15) முதலாளியின் நலம் நாடுதல்
பொருளாதார விஷயத்தில் மக்களுக்கு மத்தியில் ஏற்றத் தாழ்வு இருக்கிறது. பெரும்பாலான மக்கள் தங்களுக்குத் தேவையான பொருளாதாரத்திற்காக பிறரிடம் வேலை செய்து வருகிறார்கள். இத்தகைய தொழிலாளர்கள் எப்போதும் தங்களது முதலாளிக்கு நலம் நாட வேண்டும். மார்க்கம் அனுமதித்த வகையில் முதலாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிடாமல், தரப்படும் பணியை சிறப்பாக செய்து கொடுக்க வேண்டும்.
தன் இறைவனை நல்லமுறையில் வணங்கி, தன் எஜமானுக்குத் தான் செய்ய வேண்டிய கடமைகளை (ஒழுங்காக) நிறைவேற்றி. அவனுக்கு நலம் நாடி (நேர்மையாகவும் விசுவாசமாகவும் நடந்து கொண்டு) அவனுக்கு கீழ்ப்படிந்தும் நடக்கின்ற அடிமைக்கு இரு நன்மைகள் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ மூசா (ரலி) நூல் : (புகாரி: 2551)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேருடைய நற் செயலுக்குரிய பிரதிபலன் இரண்டு முறை அவர்களுக்கு வழங்கப் படும். அவர்கள்:
1 ஒர் அடிமைப் பெண்ணைப் பெற்றிருந்து அவளுக்குக் கல்வி கற்றுத் தந்து, அதை அழகுறக் கற்றுத் தந்து. அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதை அழகுறக் கற்பித்து, அவளை (தானே) மணம் புரிந்தும்கொண்ட மனிதர். இவருக்கு (அதற்காக) இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.
2. வேதம் வழங்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு நம்பிக்கையாளர். (முந்தைய இறைத்தூதர் மீதும். முந்தைய வேதத்தின் மீதும் ) நம்பிக்கை கொண்டிருந்த அவர், பிறகு நபி (ஸல்) அவர்கள் மீதும் நம்பிக்கை கொண்டுவிட்டார் எனில், இவருக்கும் இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.
3. அல்லாஹ்வின் உரிமையையும் நிறைவேற்றி. தன் எஜமானுக்கும் நலம் நாடுகின்ற அடிமை.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி), நூல் :(புகாரி: 3011)