மரணமும் மறுமையும் -16
மரணத்திற்கு முன் செய்ய மறந்தவை
கப்ரில் நல்ல நிலையை அடைவதற்கு ஏராளமான நற்காரியங்களைச் செய்ய வேண்டும் என்று கடந்த உரையிலே பார்த்தோம்.
ஆனால் நாம் எவ்வளவு கவனமாக பல நற்காரியங்களை செய்தாலும் நம்மையும் அறியாமல் சில தீமைகள் சில பாவங்கள் நமக்கு மிகப்பெரும் சோதனையாக வந்து அமைந்து விடும்.
எனவே அதில் இருந்து ஒரு மனிதனை பாதுகாத்துக் கொள்வதற்கு நபி(ஸல்) அவர்கள் நமக்கு சில வழிமுறைகளை கற்றுத் தருகிறார்கள் மிகப்பெரிய அளவிலே நன்மைகளை செய்ய முடியாவிட்டாலும், நபி அவர்கள் கற்றுத் தந்த இந்த செயல்களை, சில பரிகாரங்களை செய்வதன் மூலமாக நாம் கப்ர் மற்றும் மறுமையின் வேதனையில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். அவற்றை இனி வரிசையாகக் காண்போம்!
வஸிய்யத் (மரண சாசனம்) செய்வோம்
வஸிய்யத் என்பது ஒருவர் மரணத்தை நெருங்கும் போது தன்னுடைய பொருளாதாரத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை அடுத்தவர்களுக்கு ஒதுக்கிவிட்டுச் செல்வதாகும்.
உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும் போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.
இந்த வசனத்தில் ‘பெற்றோர் மற்றும உறவினர்களுக்கு’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது மாற்றப்பட்டுவிட்டது. பெற்றோருக்கும், வாரிசு முறையில் சொத்து பங்கீட்டில் உள்ளவர்களுக்கும் வஸிய்யத் என்பது கிடையாது.
(அல்குர்ஆன்: 4:11-12) ➚ ஆகிய வசனங்களில் யாரையெல்லாம் வாரிசுதாரர்கள் பட்டியலில் இறைவன் சேர்த்து விட்டானோ அவர்களுக்கு வஸிய்யத் செய்ய கூடாது. அவர்கள் அல்லாத மற்ற உறவினர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் வஸிய்யத் செய்யலாம்.
வஸிய்யத் செய்ய வேண்டும் என்பதற்காக எந்த வரம்புமின்றி அனைத்துப் பொருளாதாரத்தையும் வஸிய்யத் செய்வதற்கும் மார்க்கம் அனுமதிக்கவில்லை.
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
விடைபெறும் ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை நலம் விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! நான் மரணத் தறுவாயை அடைந்துவிட்டேன். நான் தனவந்தன்; எனது ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்துவிடட்டுமா?’’ எனக் கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘வேண்டாம்’ என்றார்கள். பின்னர் நான் ‘பாதியைக் கொடுக்கட்டுமா?’ எனக் கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ‘‘வேண்டாம்: மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்துவிடும். அதுவும் அதிகம் தான்; ஏனெனில் உமது வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டு செல்வதைவிட தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது’’ என்று கூறினார்கள்…
(புகாரி: 1295)(ஹதீஸின் சுருக்கம்)
நமது சொத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் வஸிய்யத் செய்யக் கூடாது என்றும் மூன்றில் ஒரு பங்கு செய்வதே அதிகம் என்றும் இந்தச் செய்தியிலிருந்து நமக்குத் தெளிவாகிறது.
வஸிய்யத் செய்கிறோம் என்கிற பெயரில் ஒட்டுமொத்த சொத்தையும் மரண சாசனம் செய்துவிட்டு வாரிசுகளுக்கு ஒன்றுமில்லாமல் ஆக்குவதும் பாவமாகிவிடும்.
ஒருவர் வஸிய்யத் செய்திருக்கிறார் எனில் அவர் மரணித்த பிறகு சொத்து பங்கீடு செய்வதற்கு முன்னால் அவருக்கு ஏதேனும் கடனோ, அல்லது அவர் யாருக்கேனும் வஸிய்யத் செய்திருந்தாலோ அதை நிறைவேற்றிய பிறகுதான் சொத்தைப் பங்கிட வேண்டும்.
