18) முழுமை பெற்ற முன்னறிவிப்பு
காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தமது படையின் முன்னணிக்கு ஷர்ஹபீல் பின் ஹஸனாவையும், தன் வலப்பக்க, இடப்பக்க அணிகளுக்கு முறையே ஜைத் பின் கத்தாப் (ரலி), அபூஹுதைபா (ரலி) ஆகியோரையும் நியமித்தவர்களாக யமாமாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் வழியில் ஒரு படையைச் சந்திக்கின்றார்கள்.
(ஷர்ஷபீல் பின் ஹஸனா என்று அச்சாகியுள்ளது. அதை, ஷர்ஹபீல் பின் ஹஸனா என்று திருத்தி வாசிக்கவும்)
அந்தப் படையினர் ஒரு மலைப் பாதையில் இரவு நேரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அப்படையின் தளபதி மஜாஆ பின் முராரா ஆவார். இவர்கள் இஸ்லாத்திற்கு எதிராகப் போர் தொடுக்க வந்திருக்கின்றார்களா? என்ற விசாரணைக்காக மாவீரர் காலித் பின் வலீதிடம் அழைத்து வரப் படுகின்றார்கள். விசாரணையில் இவர்கள் பனூ ஆமிர், பனூ தமீம் கிளையாரிடம் கொண்ட பகைமையில் பழி தீர்ப்பதற்காகப் படையெடுத்து வந்து திரும்பிக் கொண்டிருக் கின்றார்கள் என்ற விபரம் தெளிவானது.
உடனே அவர்களிடம் முஸைலமாவைப் பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “எங்களில் ஒரு நபி, உங்களில் ஒரு நபி” என்று தங்களை அடையாளம் காட்டி அர்த்தப் படுத்திக் கொண்டனர்.
இவர்கள் இப்போது நம்மை எதிர்க்கவில்லை. ஆனால் இவர்கள் கொண்டிருப்பதோ இஸ்லாத்திற்கு எதிரான கொள்கை! இந்த விஷ வாயு எப்போது வேண்டுமானாலும் கிளம்பி முஸ்லிம்களைக் கருவறுக்கும். எனவே இவர்களின் கதையை, கணக்கை முடிக்காமல் விட முடியாது என்று கருதிய காலித் பின் வலீதின் வீரத் தாக்குதலுக்கு அந்த நாற்பது பேர் கொண்ட படையினர் இரையாகி விடுகின்றனர்.
ஆனால் அந்தப் படையின் தளபதியை மட்டும் விட்டு விடுகின்றார்கள். தளபதியின் போர் அனுபவம் மற்றும் ஆற்றல் தன்னுடைய போர் வியூகத்திற்குத் தேவைப்படும் என்பது தான் இதற்குக் காரணம். அதனால் விலங்கிட்டு, தன்னுடைய துணைவியாருக்கு ஒரு காவலாளியாக ஆக்கிக் கொள்கின்றார்.
தான் புதிதாக மணம் முடித்துக் கொண்ட மனைவியிடம், “இவரை நல்ல முறையில் கவனித்துக் கொள்! என்று குறிப்பிட்டு விட்டுக் களத்தை நோக்கிச் சென்றார்.
காலித் தனது படையை மேட்டுப் பகுதியில் அமைத்திருந்தார். அந்த இடத்திலிருந்து யமாமாவை உற்று நோக்கிய வண்ணம் போர் புரிய வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு!
முஹாஜிர்களின் கொடி அபூஹுதைபா (ரலி) அவர்களின் அடிமையான ஸாலிம் (ரலி)யிடம் வழங்கப்பட்டிருந்தது. அன்சாரிகளின் கொடி ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி)யிடம் வழங்கப் பட்டிருந்தது. போரில் கலந்து கொண்ட கிராமப்புறத்து அரபிகளும் தங்களது கொடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலம் தொட்டு அவர்கள் மறையும் வரையிலும், மறைந்த பின்னரும் போர்க்களங்களில் முஸ்லிம்களின் நோக்கம் ஒன்றாகவே இருந்தது. அது அல்லாஹ்வின் திருப்தி என்ற நோக்கம் தான். அதனால் அவர்கள் அதிகமதிகம் அல்லாஹ்வின் உதவியில் நம்பிக்கை வைத்திருந்தனர். அவனிடம் அந்த அருளுதவியைத் தேடிக் கொண்டே களத்தில் நின்றனர்.
