19) சரித்திரம் படைத்த ஸைதும் ஸாலிமும்
இந்தப் போரில் முதன் முதலில் முஸ்லிம்களில் காயம் பட்டவர் அபூ அகீல் என்றுஅழைக்கப்படும் அப்துர்ரஹ்மான் பின் பல்வி அல்அன்சாரி ஆவார். போரில் குதிப்பதற்குமுன்னால் ஓர் ஈட்டி அவரது இடது புஜத்தில் பாய்ந்தது. அதனால் அவரது இடது தோள்பட்டை செயலிழந்து விட்டது. எனவே அவர் முஸ்லிம்களின் சிகிச்சை முகாமுக்குக்கொண்டு செல்லப்பட்டார்.
போர் சூடு பிடித்ததும் முஸ்லிம்கள் பயந்து கொண்டு முகாமுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். இவரோ இடது கை பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடந்துகொண்டிருக்கின்றார். அப்போது மஅன் பின் அதிய்யி அவர்களின் அறிவிப்புக் குரல்ஒலிக்கின்றது. “அல்லாஹ்வை முன்னிறுத்தி உங்களிடம் கேட்கின்றேன். அன்சாரிகளே!உங்களுடைய எதிரிகளை எதிர் கொள்ள மீண்டும் ஒருமுறை முன்னோக்கி வாருங்கள்”என்று குரல் எழுப்பியவாறு களத்தில் முன்னேறுகின்றார்.
இந்த அழைப்பைக் கேட்ட மாத்திரத்தில் இருப்புக் கொள்ளாது, அடிபட்ட சிங்கத்தைப்போல் அலறிப் புடைத்துக் கொண்டு அபூ அகீல் எழுந்தார். அப்போது முஸ்லிம்களில்ஒருவர், “உங்கள் மீது போர் கடமையில்லையே” என்று கேட்டார்.
அதற்கு அவர், “என் பெயர் கூறி அழைத்து விட்ட பின்பும் வாளைத் தூக்காமல் எப்படிஎன்னால் வாளாவிருக்க இயலும்?” என்று பதிலளித்தார். கேட்டவர் அவரை அத்துடன்விடவில்லை. “அன்சாரிகளே என்று தானே அழைத்திருக்கின்றார். நீங்கள் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை” என்று தனது கருத்தைத் தெரிவிக்கவே, “அழைப்பாளரின்இந்த அழைப்புக்குத் தவழ்ந்தேனும் நான் செல்வேன். வெற்றித் தாரகையை அல்லது வீரமரணத்தைத் தட்டிப் பறிக்காத வரை நான் ஓய மாட்டேன் என்று கூறி, வலது கையில்வாளைத் தூக்கிக் கொண்டு, விழுப்புண்ணுடன் வீராவேசமாகக் கிளம்பினார்.
“வீரர்களே! ஹுனைன் போரில் படையை விட்டு உருவி, உதிர்ந்து ஓடிய போராளிகள்உத்தம நபியின் அழைப்பைக் கேட்டு திரும்பி வந்தது போல், அன்சாரிகளே! வீரர்களே!மீண்டும் ஒரு முறை திரும்பி ஓடி வாருங்கள் என்று வெற்றி முழக்கமிட்டார்.
விரண்டோடிய மக்கள் வீறு கொண்டு எழுந்தார்கள். திரும்பி வந்து எதிரிகளை விளாசித்தள்ளினார்கள். அனல் பறந்த இந்தப் போர்க்களத்தில் எதிரிகளைத் தோட்டத்திற்குவிரட்டிக் கொண்டு வந்து விட்டார்கள். இந்தக் கட்டத்தில் அபூ அகீலின் தோள்பட்டையிலிருந்து கை முற்றிலுமாக முறிக்கப்பட்டு விட்டது. அதில் பதினான்குகாயங்கள், விழுப் புண்கள் பதிவாகியிருந்தன.
கபன் துணி அணிந்தவர்களாகக் களத்தில் நின்று கொல்லப்பட்ட ஸாபித் பின் கைஸின்வரலாற்றைப் பார்த்தோம்.
குழி தோண்டி நின்று, கபன் துணி அணிந்தவர்களாக கொடியையும் கொள்கையையும்தாங்கி நின்று, உயிர்த் தியாகம் செய்த ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸுக்குத் தாங்கள்கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பது போன்று, முஹாஜிர்களுக்கான கொடியைப்பிடித்த ஸைத் பின் கத்தாப் (ரலி) மற்றும் ஸாலிம் (ரலி) ஆகிய இருவரும் சாதனைபடைத்து சரித்திரமாயினர்.
