17) முடிவுரை

நூல்கள்: ஏசு மரணிக்கவில்லை- ஒரு தெளிவான விளக்கம்

 

அஹ்மத் தீதாத் கூறுகின்றார்:

என்னுடைய இளமைப் பருவத்தில் தென்னாப்பிரிக்காவின் ஆடம்ஸ் மிஷனில் நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது கிறித்தவ பாதிரி மாணவர்களுடன் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட நேர்ந்தது. மனித குல மீட்சிக்கு ஒரே வழி ஏசுவின் சிலுவை மரணம் தான் என்று அப்போதிருந்து எனக்கு ஊட்டப்பட்டது.

ஏசுவின் சிலுவை மரணம் தான் தங்களது விமோசனம் என்று அதிகமான கிறித்தவ இளைஞர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதைக் கண்டேன். அதை நம்பாதவர்கள் நரகவாதிகள் என்று அறிந்தேன். எளிதில் ஈர்ப்புக்குள்ளாகும் இளைஞனாக இருந்த என்னை இது மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கிறித்தவத்தின் அஸ்திவாரமான இந்த நம்பிக்கை, எனது ஆய்வின் மையக் கருவானது. புதிய ஏற்பாடுகள் அனைத்தையும் முழுமையாக மேய்ந்து, ஆய்ந்து உண்மையை அறிய முனைந்தேன்.

இவ்வாறு இந்த ஆய்வில் ஈடுபட்ட என்னிடம் யாரும் முஸ்லிம் என்ற அடிப்படையில் ஏசுவின் சிலுவை மரணம் பற்றி உன்னுடைய நம்பிக்கை என்ன? என்று கேட்க மாட்டார்கள் என்று மிகக் கண்ணியமாக நம்புகிறேன்.

காரணம் ஏசுவின் சிலுவை மரணம் தொடர்பாக என் நம்பிக்கை,(அல்குர்ஆன்: 4:157)வசனம் ஆணித்தரமாகத் தெரிவிக்கின்ற அந்த சத்திய நம்பிக்கை தான்.

என் மீது கிறித்தவ நம்பிக்கையாளர்கள் காட்டிய கரிசனமும் அக்கறையும் தான் என்னுடைய இந்த ஆய்வுக்கு ஒரு தூண்டுகோலாகவும் உந்துதலாகவும் அமைந்தது.

அவர்களுடைய கரிசனத்தையும், ஆவலையும் நான் அதிகக் கவனத்துடனும், கருத்துடனும் எடுத்துக் கொண்டு, விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு, அவர்களுடைய ஆதாரங்களையே துணையாகக் கொண்டு இந்த ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டேன். அதன் விளைவுகளைத் தான் நீங்கள் இப்போது பகிர்ந்து கொண்டு திகைப்பில் ஆழ்ந்திருக்கிறீர்கள்.

என்னுடைய வீட்டு வாசலைப் பள்ளமாக்கி, கதவைத் தட்டி, இப்படி ஒரு முயற்சியில் என்னை இறக்கி விட்டு, இப்படி ஓர் ஆய்வை இயற்ற வைத்த நூற்றுக்கணக்கான கிறித்தவ நண்பர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்லாண்டுகள் நான் பட்ட பாட்டின், படித்துப் படித்துப் பார்த்து நான் செய்த ஆய்வின் பலன் இது என்று கூறி முடிக்கிறேன்.

– அஹ்மத் தீதாத்