16) நல்லவர்களுடன் சேர்க்க…

நூல்கள்: இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைகளும் அவை தரும் படிப்பினைகளும்

 

وَالْحِقْنِي بِالصَّالِحِينَ

என் இறைவனே! நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக!

(அல்குர்ஆன்: 26:83)

அல்லாஹு அக்பர்! இப்ராஹீம் நபியின் சிறப்புகள் என்ன? அவர்கள் செய்த தியாகங்கள் என்ன என்பதையெல்லாம் நாம் அறிவோம். இப்ராஹீம் (அலை) எம்மாம்பெரிய தியாகி என்பதை அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வே உலக மக்களுக்கு உரைத்துவிட்டான். அவர்களின் வாழ்க்கையைப் பின்வரும் மக்களுக்குப் பாடமாகவும், படிப்பினையாகவும் பறைசாற்றிவிட்டான். அவர்களை மக்களுக்குத் தலைவராகவும் ஆக்கிவிட்டான். இன்னும் அவர்களைத் தன் உற்ற தோழராகவும் எடுத்துக் கொண்டான்.

இப்ராஹீம் நபியை மறுமையில் பார்க்க வேண்டும், அவர்களுடன் இருக்கவேண்டும் என்ற ஏக்கத்துடன் ஒவ்வொரு ஏகத்துவவாதியும் அளப்பரிய கோட்டைகளையும் ஆசைகளையும், கட்டி கனவு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்பேற்பட்ட இப்ராஹீம் நபி அவர்கள் ‘என் இறைவனே! நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக!’ என இறைவனிடம் கேட்கிறார்கள்.

இதிலிருந்து இப்ராஹீம் நபி எப்பேற்பட்ட மனப்பான்மையுடன் வாழ்ந்திருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்ய முடிகிறதா? நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை! தனது பிரார்த்தனை நெடுகிலும் நான் அல்லாஹ்வின் அடிமை, நான் அல்லாஹ்வின் அடிமை, நான் அல்லாஹ்வின் அடிமைதான் என்பதை ஆழப் பதிய வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த துஆவை முன்வைத்து மனிதர்களுக்கு மீண்டும் பசுமரத்தாணி போல் பதியவைக்கிறார்கள்.