முதன் முதலில் முஹாஜிர்களின் கொடியை ஏந்திய கோமகன் கத்தாபின் மகன் ஸைத்தான். எதிரிகளின் படைக் கூட்டத்தின் ஊடே, அனல் கக்கும் ஜுவாலைகளாக,ஆர்ப்பரிக்கும் அலைகளாக அடலேறுகளே! அடர்ந்தேறுங்கள் என்று கர்ஜித்தார்.
இப்போரின் போது விரண்டோடிய தோழர்கள் மீது வேதனைப் பட்டு, இவர்கள் என்னஆட்கள்? இவர்கள் வீரர்களா? என்று குறிப்பிட்டு, “யா அல்லாஹ்! எனது தோழர்களின்இந்தச் செயலுக்காக உன்னிடம் மன்னிப்பு கோருகின்றேன். முஸைலமாவின் இந்தப்பாவச் செயலுக்கும் எனக்கும் கடுகளவு கூட சம்பந்தமில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
(நூல்: தஹ்தீபுல் அஸ்மாஃ, இஸ்திஆப்)
எதிரணியின் முக்கியப் புள்ளியான ரிஜால் பின் அன்ஃபுவா என்பவனின் கணக்கைமுடித்து விட்டார்கள். அதனைத் தொடர்ந்து ஸைத் (ரலி)யும் கொல்லப்படுகின்றார்கள்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஸைத் பின் கத்தாப் (ரலி)யின் மரணச் செய்தி உமர் (ரலி) அவர்களுக்குக் கிடைத்ததும்”அல்லாஹ் எனது சகோதரருக்கு அருள் செய்வானாக! இரண்டு நன்மைகளில் அவர்என்னை முந்தி விட்டார். இஸ்லாத்தை எனக்கு முந்தி ஏற்றதிலும், அதற்காகத்தன்னுடைய இன்னுயிரை எனக்கு முந்தியே ஈந்ததிலும் என்னை விட இரண்டுநன்மைகளில் எனது சகோதரர் முந்தி விட்டார்” என்று குறிப்பிட்டார்கள்.
நூல்: இஸ்திஆப்
கட்டுடலுடன் சரிந்த ஸைதிடமி ருந்து சரியான தருணத்தில் கொடியைத் தன் கையில்ஏந்துகின்றார் ஸாலிம்.
யமாமா போர்க்களத்தில் ஸாலிம் (ரலி) அவர்களின் வீர வரலாற்றைப் பார்ப்பதற்கு முன்அவர்களைப் பற்றி ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள சில செய்திகளைச் சுட்டிக் காட்டுவதுமிகப் பொருத்தமாகும்.
முதன் முதலில் முஸ்லிமானவர் களில் இவரும் ஒருவர். இவர் ஓர் அன்சாரிப்பெண்மணியின் அடிமை யாக இருந்தார். ஆனால் அவரை அந்த அன்சாரிப் பெண், நீவிரும்பி யவரை எஜமானனாக்கிக் கொள் என்று கூறி விடுதலை செய்து விட்டார்.
அபூஹுதைபா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில்கலந்து கொண்ட நபித் தோழராவார். அவர் ஸாலிமைத் தத்தெடுத்துக் கொண்டார்.மேலும் அவருக்குத் தமது சகோதரரின் மகள் ஹிந்தை திருமணம் முடித்து வைத்தார்.அந்தப் பெண்மணி முதன் முதலில் ஹிஜ்ரத் செய்த நபித் தோழியரும், குறைஷிக் குலவிதவைப் பெண்களில் மிகச் சிறந்த பெண் மணியுமாவார். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 3172
அபூஹுதைஃபாவின் அடிமை யாயிருந்த ஸாலிம் (ரலி) அவர்கள் முதலாவதாக ஹிஜ்ரத்செய்தவர் களுக்கும் நபித்தோழர்களுக்கும் குபா பள்ளிவாசலில் தலைமை தாங்கிதொழுவித்தார்கள். அந்த நபித்தோழர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), அபூஸலமா (ரலி),ஸைத் பின் ஹாரிஸா (ரலி), ஆமிர் பின் ரபீஆ (ரலி) ஆகியோர் அடங்குவர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(புகாரி: 7175)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், அபூஹுதைஃபாவின் அடிமையான ஸாலிம், உபை பின்கஅப், முஆத் பின் ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
(புகாரி: 3760)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் வருவதற்குத்தாமதமானேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஏன் இவ்வளவுதாமதம்?” என்று வினவினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! பள்ளிவாசலில் ஒருவர்இருக்கின்றார். அவரை விட மிகச் சிறந்த முறையில் ஓதுபவரை நான் கண்டதில்லை”என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடனே பள்ளிக்குச்சென்றார்கள். அங்கு அபூஹுதைஃபாவின் அடிமை ஸாலிம் இருந்து கொண்டிருந்தார்.அப்போது நபி (ஸல்) அவர்கள், “எனது சமுதாயத்தில் உன் போன்றோரை ஆக்கினானேஅந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறினார்கள்.
