18) கடன் பற்றிய சட்டங்கள்

நூல்கள்: இஸ்லாம் கூறும் பொருளியல்
கடன் விஷயத்தில் கடினப் போக்கு

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஒருவர் மரணம் அடைந்தால் நபியவர்கள் ஜனாஸா தொழுவிப்பது தான் வழக்கம். அப்படித் தொழ வைக்கும் போது முதலில் “இந்த ஜனாஸா ஏதாவது கடன்பட்டு உள்ளதா?’ என்று கேட்பார்கள். ஆம் என்று சொன்னால் அந்தக் கடனை அடைப்பதற்கு ஏதாவது விட்டுச் சென்று இருக்கிறாரா? என்று கேட்பார்கள். அதற்குத் தோழர்கள் ஆம் என்று சொன்னால் மட்டுமே அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழ வைப்பார்கள்.

இல்லையென்று சொன்னால் தமது தோழர்களைப் பார்த்து, “உங்களுடைய சகோதரருடைய கடனை உங்களில் யார் ஏற்றுக் கொள்கிறீர்கள்?” என்று கேட்பார்கள். யாராவது முன் வந்தால் அதனை நிறைவேற்றுவார்கள். அப்படி யாராவது முன்வராத போது, “உங்களுடைய சகோதரனுக்கு நீங்களே தொழ வையுங்கள்” என்று கூறி விட்டுச் சென்று விடுவார்கள்.

இதை எதற்காக சொல்கிறார்கள் என்றால் ஒரு மனிதனுக்கு கடன் இருக்கும் நிலையில் அவனுக்காக துஆ செய்தால் அது அவருக்குப் பயன் தராது என்பதற்காக ஜனாஸா தொழுவிக்காமல் இருப்பார்கள். ஏனென்றால் மறுமை நாளில் கடன் என்ற பாவம் மன்னிக்கப்படாமல் வந்து நிற்கும் என்பதற்காக வேண்டியோ அல்லது கடனைப் பற்றிய எச்சரிக்கைக்காக வேண்டியோ இருக்கலாம். ஆனால் இஸ்லாமிய அரசின் பொருளாதாரம் வளம் பெற்ற பின் இது மாற்றப்பட்டு விட்டது.

நபி (ஸல்) அவர்களுடைய ஆரம்ப கால கட்டத்தில் பைத்துல்மாலில் அதிகமான பண வசதி இருக்கவில்லை. பின்னர் பஹ்ரைன் போன்ற நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டு பைத்துல்மாலுடைய நிதி அதிகமாகக் கிடைத்தது. இதன் காரணமாக நபி (ஸல்) அவர்கள், “உங்களுடைய சகோதரன் ஒருவன் மரணம் அடைந்து ஏதாவது விட்டுச் சென்றிருந்தால் அதை அவருடைய வாரிசுகள் எடுத்துக் கொள்ளட்டும். கடன் பட்டிருந்தால் என்றால் என்னிடம் கொண்டு வாருங்கள்; அதனை நான் நிறைவேற்றுகிறேன். உங்களில் நான் தான் மிகத் தகுதி வாய்ந்தவன்‘ என்று கூறுவார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன.

சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது: இறுதித் தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. “இவர் கடனாளியா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, நபித் தோழர்கள் இல்லை என்றனர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது, “இவர் கடனாளியா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம்! என்றனர். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்” என்றார்கள். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு” என்று கூறியதும், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 2295)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: கடன்பட்டு இறந்தவர் நபி(ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுவார்; அப்போது “இவர் கடனை அடைக்க ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று கேட்பார்கள். “கடனை அடைப்பதற்குப் போதுமானதை விட்டுச் சென்றிருக்கிறார்‘ என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்!‘ என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு மிகுதியான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்), மூமின்களைப் பொறுத்தவரை அவர்கள் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன்! மூமின்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும்! யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும்! என்று கூறினார்கள்.

(புகாரி: 2298)

ஒரு மனிதனுக்கு ஜனாஸா தொழுகை என்பது கடைசி தொழுகை, அதில் நபி(ஸல்) அவர்களுடைய துஆ முக்கியமானது. அதைக் கூட கடன்பட்டவன் இழக்கக் கூடிய நிலை ஏற்பட்டது. எனவே கடன்பட்டவனுக்கு அந்தக் கடனை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் எற்படவேண்டும்.

வசதி படைத்தவன் காலம் தாழ்த்தக் கூடாது

இன்றைக்குச் சிலர் கடன் வாங்குவார்கள். அவர்களுக்கு எந்த வழியும் இருக்காது. உதாரணமாக மருத்துவச் செலவுக்கு வாங்குவான். அந்தக் கடனை அவனால் நிறைவேற்ற முடியாத நிலைமையில் அவகாசம் கேட்பது பரவாயில்லை.

ஆனால் வசதி படைத்த சிலர் கடன் வாங்குகிறார்கள். அந்தக் கடனை நிறைவேற்றாமல், அதனை நிறைவேற்றுவதற்குரிய எல்லா தகுதியும் இருந்தும் அதனை நிறைவேற்றாமல் இருந்து ஏமாற்றுவது மிகப் பெரிய அநியாயமாகும்.

எனவே பணக்காரன் கடன் வாங்குவதைத் தவிர்த்து கொள்ள வேண்டும். மிகவும் கஷ்டப்பட்டு வீடு, வாசல் எல்லாம் இழக்கின்ற நிலைமை ஏற்ப்பட்டால் கடன் வாங்குவது பரவாயில்லை. ஆனால் இன்றைக்குக் கடன் வாங்கக் கூடிய பணக்காரர்கள் எதற்கு வாங்குகிறார்கள்? ஒருவனிடம் ரூபாய் பத்து லட்சம் இருக்கும்; அதனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக வேண்டி இன்னும் ஒரு பத்து லட்சம் வாங்குகிறான்.

