17) உளூ செய்வதின் சட்ட சுருக்கம்
தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவி, தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ இல்லாமல் தொழுகை நிறைவேறாது.
(அல்குர்ஆன்: 5:6)
தண்ணீர்
- ஆறு, குளம், கண்மாய், ஏரிகள், கிணறுகள் ஆகியவற்றிலும் மழை நீர், நிலத்தடி நீர் போன்றவற்றாலும் உளூச் செய்யலாம்.
- நபி (ஸல்) அவர்கள் கடல் தண்ணீரில் உளூச் செய்ய அனுமதியளித்துள்ளனர்.
- (இப்னு மாஜா: 388)
- பயன்படுத்திய தண்ணீரில் உளூ செய்து கொள்ளலாம்.(புகாரி: 160)
- பெண்கள் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரில் ஆண்களும், ஆண்கள் மீதம் வைத்த தண்ணீரில் பெண்களும் உளூச் செய்து கொள்ளலாம்.
- மனிதர்களை அண்டி வாழும் கோழி, சிட்டுக் குருவி, காகம், பூனை போன்ற பிராணிகள் வாய் வைத்த தண்ணீரில் உளூச் செய்து கொள்ளலாம்.
- சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும், வெந்நீரிலும் உளூச் செய்து கொள்ளலாம்.
- வீட்டில் உளூச் செய்து விட்டுப் புறப்படுவதே சிறந்ததாகும். வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்கு அவர் நடந்து செல்வது கூட வணக்கமாகக் கருதப்படும்.
- பள்ளிவாசலில் உளூச் செய்வது குற்றமில்லை.
உளூச் செய்யும் முறை
- உளூச் செய்யும் முன் “பிஸ்மில்லாஹ்” என்று கூற வேண்டும்.
- பிறகு, இரு முன் கைகளையும் மணிக்கட்டு வரை கழுவ வேண்டும்.
- வாயையும், மூக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.
- ஒரு கையளவு தண்ணீர் எடுத்து அதில் ஒரு பகுதியை வாயிலும், மற்றொரு பகுதியை மூக்கிலும் செலுத்திச் சுத்தம் செய்யலாம். தனித்தனியாக இரண்டு தடவை தண்ணீர் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
- பல் துலக்குதல் உளூவின் ஓர் அங்கம் அல்ல! உளூச் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய தனியான வணக்கமாகும்.
- இரு கைகளால் முகத்தை கழுவ வேண்டும்.
- நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்யும் போது தண்ணீரைக் கொண்டு தமது தாடியைக் கோதிக் கழுவுவார்கள்.
- முகத்தைக் கழுவிய பின்னர் இரு கைகளையும் முழங்கை வரை கழுவ வேண்டும்.
- முகம், கை கால்களைக் கழுவும் போது விரிவாகக் கழுவுவது சிறந்ததாகும்.
- இரு கைகளையும் கழுவிய பின்னர், ஈரக் கையால் தலையைத் தடவ வேண்டும். இது மஸஹ் எனப்படும்.
- தம் இரண்டு கைகளையும் தலையின் முன்பகுதியில் வைத்து பிடரி வரை கொண்டு சென்று பிறகு அப்படியே எந்த இடத்திலிருந்து தடவ ஆரம்பித்தார்களோ அந்த இடத்திற்குத் திரும்பக் கொண்டு வந்தார்கள். இவ்வாறு ஒரு முறை மட்டுமே மஸஹ் செய்ய வேண்டும்.
- பெண்களும் ஆண்களைப் போலவே பிடரி வரை மஸஹ் செய்ய வேண்டும்.
- தலைக்கு மஸஹ் செய்யும் போது, தமது ஆட்காட்டி விரல்களைக் காதுகளின் உட்பகுதியிலும், கட்டை விரலை காதுகளின் வெளிப்பகுதியிலும் வைத்து காதுகளுக்கும் மஸஹ் செய்ய வேண்டும்.
- பிடரியில் மஸஹ் செய்ய ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் கிடையாது.
- பின்னர் இரு கால்களையும் கழுவ வேண்டும். முதல் வலது காலையும், பின்னர் இடது காலையும் கழுவ வேண்டும்.
- கால்களைக் கரண்டை வரை கவனமாகக் கழுவுவது அவசியமாகும்.
- குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்குக் கேடு தான்’
எத்தனை தடவை கழுவ வேண்டும்?
- தலைக்கு மஸஹ் செய்வதைத் தவிர மற்ற காரியங்கள் அனைத்தையும் ஒவ்வொரு தடவையோ, அல்லது இரண்டிரண்டு தடவையோ, அல்லது மும்மூன்று தடவையோ செய்யலாம்.
- ஒரு உளூவிலேயே கூட நாம் விரும்பியவாறு செய்யலாம். முகத்தை இரு தடவை கழுவி விட்டு, கைகளை மூன்று தடவையும், கால்களை ஒரு தடவையும் கழுவலாம்.
- உளூவின் போது ஒவ்வோர் உறுப்பையும் அதிகப்பட்சமாக மூன்று முறை கழுவலாம். மூன்று தடவைக்கு மேல் கழுவுவதற்குத் தடை உள்ளது.
- இறுதியாக உளூ செய்து முடித்த பின் ஓதும் துஆ
- மேற்கூறப்பட்ட வரிசைப்படி செய்வது தான் நபிவழியாகும்.