19) தாதுர் ரிகா போர் (ஹிஜிரி 7)

நூல்கள்: நபி (ஸல்) வரலாறு (பிறப்பு முதல் இறப்பு வரை)

நஜ்தின் கிராமப்புறங்களில் பரவியிருந்த நாடோடி வம்பர்களான அரபிகள் சந்தர்ப்பங்களையும் அவகாசங்களையும் எதிர்பார்த்திருந்து அவ்வப்போது மதீனாவின் மீது தாக்குதல் நடத்தி கொள்ளையடிப்பது, வழிப்பறி செய்வது. திருடுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் பாலை வனங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் வசித்து வந்த காரணத்தால் இவர்களை அடக்குவதோ, இவர்களின் அட்டூழியத்தை அணைப்பதோ சற்றுச் சிரமமாகவே இருந்தது எனவே அவர்கள் மீது போர்தொடுப்பதைத் தவிர வேறு நடவடிக்கை ஏதும் அவர்களுக்குப் பலனளிப்பதாக இல்லை. அதனால் முஸ்லிம்கள் அவர்கள் மீது பலமுறை திடீர் திடீரென தாக்குதல் நடத்தினார்கள். இந்த அரபிகளுக்கு பாடம் கற்பிப்பதற்காக நபியவர்கள் எடுத்த ஒரு போர் நடவடிக்கைக்கு ‘தாதுர் ரிகா” என்று சொல்லப்படுகிறது.

இப்போரில் அபூ மூஸா அஷ்அரி (ரழி) மற்றும் அபூஹுரைரா (ரழி) கலந்து கொண்டதிலிருந்து இப்போர் கைபர் போருக்கு பின்னர்தான் நடந்தது என்று உறுதியாக சொல்ல முடிகிறது. ஆகவே ஹிஜ்ரி 7ல்தான் இப்போர் நடைபெற்றிருக்க வேண்டும்.இப்போர் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதின் சுருக்கமாவது கத்ஃபான் கோத்திரத்தைச் சேர்ந்த அன்மார். ஸஅலபா மற்றும் முஹாப் ஆகிய இம்மூன்று கிளையினரும் ஒன்று சேர்ந்து முஸ்லிம்களைத் தாக்கத் தயாராகின்றனர் என்று நபியவர்களுக்குத் தெரிந்தவுடன் தோழர்களை அழைத்துக் கொண்டு விரைந்தார்கள் தங்களது படையுடன் அவர்களது ஊர்களுக்குள் நீண்ட தூரம் வரை நபி (ஸல்) ஊடுருவிச் சென்றார்கள். மதீனாவிலிருந்து இரண்டு நாட்கள் பிரயாண தூரமுள்ள நகல் என்ற இடத்தை அடைந்தார்கள். அங்குக் கத்ஃபான் கிளையினரின் ஒரு கூட்டத்தினரைச் சந்தித்து ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக ஆகி ஒருவர் மற்றவரை அச்சுறுத்திக் கொண்டனர். ஆனால், சண்டை ஏதும் நடைபெறவில்லை எனினும், நபி (ஸல்) அன்றைய பொழுது ஸலாத்துல் கவ்ஃப் முறைப்படி அனைத்து தொழுகைகளையும் தொழ வைத்தார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நஜ்த் பகுதி கத்ஃபான் குலத்தார் வசித்து வந்த நகல் என்னுமிடத்திற்கு தாத்துர் ரிகாஉ போருக்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது கத்யான் குலத்தாரின் ஒரு கூட்டத்தைச் சந்தித்தார்கள். மக்களில் சிலர் சிலரைக் கண்டு அஞ்சினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் அச்ச நேரத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள் சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களுடன் நான் அல் கரத் போரில் கலந்து கொண்டேன் (புகாரி: 4127)

