15) மைமூனா (ரலி)
விதவைப் பெண்மணி
திருமணத்தின் போது நபியின் வயது 61
நபியுடன் வாழ்ந்த காலம் 3 வருடம்
வாழ்க்கைத் துணையின்றி இருந்த மைமூனா (ரலி) அவர்களைப் பெண் பேசுவதற்காக ஜஅஃபர் பின் அபீதாலிப் அவர்களை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். மைமூனா (ரலி) அவர்கள் பொறுப்பை தமது சகோதரி உம்முல் ஃபழ்ல் அவர்களின் கணவர் அப்பாஸ் (ரலி)யிடம் ஒப்படைத்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். (ஃபத்ஹுல்பாரி பாகம்: 7. பக்: 510.(நஸாயீ: 2315),(அஹ்மத்: 3221)
ஜுவைரிய்யா, ஸஃபிய்யா போன்றோர் அடிமைப்பெண்களாவர்.
மக்களை காப்பதற்காக நடைபெறுகின்ற போரில் வெற்றி கொள்ளும் போது அங்குள்ள ஆண்கள் கைதிகளாக்கப்படுகிறார்கள். பெண்கள் அடிமைகளாக்கப்படுகிறார்கள்.
அப்படியான அடிமைப் பெண்களை திருமண பந்தத்தின் மூலம் அவர்களுக்கு வாழ்வளிக்கும் ஏற்பாட்டை தனது நடைமுறையின் மூலம் நபிகள் நாயகம் காட்டியுள்ளார்கள்.
அன்றைய காலத்தில் அடிமைகளாக இருப்பதை விட. திருமண பந்தத்தில் இணைவது சிறந்த பாதுகாப்பு ஏற்பாடாக அப்பெண்களுக்கு அமையும்.
1400 ஆண்டுகளுக்கு முன்பு இதை விடச் சிறந்த நடைமுறை வேறு எதுவும் இருக்க முடியாது.
இவ்வாறு தான் ஜுவைரிய்யா, ஸஃபிய்யா போன்றோரை நபிகள் நாயகம் திருமணம் செய்தார்கள்.
இதில் ஜுவைரிய்யா என்பவரைத் திருமணம் செய்ததன் மூலம் அவரது குடும்பத்தை சார்ந்த நபர்களில் அடிமைகளாக்கப்பட்டவர்கள் நபித்தோழர்களால் விடுவிக்கப்பட்டனர்.
நபிகள் நாயகம் திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொண்ட குடும்பத்தாரை நாம் எவ்வாறு அடிமைகளாக வைத்திருப்பது என்ற எண்ணமே இதற்கு காரணம்.
இதன் மூலம் அடிமைகள் விடுவிக்கப்படும் போக்கு மறைமுகமாக ஆர்வமூட்டப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பதாவது வயதிற்குப் பிறகு தமது மனைவியர்களாகத் தேர்வு செய்த பெண்களின் இத்தகைய விபரத்தை அறிந்து கொள்ளும் ஒருவர் ஒருபோதும் நபிகளின் ஒழுக்க வாழ்வைக் குற்றம் சாட்ட முடியாது.
நட்பு, விதவைகளுக்கு மறுவாழ்வளித்தல், அடிமைப் பெண்களுக்கு வாழ்வளித்தல் என சமூக சூழல் போன்ற காரணங்களுக்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்களை புரிந்திருக்கிறார்களே தவிர பெண்கள் மீதான ஆசையினால் என்று ஒரு போதும் கூற முடியாது.
பெண்கள் மீது ஆசை கொண்ட ஒருவர் இளமைக் காலத்தில் எல்லாம் முதிர்ந்த பெண்ணுடன் 25 வருடங்களை கழித்து விட்டு. அதன் பிறகு விதவைப் பெண்களையும் அடிமைகளையும் ஆதரவற்று நிற்பவர்களையும் தேர்வு செய்வாரா?
நபி (ஸல்) அவர்களின் தேர்வுகள் அவ்வாறு அமையப் பெற்றதிலிருந்து மேற்கண்ட குற்றச்சாட்டு நபிகள் நாயகத்திற்குத் துளியும் பொருந்தாது என்பதை அறியலாம்.