18) நபிகள் நாயகத்திற்கு மட்டும் அனுமதி ஏன்?

நூல்கள்: நபிகள் நாயகத்தின் திருமணங்கள் விமர்சனங்களும் விளக்கங்களும்

முஸ்லிம்கள் அதிகபட்சமாக நான்கு திருமணங்கள் செய்ய இஸ்லாம் அனுமதிக்கின்றது.

முஸ்லிம்கள் அவ்வாறு திருமணம் செய்து கொள்வது இல்லை என்றாலும் பல்வேறு அறிவுப்பூர்வமான காரணங்களின் அடிப்படையில் மார்க்கத்தில் அதற்கு அனுமதி உண்டு.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான்கு மனைவியருக்கு மேல் திருமணம் செய்துள்ளார்களே? என்று கருதலாம்.

நான்கு மனைவியருக்கு மேல் திருமணம் செய்யலாம் என்பது எல்லோருக்குமான சட்டமல்ல. நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள பிரத்தியேகமானதாகும்.

நபிகள் நாயகத்திற்கு மட்டும் இதில் சலுகை ஏன்? என்று நினைக்கலாம்.

பல்வேறு விஷயங்களில் நபிகள் நாயகத்திற்கு தனிச்சட்டங்கள் உண்டு.

ஒருவர் மீது இரக்கப்பட்டு தர்மமாகப் பொருளாதாரத்தையோ. உணவையோ யாரேனும் வழங்கினால் அதைப் பயன்படுத்திக் கொள்வதற்கு இதர முஸ்லிம்களுக்கு அனுமதி. ஆனால் நபிகள் நாயகத்திற்கோ அவரது குடும்பத்தாருக்கோ தர்மப் பொருளைப் பயன்படுத்த அனுமதியில்லை.

ஒருவர் விட்டுச் சென்ற சொத்துக்கள் அவரது இறப்பிற்குப் பிறகு அவரது வாரிசுகளை போய் சென்றடையும். ஆனால் நபிகள் நாயகம் விட்டு செல்லும் சொத்துக்கள் நபியின் குடும்பத்திற்குப் போய் சேராது. மாறாக அது பொதுமக்களுக்குரியதாகி விடும்.

உணவோ, பானமோ எதையும் உண்ணாமல் தொடர்ந்து நோன்பிருப்பது இதர முஸ்லிம்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு தொடர் நோன்பு இருப்பார்கள். அவர்களுக்கு அதில் தனிச்சட்டமுள்ளது.

இப்படிப் பல்வேறு விஷயங்களில் நபிகள் நாயகத்திற்கென தனிச்சட்டமுள்ளது. அவை எல்லாமே நமது பார்வையில் நபிகள் நாயகத்தைச் சிரமப்படுத்துவதாகவே உள்ளன.

நான்கு மனைவியருக்கு மேல் திருமணம் செய்து கொண்டதும் நபிகள் நாயகத்திற்கு வழங்கப்பட்ட தனிச்சட்டமாகும்.

இறைவன் அவர்களுக்கு வழங்கிய சிறப்பு அனுமதியாகும்.

இதற்கான காரணத்தை இறைவனோ, இறைத்தூதரோ நேரடியாக இவை தான் காரணம் என்பதாக துல்லியமாக வரையறுத்துக் கூறவில்லை.

நபிகள் நாயகம் வாழ்க்கையைப் படிக்கும் போது பொதுவில் சில காரணங்களை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

முதல் காரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முழு மனித சமூகத்திற்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள்.

அத்தனை காலமும் சிலைகளை வழிபட்டுக் கொண்டும் கொலை, கொள்ளைகளில் மிகுதியாக ஈடுபட்டும் நாகரீகமற்று வாழ்ந்து வந்த அம்மக்களிடையே ஓரிறைக் கொள்கையையும் ஒழுக்கமிக்க வாழ்வையும் நபிகள் நாயகம் பிரச்சாரம் செய்த போது அனைத்து தரப்பிலிருந்தும் பலத்த எதிர்ப்புகளை சந்தித்தார்கள்.

இத்தனை ஆண்டு காலம் எங்கள் முன்னோர்கள் வழிவழியாக எங்களுக்கு கற்றுத் தந்து சென்ற கலாச்சாரத்தை அழிக்கப் பார்க்கிறீரா? என்று கொதித்தனர்.

நபியின் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட எதிரிகள் நபியைக் கொல்ல தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் அளவு அவர்களின் எதிர்ப்பு இருந்தது.

எளிதில் கடந்து செல்பவையாக அவர்களின் எதிர்ப்பலைகள் இல்லை.

இந்த எதிர்ப்புகளைக் குறைக்கவும் அமைதிப்படுத்தவும் நபிகளாருக்குத் தேவை இருந்தது.

பல்வேறு கோத்திரத்தைச் சார்ந்த சில பெண்களைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் மக்களின் எதிர்ப்புகளைக் குறைத்தார்கள்.

அன்றைய காலத்தில் திருமண சம்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளும் கோத்திரத்தார் சண்டையிடுவதை தவிர்க்கவே விரும்புவர்.

