2) இஸ்லாம் இறைவனுக்கு சொந்தமான மார்க்கம்!

நூல்கள்: பித்அத் ஓர் வழிகேடு

2) இஸ்லாம் இறைவனுக்கு சொந்தமான மார்க்கம்!

தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவனையன்றிப் பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோர், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் பக்கம் மிகவும் நெருக்கமாக்கி வைப்பார்கள் என்பதற்காகவே தவிர நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). எதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்களோ அதுபற்றி அவர்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். பொய்யர்களுக்கும், இறைமறுப்பாளர்களுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்: 39:3)

இஸ்லாம் என்பது அல்லாஹ்விற்கு சொந்தமான மார்க்கம் என்று இறைவன் இவ்வசனத்தில் குறிப்பிடுகிறான்.

அதற்கான பொருள் என்ன?

இஸ்லாத்தின் உரிமையாளன் அல்லாஹ் ஒருவன் தான் என்றால் அதில் சட்டம் சொல்லும் அதிகாரமும் ஒன்றை நன்மை என்றும் ஒன்றை தீமை என்றும் தீர்மானிக்கும் அதிகாரமும், இது ஹலால் என்றும் இது ஹராம் என்றும் தீர்மானிக்கும் அதிகாரமும், ஒன்றை வணக்கம் என்றும் நன்மை என்றும் வரையறுக்கும் அதிகாரமும் அவனுக்கு மட்டுமே இருக்கிறது.

மொத்தத்தில் இஸ்லாத்தில் சட்டம் இயற்றும் அதிகாரமும் உரிமையும் அவனை தவிர்த்து வேறு யாருக்கும் கிடையாது என்பதே இந்த வசனம் சொல்லும் தகவலாகும்.

பொதுவாகவே, ஒரு விஷயத்திற்கு யார் உரிமையாளரோ அவரே அது தொடர்பான சட்டங்கள் இயற்ற அதிகாரம் படைத்தவர் ஆகிறார். இதை உலக விஷயத்தில் நாம் தெளிவாக உணர்கிறோம்.

ஒருவருக்கு வீடொன்று சொந்தமாக இருக்கிறது. அதில் நாம் வாடகைக்கு இருக்கிறோம் எனில் அந்த வீட்டின் உரிமையாளர் அந்த வீடு தொடர்பாக அதன் வாடகை, முன்பணம், ஒப்பந்தம், தண்ணீர் செலவு, அதன் பராமரிப்பு போன்று என்னென்ன சட்டங்கள் விதிக்கிறாரோ அதற்கு நாம் கட்டுப்படுவோம். காரணம், இது அவர் வீடு. அதில் சட்டம் இயற்ற அவரே உரிமைப்படைத்தவர் என்பதினால் ஆகும்.

அதே சமயம், அந்த வீட்டிற்கு சற்றும் தொடர்பில்லாத ஒருவர் வந்து அந்த வீடு தொடர்பாக நமக்கு ஏதேனும் சட்டமோ நிபந்தனைகளோ விதித்தால் அதற்கு நாம் எந்த விதத்திலும் கட்டுப்படுவதில்லை. கட்டுப்படுதில்லை என்பதை தாண்டி இதை சொல்ல நீ யார்? என்று கோபம் கொள்கிறோம். காரணம், நமக்கு சட்டம் விதிக்க அதிகாரம் இல்லாத ஒருவர் நமக்கு சட்டம் சொல்வதை நம் மனம் ஏற்றுக் கொள்வதில்லை.

வீட்டில் வாடகை ஒப்பந்ததாரராக இருக்கும் போது என்று மட்டுமில்லாமல், ஒரு கடையாக இருந்தாலும், நாம் தொழிலாளியாக இருந்தாலும், கடனாளியாக இருந்தாலும் என எந்தவொரு நிலையாக இருந்தாலும் நமக்கு சட்டம் இயற்ற அதிகாரமும் உரிமையும் உள்ளவர் எவரோ அவரே சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு சற்றும் தொடர்பில்லாத ஒருவர் சட்டம் சொல்லி என்னை அதிகாரம் செய்வதை நான் விரும்ப மாட்டேன் என்று இருக்கிறோம்.

