16) ஆயிஷா (ரலி)

நூல்கள்: நபிகள் நாயகத்தின் திருமணங்கள் விமர்சனங்களும் விளக்கங்களும்

திருமணத்தின் போது வயது 6

இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் போது வயது 9

திருமணத்தின் போது நபியின் வயது 50

நபிகள் நாயகம் திருமணம் செய்த பெண்களிலேயே ஆயிஷா (ரலி) அவர்கள் தான் மிகக்குறைந்த வயதுடையவராகவும் கன்னிப் பெண்ணாகவும் இருந்தார்கள்.

பெண்கள் மீதான ஆசை காரணம் இல்லை என்றால் சிறுவயது பெண்ணை ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்தத் திருமணத்திற்கும் இதுபோன்ற குற்றச்சாட்டைக் கூற முடியாது என்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

ஆயிஷா அவர்களை 6 வயதில் நபிகள் நாயகம் திருமணம் செய்திருந்தாலும் உடனடியாக இல்லற வாழ்வில் ஈடுபடவில்லை.

அதிலிருந்து மூன்று ஆண்டுகள் கழிந்த பின்பு ஆயிஷா அவர்களின் 9ம் வயதில் தான் இல்லற வாழ்வில் ஈடுபடலானார்கள்.

ஆயிஷா அவர்கள் இல்லற வாழ்விற்குத் தகுதியான நிலையை அடைந்த பிறகு தான் இல்லறத்தில் நபிகள் நாயகம் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அதன் காரணத்தினாலே திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் நபிகள் நாயகம் இல்லறத்தில் ஈடுபடாமல் தவிர்த்திருக்கிறார்கள்.

நபிகள் நாயகம் பெண்கள் மீது ஆசை கொண்டவர். அதற்காகத் தான் இந்த திருமணத்தை செய்தார்கள் என்பது உண்மையாக இருந்திருந்தால் திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகு இல்லறத்தில் ஈடுபடத் தகுதியாகும் ஒரு பெண்ணையா தேர்வு செய்வார்கள்?

கடும் பசியில் இருப்பவர் தனது பசியைப் போக்க உடனடியாக கனி தரும் மரத்தை நாடுவாரா?

மூன்று ஆண்டுகள் காத்திருந்து அதன் பிறகு கனி தரும் மரத்தை நாடுவாரா?

திருமணமாகி மூன்று ஆண்டுகள் காத்திருந்து அதன் பிறகே ஆயிஷா அவர்களுடன் இல்லற வாழ்வை நபிகளார் துவக்கினார்கள் என்பதே நபிகள் நாயகத்தின் மீதான குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்து விடுகிறது.

ஆறு வயது சிறுமியை ஏன் திருமணம் செய்ய வேண்டும்? அது திருமணம் செய்யும் வயதா? என்ற கேள்வி எழலாம்.

சிறு வயது திருமணம் என்பது நபிகள் நாயகம் காலத்தில் சாதாரணமாக நடைபெறக் கூடிய ஒன்றாகவே இருந்தது.

அவ்வாறின்றி அது இன்றைக்குப் பார்க்கப்படுவதைப் போன்ற சூழல் இருந்திருந்தால் நபிகள் நாயகத்தின் எதிரிகள் இதைக் கையிலெடுத்து, பட்டிதொட்டியெங்கும் பிரச்சாரம் செய்திருப்பார்கள்.

நபிகள் நாயகம் அவர்களின் தூய வாழ்வுக்குக் களங்கம் கற்பிக்க துடிக்கும் இன்றைய கயவர்களை காட்டிலும் அன்றைய எதிரிகள் நபிகள் நாயகத்தின் மீது கடும் வெறுப்பில் இருந்தார்கள்.

நபிகள் நாயகத்தை வீழ்த்த சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சிறு துரும்பு கிடைத்தாலும் அதை பெரும் வாய்ப்பாகப் பயன்படுத்தி நபிகள் நாயகத்தை வீழ்த்திவிடத் துடியாய் துடித்துக் கொண்டிருந்தனர்.

இன்னொரு கூட்டமோ நபிகள் நாயகத்தின் முன் ஒரு முகமும்

வெளியே இன்னொரு முகமுமாக வஞ்சகத்துடன் பவனி வந்தனர்.

ஆயிஷா அவர்களை இரகசியமாக நபிகள் நாயகம் திருமணம் செய்யவில்லை.

ஊரறிய உலகறியத் தன் மனைவியாக்கி கொண்டார்கள்.

எதிரிகளும் வஞ்சகர்களும் அறியவே தன் மனைவி ஆயிஷா அவர்களுடன் நபிகள் நாயகம் வலம் வந்தார்கள்.