ஆனால் முஸைலமாவோ அசத்தியத்திற்குக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தான். காலித் பின் வலீத் காட்டிய கைவரிசை அவனுடைய கண்களில் கத்தியாக ஆடியது. மஜாஆவுக்கும் அவரது படையினருக்கும் ஏற்பட்ட தோல்வி அவனுடைய அழிவுக்கு ஒரு பறை அறிவிப்பாக அமைந்தது.
“இன்றைய நாள் நம்முடைய ரோஷத்திற்கு ஒரு சவாலான நாள்! இன்றைய தினம் நீங்கள் தோல்வியைத் தழுவினால் உங்களது பெண்கள் சிறைக் கைதிகளாகி விடுவர். மன வெறுப்புடன் எதிரிகளுக்கு மனைவியாக்கப்படுவர்” என்ற நெருப்பு வார்த்தைகளால் வெறியூட்டிக் கொண்டிருந்தான்.
இதனால் களம் சூடு பிடித்துக் கொண்டது. அவனது படையினர் வெறியாட்டம் ஆடினர். முஸ்லிம்கள் எப்படி ஈடு கொடுக்கப் போகின்றார்கள் என்று எண்ணுமளவுக்கு எதிரிகள் தங்கள் உயிரை வெறுத்துப் போராடினர்.
பல்வேறு களப் பணிகளில் கை தேர்ந்த காலித் தனது படையில் உள்ள பின்னடைவைக் கணக்கெடுக்கவும், அதைக் களையவும் தவறவில்லை. பளிச்சென்று உரசிக் கொண்டிருக்கும் வாள்களுக்கு மத்தியில் தன்னுடைய படையினர் கொஞ்சம் கொஞ்சமாக தோல்வி முகம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததைத் தன் பட்டறிவின் மூலம் படம் பிடித்து விடுகின்றார்.
அதன் விளைவாக அவரிடமிருந்து ஓர் உத்தரவு வீறு கொண்டு பிறக்கின்றது. “மக்களே! நீங்கள் மொத்தமாக ஒன்று கலந்து போரிட வேண்டாம். முஹாஜிர்கள்,முஹாஜிர்களுக்குக் கீழாகவும், அன்சாரிகள், அன்சாரிகளுக்குக் கீழாகவும்,கிராமப்புறத்து அரபிகள் தங்கள் கொடிகளுக்குக் கீழாகவும் நின்று போரிடுங்கள். அப்போது தான் தவறு எங்கிருந்து வருகின்றது என்று கண்டு கொள்ள வசதியாக இருக்கும்” இது தான் அந்த உத்தரவு வாசகங்கள்.
ஆம்! உண்மையில் இது விவேகமிக்க ஒரு வீரத் தளபதியின் போர் வியூக நடவடிக்கையாக அமைந்தது. இந்த அறிக்கை ஒவ்வொரு படை வீரரின் உணர்வை ஒரு கணம் சுண்டிப் பார்த்தது. நாம் யார் என்று நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று முஹாஜிர்கள் தங்கள் வீரத்தைக் காட்டவும், அன்சாரிகள் தங்கள் வீரத்தைக் காட்டவும் முனைந்து சாகசம் புரியத் தொடங்கினர். அதற்குத் தூண்டு கோலாக அல்லாஹ்வின் போர் வாளான காலித் பின் வலீதின் கூர் நிகர் வார்த்தைகள் அமைந்தன.
அது மட்டுமல்லாமல், முஹாஜிர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று அன்சாரிகளும்,அன்சாரிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று முஹாஜிர்களும், போர்க்களங்களில் நம்புவதற்குத் தகுதியிழந்த கிராமப்புற அரபிகளும் ஒருவர் மற்றொருவரைச் சார்ந்து நிற்கும் அலட்சியப் போக்கைத் தகர்த்து எறிந்தது. மிதப்பில் நின்றவர்களை இது சரியான சுய நினைவுக்கும், சுதாரிப்பிற்கும் கொண்டு வந்து அவர்களைச் சுழலும் சூறாவளிகளாக ஆக்கியது.
சிங்கத்தின் கர்ஜனைகள்
சுருக்கமாகச் சொல்லப் போனால் தலை கீழ் நிலையை நோக்கித் தடம் புரண்டு கொண்டிருந்த இந்தப் படையினரின் தலை விதியை மாற்றி தடம் புரளாமல் காத்து,சரியான தடத்தில் காலித் பின் வலீத் இட்டுச் சென்றார். “யா முஹம்மதா” என்பது முஸ்லிம் போர்ப் படையின் சங்கேத வார்த்தையாக அமைந்திருந்தது.