வஸிய்யத் செய்வது சில சமயம் அவசியமாகிறது. உதாரணமாக, ஒருவர் மரணத் தருவாயில் இருக்கிறார். அவருக்கு வாரிசுகள் இருக்கிறார்கள். அவரது மகனோ அல்லது மகளோ தந்தையாகிய இவர் இறப்பதற்கு முன்னால் இறந்து விட்டனர் என வைத்துக் கொள்வோம். அந்த இறந்த மகன் அல்லது மகள் வழியாகப் பேரன், பேத்தி போன்ற உறவுகள் இவருக்கு இருக்கிறது.
இந்நிலையில் சொத்திற்கு சொந்தக்காரர் இறந்து விட்டால் ஏற்கனவே இறந்து விட்ட இவரது மகன் வழியாக உள்ள பேரக்குழந்தைகளுக்கு வாரிசு முறையில் எந்தப் பங்கீடும் கிடைக்காது. ஏனெனில் சொத்திற்குச் சொந்தக்காரர் இறந்த பிறகுதான் அந்தச் சொத்தில் பங்கீடு ஏற்படும். அவர் இறப்பதற்கு முன்னால் அவரது மகன் அல்லது மகள் இறந்துவிட்டால் அவர்களுக்கு இவரிடமிருந்து எந்தப் பங்கும் கிடையாது.
இவ்வாறு தந்தைக்கு முன்னால் இறந்த பிள்ளைகளுக்கு எந்தப் பங்கும் கிடைக்காதென்றால் அவர்கள் வழியாகவுள்ள பேரக்குழந்தைகளுக்கும் எந்தப் பங்கும் கிடைக்காது. இந்தச் சூழ்நிலையில் சொத்திற்குச் சொந்தக்காரர், தான் இறப்பதற்கு முன்னால் தனது பேரக்குழந்தைகளின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு அவர்களைப் பரிதவிக்க விட்டுவிடாமல் அவர்களுக்கு தனது சொத்திலிருந்து வஸிய்யத் செய்வது அவசியமாகிறது.
இதுபோன்று வாரிசுதாரர்களின் பட்டியலில் தன்னுடைய உறவினர்களுக்கு வஸிய்யத் செய்வது மிக அவசியமானதாக இருக்கிறது. ஆனால், இவ்வாறு வாரிசுரிமையில் சொத்தில் பங்கீடு பெறாத தன்னுடைய குடும்பத்தாருக்கு வஸிய்யத் செய்வதை விட்டும் பலர் அலட்சியத்துடன் இருக்கின்றனர். இதுவும் நம்முடைய மரணத்திற்கு முன்னால் செய்ய வேண்டிய அவசியமான காரியங்களில் உள்ள ஒன்றாகும்.
எப்போது மரணம் வரும் என்று தெரியாத நாம் இதுபோன்ற மரணத்திற்கு முன்னால் செய்ய வேண்டிய காரியங்களை விரைவாகச் செய்து முடித்துவிட வேண்டும். இதபோன்ற காரியங்களில் அலட்சியத்துடன் இருந்து இறைவனிடத்தில் குற்றவாளியாக மாறிவிடக்கூடாது. இறைவனிடத்தில் நன் மக்களாய் நாம் அனைவரும் இருப்போமாக!
மரணத்திற்கு முன் கடனை ஒப்படைப்போம்
கடன் கொடுக்கல் வாங்கலுக்கு அனுமதி அளிக்கும் இஸ்லாம் அந்த கடனை எழுதிக் கொள்ள வேண்டும் என்றும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை இடுகிறது. இதில் இன்றைக்கு கவனம் செலுத்துபவர்கள் மிகக் குறைவானவர்களே. கடனுக்கு இஸ்லாம் அனுமதி அளித்திருந்தாலும் கடனைப் பற்றி அதிகம் எச்சரிக்கையும் செய்கிறது.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
‘இறைவா! கப்ருடைய வேதனையைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்வார்கள்.
‘தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?’ என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது ‘ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்’ என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.