உலக விஷயத்தில் இவ்வாறு நமது ரோஷம் செயல்படுகிறது எனில் மார்க்க விஷயத்தில் நம்மை படைத்த இறைவனது உரிமையை இன்னொருவன் கையிலெடுக்க நினைக்கும் போது நமது நிலை எப்படி இருக்க வேண்டும்.

இஸ்லாம் இறைவனுக்கு சொந்தமான மார்க்கம் எனில் இதில் அனைத்து சட்டங்களையும் நன்மைகளையும் வணக்கங்களையும் சொல்லித் தருபவன் அல்லாஹ்வாக மட்டுமே இருக்க வேண்டும். அவனே இதன் உரிமையாளன். அவனே சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளவன். அவனைத் தவிர வேறு யாரும் மார்க்கத்தில் நீ இதை செய் அதை செய் என்று என்னிடம் சொல்வதற்கு உரிமையில்லை என்றல்லவா நமது நிலையிருக்க வேண்டும்?

மேற்படி வசனத்தில், இந்த மார்க்கத்தில் சட்டம் இயற்ற அதிகாரம் படைத்த அல்லாஹ்வைத் தவிர வேறு பொறுப்பாளர்களை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்கு கட்டுப்பட்டு செல்வோரை பொய்யர்கள் மறுப்பாளர்கள் என்று கண்டிப்பதின் மூலம் மற்றவர்கள் சொன்னதை மார்க்கமாக பின்பற்றினால் அது நன்மையையோ வெற்றியையோ பெற்றுத் தராது. அது இஸ்லாமாகவும் ஆகாது என்பதைதான் அல்லாஹ்  நமக்கு கற்றுத் தருகிறான்.

“அவனையன்றி நீங்கள் வணங்குபவை, நீங்களும் உங்கள் முன்னோரும் சூட்டிக் கொண்ட (வெறும்) பெயர்களைத் தவிர வேறில்லை. இதற்கு எந்த ஆதாரத்தையும் அல்லாஹ் அருளவில்லை. அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே தவிர வேறில்லை.

(அல்குர்ஆன்: 12:40)

ஒன்றை மார்க்கம் என்று நாம் செய்வதாக இருந்தால் இந்த வசனத்தின் படி அல்லாஹ்விடமிருந்து ஏதேனும் ஒரு ஆதாரம் நமக்கு இருக்க வேண்டும். ஏனெனில் மார்க்கத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் என்பது அல்லாஹ்விற்கு மட்டுமே இருக்கிறது. அவனையன்றி யாருக்கும் அந்த அதிகாரம் கிடையாது.

இதற்கு மாற்றமாக, அல்லாஹ் கற்றுத் தராத அல்லது ஆதாரமற்ற ஒன்றை மார்க்கம் என்றும் வணக்கம் என்றும் நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் இறையதிகாரத்தை மற்றவர்களுக்கு தாரை வார்க்கும் காரியமாகும். இது தான் பித்அத் என்று மார்க்கம் சொல்கிறது. சரி அல்லாஹ் நமக்கு மார்க்கத்தை எப்படி கற்றுத் தருகிறான்.

இறைவன் இறைத்தூதர்களை நியமித்து அவர்களின் மூலம் வஹி எனும் இறைச் செய்திகளை அருளி நமக்கு மார்க்கத்தையும் அதன் சட்ட திட்டங்களையும் தந்துள்ளான்.

உங்கள் இறைவனிடமிருந்து எது உங்களுக்கு அருளப்பட்டதோ அதையே பின்பற்றுங்கள்! அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.