எதிரிகளுடன் நடைபெறும் போர்க்களங்களில் கூட ஆயிஷா வர்களை அழைத்து சென்றுள்ளார்கள்.

அன்றைய உலகமெங்கும் நபியின் இந்தத் திருமணம் பரிச்சயமானதே!

சிறுவயதுத் திருமணம் அன்றைக்கு நடைமுறையில் அறியப்படாத ஒன்றாக, இன்றைக்கு பார்க்கப்படுவதை போன்று பார்க்கப்படும் சூழல் இருந்திருந்தால் எதிரிகள் சும்மா விட்டிருப்பார்களா?

சிறுமியை திருமணம் செய்து கொண்டு வாழும் இவர் தூய்மை வாதம் பேசலாமா? என்று கேட்டிருக்க மாட்டார்களா?

கேட்கவில்லையே! ஏன்? நபியின் காலத்தில் சிறுவயதுத் திருமணம் சாதாரணமான நடைமுறை என்பதாலேயாகும்.

அக்கால கட்டத்தில் நபிகள் நாயகம் அல்லாத பலரும் இதுபோன்ற திருமணங்களைச் செய்துள்ளார்கள்.

நவீன காலத்திலும் கூட. சிறுமியர் திருமணம் நடைமுறையில் இருந்துள்ளது.

தேசிய குடும்ப நலத்துறையின் 2011- ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2.3 கோடி பெண் குழந்தைகளுக்குத் திருமணம் நடந்துள்ளது. நாட்டில் நடக்கும் திருமணத்தில் 26.8 சதவீதம், 18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்குதான் நடக்கிறது என்று கூறுகிறது.

குழந்தைத் திருமண தடைச் சட்டம் 1929ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே இயற்றப்பட்டது. இருப்பினும் இந்தியக் கலாசாரம் மற்றும் பண்பாடுக்கு எதிரான எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது, என அப்போதைய இங்கிலாந்து அரசு உத்தரவிட்டதன் காரணமாக, அந்தச் சட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

அதன்பின், 1978இல் குழந்தைத் திருமண தடைச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, குழந்தைத் திருமணம் செய்து வைப்பவர்களுக்கு 15 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வந்தது. குற்றம் புரிவோருக்கு 15 நாள் என்பது பெரிய தண்டனையாக இல்லை என்பதால், குற்றம் செய்வோரின் எண்ணிக்கையும் குறையவில்லை.

https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/jun/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AEA4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-693012.html

இன்றளவும் கிராமப்புறங்களில் இவ்வாறான திருமணங்கள் நடைபெறவே செய்கின்றன.

இந்திய பிரதமர் மோடியின் திருமணம் கூட அவரது சிறுவயதுப் பிராயத்தில் தான் நடந்துள்ளது.

நெடுநாட்களாக வேட்புமனுத்தாக்கலின் போது தனக்குத் திருமணமானதை வெளிப்படுத்தாத மோடி ஒரு கட்டத்தில் வெளிப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

மோடியின் திருமணம் குறித்து மோடியின் சகோதரர் சோமாபாய் தெரிவிக்கும் போது பல ஆண்டுகளுக்கு முன்பு சம்பிரதாய ரீதியாக நடைபெற்ற திருமணம் அது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையில் சம்பிரதாய ரீதியிலான இதுபோன்ற நிர்ப்பந்த நிகழ்வுகள் சாதாரணமாக நிகழக்கூடியதே என்று தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india/2014/04/140410_modiwifeclaim

அப்போது மோடிக்கு வயது 16 என்ற அளவில் தான் இருக்கும். அப்படி என்றால் அவரது மனைவி யசோதாவிற்கு எவ்வளவு இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

கணிதமேதை என்று புகழப்படும் சீனிவாச அய்யங்கார் ராமானுஜர் திருமணம் முடிக்கும் போது அவரது மனைவி ஜானகி அம்மாளின் வயது 10.

புரட்சிக் கவிஞர் என்றழைக்கப்படும் சுப்ரமணிய பாரதியாரின் மனைவி செல்லம்மாளின் வயது 7.

இன்றளவும் சிறுவயதுத் திருமணங்கள் நடைபெறும் சமூக மக்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருக்கிறார்கள் எனும் போது ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு சிறுவயதுத் திருமணம் நடைபெறுவதோ வயது வித்தியாசத்தில் திருமணம் செய்வதோ எந்த அளவு சாதாரணமானதாக இருந்திருக்கும் என்பதைச் சிந்தித்து விளங்கலாம்.