத்துக் கேட்கவே மறுக்கும் மக்களைப் பார்க்கிறோம். அவர்கள் செய்து வரும் பித்அத்கள், அனாச்சாரங்களுக்கு எதிராக எடுத்துக் காட்டப்படும் மார்க்க ஆதாரங்களை ஏறெடுத்துப் பார்க்கவே தயங்குவதைப் பார்க்கிறோம்.

தாங்கள் செய்து கொண்டும் பிறருக்குப் போதித்துக் கொண்டும் இருக்கின்ற காரியங்கள் தவறானவை என்று தெரிந்த பிறகும் அத்தவறுகளை ஒப்புக் கொண்டு திருந்துவதற்கு முன்வராத பிடிவாதக்காரர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு, அல்லாஹ்வும் அவனது தூதரும் போதித்திருக்கும் செய்திகளை பொடும்போக்குத்தனமாகப் புறந்தள்ளும் மக்கள் மறுமையில் செவிடர்களாக குருடர்களாக ஊமைகளாக நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு இறைமறையில் ஏக இறைவன் எச்சரிக்கிறான்.

وَمَنْ يَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِ‌ ۚ وَمَنْ يُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُمْ اَوْلِيَآءَ مِنْ دُوْنِهٖ‌ ؕ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيٰمَةِ عَلٰى وُجُوْهِهِمْ عُمْيًا وَّبُكْمًا وَّصُمًّا‌ ؕ مَاْوٰٮهُمْ جَهَـنَّمُ‌ ؕ كُلَّمَا خَبَتْ زِدْنٰهُمْ سَعِيْرًا‏
ذٰلِكَ جَزَآؤُهُمْ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاٰيٰتِنَا وَقَالُوْۤا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِيْدًا‏

அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர்.

அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு அவனன்றி வேறு பாதுகாவலர்களை நீர் காணமாட்டீர். அவர்களை முகம் கவிழச் செய்து குருடர்களாக, ஊமைகளாக, செவிடர்களாக கியாமத்நாளில் எழுப்புவோம்.

அவர்களின் தங்குமிடம் நரகம். அது தணியும் போதெல்லாம் தீயை அதிகமாக்குவோம். நமது வசனங்களை அவர்கள் மறுத்ததாலும், “நாங்கள் எலும்பாகி மக்கிப்போகும் போது புதுப்படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவோமா?” என்று கூறியதாலும் இதுவே அவர்களுக்குரிய தண்டனை.

(அல்குர்ஆன்: 17:97-98)

இறை போதனைகளை மறந்தவன்

وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى‏
قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِىْۤ اَعْمٰى وَقَدْ كُنْتُ بَصِيْرًا‏
قَالَ كَذٰلِكَ اَتَـتْكَ اٰيٰتُنَا فَنَسِيْتَهَا‌ۚ وَكَذٰلِكَ الْيَوْمَ تُنْسٰى‏

எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத்நாளில் குருடனாக எழுப்புவோம். “என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?” என்று அவன் கேட்பான். “அப்படித்தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தவாறே இன்று மறக்கப்படுகிறாய்” என்று (இறைவன்) கூறுவான்.

(அல்குர்ஆன்: 20:124-126)

நீதம் செலுத்தாதவர்களின் நிலை

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தவர்களில் பலர் தங்களது மனைவிமார்களிடத்தில் நீதமாக நடக்காமல் இருக்கிறார்கள். ஒரு மனைவியின் பக்கம் மட்டும் சாய்ந்து விட்டு, மற்ற மனைவிக்கும் அவள் மூலம் பெற்றெடுத்த குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் சரியாகக் கவனிக்காமல் ஓர வஞ்சனையாக நடந்து கொள்கிறார்கள்.

மறுமையில் இந்த நீதமற்றவர்கள் தங்களது நிலையை வெளிச்சம் போடும் விதத்தில் ஒரு தோள் புஜம் சாய்ந்தவர்களாக நடந்து வருவார்கள். இவர்கள் பூமியில் இருக்கும் போது நல்ல தோற்றத்துடன் கம்பீரமாக நடைபோட்டிருக்கலாம். ஆனால் மறுமை நாளில் மக்கள் மத்தியில் கேவலப்படும் விதத்தில் இவ்வாறு ஒரு பக்கம் சாய்ந்து சப்பாணிகளாக வருவார்கள்.