(அல்குர்ஆன்: 7:3)

இறைவன் அருளிய இறைச் செய்திகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். அந்த வஹி மட்டுமே பின்பற்றத் தகுதியானது. அல்லாஹ் அல்லாத யாரையும் மார்க்கம் இயற்றும் பொறுப்பாளர்களாக ஆக்கிக்கொள்ள கூடாது என்ற மார்க்கத்தின் அடிப்படையை ஒரே வசனத்தில் உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் உறுதிப்படுத்தி இறைவன் சொல்கிறான். இன்னும் ஏராளமான வசனங்கள் நமக்கு இந்த அடிப்படையை விளக்குகிறது.

மேலும், இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்துரைக்க இறைவனால் நியமிக்கப்பட்ட இறைத்தூதர்கள் கூட மார்க்கத்தில் புதிதாக ஒன்றை அவர்களாகவே உருவாக்கிக் கொள்ள முடியாது. அல்லாஹ்வின் வஹி – இறைச் செய்தியையே அவர்களும் பின்பற்ற வேண்டும்.

முதல் நபி ஆதம் (அலை) அவர்களுக்கு சொல்லப்பட்ட கட்டளை

“நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள். உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி வரும்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்று கூறினோம்.

(அல்குர்ஆன்:)

“நீங்கள் இருவரும் மொத்தமாக இங்கிருந்து இறங்கிவிடுங்கள்! உங்களில் சிலர், சிலருக்கு எதிரியாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அப்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் வழிதவற மாட்டார்; பாக்கியமிழந்தவராகவும் மாட்டார்” என்று (இறைவன்) கூறினான்.

(அல்குர்ஆன்: 20:123)

ஆதம்(அலை) அவர்களுக்கு அனைத்து ஞானங்களையும் இறைவன் கற்றுக் கொடுத்திருந்தாலும் மார்கத்தில் அந்த ஞானத்தை வைத்து அவர் முடிவு எடுத்துவிட முடியாது. மார்க்கத்தில் இறைவன் சொல்வதே சட்டமாக ஆகும்.

இப்ராஹீம் நபி

“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் தலைமுறைகளை உனக்குக் கட்டுப்படும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வணக்க முறைகளை எங்களுக்குக் காட்டுவாயாகஎங்களை மன்னிப்பாயாக! நீயே மன்னிப்பு மிக்கவன்; நிகரிலா அன்பாளன்”

(அல்குர்ஆன்: 2:128)

இப்ராஹிம்(அலை) அவர்கள் அல்லாஹ்வின் உற்றத் தோழர் என்று அவனால் புகழப்பட்டிருந்தாலும் கூட அவர்கள் சுயமாக எந்தவொரு வணக்கத்தையும் உருவாக்கி விட முடியாது. இறைவன் அறிவித்துக் கொடுப்பவற்றையே செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள்

(நபியே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. இணை வைப்பவர்களைப் புறக்கணித்து விடுவீராக!

(அல்குர்ஆன்: 6:106)

அவர்களுக்கு நமது வசனங்கள் தெளிவான சான்றுகளாக எடுத்துரைக்கப்பட்டால் “இதுவல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றி விடுவீராக!” என நம்மைச் சந்திப்பதை நம்பாதோர் கூறுகின்றனர். “என் சுயவிருப்பப்படி இதை மாற்ற எனக்கு அதிகாரமில்லை. எனக்கு இறைச்செய்தியாக அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனைக்கு அஞ்சுகிறேன்” என்று (நபியே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 10:15)

(நபியே!) உமக்கு அறிவிக்கப்படுவதை உறுதியாகப் பிடித்துக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர்.

