மரணமும் மறுமையும் -19
(உயிர்ப்பித்து எழுப்புதல்)
உயிர்ப்பித்தலை ஈமான் கொள்ளுதல், மறுத்தல்
ஒருவர் உயிர்ப்பித்தலை மறுத்தால் அவர் அல்லாஹ்வே இல்லை என்று கூறியதற்கு சமம். அல்லாஹ்வை பொய்ப்பிப்பதற்கு சமம். என்று அல்லாஹ் கூறுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கிறான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகிறான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை.
நான், (மனிதனான) அவனை முதலில் படைத்தது போன்றே மீண்டும் அவனை நான் படைக்கமாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். (உண்மையில், மனிதன் மரித்த பிறகு) அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதைவிட, அவனை ஆரம்பமாகப் படைத்தது சுலபமன்று. (அதையே செய்துவிட்ட எனக்கு மீண்டும் உயிர் கொடுப்பது கடினமல்ல.)
‘அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஆக்கிக்கொண்டான்’ என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ஆனால், நானோ ஏகன்; (எவரிடமும்) எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை.
அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 4974)
உயிர்ப்பித்தல் – ஆரம்பத்தில் படைத்தவனுக்கு இது எளிது.
அவனே முதலில் படைத்தான். பின்னர் மீண்டும் படைப்பான். இது அவனுக்கு மிகவும் எளிதானது. வானங்களிலும், பூமியிலும் அவனுக்கே உயர்ந்த பண்பு உள்ளது. அவன் மிகைத்தவன்; ஞானமுடையவன்.
பொதுவாக மனிதன் புதிதாக ஒரு பொருளை கண்டுபிடிப்பதற்கு பல ஆய்வுகள் முயற்சிகள் செய்த பின் தான் அதில் அவன் வெற்றி அடைகிறான்.
எனவே மனிதன் முதலில் ஒரு பொருளை கண்டுபிடிக்கும் போது பல சிரமங்களை தாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சில நேரம் அதில் தோல்வியும் ஏற்படுகிறது. இதுதான் மனிதனின் ஆற்றல். ஆனால் அல்லாஹ்வின் ஆற்றல் இப்படி அல்ல. அல்லாஹ்வுக்கு ஆரம்பத்தில் படைப்பதே மிக மிக எளிது. ஆரம்பமே எளிது எனில், மீண்டும் படைப்பது அவனுக்கு எந்த சிரமமுமன்று. இது குறித்து இறைவன் கேட்பதை பாருங்கள்.
முதலில் படைப்பதற்கு நாம் இயலாதவர்களாக இருந்தோமா? ஆனால் அவர்கள் புதிதாகப் படைக்கப்படுவதில் குழப்பத்தில் உள்ளனர்.
வானம், பூமியை படைத்து சோர்வடைந்து விட்டானா?
மனிதர்களாகிய நாம் அதிகமான வேலைகள் செய்த பிறகு சோர்வடைந்து விடுவோமே அது போன்று இறைவன் சோர்வடைந்து விட்டானா?
வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றைப் படைப்பதில் சோர்வு ஏதும் அடையாத அல்லாஹ், இறந்தோரை உயிர்ப்பித்திட ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா? ஆம். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன்.
மனிதனை எதற்காக விடவேண்டும்?
படைத்ததற்கு காரணம் இருக்கும்போது இறைவன் வெறுமனே விட்டு விடுவானா? எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:
வெறுமனே விடப்படுவான் என்று மனிதன் எண்ணுகிறானா?
மனித உடலில் அழியாத பகுதி (உள்வால் எலும்பின் நுனி)
அபூஸாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘‘(உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரு எக்காளத்திற்கும் (ஸூர்) மத்தியில் (இடைப்பட்டக் காலம்) நாற்பது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள். (அபூஹுரைரா (ரலி) அவர்களுடைய நண்பர்கள்,) ‘‘(அபூஹுரைரா அவர்களே!) நாட்களில் நாற்பதா?” என்று கேட்டனர்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘(நான் அறியாததற்குப் பதிலளிப்பதிலிருந்து) நான் விலகிக்கொள்கிறேன்” என்று சொன்னார்கள். (நண்பர்களான) அவர்கள், ‘‘நாற்பது மாதங்களா?” என்று கேட்டனர். அதற்கும் ‘‘நான் விலகிக்கொள்கிறேன்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘வருடங்கள் நாற்பதா?” என்று கேட்டனர். அப்போதும் அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நான் விலகிக்கொள்கிறேன்” என்று சொன்னார்கள்.
பின்னர், ‘‘வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது (மண்ணறைகளுக்குள் மக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) மக்கிப்போகாமல் இருப்பதில்லை. ஆனால், ஒரேயோர் எலும்பைத் தவிர!
அதுதான் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும்” என்று மேலும் சொன்னார்கள்.
அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 4935)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ், வானத்திலிருந்து ஒரு நீரை இறக்குவான். உடனே இ(றந்துபோன)வர்கள் பச்சைப் புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று எழுவார்கள். மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப்போய் விடும்;
ஒரே ஒரு எலும்பைத் தவிர! அது (அவனது முதுகுத்தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 5660)
உலகம் தீப்பெட்டிக்குள் அடங்கும்
எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு (Ernest Rutherford, 30-8-1871 to 9-10-1937) நியூசிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற, முன்னோடியான அணு இயற்பியல் அறிஞர் ஆவார். அணுக்கரு இயற்பியலின் தந்தை’ என போற்றப்படும் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு, கதிரியக்கத் தனிமங்கள் குறித்த ஆய்வுகள் மற்றும் தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1908-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார். 1914-ல் சர் பட்டம் பெற்றார். புரோட்டனை கண்டறிந்தவர். அணுவைப் பிளக்க இயலும் என்னும் கருத்திற்கு அடித்தளம் நாட்டியவர்.