(அஹ்மத்: 24156)
இதே அறிவிப்பு பஸ்ஸாரில் இடம் பெற்றுள்ளது. அதன் அறிவிப்பாளர்கள் சரியானவர்கள்என்று ஹைஸமீ அவர்கள் மஜ்மஉஸ் ஸவாயிதில் குறிப்பிடுகின்றார்கள்.
கொடி பிடிப்பும் கொள்கை பிடிப்பும்
குர்ஆனைச் சுமந்த இத்தகைய கொள்கைப் பிடிப்பாளரிடம், ஸைத் பின் கத்தாபிடமிருந்துகொடி கை மாறியதும் தான், நபித் தோழர்கள், “உன் மூலம் நாங்கள் தோல்வி முகம் காணநேரிடுமோ” என்று சீண்டிய போது, “என்னால் ஒரு தோல்வி எனில், நான் புறமுதுகுகாட்டினேன் என்றால் இந்தக் குர்ஆனை என் உள்ளத்தில் சுமப்பதற்கு அர்த்தமற்றவன்,அருகதை யற்றவன்” என்று சிலிர்த்தெழுகின்றார்.
அப்போது முஹாஜிர்களின் கொடி யைத் தாங்கிப் பிடித்திருந்த ஸாலிமின் வலது கைவெட்டப்படுகின்றது. உடனே தனது இடது கையால் கொடி யைத் தாங்கிப் பிடித்துக்கொள்கின்றார். அந்தக் கையும் வெட்டப்பட்டவுடன் அவரது பூத உடல் பூமியில் வீழ்கின்றவரை கொடியைத் தன் மார்பில் அரவணைத்துக் கொள்கின்றார்.
சாகா வரம் பெற்ற சகோதரத்துவம்
குர்ஆன் உருவாக்கிய கொள்கையாளன் நான், கோழை அல்லன் என்பதை நிரூபித்து, இருகைகளை இழந்து குற்றுயிரும் குலை உயிருமாகத் தரையில் கிடக்கும் போது தனதுதோழர்களிடம், “அபூ ஹுதைஃபா என்ன ஆனார்?” என்று விசாரிக்கின்றார். அவர்கொல்லப்பட்டு விட்டார் என்று பதிலளிக்கப்பட்டதும், “என்னை அவருக்கு அருகில்கொண்டு போய் கிடத்துங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
(நூல்: இஸாபா)
இப்படி இவர் கொப்பளித்த வீர உணர்வையும், கொள்கைப் பிடிப்பையும், கொடிபிடிப்பையும் நாம் என்னவென்று குறிப்பிடுவது?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர்களிடம் ஏற்படுத்திய சகோதரத்துவம் சாவின்போதும் சாகா வரம் பெற்ற சக்தியாக வடிவெடுப்பதை நாம் என்னவென்று வர்ணிப்பது?
இந்தப் போரில் இவ்வாறு இவ்விருவரும் சாதனையாளர்களாகவும் சரித்திரமாகவும் மாறிநம் மனதில் நிரந்தர இடம் பிடிக்கின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்ததும், மக்காவிலிருந்து வந்தமுஹாஜிர் களுக்கும் மதீனாவில் வாழும் அன்சாரிகளுக்கும் மத்தியில்சகோதரத்துவத்தை ஏற்படுத்தி வைத்ததை நாம் நன்கு அறிந்து வைத்திருக்கின்றோம்.அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்காவைச் சேர்ந்த ஸைத் பின் கத்தாபையும்,மதீனாவைச் சேர்ந்த மஅன் பின் அதீயையும் சகோதரர்களாக ஆக்கினார்கள்.அன்றிலிருந்து வாழ்வில் மட்டுமல்ல! புனித உயிர்த் தியாக அர்ப்பணிப்பிலும்இவ்விருவரும் மங்காத சகோதர பாசத்துடனும், மாறாத பற்றுடனும் இருந்தார்கள்என்பதை இந்த யமாமா போர் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
ஸைத் பின் கத்தாப் அவர்கள் கொல்லப்பட்ட அதே யமாமாப் போரில் தான் மஅன் பின்அதிய்யி அவர் களும் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி ஹாகிமில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு குருதி கீழே விழுந்தாலும் சரி, தாங்கள் ஏந்தியிருக்கும் இஸ்லாமிய கொடி கீழேவிழாது என்று தங்கள் உறுதிப்பாட்டை, போலி நபிக்கு எதிரான இந்தப் போர்க்களத்தில்நிரூபித்து வரலாற்றில் நிலையான இடத்தைப் பிடிக்கின்றார்கள்.