(அல்குர்ஆன்: 43:43)

(நபியே!) “நான் தூதர்களில் புதியவனாக இல்லை. எனக்கும் உங்களுக்கும் என்ன செய்யப்படும் என்பதை நான் அறிய மாட்டேன். எனக்கு இறைச் செய்தியாக அறிவிக்கப்படுவதைத் தவிர எதையும் நான் பின்பற்றுவதில்லை. நான் பகிரங்கமாக எச்சரிப்பவன் தவிர வேறில்லை” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 46:09)

“எனது இறைவன் என்னை நேரான வழியில் செலுத்தியுள்ளான். (அது) நிலையான மார்க்கம். சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 6:161)

(நபியே!) நீர் தூதர்களில் உள்ளவர். நேரான வழியில் இருக்கிறீர்.

(அல்குர்ஆன்: 36:04)

(நபியே!) நமது கட்டளையாகிய இறைச்செய்தியை இவ்வாறே உமக்கு அறிவித்தோம். நீர் வேதம் என்றால் என்ன, இறைநம்பிக்கை என்றால் என்ன என்பதை அறிபவராக இருக்கவில்லை. எனினும் இ(வ்வேதத்)தை நாம் ஒளியாக ஆக்கி, இதன்மூலம் நமது அடியார்களில் நாம் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறோம். நீர் நேரான பாதைக்கு வழிகாட்டுகிறீர்.

(அல்குர்ஆன்: 42:52)

(நபியே!) அவர்களை நேரான வழிக்கு நீர் அழைக்கிறீர்.

(அல்குர்ஆன்: 23:73)

அவர் சுய விருப்பத்தின் அடிப்படையில் பேசுவதில்லை. இது (அவருக்கு) அறிவிக்கப்படும் இறைச்செய்தியைத் தவிர வேறில்லை.

(அல்குர்ஆன்: 53:04)

(நபியே!) அல்லாஹ் உமக்கு காட்டியவாறு மக்களிடையே நீர் தீர்ப்பளிப்பதற்காக உண்மையுடன் இவ்வேதத்தை உமக்கு அருளியுள்ளோம்.

(அல்குர்ஆன்: 04:105)

மனிதர்களுக்காக அருளப்பட்டதை நீர் அவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை அருளினோம்.

(அல்குர்ஆன்: 16:44)

மேற்படி வசனங்கள் அனைத்திலிருந்தும் இதுவல்லாத இன்னும் ஏராளமான ஆதாரங்களிலிருந்தும், நபி(ஸல்) அவர்கள் உட்பட எந்தவொரு இறைத் தூதரும் மார்க்கத்தில் எந்தவொன்றையும் சுயமாக கூறிவிட முடியாது என்பதையும் எந்தவொரு மார்க்க காரியத்தை செய்வதாக இருந்தாலும் அது இறைச் செய்தியின் அடிப்படையில் தான் அமைய வேண்டும் என்பதையும் அறிந்துக் கொள்ளலாம்.

மேலும், நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் மற்றும் அங்கீகாரம் ஆகியவைகள் உள்ளடங்கியுள்ள ஹதீசும் வஹி தான் என்பதையும் மேற்படி வசனங்களிலிருந்து நாம் அறிந்துக் கொள்ளலாம்.

இறைச் செய்தியில் இல்லாத ஒன்றை மார்க்கம் என்று சொல்ல நபி(ஸல்) அவர்கள் உட்பட எந்த நபிக்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை. மார்க்கத்தில் சட்டம் இயற்றுவது அல்லாஹ்வின் அதிகாரத்திற்குட்ப்பட்ட விஷயமாகும். அதில் யாரும் தலையிட கூடாது. அத்தகைய இறையதிகாரத்தில் தலையீடா?

இறையதிகாரத்தில் தலையீடா?

இஸ்லாம் இறைவனுக்கு சொந்தமான மார்க்கம் என்றும் அதில் வணக்கங்கள் சட்டங்கள் நன்மைகள் என அனைத்தும் அவன் புறத்திலிருந்தே வர வேண்டும் என்றும் அதில் நபிமார்கள் கூட புதிதாக ஒன்றை நுழைத்துவிட முடியாது என்றும் பார்த்தோம்.

