19) வரம்புமீறி புகழக்கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கிறித்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்ததைப் போன்று என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். நான் அல்லாஹ்வுடைய அடியான்தான். அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் கூறுங்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: (புகாரி: 3445)
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் புகழ்ந்து பேசினார். நபி (ஸல்) அவர்கள், அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர் என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, உங்களில் எவர் தன் சகோதரரைப் புகழ்ந்துதான் ஆகவேண்டும் என்றிருக்கிறாரோ அவர், இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். அல்லாஹ் (உண்மை நிலையை அறிந்தவனாக) இருக்க, அவனை முந்திக் கொண்டு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூற மாட்டேன். அவரை இன்னின்ன விதமாக நான் எண்ணுகிறேன் என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும் என்று சொன்னார்கள்.
நூல்: (புகாரி: 2662)
அபூ மஅமர் அப்துல்லாஹ் பின் சக்பரா அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் எழுந்து தலைவர்களில் ஒருவரைப் புகழ்ந்து பேசினார். அப்போது மிக்தாத் பின் அம்ர் (ரலி) அவர்கள், (புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த) மனிதரின் மீது மண்ணை அள்ளி வீசலானார்கள். மேலும், “அளவுக்கதிகமாகப் புகழ்ந்து பேசுபவரின் முகங்களில் மண்ணை அள்ளி வீசுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள்” என்று கூறினார்கள்
நூல் : (முஸ்லிம்: 5730)