15) நெருக்கடியான வாழ்வில் பாம்புகள் தரும் வேதனை
15) நெருக்கடியான வாழ்வில்
பாம்புகள் தரும் வேதனை
இறந்தவனிடத்தில் நன்மைகள் ஏதும் இருக்கிறதா? என்று பார்க்கப்படும். அவனிடத்தில் எந்த நன்மையும் இல்லாமல் நல்லுப தேசங்களை மறுத்தவனாக அவன் இருந்தால் பயத்தால் நடுங்கிக் கொண்டிருப்பான். மண்ணறையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் ஏதும் கூற மாட்டான். இதனால் அவனுடைய எலும்புகள் உடையும் அளவிற்கு அவனுக்கு மண்ணறையில் நெருக்கடி தரப்படும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மண்ணறையில் இறைமறுப்பாளனின் தலைப்புறமாக (நன்மை ஏதும் இருக் கிறதா? என்று) பார்க்கப்படும். ஆனால் (அங்கு) எதுவும் இருக்காது. அவனது கால்களிடத்தில் (நன்மை ஏதும் இருக் கிறதா? என்று) பார்க்கப்படும். ஆனால் (அங்கும்) எதுவும் இருக்காது. எனவே அவன் திடுக்கிட்டு பயந்தவனாக அமருவான். உங்களுடன் இருந்த இந்த மனிதர் குறித்து நீ என்ன கூறிக் கொண்டிருந்தாய்? என்று அவளிடம் வினவப்படும்.
அதற்கு அவன் மக்கள் எதையோ கூறிக் கொண்டிருப்பதை நான் கேட்டேன். அவர்கள் கூறியது போல் நானும் கூறிக் கொண்டிருதேன் என்று கூறுவான். நீ உண்மை கூறினாய். இப்படித்தான் நீ வாழ்ந்தாய். இப்படியே மரணித்தாய். இவ்வாறு அல்லாஹ் நாடினால் நீ எழுப்பப்படுவாய் என்று அவ னிடம் கூறப்படும்.
அவனுடைய விலா எழும்புகள் ஒன்றோ டொன்று பின்னிக் கொள்ளும் அளவிற்கு மண்ணறை அவனை நெருக்கும். இதைப் பற்றித்தான் அல்லாஹ் (இந்த வசனத்தில்) கூறுகிறான். எனது போதனையை புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)
நூல் : தப்ரானி பாகம் 3 பக்கம்: 105
எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடி யான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம் (20:124) என்ற இந்த வசனம் எது குறித்து இறங்கியது என்று உங்களுக்குத் தெரியுமா? நெருக்கடியான வாழ்க்கை என்றால் எது என்றும் உங்களுக்குத் தெரியுமா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடத்தில் கேட்டார்கள்.
அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே மிக்க அறிந்தவர்கள் என்று கூறினார்கள். இறை மறுப்பாளன் அவனுடைய மண்ணறையில் வேதனை செய்யப்படுவதை (இவ்வசனம் குறிப்பிடுகிறது). எனது உயிர் எவனது கைவசத்தில் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீதாணையாக அவனுக்கெதிராக தொண்ணூற்றொன்பது பாம்புகள் சாட்டப்படும். அந்த பாம்புகளைப் பற்றி உங்க ளுக்குத் தெரியுமா?
அவை தொண்ணூற்றொன்பது பாம்புகளாகும். ஒவ்வொரு பாம்புகளுக்கும் ஏழு தலைகள் இருக்கும். மறுமைநாள்வரை அவனுடைய உடம்பில் (விஷக் காற்றை) அவை ஊதிக் கொண்டும் அவளை தீண்டிக் கொண்டும் உராய்ந்து கொண்டும் இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்னத் அபி யஃலா-6504