18) ஆதரவற்றோருக்கு நலம் நாடுதல்
சமூகத்தில் பல தரப்பட்ட வாழ்க்கை நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் ஆதாரவற்றோர், அநாதைகள், ஏழைகள் போன்றோரும் இருக்கிறார்கள். இத்தகைய மக்களுடைய வாழ்க்கையின் தரம் உயர்வதற்கு முடிந்தளவு உதவக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். குறிப்பாக, வாழ்க்கையில் தன்னிறைவு பெற்றவர்கள், சுயநலமாக இருந்து விட கூடாது. வாழ்வாதாரம் இல்லாமல் சிரமப்படுவோரின் முன்னேற்றத்திற்கு கரம் நீட்டி ஒத்துழைக்க வேண்டும்.
கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர் ‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : (புகாரி: 6006)
‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தமது சுட்டு விரலாலும் நடு விரலாலும் (சற்றே இடைவெளி விட்டு) சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: (புகாரி: 6006)
தன் அடிமையில் தனக்குள்ள பங்கை எவர் விடுதலை செய்து விடுகின்றாரோ அவர் (வசதியுடையவராயின்) தன் செல்வத்தைக் கொண்டு அவ்வடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவர் மீது கடமையாகும். அவரிடம் செல்வம் இல்லையென்றால் அந்த அடிமையின் விலை, (அவனை) ஒத்த (அடிமையின்) விலையைக் கொண்டு மதிப்பிடப்பட்டு அவன் உழைத்துச் சம்பாதிக்க அனுமதி அளிக்கப்பட வேண்டும். அவன் மீது தாங்க முடியாத (உழைப்பைச் சுமத்திச்) சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: (புகாரி: 2492)