பொய் பேசுபவனாகவும் வாக்குறுதி அளித்துவிட்டு மோசடி செய்பவனாகவும் மாற்றுகின்ற காரணத்தினால் தான் கடனை விட்டு நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் அதிகமாக பாதுகாப்பு தேடினார்கள்.கடன் என்ற ஒரு வாசலை திறந்து விட்டால் அது பல பாவங்களுக்கும் வழியாக அமைந்து விடுகிறது. .அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அறப்போரில் கொல்லப்பட்ட) உயிர்த்தியாகியின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன; கடனைத் தவிர.
அறி: அப்துல்லா பின் அம்ர் பின் அல்ஹாஸ்( ரலி)
நூல் : (முஸ்லிம்: 3832)
ஷஹீது என்பது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் அந்தஸ்தை பெற்றுத் தரும் செயல், அப்படிப்பட்ட ஸஹீது கடன் இருக்கும் நிலையில் மரணித்து விட்டால் பாவங்கள் மன்னிக்கப்படாது என்றால் மரணத்திற்கு முன் நிறைவேற்ற வேண்டிய காரியத்தில் முதலாவதாக கடன் இருக்கிறது.
கடனை ஒப்படைக்க வாரிசுகளுக்கு வஸிய்யத் செய்ய வேண்டும்.
கடனை ஒப்படைக்க நமக்கு சக்தி இல்லாவிட்டாலும், அதை ஒப்படைக்க நமது வாரிசுகளுகுக்கு வஸிய்யத் செய்ய வேண்டும்.
ஜனாஸாத் தொழுகை நடத்துவதற்காக ஒருவரது உடல் கொண்டு வரப்பட்டது. இவர் கடனாளியா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டபோது, நபித்தோழர்கள் இல்லை என்றனர். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது, இவர் கடனாளியா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு என்று கூறியதும், அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
கடன்பட்ட நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் மறுமை நாளில் அவரது நன்மைகள் கடன் கொடுத்தவர் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். இந்த நிலையை யாரும் அடையக் கூடாது என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தாமல் புறக்கணித்துள்ளார்கள். நாம் கடனாளியாக மரணித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்த்தனை நமக்குக் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சம் காரணமாக கடனில்லாமல் மரணிக்க நபித்தோழர்கள் முயற்சிப்பார்கள் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதில் கடுமை காட்டியுள்ளனர்.
நபித்தோழர்களின் நிலையே இதுவென்றால் நாம் கடன் வாங்கினால் என்னவாகும் என்ற அச்சம் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஏற்படவேண்டும்.
எனவே இயன்றவரை யாருக்கும் கடனாளியாக இல்லாமல் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
பிள்ளைகளுக்கு தவ்ஹீதை வஸிய்யத் செய்தல்
யஃகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் அவர் அருகாமையில் இருந்தீர்களா அவர் தன் சந்ததிகளை நோக்கி எனக்கு பின்னர் எதை வணங்குவீர்கள் என கேட்டதற்கு உமது இறைவனும் உமது மூதாதைகளான இப்ராஹிம் இஸ்மாயில் இஸ்ஹாக் ஆகியவர்களின் இறைவனுமான ஒரே ஓர் இறைவனை வணங்குவோம் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபட்ட முஸ்லிம்களாகவே இருப்போம் என்று கூறினார்கள்.
மனிதர்களிடத்தில் மன்னிப்பு கேட்போம்
ஒரு மனிதன் மற்றொரு மனிதனை ஏதேனும் விதத்தில் சார்ந்திருப்பவனாக இருக்கிறான். அவ்வாறு சார்ந்திருக்கும் போது ஒருவர் மற்றவரை சர்வ சாதரணமாகப் புண்படுத்திவிடுகின்றனர். உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ, சொல்லாலோ அல்லது செயலாலோ மற்றவர்கள் புண்படும் படி நடந்துகொள்கின்றனர்.
இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டவர்கள் அதற்காக சம்பந்தபட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு, தமது தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருக்கின்றனர். இவ்வாறு சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர் மன்னிக்கும் வரை அல்லாஹ் மன்னிப்பு வழங்குவதில்லை. மறுமையில் மிகப்பெரிய கைசேதமும் ஏற்படும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர் தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார்.
ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)” என்று கூறினார்கள்.
