17) சொர்க்கத்தின் வாரிசாக்க வேண்டுதல்

நூல்கள்: இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைகளும் அவை தரும் படிப்பினைகளும்

وَاجْعَلْنِي مِنْ وَرَبَّةِ جَنَّةِ النَّعِيمِ

இன்பம் நிறைந்த சொர்க்கத்திற்கு உரிமை கொள்வோரில் ஒருவனாக என்னை ஆக்கிவைப்பாயாக!

(அல்குர்ஆன்: 26:85)

இப்ராஹீம் (அலை) அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அறிந்த மக்களுக்கு இந்தப் பிரார்த்தனை என்பது ஒரு பேரிடியாகதான் இருக்கின்றது என்றால் அது மிகையாகாது. என்னமாதிரியான வாழ்க்கையை இப்ராஹீம் நபி வாழ்ந்திருக்கிறார்கள்.

இவர்களைப் போன்ற மனிதர்களும் இப்புவியில் பிரவேசித்தார்களா? இப்படியான வாழ்க்கையை மனிதனால் வாழமுடியுமா? என்று நமது புருவத்தை உயர்த்திப் பார்க்க வைத்த இப்ராஹீம் நபியவர்களின் வாயிலிருந்து இவ்வாறு வருவது. ‘வெறுமனே முஸ்லிமாகப் பிறந்து விட்டோம்! எனவே நிச்சயமாக நாம்தான் ‘சொர்க்கத்தின் வாரிசு என்று நினைக்கும் நம்மைப் போன்றவர்களை வாயடைக்கச் செய்கிறது.

நான் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டேன். ஏகத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கிறேன். ஏகத்துவத்திற்காக எதிரிகளின் ஏச்சுக்கும். பேச்சுக்கும் ஆளானேன் என்று நினைத்து திருப்தி கொள்ளும் நாம், இந்தப் பிரார்த்தனையை நன்கு சிந்தித்து பார்க்கவேண்டும்.

நாம் செய்த தியாகங்களை இப்ராஹீம் நபியின் தியாகத்திற்கு முன்னால் ஒப்பிட்டு உரசிப் பார்க்க முடியுமா என்ன? நம்மைவிட கோடான கோடிமடங்கு தியாகம் செய்து தியாகத்தின் தலைவர் என வர்ணம் தீட்டப்படும் இப்ராஹீம் நபியின் இந்தப் பிரார்த்தனையைப் படித்த பிறகு நான் சொர்க்கவாசிதான் என்று சொல்வதைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டுத்தான் ஒவ்வொருவரும் செல்ல வேண்டும். நமது நிலைமை என்னவாகும் என்ற ஏக்கத்திற்கு உள்ளாகி இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையை நாமும் வாய்மொழிய வேண்டும்.

நபியவர்கள் கூறினார்கள்:

‘(இறையருள் இல்லாவிட்டால்)

யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் நுழைவித்துவிடாது’ என்று கூறினார்கள். மக்கள் ‘தங்களையுமா? இறைத்தூதர்அவர்களே!’ என்று வினவினார்கள். ‘என்னையும் தான்; அல்லாஹ் மன்னிப்பாலும் கருணையாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர’ என்றார்கள்.

(புகாரி: 6467)

முஹம்மது நபியின் நிலையும் இவ்வாறுதான் இருக்கிறது. யாரும். உலகில் யாருக்கும் இவர் சொர்க்கவாசி, அவர் சொர்க்கவாசி என்று நாம் உத்தரவாதத்தை வழங்கிவிட முடியாது. நபிமார்களாக நல்லவராக இருந்தாலும், சொல்லப்படுபவர்களாக இருந்தாலும், மகான்கள் என்று இருந்தாலும் அனைவரையும் அல்லாஹ்வின் நாட்டம் தான் சொர்க்கத்தில் சேர்க்கும் என்பதை இப்ராஹீம் நபியின் இந்தப் பிரார்த்தனையும், நபிகளார் கூறிய செய்தியும் நமக்குப் பளிச்சென்று பாடம் நடத்துகிறது.

இப்போது அதள பாதாளத்தில் இருக்கும் நமது நிலை என்னவாகும் என்பதை எண்ணிப்பாருங்கள். இப்ராஹீம் நபி கற்றுத்தந்த இந்தப் பிரார்த்தனையை நமது வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்