அச்ச நேரத் தொழுகை முறை

நபி (ஸல்) அவர்கள் (அப்போரின் போது) அச்ச நேரத்தொழுகையைத் தொழுதார்கள் (எங்களில்) ஓர் அணியினர் நபி (ஸல்) அவர் களுடன் (தொழுகையில்) அணிவகுத்தனர் இன்னோர் அணியினர் எதிரிகளுக்கு எதிரே அணிவகுத்தனர் அப்போது நபி (ஸல்) அவர்கள், தம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுவித்துவிட்டு அப்படியே நின்று கொண்டார்கள் நபி ஸல் அவர்களுடன் தொழுகையை ரக்அத்தைத் தனியாகப் பூர்த்தி நிறைவேற்றிய அந்த அணி யினர் தங்களுக்கு (மீதியிருந்த இன்னொரு செய்து கொண்டு திரும்பிச் சென்று எதிரிகளுக்கு எதிரே அணிவகுத்து நின்று கொண்டார்கள். பிறகு, (அதுவரை எதிரிகளுக்கு எதிரே நின்று கொண்டிருந்த இன்னோர் அணியினர் வந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தொழுகையில் மீதியிருந்த ஒரு ரக்அத்தை இவர்களுக்குத் தொழுவித்துவிட்டு (அப்படியே) அமர்ந்து கொண்டிருந்தார்கள். (இரண்டா வது அணியினர்) தங்களுக்கு (மீதியிருந்த ஒரு ரக்அத்தைப்) பூர்த்தி செய்து கொண்டனர். பிறகு அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தார்கள் (புகாரி: 4129)

சிரமத்தை அடைந்த நபித்தோழர்கள்

இப்போரில் நபித்தோழர்கள் சவாரி செய்வதற்கு வாகனங்கள் கிடைக்காமல் மிகவும் சிரமத்தை அடைந்தனர்.
அபூமூசா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போருக்காகச் சென்றோம். எங்களில் ஆறு பேருக்கு ஓர் ஒட்டகம் தான் இருந்தது அதில் நாங்கள் முறைவைத்து சவாரி செய்தோம். வாகனம் கிடைக்காமல் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் எங்களுடைய பாதங்கள் தேய்ந்து விட்டன என்னுடைய இரண்டு பாதங்களும் தேய்ந்து என் கால் நகங்கள் விழுந்து விட்டன. அப்போது நாங்கள் எங்களுடைய கால்களில் கிழிந்த துணிகளைச் சுற்றிக் கொள்பவர்களாக இருந்தோம். இவ்வாறு கிழிந்த துணிகளை நாங்கள் கால்களில் கட்டியிருந்ததனால் தான் அந்தப் போருக்கு தாத்துர் ரிகாஉ ஒட்டுத் துணிப் போர் என்று பெயர் சூட்டப்பட்டது. (புகாரி: 4128)

நபியவர்களை மிரட்டிய கிராம வாசி

நபியவர்கள் இப்போரில் இருந்து திரும்பும் வழியில் ஒரு அற்புதமான சம்பவம் நடைபெற்றது அதனைக் காண்போம். ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி (தாதுர் ரிகாஉ) போருக்காக சென்றேன் (போரை முடித்துக் கொண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிய போது நானும் அவர் களுடன் திரும்பிக் கொண்டிருந்தேன் கருவேல முன் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்த போது மதிய (ஓய்வுகொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) தங்கினார்கள் மக்கள் ஒய்வெடுப் பதற்காக) மர நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முன் மரத்திற்குக் கீழே தங்கி ஓய்வெடுத்தார்கள், அப்போது தமது வாளை அந்த மரத்தில் தொங்க விட்டார்கள். நாங்கள் ஒரு தூக்கம் தூங்கி யிருப்போம் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள் உடனே நாங்கள் அவர்களிடம் சென்றோம் அங்கே நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு கிராமவாசி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் தூங்கிக் கொண்டிருந்த போது இவர் எனது வாளை (எனக்கெதிராக) உருவிக் கொண்டார் அந்த வாள் உருவப்பட்டு இவரது கையிலிருந்த நிலையில் நான் கண்விழித்தேன். அப்போது இவர் என்னிடம் என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்? என்று கேட்டார் நான் அல்லாஹ் என்று பதிலளித்தேன். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார் என்று கூறினார்கள்.பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை. (மன்னித்து விட்டுவிட்டார்கள்) (புகாரி: 4135)