مَنْ كَانَ لَهُ امْرَأَتَانِ يَمِيلُ لِإِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى جَاءَ يَوْمَ الْقِيَامَةِ أَحَدُ شِقَّيْهِ مَائِلٌ

“எவருக்கு இரு மனைவிகள் இருந்து (இருவரில்) ஒருவரை விட மற்றொருவரின் பக்கம் சார்பாக (ஒரு தலைப்பட்சமாக) செயல்படுகிறாரோ அவர் மறுமை நாளில் தமது இரு தோள் புஜங்களில் ஒன்று சாய்ந்தவராக வருவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி),
(நஸாயீ: 3942, 3881)

வட்டிக்காரர்களின் நிலை

வட்டி என்பது ஒரு தனி மனிதனுக்கு மட்டும் தீமை தரக்கூடியதல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தீங்கைத் தரும் பெரும்பாவமே வட்டியாகும். வட்டியினால் பலபேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன. சமுதாயத்தில் ஏராளமான தீமைகள், பிரச்சனைகள் உருவெடுக்கின்றன.

இப்படிப்பட்ட வட்டியினால் மற்றவர்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை; எனக்கு உலக ஆதாயமே முக்கியம் என்று சுயநலத்தோடு பொதுநலத்தை மறந்து பல மனிதர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் இழிவு என்ன தெரியுமா? பூமியில் வாழ்ந்த முதல் மனிதரிலிருந்து கடைசி மனிதர்கள் வரை எல்லோரும் நிற்கும் மாபெரும் சபையில் பைத்தியமாக உளறிக் கொண்டிருப்பார்கள்; புலம்பிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட கேவலம் வேண்டுமா? என்பதை வட்டி வாங்குபவர்கள் யோசிக்க வேண்டும்.

اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبٰوا‌ ۘ‌ وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا‌ ؕ فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَؕ وَاَمْرُهٗۤ اِلَى اللّٰهِ‌ؕ وَمَنْ عَادَ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான்.

தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 2:275)

உறவோ நட்போ பயன் தராது

நண்பன் நண்பனை விசாரிக்க மாட்டான்

وَلَا يَسْـَٔـلُ حَمِيْمٌ حَمِيْمًا ۖۚ‏

எந்த நண்பனும் நண்பனை விசாரிக்க மாட்டான்.

(அல்குர்ஆன்: 70:10)

فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ‏ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِيْهِۙ‏ وَاُمِّهٖ وَاَبِيْهِۙ‏  وَصَاحِبَتِهٖ وَبَنِيْهِؕ‏  لِكُلِّ امْرِیءٍ مِّنْهُمْ يَوْمَٮِٕذٍ شَاْنٌ يُّغْنِيْهِؕ

அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தாயையும், தந்தையையும், மனைவியையும், பிள்ளைகளையும் விட்டு ஓடுவான். அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.

(அல்குர்ஆன்: 80:34)

உறவினர் பயன் தரமாட்டார்.

لَنْ تَـنْفَعَكُمْ اَرْحَامُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ ۛۚ يَوْمَ الْقِيٰمَةِ ۛۚ يَفْصِلُ بَيْنَكُمْ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏

கியாமத் நாளில் உங்களின் உறவினரும், உங்கள் சந்ததிகளும் உங்களுக்குப் பயன் தரவே மாட்டார்கள். உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிப்பான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.

(அல்குர்ஆன்: 60:3)

அடுத்த உரையில்…

இதுவரை மஹ்ஷரில் மனிதர்கள் எந்தெந்த நிலையில் கொண்டு வரப்படுவார்கள், நிற்பார்கள் என்ற விவரங்களை பார்த்தோம். இன்ஷா அல்லாஹ் அடுத்த உரையில், சொர்க்கம் அல்லது நரகம் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன், மஹ்ஷரில் சில கூட்டத்தாருக்கு வேதனை தரப்படும். அது தொடர்பான செய்திகளை பார்ப்போம்.