இவரது அணுக்கரு, எலக்ட்ரான், புரோட்டான்களுக்கு இடையேயான இடைவெளி பற்றிய கருத்து மிகவும் பிரபலமானது. அவரது ஆய்வில் இருந்து அணு தொடர்பாக நாம் பெரும் சில கருத்துக்கள்.
ஒரு அணுவில் அணுவின் நடுவில் அணுக்கரு மற்றும் புரோட்டான் இருக்கும். அதை எலக்ட்ரான்கள் சுற்றி வரும். ஒரு அணுக்கருவிற்கும், எலக்ட்ரான்களுக்கும் உள்ள இடைவெளி மிகவும் பிரம்மாண்டமானது. ஒரு பிரம்மாண்டமான கால்பந்து மைதானத்தின் நடுவில் உள்ள ஒரு மண் போன்றது. அதைவிடச் சிறியது. மில்லியன் அல்ல, பில்லியன் மடங்கு சிறியது, அதாவது அணுவின் கருவிற்கும் அதை சுற்றும் எலக்ட்ரான்களுக்கும் இடையே உள்ள வெற்றிடம் இடைவெளி சுமார் 100 கோடி மடங்கு.
விஞ்ஞானிகள் இவரது ஆய்வுகளில் இருந்து கூறும் சாராம்சம் என்னவென்றால், இந்த பூமியில் உள்ள அணுக்களில் உள்ள இடைவெளியை எடுத்து விட்டால் இந்த ஒட்டுமொத்த பூமியையும் ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கி விடலாம். இயற்பியல் மாணவர்களுக்கு இடையே இது மிகவும் பிரபலமான அறிவியல் கருத்து.
பைக், கார் நமது பாக்கெட்டில் அடங்கும்
ஒரு வேளை அந்த எலக்ட்ரான் இடைவெளியை நீக்க முடிந்தால், நம்முடைய காரை, பைக்கை ரோட்டில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை, சுருக்கி, பர்சில் வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் புரோட்டான் அருகில் எலக்ட்ரான் வரக்கூடாது என்பது போன்ற சில கோட்பாடுகளின், விதிகளின் காரணமாக அந்த இடைவெளியை நம்மால் நீக்க முடியாது. கோட்பாடுகள் விதிகள் எல்லாம், மனிதர்களாகிய நமக்கு தானே! அதனைப் படைத்த அல்லாஹ்வுக்கு இல்லையே!
ஒட்டுமொத்த உலகத்தையே ஒரு தீப்பெட்டிக்குள் வைக்க முடியும் என்றால் ஒரு மனிதனை ஒரு சிறிய எலும்பு துகளுக்குள் இறைவனால் வைக்க முடியாதா? அதனை கொண்டு மீண்டும் அவனை படைக்க முடியாதா? எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:
வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
விரல் நுனியையும் சரியாக படைப்பான்
மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா?அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.
முதலில் மண்ணறை பிளந்து (உயிர்த்து) எழுபவர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஆதமின் மக்கள் (மனிதர்கள்) அனைவருக்கும் தலைவன் நானே. முதன் முதலில் மண்ணறை பிளந்து (உயிர்த்து) எழுபவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை செய்பவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை ஏற்கப்படுபவனும் நானே.
அறி: அபூஹுரைரா (ரலி),
(முஸ்லிம்: 4575)
ஒன்றுச் சேர்த்தல் – ஹஷ்ர்
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எந்தச் சந்தேகமுமில்லாத கியாமத் நாளில் உங்களை அவன் ஒன்று திரட்டுவான். அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?
எவ்விதச் சந்தேகமும் இல்லாத நாளில் அவர்களை நாம் ஒன்று திரட்டும்போது எவ்வாறு இருக்கும்? ஒவ்வொருவருக்கும், அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
மஸீஹும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.
அல்லாஹ்வின் பக்கமே உங்களின் திரும்பி செல்லுதல் உள்ளது என்று இது போன்ற கருத்தில் 140 குர்ஆன் வசனங்கள் உள்ளன.
நிர்வாணமாக ஒன்று திரட்டப்படுவார்கள்
மனிதர்கள் பூமியை நோக்கி வெளியே வரும் போது செருப்பில்லாமலும், ஆடையில்லாமலும், விருத்த சேதனம் செய்யாதவர்களாகவும் அதாவது கத்னா செய்யாதவர்களாகவும் எழுப்பப்படுவார்கள். அதிகமான மக்கள் கூடும் கூட்டத்திற்கு செல்லும் போது தன்னிடத்திலுள்ள புத்தம் புதிய நல்ல ஆடையை உடுத்திகொண்டு செல்வோம். ஆனால் மறுமை நாளில் அனைவருக்கும் முன்னால் நிர்வாணமாகவும், செருப்பில்லாதவராகவும் எழுப்பபடுவோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாண மானவர்களாகவும், ஆண் குறிகளின் நுனித்தோல் நீக்கப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, ‘நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகி விட்ட நம்முடைய) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கிறோம்’ (அல்குர்ஆன்: 21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள்…
அறி: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: (புகாரி: 3349)
“நீங்கள் மறுமைநாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி),
நூல்: (புகாரி: 6527)