எதிர்பார்த்தது போலவே கிராமப்புற அரபிகள் காலை வாரினர். அதன் விளைவாக வீரத் தளபதி காலித் பின் வலீதின் மனைவியாரின் குடிலுக்குள் ஒரு கூட்டம் புகுந்து தாக்க முனைந்தது. விலங்கிடப் பட்டவராகக் கிடந்த மஜாஆ தன்னுடைய சாமர்த்தியத்தாலும் பேச்சு சாதுரியத்தாலும் சமாளித்து ஒருவாறாக அவர்களைத் திரும்ப அனுப்பி வைக்கின்றார்.
இப்போது காலித் பின் வலீத் தனித்தனியாகப் போரிடச் சொன்னதன் மர்மம் மக்களுக்குப் புரிந்தது. கோளாறு எந்தப் படையிலிருந்து வந்தது என்ற விபரம் தெரிந்தது.
“பகரா என்ற அத்தியாயத்தைப் பாக்கியமாகப் பெற்றவர்களே! இவர்களின் சூனியங்கள்,சூத்திர வேலைகள் நிச்சயமாகப் பலிக்கப் போவதில்லை. அதனால் புகுந்து விளையாடுங்கள். அவர்களைப் புறங் காணச் செய்யும் வரை போராடுங்கள்” என்று காலித் பின் வலீத் கூறினார். (பகரா அத்தியாயம் சூனியத்தைப் பற்றி விவரிக்கும் வசனத்தைத் தாங்கிய அத்தியாயமாகும். அதை அர்த்தப் படுத்தும் விதமாகவே இங்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது)
இந்த அழைப்பைக் கேட்ட மாத்திரத்தில் நபித்தோழர்கள் கர்ஜித்தனர்.
“உன் மூலமாக நாம் தோல்வி முகத்திற்குச் சென்று விடுவோமோ?” என்று முஹாஜிர்கள் தங்கள் கொடியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு நின்ற ஸாலிமை நோக்கி சீண்டுகின்றனர். “குர்ஆனை என் இதயத்தில் தாங்கிப் பிடிக்கும் நான்,தோல்விக்குக் காரணம் ஆயின், நான் கடைந்தெடுத்த ஒரு கோழை ஆவேன். குர்ஆனைச் சுமப்பதற்கு நான் அர்த்தமில்லாதவனாக, அருகதை இல்லாதவனாக ஆகி விடுவேன்” என்று பதிலுக்கு ஸாலிம் சீறிப் பாய்ந்தார்.
“வெற்றி அல்லது வீர மரணத்தைக் கடைவாய்ப் பற்களால் இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எதிரிகளின் படைகளின் கூட்டத்தின் ஊடே அனல் கக்கும் ஜுவாலைகளாக ஆர்ப்பரித்து முன்னேறுங்கள். அடலேறுகளே! அடர்ந்தேறுங்கள்” என்று கத்தாபின் மகன் ஜைத் இடியென முழங்கினார். வெற்றி அல்லது வீர மரணம் தழுவுகின்ற வரை நான் யாருடனும் பேச மாட்டேன் என்று சூளுரைத்து, வாய் பேசாது வாளை மட்டும் பேசச் செய்தார்.
“ஆக்கப்பூர்வமான, ஆவேசமான உங்கள் வீரப் போர் மூலமாக அல்லாஹ்வின் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கமாகி விடுங்கள்” – இது யமாமா போர்க்களத்தில் அபூஹுதைஃபா (ரலி)யின் ஆர்ப்பரிப்பாகும்.
“முஸ்லிம்களே! என் அருகில் வாருங்கள்” – இது பாராக்கிரமசாலியான பராஃ பின் மாலிக் (ரலி)யின் அறிவிப்பும், அழைப்புமாகும். இவர் எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்து காயத்துக்குள்ளானார்.
கபன் துணி அணிந்த ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ்
கொடி சரிந்தால் படையின் கூடாரம் சரிந்தது என்றாகி விடும். அதனால் அன்சாரிகளின் கொடியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி), தோண்டிய குழியில் கணுக்கால்கள் வரை பதித்துக் கொண்டார்.
உலக வரலாற்றில் போருக்குச் செல்லும் வீரர்கள் தங்கள் ஊருக்குத் திரும்ப வரவும் செய்யலாம். வராமலும் போகலாம் என்ற இரு நிலைப்பட்ட எண்ணத்தில் செல்வதைக் கண்டிருக்கின்றோம்; கேள்விப் பட்டிருக்கின்றோம். ஆனால் திரும்ப வர மாட்டோம்; வரக் கூடாது; உயிர் போவது ஒரு முறை தான்! அது தீனுக்காக இருக்கட்டும். அடையப் போவது சுவனம் தான் என்று உறுதி பூண்டு, இறந்தோருக்கு அணிவிக்கும் கபன் துணியை போராடையாக தரித்துக் கொண்டு, சடலத்திற்குப் பூச வேண்டிய வாசனைத் திரவியத்தை உயிருடன் இருக்கும் போதே பூசிக் கொண்டு, போர்க்களத்திற்கு வந்த போர் வீரரை உலகம் கண்டதே இல்லை.