எதற்கு இதனை வாங்குகிறார்கள்? ஏதோ அவசர தேவைக்காக வாங்குகிறார்களா? இல்லை மாறாக, தன்னுடைய தொழிலை அதிகரிப்பதற்காக வேண்டித் தான். இந்த நிலையில் அவர் மரணம் அடைந்தால் அல்லாஹ் நாளை மறுமை நாளில் இவர் பட்ட கடனுக்காக இவர் யாரிடத்தில் வாங்கினாரோ அவருக்கு அப்படியே எடுத்துக் கொடுத்து விடுவான். கடன் கொடுத்தவர் மன்னிக்காவிட்டால், இவர் போகக் கூடிய இடம் நரகம் தான். எனவே கடன் வாங்குவதை இயன்ற அளவு தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒப்புக்கொள்ளட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 2287, 2288, 2400)

எனவே கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிப்பது கூடாது. ஏனென்றால் நமக்கு எந்த நேரத்திலும் மரணம் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே அடுத்தவருடைய பணத்தை நாம் நம்முடைய வீட்டில் வைத்து அழகு பார்க்க வேண்டுமா? அவசியம் ஏற்பட்டால் வாங்குவது தவறு இல்லை. அப்படி வாங்கினாலும் பணம் இருந்தால் உடனே கொடுத்து விட வேண்டும். கடனை அடைக்க வசதியில்லை என்றால் அவனிடம் சென்று மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த வழிமுறையைத் தான் இஸ்லாம் கற்றுத் தருகின்றது.

நல்ல முறையில் திருப்பி கொடுத்தல்

ஒரு மனிதனிடம் நாம் கடன் வாங்கும் போது, எவ்வளவு வாங்குகிறோமோ அதை விட அதிகமாக நல்ல முறையில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. ஆனால் இன்றைக்குக் கடன் வாங்கும் வரை வளைந்து குனிந்து பணிவுடன் வாங்கி விடுகிறான். அதைத் திருப்பிக் கொடுக்கும் போது கடன் கொடுத்தவரை அலையாய் அலைக்கழிப்பதையும் இழுத்தடிப்பதையும் நாம் பார்க்கிறோம். இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. திருப்பிக் கொடுக்கும் போது கொஞ்சம் கூடுதலாகவே கொடுங்கள் என்று மார்க்கம் கூறுகின்றது.

இவ்வளவு கூடுதலாகத் தர வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் கடன் கொடுத்தால் அது வட்டியாகி விடும்.

அதே போன்று திருப்பிக் கொடுப்பவர் இன்ன தொகைக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து, கூடுதலாகக் கொடுத்தால் அதுவும் கூடாது.

உதாரணமாக ஒருவன் பத்தாயிரம் கடன் வாங்கி விட்டு, கொடுக்கும் போது ஆயிரமோ, இரண்டாயிரமோ கூடுதலாக, தானாக முன்வந்து கொடுத்தால் அது தவறு கிடையாது. இதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபித் தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, “(அவரை தண்டிக்க வேண்டாம்😉 விட்டு விடுங்கள். ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.

நபித் தோழர்கள், “அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம் தான் எங்களிடம் இருக்கின்றது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்” என்று கூறினார்கள்.

(புகாரி: 2305, 2306, 2390, 2392, 2393, 2606, 2609)

நபி (ஸல்) அவர்கள் கடன் வாங்கினால் அதை விட அதிகமானதையே கொடுப்பார்கள். இதைப் பின்வரும் ஹதீசும் தெளிவுபடுத்துகின்றது.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கு கொண்டு விட்டுத் திரும்பி வந்து கொண்டு) இருந்தேன்; அப்போது எனது ஒட்டகம் களைத்து, பலமிழந்து போனதால் என்னைப் பின் தங்க வைத்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ஜாபிரா? என்று கேட்டார்கள். நான், ஆம்! என்றேன். “என்ன விஷயம் (ஏன் பின்தங்கிவிட்டீர்)?” என்று கேட்டார்கள். “என் ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்!” என்றேன். நபி (ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப் பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டி(எழுப்பி)னார்கள். பிறகு (உமது வாகனத்தில்) ஏறுவீராக! என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபி (ஸல்) அவர்களை விட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், நீர் மணமுடித்துவிட்டீரா? என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். கன்னியையா? கன்னி கழிந்த பெண்ணையா? என்று கேட்டார்கள். கன்னி கழிந்த பெண்ணைத் தான்! என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக்குலாவி மகிழலாமே! என்று கூறினார்கள்.

நான், “எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர். ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக! நிதானத்துடன் நடந்து கொள்வீராக! என்று கூறிவிட்டு பின்னர், “உமது ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடுகிறீரா?” என்று கேட்டார்கள். நான், சரி (விற்று விடுகிறேன்!) என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஒரு ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள்.

பிறகு, எனக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். “இப்போது தான் வருகிறீரா?” என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். “உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டு சற்று தாராளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்! என்றார்கள். நான் (மனதிற்குள்) “இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை” என்று கூறிக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், “உமது ஒட்டகத்தை எடுத்துக்கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக!‘ என்று சொன்னார்கள்.

(புகாரி: 2394, 443, 2097, 2309)

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் பள்ளிவாச-ல் சென்றேன்; எனக்கு (என்னிடம் வாங்கிய ஒட்டகத்தின் விலையைச்) செலுத்தி எனக்கு அதிகமாகவும் தந்தார்கள்.

(புகாரி: 2603)