இச்சம்பவத்தைப் பற்றி வரும் மற்றொரு அறிவிப்பில் வருவதாவது. அல்லாஹ் என்று நபி (ஸல்) பதில் கூறியவுடன் அவரது கையிலிருந்து வாள் வீழ்ந்துவிட்டது. அதை நபி (ஸல்) எடுத்துக் கொண்டு என்னிடமிருந்து உன்னை யார் பாதுகாப்பார்?” என்று கேட்டார்கள் அவர் வாளை எடுத்தவர்களில் சிறந்தவராக நீங்கள் இருங்கள் என்றார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீ சான்று கூறுவாயா?” என்று நபி (ஸல்) அவரிடம் கேட்டார்கள். அவர் நான் உங்களிடம் போர் செய்யவோ உங்களிடம் போர் புரியும் கூட்டத்தினருடன் சேரவோ மாட்டேன் என்று நான் உங்களிடம் ஒப்பந்தம் செய்கிறேன் எனக் கூறினார் நபி (ஸல்) அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார்கள் அவர் தனது கூட்டத்தனரிடம் சென்று நான் மக்களில் சிறந்தவடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன் என்று கூறினார். (அஹ்மத்: 14657)
இந்த கிராமவாசியின் பெயர் கவ்ரஸ் இப்னு ஹாரிஸ்” என்று ஸஹீஹூல் புகாரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. (புகாரி: 4136)

இப்போரிலிருந்து திரும்பும் போது ஜாபிர் (ரலி) அவர்களின் ஒட்டகம் சண்டித்தனம் செய்தது அப்போது நபியவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களுக்கு உதவி செய்ததுடன் அவர்களுடைய குடும்ப நிலையைப் பற்றியும் விசாரித்து அறிந்து கொள்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய ஆட்சியில் தம்முடைய தோழர்களின் நலனில் எந்த அளவிற்கு அக்கறை காட்டினார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் அற்புதமான சாட்சியாகத் திகழ்கிறது.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் பங்கு கொண்டுவிட்டுத் திரும்பி வந்து கொண்டு இருந்தேன் அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்துபோனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து ஜாபிரா? என்று கேட்டார்கள் நான் ஆம் என்றேன். என்ன விஷயம்(ஏன் பின்தங்கிவிட்டீர்? என்று கேட்டார்கள். என் ஒட்டகம் களைத்து பலமிழந்துபோனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. அதனால் நான் பின்தங்கிவிட்டேன் என்றேன் நபி (ஸல்) அவர்கள் கீழே இறங்கிதலைப் பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டி எழுப்பினார்கள். பிறகு உமது வாகனத்தில் ஏறுவீராக! என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன் நபி (ஸல்) அவர்களைவிட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன் அப்போது நபி (ஸல்) அவர்கள், நீர் மணமுடித்துவிட்டீரா? என்று கேட்டார்கள் நான் ஆம் என்றேன் கன்னியையா? கன்னிகழிந்த பெண்ணையா? என்று கேட்டார்கள். கன்னிகழிந்த பெண்ணைத்தான்! என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக்குலாவி மகிழலாமேமே என்று கூறினார்கள்.

நான் எனக்குச் (சிறிய வயதுடைய சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்! என்றேன். நபி அவர்கள் இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்துகொள்வீராக! நிதானத்துடன் நடந்துகொள்வீராக என்று கூறிவிட்டு பின்னர் உமது ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடுகிறீரா? என்று கேட்டார்கள் நான் சரி (விற்று விடுகிறேன்) என்றேன். அவர்கள் என்னிடமிருந்து ஒரு ஊக்கியா எடை (தங்கத்துக்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள். பிறகு, எனக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு சென்றுவிட்டார்கள்.

நான் மறுநாள் சென்றடைந்தேன் நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்த போது அதன் நுழைவாயிலில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். இப்போது தான் வருகிறீரா? என்று அவர்கள் (என்னைப் பார்த்துக் கேட்டார்கள் நான் ஆம் என்றேன். உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன் நபி (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள் எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டுச்சற்று தாரளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச்சென்றுவிட்டேன் அப்போது நபி (ஸல்) அவர்கள், ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்! என்றார்கள். நான் மனத்திற்குள்) இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும். அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை என்று கூறிக் கொண்டேன் நபி (ஸல்) அவர்கள், உமது ஒட்டகத்தை எடுத்துக்கொள்வீராக அதனுடைய விலையையும் நீரே வைத்துக்கொள்வீராக! என்று சொன்னார்கள் (புகாரி: 2097)