வரலாற்றில் முதன் முதலில் பிணக் கோலத்தில் போருக்கு வந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரராகத் திகழ்பவர் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்த முன்னறிவிப்புகள் வரலாற்றில் பொறிக்கப்பட்ட பொன்னறிவிப்புகளாகும். அவை அன்னாரது வாழ்நாளிலும் நிறைவேறி உள்ளன. அவர்களது மரணத்திற்குப் பின்னாலும் நடந்திருக்கின்றன. நடந்து கொண்டேயிருக்கின்றன. அத்தகைய முன்னறிவிப்புகளில் ஒன்று ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் பற்றியதாகும்.
(49:2 வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒரு மனிதர், “அவரைக் குறித்த செய்தியைத் தங்களுக்காக நான் அறிந்து வருகின்றேன்,அல்லாஹ்வின் தூதரே” என்று கூறினார். ஸாபித் பின் கைஸிடம் அந்த மனிதர் சென்றார். அப்போது அவர் தமது தலையைக் கவிழ்த்தபடி (கவலையுடன்) தமது வீட்டில் அமர்ந்து கொண்டி ருந்தார். அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி)யிடம், “உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார். அதற்கு ஸாபித் பின் கைஸ் (ரலி), “மோசம் தான். நான் நபி (ஸல்) அவர்களின் குரலுக்கு மேல் எனது குரலை உயர்த்தி வந்தேன். நான் நரகவாசிகளில் ஒருவன் தான்” என்று கூறினார். அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ஸாபித் பின் கைஸ் இப்படி இப்படிச் சொன்னார்” என்று தெரிவித்தார்.
அந்த மனிதர் (நபி (ஸல்) அவர்களிடமிருந்து) மகத்தான நற்செய்தியை வாங்கிக் கொண்டு மீண்டும் ஸாபித் பின் கைஸ் (ரலி)யிடம் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஸாபித் பின் கைஸிடம் சென்று, “நிச்சயம் நீர் நரகவாசிகளில் ஒருவரல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவரே’ என்று சொல்வீராக” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(புகாரி: 4846, 3613)
பொதுவாகவே நபி (ஸல்) அவர்கள் யாருக்கேனும் எதையேனும் முன்னறிவிப்பு செய்தால் அது சம்பந்தப்பட்டவர் விஷயத்தில் நிறைவேறுகின்றதா? என்று நபித் தோழர்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டேயிருப்பார்கள். அது நிறைவேறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த அற்புதம் நிறைவேறியது கண்டு ஆனந்தம் அடைவார்கள்.
அந்த அடிப்படையில் நபித்தோழர்கள் இந்த முன்னறிவிப்பு குறித்து, கேமரா இல்லாத அந்தக் காலத்தில் கண் கேமராக்களைக் கொண்டு காத்திருந்தார்கள். அவர்களுக்கு இந்த யமாமா போர்க்களம் ஓர் அருமையான விருந்தாக அமைந்தது. ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தமது சரமாரியான சாகசங்களை நிறைவேற்றி விட்டு,முஹம்மத் (ஸல்) அவர்களின் அந்த முன்னறிவிப்பை முழுமைப் படுத்தி விடுகின்றார். அதாவது ஷஹீதாக (உயிர் தியாகியாக) மட்டுமல்லாமல் ஷாஹிதாக (சான்றாளராக)வும் ஆகி விடுகின்றார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். இது யமாமாவில் ஸாபித் பின் கைஸ் (ரலி)யின் உண்மை வரலாறாகும்.
குறிப்பு: ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) உஹத் போர்க்களத்தில் கொல்லப்பட்டதாக அபூதாவூதில் 2505வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது. அந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் அபூதாவூத் அவர்கள், “உஹதில் கொல்லப்பட்டவர் ஸாபித் பின் கைஸ் அல்ல! ஸஃத் பின் ரபீஃ ஆவார். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான பிஷ்ர் என்பார் இதைத் தவறுதலாக அறிவித்து விட்டார்” என்று அந்த ஹதீஸின் கீழே குறிப்பிட்டுள்ளார்.