நபிகள் நாயகம் திருமணம் செய்து கொண்ட ஸஃபிய்யா பின்த் ஹுயைய் என்பவர் யூதர்களின் குடும்ப பின்புலத்தை கொண்டவர்.

யூதர்களுடன் நடைபெற்ற போரில் வெற்றி கொள்ளப்படும் போது எதிரிகளின் குடும்பத்தை சார்ந்தவர் என்று வெறுப்பு கொண்டு கொல்லவோ, நாடு கடத்தவோ செய்யாமல் அவர்களைச் சார்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்கள்.

நபிகளாரின் இந்நடைறையினால் எதிரிகளாகச் செயல்பட்ட அந்தச் சமுதாயத்தினர், நம் குடும்பப் பெண்ணை திருமணம் செய்து அங்கீகரித்துள்ளார் என்று அவர்களின் எதிர்ப்புகள் குறைத்துக் கொள்ள முற்படுவர்.

முஹம்மத் நமது கோத்திரத்தாருடன் திருமண சம்பந்தம் வைத்துள்ளார். இனி அவரையோ அவரது சகாக்களையோ பெரிதாக எதிர்க்கத் தேவையில்லை எனும் முடிவை சிலர் செயல்படுத்த நபியின் இந்தத் திருமணம் உதவுகிறது.

நபியின் ஓரிரு திருமணங்கள் இந்தக் காரணத்தைக் கொண்டதாக இருந்தது என்று விளங்கலாம்.

இரண்டாவது காரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த பெண்களில் ஒருவர் உம்மு ஸலமா (ரலி), அபூஸலமா என்பவரை முன்பு இவர் திருமணம் செய்திருந்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் உஹதுப் போரில் பங்கேற்ற அபூஸலமா அவர்கள் எதிரிகளால் கொல்லப்பட்டதால் உம்மு ஸலமா விதவையானார்.

போரில் பங்கேற்று மரணித்த தமது தோழரின் மனைவியரை நபிகள் நாயகம் மணப்பதால் விதவைப் பெண்களுக்கு வாழ்வளித்து முன்னுதாரணம் கற்பிக்கப்படுகிறது.

போரில் பங்கேற்று மரணித்த சக தோழர்களின் மனைவியர் ஆதரவற்று நிற்கின்ற போது அத்தகைய பெண்களுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்ற நற்சிந்தனையை மக்களுக்கு ஊட்டும் வகையில் இந்தத் திருமணம் அமைந்துள்ளது.

நபிகளார் பல திருமணங்கள் புரிய இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மூன்றாவது காரணம்

சமூக அமைப்பில் நெருக்கமான நண்பர்களை குடும்ப உறவில் இணைப்பதற்கும் ஏற்கனவே உறவுக்காரர்களாக இருப்பவர்களை மேலும் உறவில் பலப்படுத்திக் கொள்ளவும் திருமண முறையை நாடுவதை பரவலாக காண்கிறோம்.

இரு நண்பர்கள் நெருக்கமாகப் பழகும் போது ஒருவருக்கு தங்களது சகோதரியைத் திருமணம் செய்து வைத்து ஒரே குடும்பமாக ஆகிவிடுவதை இன்றும் காண முடிகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது மகள்களில் ஒருவரை உஸ்மான் (ரலி) அவர்களுக்கு மணமுடித்து அவரை மருமகனாக்கி கொண்டார்கள். ருகைய்யா எனும் அந்த மகள் இறந்த போது இன்னொரு மகளான உம்மு குல்சும் அவர்களை மணமுடித்து கொடுத்தார்கள்.

அலீ (ரலி) அவர்கள் நபிகளாரின் பொறுப்பில், பராமரிப்பில் வளர்ந்தவர்கள் தாம். அவருக்குத் தமது மகள்களில் ஒருவரான பாத்திமா (ரலி) அவர்களை மணமுடித்து கொடுத்து குடும்ப உறவை இன்னும் வலுவாக்கிக் கொண்டார்கள்.

அதுபோலவே அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பம் முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.

அவர்களிருவரின் மகள்களான முறையே ஆயிஷா – ஹஃப்ஸா (ரலி) ஆகியோரை நபிகள் நாயகம் திருமணம் செய்து கொண்டார்கள்.

அந்த காலத்தில் நண்பர்களுக்கு தங்களது மகளை மணமுடித்துக் கொடுத்து நட்பை உறவாக்கி கொள்ளும் வழக்கம் இருந்தமையால் இது நடந்தேறியுள்ளது.

நட்பைப் பலப்படுத்தும் வகையில் இந்த இரு திருமணங்கள் அமைந்துள்ளதாகப் புரிந்து கொள்ளலாம்.

இதில் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் போரில் கணவனை இழந்த விதவைப் பெண் என்பது கூடுதலாகக் கவனிக்கத்தக்க அம்சமாகும்.

நான்காவது காரணம்

நபி ஸல் அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக அனுப்பப்பட்டுள்ளார்கள்.

இறைவணக்க வழிபாடுகளை எவ்வாறு புரிவது? என்பதை கற்றுத் தருவது மாத்திரமின்றி அன்றாட நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் எனும் முழுமையான வாழ்வியலை சொல்லித்தர வந்தவர்கள்.