இந்தச் சம்பவம் தாதுர் ரிகா போரிலிருந்து திரும்பும் போதுதான் நடைபெற்றது என்ற தகவல் அஹ்மத் (14495) வது ஹதீஸில் இடம் பெற்றுள்ளது. வம்பர்களாக இருந்து வந்த கிராமப்புற அரபுகளின் உள்ளங்களில் இப்போர் பெரும் அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியது இப்போருக்குப் பின் நபி (ஸல்) அனுப்பிய படையெடுப்புகளின் விவரங்களை நாம் அலசிப்பார்க்கும் போது இப்போருக்குப் பின் கத்ஃபான் கிளையினர் முற்றிலும் துணிவை இழந்து, சிறிது சிறிதாகப் பணிந்து இறுதியில் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பது நமக்குத் தெரியவருகிறது. மேலும், இந்தக் கிராமவாசிகளில் பல குடும்பத்தினர், நபி (ஸல்) அவர்களுடன் மக்காவை வெற்றி கொள்ள வந்தனர். அதற்குப் பிறகு ஹுனைன் போரிலும் கலந்து கொண்டனர். அதன் கனிமத்தும் இவர்களுக்குக் கிடைத்தது மக்கா வெற்றிக்குப் பின் இவர்களிடம் ஜகாத் வசூல் செய்ய நபி (ஸல்) தங்களது ஆட்களை அனுப்பினார்கள் அவர்களும் ஜகாத்தை நிறைவேற்றினார்கள் என்பதையும் நாம் பார்க்கிறோம்.

ஆகவே இதன் மூலம் அகழ் போரில் கலந்து கொண்ட மூன்று எதிரி ராணுவங்களையும் நபி (ஸல்) தோற்கடித்து விட்டார்கள் மதீனாவிலும் சுற்றுப்புறங்களிலும் அமைதியும் பாதுகாப்பும் நிலவியது. இதற்குப் பின் சில பகுதிகளில் கோத்திரங்கள் சிலவற்றால் ஏற்பட்டிருந்த பிரச்சனைகளைத் தீர்க்க முஸ்லிம்கள் ஆற்றல் பெற்றனர். உள்ளுக்குள் பிரச்சனைகள் முடிவடைந்து நிலைமைகள் இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் சாதகமாக மாறுமளவு முன்னேறிவிட்டதால் இப்போருக்குப் பின் பல பெரிய நாடுகளையும், நகரங்களையும் வெற்றி கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர்.

உம்ரத்துல் களா ஹிஜிரி 7

ஹுதைபிய்யா உடன் படிக்கையின் அடிப்படையில் ஹூதைபிய்யாவிற்கு அடுத்த வருடம் நபியவர்கள் உம்ராவை நிறைவேற்றுவதற்காக மதீனாவிலிருந்து மக்காவை நோக்கி பயணம் மேற்கொண்டார்கள், இடைப்பட்ட காலங்களில் ¡ஷஹீத் வீரமரணம் அடைந்தவர்களைத் தவிர ஹுதைபிய்யாவில் கலந்து கொண்ட (ஒருவர்கூட பின்தங்கி விடாமல்) அனைவரும் புறப்பட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள்.நபியவர்களின் கட்டளைக்கிணங்க ஹுதைபிய்யாவில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் உம்ராவை நிறைவேற்ற புறப்பட்டனர் இவர்களுடன் உம்ராவில் ஆர்வம் கொண்ட மற்றும் பலரும் புறப்பட்டனர்.

இவர்களில் பெண்கள் சிறுவர்கள் தவிர ஆண்கள் மட்டும் மொத்தம் இரண்டாயிரம் பேர் இருந்தனர் (ஃபத்ஹுல் பாரி)

இந்த உம்ராவை நிறைவற்றுவதற்காக நபியவர்கள் சென்ற போது அவர்களுக்கு ஸஹாபாக்கள் மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்கினார்கள்.இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கையின் படி ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு) உம்ரா செய்த போது நபி (ஸல்) அவர்களைத் தாக்கித் துன்புறுத்தி விடாமலிருப்பதற்காக அவர்களை இணைவைப்போரிடமிருந்தும் அவர்களின் இளைஞர்களிடமிருந்தும் நாங்கள் பாது காப்பு வளையம் அமைத்து மறைத்துக் கொண்டோம் (புகாரி: 4255)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் உம்ரத்துல் களாவிற்காக மக்காவிற்கு வந்தபோது யஸ்ரிபின் (மதீனாவின்) காய்ச்சலால் உடல் நலிவற்றிருந்தனர். அப்போது (மக்கா நகர) இணைவைப்பாளர்கள். “நாளைய தினம் மதீனாவின் காய்ச்சலால் நலிவடைந்து, அதனால் சிரமத்தைச் சந்தித்த ஒரு கூட்டத் தார் உங்களிடம் வரப்போகிறார்கள்” என்று (ஏளனமாகம் பேசிக்கொண்டனர்.