வணக்க வழிபாடுகளில் தவறு செய்தால் அதை இறைவன் முன் ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவே மனிதர்களுக்கு ஏதேனும் தவறு இழைத்திருந்தால் கொஞ்சமும் தாமதிக்காமல் உடன் சம்பந்தப்பட்ட நபர்களிடம் அவர்களுக்கு நாம் இழைத்த தவறை ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் மன்னிக்காமல் இறைவன் ஒருக்காலும் மன்னிக்க மாட்டான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ, வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட் டும்.)
(ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும்.
அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.
அறி: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 2449)
இதுபோன்று மறுமையில் மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் காரியத்திலிருந்து நாம் பாதுகாப்பு பெற்றுக் கொள்வதற்காக நாம் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் நமது மரணத்திற்கு முன்னால் அவர்களிடம் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும். இதை கவுரவக் குறைச்சலாக எண்ணக் கூடாது. அவ்வாறு எண்ணி மன்னிப்பு கேட்காமல் இருந்துவிட்டால் நிலையான வாழ்க்கையாகிய மறுமையில் மிகப்பெரும் அவமானமாகவும் இழப்பாகவும் மாறிவிடும்.
தாமதமின்றி இறைவனிடம் தவ்பா செய்வோம்
தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் “நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்” எனக் கூறுவோருக்கும், (ஏகஇறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
மன்னிப்பதற்கு அல்லாஹ் தனது கையை நீட்டுகிறான்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக இரவில் தனது கையை நீட்டுகிறான்; இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக பகலில் கையை நீட்டுகிறான். சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் (யுக முடிவு நாள்)வரை (ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்துகொண்டிருக்கிறான்). – இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாவங்கள் நன்மையாக மாற்றப்படும்!
ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
மரணத்திற்கு பின்னும் பயனளிக்கும் செயல்களை செய்தல்.
மனிதன் மரணித்து விட்டால் அவனால் எந்த நன்மையும் செய்ய முடியாது என்பதை அனைவரும் அறிவோம்.
ஆயினும் நிலைத்து நிற்கும் வகையில் நாம் ஒரு நல்லறத்தைச் செய்துவிட்டு மரணித்தால் அந்த நல்லறத்தின் மூலம் மக்கள் பயனடையும் காலம் வரை நமக்கு நன்மைகள் வந்து சேர்ந்து கொண்டிருக்கும்.
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி
இவ்வுலகில் வாழும் போது நாம் ஒரு பள்ளிவாசல் கட்டிவிட்டு மரணித்தால் அதில் மக்கள் தொழுகை நடத்தும் காலமெல்லாம் நமக்கு நன்மைகள் வந்து சேரும்.
நாம் ஒரு கிணறு தோண்டி விட்டு மரணித்தால் அக்கிணற்றில் மக்கள் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்தும் போதெல்லாம் நமக்கு நன்மை வந்து சேரும்.
எந்த ஒரு முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டு, அம்மரத்திலிருந்து மனிதர்களோ, மற்ற விலங்கினங்களோ சாப்பிட்டால் அது அவர் செய்யும் தர்மமாகக் கருதப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்கள்:(புகாரி: 6012, 2320),(முஸ்லிம்: 2904)
இது போன்ற நன்மைகளில் கவனம் செலுத்தாமல் நாம் இறந்து விட்டால் மறுமையில் கைசேதப்பட்டவர்களாக நிற்போம். ஒவ்வொருவரும் இதில் அதிகக் கவனம் செலுத்தி நன்மைகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக மரணத்தை நெருங்கியவர் இதில் சிறப்பாகக் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்த கட்டம் உலக அழிவு
நல்லவராக இருந்தாலும் தீயவராக இருந்தாலும் அனைவரும், மண்ணறை வாழ்க்கைக்கு பிறகு சந்திக்கும் அடுத்த கட்டம் உலக அழிவு நாள் மற்றும் எழுப்பப்படும் நாள். இன்ஷா அல்லாஹ் அடுத்த உரையில், இறுதியாக சந்திக்கும் இறுதி நாளை பற்றியும் அதற்கு பிறகு நடக்கும் பல நிகழ்வுகளை பற்றியும் வரிசையாக காப்போம்.