எனவே தான் இறைவிசுவாசிகளுக்கு நபிகளார் மிகச்சிறந்த முன்மாதிரி என்று இறைவனால் கூறப்படுகிறது.

வாழ்வியல் முன்மாதிரி என்றால் அவர்களது அனைத்து செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும். சமூகத்தில் எவ்வாறு நபிகள் நாயகம் நடந்து கொள்கிறார்கள் என்பதை அதை அருகில் இருந்து கண்காணிக்கும் தோழர்கள் கூறிவிடுவார்கள்.

நபிகளார் அவர்கள் இறைவனை வழிபடுவது, போர் புரிவது. வியாபாரம் செய்வது. பிற மக்களுடன் பழகுவது. குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மக்களிடையே, குழுக்களிடையே இணக்கத்தை உண்டாக்குவது, குடிமக்களை நிர்வகிப்பது என அத்தனையையும் உடனிருந்து கவனித்த தோழர்கள் எடுத்துக் கூறி அது வரலாற்று ஏடுகளிலே பதிவாகியுமுள்ளது.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் குடும்பத்தாரிடையே எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைக் கண்டிப்பாக நபியவர்களின் மனைவியரால் தான் கூற முடியும்.

மனைவியருக்குச் செய்ய வேண்டிய கடமைகள். வீட்டில் இறை வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்வது, இல்லற வாழ்வின் சட்ட திட்டங்கள், பெண்களுக்குரிய பிரத்தியேக சட்டங்கள் என பெண்கள் சார்ந்தும் கணவன் – மனைவி இல்லற வாழ்வு தொடர்பிலும் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டிய பல்வேறு அம்சங்கள் உள்ளன.

இதில் சிலவற்றை நேரிடையாக நபி (ஸல்) அவர்களே கூறினாலும் உள்ளார்ந்த பல விஷயங்களை நபியின் தோழர்களால் அறிந்து கொள்ள முடியாது. இது போன்ற விஷயங்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களால் தான் மக்களுக்கு எடுத்துக் கூற முடியும்.

பெண்களுக்குரிய பிரத்தியேகமான பல சட்டங்களை நபியின் மனைவியரே மக்களுக்கு அறிவித்துள்ளார்கள்.

வீட்டில் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு தம் செயல்பாடுகளை அமைத்துக் கொள்வார்கள் என்பது தொடர்பான பல செய்திகளை ஆயிஷா (ரலி) உள்ளிட்ட அவர்களின் மனைவியரே அறிவித்துள்ளார்கள்.

மக்களுக்கு என்ன போதித்தார்களோ அந்த அறநெறி மற்றும் ஒழுக்கம் சார்ந்து தான் வீட்டிலும் நபிகள் நாயகம் வாழ்ந்தார்கள் என்று அவர்களின் மனைவியர் கூறும் நற்சான்றுகளால் நபிகளாரின் தூய்மை பளிச்சிடுகின்றது.

இறைவனின் தூதர், உலக மக்களுக்கு முன்மாதிரி என்ற அடிப்படையில் அவரின் செயல்பாடுகளில் மனைவியர் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய விஷயங்கள் உலக மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக இறைவன் நபிகளாருக்கு இந்த சிறப்பு அனுமதியை வழங்கியிருக்கலாம்.

இது போன்ற அக்கால சமூக சூழல் மற்றும் மார்க்க காரணங்களே நபிகள் நாயகத்தின் பல திருமணங்களுக்கு காரணமாக இருந்ததே தவிர இவர்கள் கூறுவது போன்ற பெண்களின் மீதான மோகம் ஒரு போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இல்லை.

ஆதிகால மன்னர்கள் அந்தப்புர வாழ்க்கையில் திளைத்திருப்பதை போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திளைத்திருக்கவில்லை.

அவர்களுக்குப் பல மனைவியர் இருந்தபோதிலும் நபிகள் நாயகம் அதிகம் நோன்பிருப்பவர்களாகவும் குறைவான உணவையே உட்கொள்பவர்களாகவும் இருந்தார்கள்.

கட்டில், மெத்தை, போன்ற அற்ப சுகத்தின் பக்கம் கூட நபிகள் நாயகம் அவர்கள் தம் கவனத்தைத் திருப்பவில்லை.

சமூக மக்களின் ஏற்றத்தாழ்வை அகற்றுவதிலே அக்கறையாய் இருந்தார்கள்.

அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் குறித்து அதிகம் சிந்தித்து அவர்களுக்காகவே வாழ்ந்தார்கள்.

எனவே தான் அனைவராலும் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் நற்குணம் அவர்களில் காலத்திலேயே பாராட்டப்பட்டது.

உயர்ந்த நற்குணம் நிறைந்த நபிகள் நாயகத்தின் தூய வாழ்வை நடுநிலையோடு வாசிக்கின்ற எவரும் நபிகள் நாயகத்தை ஒழுக்கமிக்க சிறந்த தலைவர் என்றே முடிவு செய்வார்.

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர். (அல்குர்ஆன்: 74:4)