20) கடன் தள்ளுபடி
கடன் கொடுத்தவர் ஒரு பாக்கியசாலி ஆவார். ஏனென்றால் கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிக் கொடுக்காமல் மரணித்தால் கடன் கொடுத்தவருக்கு அல்லாஹ் அதற்கான கூலியைக் கொடுக்கின்றான்.
ஆனால் அதே சமயம், கடனைத் தள்ளுபடி செய்து விட்டால் அல்லாஹ் நம்முடைய பாவத்தைத் தள்ளுபடி செய்கின்றான். “கடனை மன்னிக்க மாட்டேன்; மறுமையில் வந்து பார்க்கிறேன்’ என்று கூறிவிட்டால் மறுமையில் கிடைக்கும். அது குறைவாகத் தான் கிடைக்கும். ஆனால் கடனை மன்னித்துவிட்டால் அதைவிடப் பெரிய நன்மையை எதிர்பார்க்க முடியும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, அவரிடம் “நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?” எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், “வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் எனது ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்!” என்று கூறினார். உடனே, “அவரது தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்!” என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்!
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
மற்றோர் அறிவிப்பில், “சிரமப்படுபவருக்கு நான் அவகாசம் அளிப்பவனாகவும் வசதியானவரிடம் மிருதுவாக நடப்பவனாகவும் இருந்தேன்!” என்று அவர் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
இன்னோர் அறிவிப்பில், “வசதியானவருக்கு அவகாசம் வழங்கியும், சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்தும் வந்தேன்!” என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
மற்றோர் அறிவிப்பில் “வசதியானவரிடமிருந்து கடனைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்து வந்தேன்!” என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
இங்கு நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் எவ்வளவு தான, தர்மம் செய்தாலும் அதற்கு இப்படியான ஒரு வாய்ப்பை அல்லாஹ் தருவானா? இல்லை. ஆனால் கடனுக்கு இப்படியான ஒரு பாக்கியத்தை அல்லாஹ் வைத்துள்ளான்.
நாம் கடன் கொடுத்து, அந்தக் கடனைத் தள்ளுபடி செய்யும் போது, நான் இதை உனக்காகச் செய்யவில்லை. மாறாக எனக்கு அல்லாஹ் சுவர்க்கத்தைத் தரவேண்டும்; மறுமை வாழ்க்கையை அல்லாஹ் எனக்கு எளிதாக்க வேண்டும் என்று நினைத்து தள்ளுபடி செய்ய வேண்டும். மறுமை நன்மையை எதிர்பார்த்து இதைசெய்ய வேண்டும். அதே போல நபி (ஸல்) அவர்கள் ஒரு சம்பவத்தை சொல்லுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன் காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தனது (அலுவலரான) வாலிபரிடம், “(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக்கூடும்” என்று சொல்-வந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்த போது அவருடைய பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்து விட்டான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஒருவர் கடன் பட்டிருக்கிறார். இன்னொருவர் கடன் கொடுத்திருக்கிறார். அப்படி இருக்கும் போது கடன் வாங்கியவர் நம்மிடம் வந்து, எனக்காக அவரிடத்தில் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டால், நாம் சொல்வதைக் கடன் கொடுத்தவர் கேட்பார் என்றால் நாம் சென்று அவரிடத்தில் அந்தக் கடனை விட்டுக் கொடுக்குமாறோ, அல்லது அவகாசம் கொடுக்குமாறோ அல்லது மன்னித்து விடுமாறோ அவருக்காகப் பேசலாம்.
நபியவர்கள் தம்முடைய தோழர்களுக்காக இவ்வாறு பரிந்துரை செய்துள்ளார்கள். (புகாரி: 2706, 457, 471, 2418, 2424, 2710)
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில்) எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் வைத்து திருப்பித் தரும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டி-ருந்தபடியே அதைக் கேட்கும் அளவிற்கு குரல்கள் உயர்ந்தன. ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிருவரையும் நோக்கிப் புறப்பட்டார்கள். தமது அறையின் திரையை விலக்கி, “கஅப்!” என்றழைத்தார்கள். நான், “இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இதை (இந்த அளவை) உன் கடனி-ருந்து தள்ளுபடி செய்துவிடு!” என்று கூறி பாதியளவு கடனைக் குறைத்துக் கொள்ளும்படி (என்னிடம் விரலால்) சைகை செய்தார்கள். “அவ்வாறே செய்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அவர்களை நோக்கி,) “எழுந்து சென்று கடனை அடைப்பீராக!” என்று சொன்னார்கள்.
அதே போன்று ஜாபிர் (ரலி) அவர்களுக்காகவும் நபி (ஸல்) அவர்கள் பரிந்த்துரை செய்கின்றார்கள். ஆனால் கடன் கொடுத்தவர் அதனை ஏற்று கொள்ளவில்லை என்ற செய்தியையும் ஹதீஸ்களில் (புகாரி: 2127, 2395, 2396, 2406, 2601, 2709) காணமுடிகிறது.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தையார் உஹதுப் போரின் போது, அவர் மீது கடன் இருந்த நிலையில் (ஷஹீதாகக்) கொல்லப்பட்டு விட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.) நபி (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்து விட்டனர். ஆகவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம் பழங்களை நபி (ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, “நாம் உன்னிடம் காலையில் வருவோம்” என்று கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக (அருள் வளத்திற்காக) துஆ செய்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்தினேன். (முழுக் கடனையும் தீர்த்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதமாகி விட்டன.