ஏனெனில் அவ்வாறான மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கம் என்று கருதுவது இறையதிகாரத்தில் தலையிடும் காரியமாகும்.

அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கத்தில் சட்டமாக்கும் இணைக் கடவுள்கள் அவர்களுக்கு உள்ளனரா? (மறுமையின்) தீர்ப்பு பற்றிய வாக்கு இல்லையேல் அவர்களுக்கிடையே (இவ்வுலகிலேயே) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

(அல்குர்ஆன்:)

அல்லாஹ் ஒன்றை நமக்கு கற்றுத் தரவில்லை. குர்ஆனிலிருந்தும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலிருந்தும் எந்த ஆதாரமும் ஒன்றிற்கு இல்லையெனில் அது ஒரு போதும் மார்க்கமாக ஆகாது. மார்க்கமாக ஆகாது என்பதை தாண்டி அதை மார்க்கம் என்று நம்பினால் யார் சொல்லி அவ்வாறு நம்புகின்றோமோ அவரை கடவுளாக நம்புகிறோம் என்று பொருள் என மேற்படி வசனம் கூறுகிறது.

ஏனெனில் இஸ்லாம் இறைவனுக்கு சொந்தமான மார்க்கம் எனும் போது அதில் அவன் சொல்லாத ஒன்றை நாமாக மார்க்கம் என்று கருதினால் அல்லது அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் அவர்  சொல்லும் காரியத்தில் ஆதாரம் ஏதும் இல்லாமலிருக்க அவர் சொன்னார் அல்லது செய்தார் என்பதற்காக மட்டும் அதை நாம் பின்பற்றினால் இங்கு இஸ்லாத்தின் சட்டம் இயற்றும் அதிகாரமான அல்லாஹ்வின் அதிகாரத்தை அந்த மனிதருக்கு வழங்கி அவரை கடவுளாக்குகிறோம் என்றாகிறது. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்!

இங்கு நான் அல்லாஹ்வை தான் இறைவனாக நம்புகிறேன் அந்த அறிஞரை நம்மை போன்ற மனிதர் என்றுதானே சொல்கிறேன். நான் எப்படி அவரை கடவுளாக கருதியதாக ஆகும்? என்ற கேள்வி நமக்கு எழும்.

பொதுவாக இதுபோன்ற சொல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. அந்த சொல்லுக்கு தகுந்தாற் போல் நமது நம்பிக்கையிருக்கிறதா என்றுதான் பார்க்கப்படும். ஒருவரை மனிதர் என்று நம்பினால் மனிதரை எப்படி நம்ப வேண்டுமோ அப்படி நம்ப வேண்டும். மனிதர் என்று நாவில் சொல்லிக் கொண்டு இறைவனை நம்புவது போல் நம்பிக்கை நம் உள்ளத்தில் செயலில் இருந்தால் அது தான் கணக்கில் கொள்ளப்படும்.

உதாரணமாக மக்கத்து முஷ்ரிக்குகள் நல்லடியார்கள் மற்றும் நபிமார்களின் உருவங்களை சிலைகளாக வடிவமித்து வணங்கினார்கள். அவர்களிடம் இதுகுறித்து கேட்கப்படும் போது அவற்றை கடவுளாகவோ தாங்கள் வணங்குகிறோம் என்றோ குறிப்பிடவில்லை. மாறாக அல்லாஹ்வையே முன்னிறுத்தினார்கள்.

அல்லாஹ்வை விட்டுவிட்டு, தமக்குத் தீமையோ, நன்மையோ செய்யாதவற்றை அவர்கள் வணங்குகின்றனர். ‘இவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைப்பவர்கள்’ என்றும் கூறுகின்றனர். “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாதவற்றை அவனுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் உயர்ந்தவன்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 10:18)

மேலும் அனைத்தையும் படைத்தது அல்லாஹ் என்றே பறை சாட்டினார்கள்.