அதன்படி இணைவைப்பாளர்கள் கஅபா விற்கு அருகிலுள்ள அரை வட்டப் பகுதியான) ஹிஜ்ரை ஒட்டிய இடத்தில் உட்கார்ந்துகொண்டு நபித்தோழர்களைப் பார்வையிட்டனர். அப்போது இணைவைப்பாளர்களுக்குத் தமது பலத்தைக் காட்டுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவைச் சுற்றிவரும்போது முதல் மூன்று சுற்றுகள் விரைந்து நடக்குமாறும், ஹஜருல் அஸ்வதுக்கும் ருக்னுல் யமானிக்கும் இடையே (மெதுவாக) நடந்து செல்லுமாறும் கட்டளையிட்டார்கள்.

அப்போது இணைவைப்பாளர்கள், மதீனாவின் காய்ச்சலால் இவர்கள் பலவீனமடைந்துள்ளனர் என நீங்கள் கருதினீர்கள் இவர்களோ இன்னின்னதைவிட பலம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர் என்று (தம்மிடையே) பேசிக்கொண்டனர். தவாஃபின் அனைத்துச் சுற்றுகளிலும் விரைந்து நடக்கு மாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடாததற்குக் காரணம், மக்கள்மீது கொண்ட இரக்கமேயாகும் (முஸ்லிம்: 2423) ,(புகாரி: 4256)
மற்றொரு அறிவிப்பில் வருகிறது. அப்போது இணை வைப்பவர்கள். அய்கிஆன் என்னும் மலையின் திசையில் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டு) இருந்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (புகாரி: 4258)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எமஃபா மற்றும் மர்வாவுக்கிடையே தொங்கோட்டம் ஓடியதும் இறையில்லத்தைச் சுற்றி வரும் போது விரைந்து நடந்ததும் இணைவைப்பாளர்களுக்குத் தமது பலத்தைக் காட்டுவதற்காகத்தான் (முஸ்லிம்: 2428)

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபியவர்கள் உம்ரத்துல் களாவை நிறைவேற்றுவதற்காக மக்காவிற்குள் நுழைந்தார்கள். அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ஏழி பின்வரும் கவிகளைப் பாடிக்கொண்டு வாளேந்தியவர்களாக நபியவர்களுக்கு முன் சென்று கொண்டிருந்தார்கள்.

இறைமறுப்போரின் பிள்ளைகளேஅகன்றுபோய் வழிவிடுங்கள்

இறைத்தூதரிடத்தில் நன்மைகள் அனைத்தும் இருக்கின்றன.

வழிவிடுங்கள் திட்டவட்டமாக ரஹ்மான் அவன் தன் திருமறையில்…

தனது தூதருக்கு ஓதிக்காட்டப்படும் ஏடுகளில் இறக்கினான்.
இறைவா அவர் கூற்றை ஏற்கிறேன்.

அவரை ஏற்பதில் உண்மைதனை நிச்சயம் நான் பார்க்கிறேன். வெட்டுவதில் சிறந்த வெட்டு இறைப்பாதையில் நிகழ்வதுதான் இறைமறை கட்டளை, இன்று உங்களை வெட்டுவோம் அது தலை தனி முண்டம் தனி ஆக்கிடும் வெட்டு அது நண்பனை விட்டு நண்பனைப் பிரித்திடும் வெட்டு
உமர் (ரழி). ஏ ரவாஹாவின் மகனே! அல்லாஹ்வின் தூதருக்கு முன், அதுவும் அல்லாஹ்வின் புனிதப் பள்ளிக்குள் நீ கவிதை பாடுகிறாயா?” என்று அதட்டினார்கள் அதற்கு நபியவர்கள் உமரே! அவரை விட்டுவிடுங்கள் அம்பால் எறிவதைவிட இந்தக் கவிதை குறைஷிகளுக்கு மிக விரைவாக ரோஷத்தை ஊட்டக் கூடியது” என்று கூறினார்கள். (திர்மிதி 2734)

நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் உம்ராவை நிறைவேற்றினார்கள். மேலும் குர்பானிப் பிராணிகளையும் அறுத்துப் பலியிட்டனர் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள்.
(அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) தவணையான மூன்று நாட்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ (ரலி) அவர்களிடம் வந்து உங்கள் தோழரிடம் எங்களை எங்கள் நகரை விட்டு வெளியேறும்படி கூறுங்கள். ஏனெனில், தவணைக் காலம் கழிந்து விட்டது என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களும் மக்காவை விட்டுப் புறப்பட்டார்கள். அப்போது (உஹுதுப் போரில் கொல்லப்பட்டிருந்த ஹம்ஸா (ரலி) அவர்களின் (அனாதை) மகள், என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே! என்று (கூறிக் கொண்டே) அவர்களைப் பின் தொடர்ந்து வந்தாள் அலீ (ரலி) அவர்கள் அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளது கையைப் பிடித்துக் கொண்டார்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம், இவளை எடுத்துக் கொள் இவள் உன் தந்தையின் சகோதரருடைய மகள் இவளை (இடுப்பில்) சுமந்து கொள் என்று கூறினார்கள்.

அச்சிறுமியின் விஷயத்தில் அலீ (ரலி) அவர்களும், ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும், ஜஅஃபர் (ரலி) அவர்களும் (ஒவ்வொரு வரும். அவளை நான்தான் வளர்ப்பேன்’ என்று ஒருவரோடொருவர் போட்டி யிட்டு சச்சரவிட்டுக் கொண்டனர் அலீ (ரலி) அவர்கள், நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன் ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள் என்று கூறினார்கள். ஐஅஃபர் (ரலி) அவர்கள், இவள் என் சிறிய தந்தையின் மகள் மேலும், இவளுடைய சிற்றன்னை என் (மணபந்தத்தின்) கீழ் இருக்கிறாள் என்று கூறினார்கள் ஸைத் (ரலி) அவர்கள், (இவள் என் சகோதரரின் மகள் என்று கூறினார்கள் நபி (ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்கு சாதகமாக சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர் (ரலி) அவர்கள் அவளை வளர்க்கட்டும் என்று தீர்ப்பளித்தார்கள். மேலும், சிற்றன்னை தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள் என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்களை நோக்கி, நீங்கள் என்னைச் சேர்ந்தவர்.

நான் உங்களைச் சேர்ந்தவன் என்று (ஆறுதலாகக் கூறினார்கள் ஜஅஃபர் (ரலி அவர்களை நோக்கி, நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கின்றீர்கள் என்று சொன்னார்கள். மேலும் ஸைத் (ரலி) அவர்களை நோக்கி, நீங்கள் எம் சகோதரர்; எம்மால் விடுதலை செய்யப்பட்ட எமது பொறுப்பிலுள்ள அடிமை ஊழியர் என்று கூறினார்கள். (புகாரி: 2699)

இப்பயணத்தில் நபியவர்கள் மைமூனா பின்த் அல்ஹாரிஸ் அல்ஆமியாவைத் திருமணம் செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமுடைய நிலையில் இருக்கும் போது மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்துள்ளார்கள். (புகாரி: 1837) ஆனால் இது தவறாகும். நபியவர்கள் இஹ்ராம் இல்லாத நிலையில்தான் மைமூனாவை திருமணம் செய்தார்கள். இதை அவர்களே தெளிவு படுத்தியுள்ளார்கள்.

மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் இல்லாத (ஹலால்) நிலையிலேயே என்னைத் திருமணம் செய்தார்கள். (முஸ்லிம்: 2757)
இந்த உம்ராவிற்கு உம்ரத்துல் கழா என்று கூறப்படுகிறது. ஹுதைபிய்யாவின் போது செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஏற்ப இந்த உம்ரா அமைந்திருந்ததால் இந்தப் பெயர் வந்தது.

இந்த உம்ராவிற்கு வரலாற்றில் நான்கு பெயர்கள் கூறப்படுகின்றன.

1) உம்ரத்துல் கழா,

2) உம்ரத்துல் கழிய்யா

3) உம்ரத்துல் கிஸாஸ்,

4) உம்ரத்துல் சுல்ஹ் (ஜாதுல் மஆது. ஃபத்ஹுல் பாரி)