ஸாலிம் போன்ற, குர்ஆனை மனனம் செய்த ஆணி வேர்களின் மரணம் தான் உமர் (ரலி)அவர்களின் உள்ளத்தில், குர்ஆனை ஒன்று திரட்ட வேண்டும் என்ற சிந்தனைஏற்படுவதற்கு அடிப்படையாக அமைந்தது. இத்தகைய காரணத்தால் அபூபக்ர் (ரலி)யிடம்,குர்ஆனை ஒன்று திரட்ட வேண்டும் என்ற கோரிக்கையை உமர் (ரலி) முன்வைக்கின்றார்கள். அதன் விபரத்தை இன்ஷா அல்லாஹ் பின்னர் நாம் விரிவாக அறியவிருக்கின்றோம்.
ஸாலிம் போன்ற ஹாஃபிழ்களின் மரணம் எந்த அளவுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தியதுஎன்பதை இந்தச் செய்தியின் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம்.
வரலாற்று ஆசிரியர்கள் யமாமா களத்தைப் பற்றி வர்ணிக்கையில், இது சத்தியத்தோழர்களின் கொள்கை உறுதியை உரசிப் பார்த்த போர்க் களங்களில் ஒன்றாகும் என்றுகூறுகின்றனர். தோல்வி முகம் தான் இந்தப் போரின் முடிவாகி விடும், துரோகிமுஸைலமாவின் போலி தூதுத்துவத்திற்கு ஓர் அங்கீகாரம் கிடைத்து விடும் என்பதுபோன்று ஒரு தோற்றம் உருவாக்கப்பட்ட சூழலில் அதை நிர்மூலமாக்க நபித் தோழர்கள்,நபி (ஸல்) அவர்களின் இறுதி நபித்துவத்தை நிரூபிக்க நெருப்புக் கணைகளாகமாறினார்கள்.
துரோகத்தைத் தொலைத்து அழிக் கின்ற திராவகப் பொருளாக உருவெடுத் தார்கள்.முகாம்களை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தவர்கள், மூர்க்கத்தனமாகமுறுக்கேறியவர்களாக மடை உடைத்த வெள்ளமாய் படைக்களத்தின் மையப் பகுதிக்குள்புகுந்தனர்.
போலித் தூதனுக்கு எதிரான ஒரு புனிதப் போரில், இப்படி ஒரு புற்று நோய் இனி உலகவரலாற்றில் புறப்பட்டு விடக் கூடாது, அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட வேண்டும்என்று உறுதி பூண்ட ஒரு புண்ணியப் போரில் நபித்தோழர்கள் புயல் காற்றாய் வீசினர்.புற்றீசல்களாய் சீறிப் பாய்ந்த வீரர்களின் போர் உக்கிரத்தை, போக்கைப் புரிந்து கொண்ட,முஸைலமாவின் படையைச் சேர்ந்த முஹ்கம் பின் துபைல் என்பவன் தோட்டத்திற்குள்புகுந்து விடுமாறு சாடை செய்கின்றான்.
சாடையா காட்டுகின்றாய் சதிகாரா? என்று அவனை நோக்கி, அப்துர் ரஹ்மான் பின்அபீபக்ர் வீசிய அம்பு அவன் தாடையின் கீழ்ப் பகுதியில் பாய்ந்து அவன் விதியைமுடித்தது.
முஸைலமா உட்பட அவனது படையினர் புடை சூழ தோட்டத்திற்குள் ஓட்டமெடுத்தனர்.உள்ளே நுழைந்தவர்கள் தோட்டத்தின் கதவைத் தாழிட்டுக் கொண்டனர். துரோகம்தோட்டத்திற்குள் நுழைந்து விட்டதே! அதைத் தொலைத்து விட கோட்டைக்குள்நுழைவது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் பர்ரா பின் மாலிக் (ரலி)ஓர் அற்புத யோசனையைக் கூறுகின்றார். அது என்ன?