(நபியே!) “வானங்களையும், பூமியையும் படைத்து, சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தியவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே அவர்கள் கூறுவார்கள். ஆயினும், அவர்கள் எவ்வாறு திசைதிருப்பப்படுகின்றனர்?

அல்லாஹ், தன் அடியார்களில் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை வாரி வழங்குகிறான். அவருக்கு அளவுடனும் கொடுக்கிறான். அல்லாஹ், ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.

“பூமி இறந்த பின்னர், வானிலிருந்து மழையைப் பொழிவித்து அதன்மூலம் அப்பூமியை உயிர்ப்பிப்பவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால், ‘அல்லாஹ்’ என்றே அவர்கள் கூறுவார்கள். “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!”என்று கூறுவீராக! எனினும் அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 61:63)

இவ்வாறு தாங்கள் சிலைகளை வழிபட்டுக் கொண்டே தாங்கள் அவர்களை கடவுளாக்கவில்லை. அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தவன். அவன் தான் இறைவன். அவனிடம் பரிந்துரைப்பவர்கள் தான் இவர்கள் என்றே கூறினார்கள்.

இங்கு இவர்களின் இந்த சொல் பார்க்கப்படவில்லை. இவ்வாறு கூறிக்கொண்டு அந்த சிலைகளை அவர்கள் எவ்வாறு நம்பினார்கள் என்பதை வைத்தே அவர்கள் இணைகற்பிப்பாளர்கள் என்று அடையாளமிடப்பட்டனர். இன்னும் நம் தலைப்பிற்கு நேரடி தொடர்பாக பின்வரும் வசனத்திலிருந்து அறிந்துக்கொள்ளலாம்.

அல்லாஹ்வையன்றி தங்களது அறிஞர்களையும், துறவிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் அவர்கள் கடவுள்களாக்கிக் கொண்டனர். ஒரே கடவுளை வணங்க வேண்டும் என்றே அவர்கள் பணிக்கப்பட்டிருந்தனர். அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் தூயவன்.

(அல்குர்ஆன்:)

இங்கே இறைவன் கிறித்தவர்கள் குறித்து பேசுகிறான். கிறித்தவர்கள் தங்கள் அறிஞர்களையும் துறவிகளையும் கடவுளாக்கிக் கொண்டனர் என்று குறிப்பிடுகிறான்.

எந்த கிறித்தவர்களும் தங்கள் அறிஞர்களையும் துறவிகளையும் கடவுள் என்று கூறவில்லை. வணங்கவில்லை. அவர்கள் அவ்வாறு கூறவுமில்லை. அவர்களை மனிதர்கள் என்றே குறிப்பிட்டார்கள்.

ஆனால் அவர்களின் சொல்லைப் போல அவர்களின் நம்பிக்கை இல்லை. இறைவனை எப்படி நம்ப வேண்டுமோ அது போல அந்த அறிஞர்களை நம்பினார்கள். அல்லாஹ் சொல்லாததை அறிஞர்கள் கூறியதும் மார்க்கமாக ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் ஹலால் ஹராம் என்று சொன்னவற்றை அப்படியே பின்பற்றினார்கள். அதற்கு இறைவனிடம் எந்த ஆதாரமும் இல்லையென்றாலும் அது குறித்து கவலைப்படவில்லை. விலகவில்லை.

இதனால் தான் கிறித்தவர்கள் அறிஞர்களை கடவுளாக்கிக் கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறான்.

அன்றைய கிறத்தவர்களின்  வழிகெட்ட பயணங்களின் ஒரு பகுதியைத் தான் பித்அத் விஷயத்தில் இன்று சில மக்கள் அறியாமல் செய்து வருகின்றனர். அவர்களை வழிநடத்துபவர்களும் தவறான பாதையில் அழைத்துச் செல்கின்றனர். முந்தைய சமுதாயங்களில் பித்அத் தோன்றியதை போலவே இந்த சமுதாயத்திலும் பித்அத்கள் தோன்றும் என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.