16) ஊழியருக்கு நலம் நாடுதல்

நூல்கள்: பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்

முதலாளிகள், தொழிலாளர்களிடம் அவர்களது சக்திக்கு மீறிய காரியங்களை சுமத்திவிடக் கூடாது. தங்களது ஊழியர்கள் சிரமத்தில் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் போது அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும் அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை காலதாமதம் இல்லாமல் சரியாக முழுமையாக வழங்கிவிட வேண்டும். நிறைவான பொருளாதம் பெற்று வளமாக இருப்பதற்கு தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதை விளங்கி எப்போதும் அவர்களின் நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டும்.

உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டுவந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு அமர வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் அவருக்கு ஒரு பிடி அல்லது இரு பிடிகள்’ அல்லது ‘ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : (புகாரி: 5460)

நாங்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) ‘ரபதா’ எனுமிடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்து சென்றோம். அப்போது அவர்கள் மீது ஒரு (புதிய) மேலங்கியும். அவர்களுடைய அடிமையின் மீது அதே போன்ற ஒரு (புதிய) மேலங்கியும் இருந்தன. நாங்கள், ‘அபூதர் அவர்களே! (அவர் அணிந்திருக்கும் மேலங்கியையும் வாங்கி) இரண்டையும் சேர்த்து நீங்களே அணிந்துகொண்டால் (உங்களுக்கு) ஒரு ஜோடி (புதிய) ஆடையாக இருக்குமே?” என்று கேட்டோம். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள் பின்வருமாறு விடையளித்தார்கள்:

எனக்கும் என் சகோதரர்களில் ஒருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அம்மனிதரின் தாய் அரபுப் பெண் அல்லர். எனவே, நான் அவருடைய தாயைக் குறிப்பிட்டுத் தரக் குறைவாகப் பேசிவிட்டேன். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) என்னைப் பற்றி முறையிட்டார். நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தபோது, ‘அபூதர்ரே! நீர் அறியாமைக் காலத்துக் கலாச்சாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்” என்று சொன்னார்கள். நான். ‘அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் மற்ற மனிதர்களை ஏசும்போது பதிலுக்கு அவர்கள் அவருடைய தந்தையையும் தாயையும் ஏசத்தானே செய்கிறார்கள்?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அபூதர்! நீர் அறியாமைக் காலத்துக் கலாச்சாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்” என்று கூறிவிட்டு, “(பணியாளர்களான) அவர்கள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். ஆகவே, நீங்கள் உண்பதிலிருந்து அவர்களுக்கு உணவளியுங்கள். நீங்கள் அணிவதிலிருந்து அவர்களுக்கு அணியக் கொடுங்கள். அவர்களது சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள். அவ்வாறு சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு நீங்களும் ஒத்துழைப்புத் தாருங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஅரூர் பின் சுவைத்,          நூல் : (முஸ்லிம்: 3417)