தந்தைக்காக உம்ரா மட்டும் செய்யலாமா?
தந்தைக்காக உம்ரா மட்டும் செய்யலாமா?
கூடாது.
எனது தந்தை மரணித்து சில வருடங்கள் ஆகிறது. நான் ஒரு முறை உம்ரா செய்து விட்டேன். இந்த ரமலானில் எனது தந்தைக்காக உம்ரா செய்யலாம் என்று இருக்கிறேன். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?
பெற்றோர்களுக்கு ஹஜ் கடமையாக இருந்து அவர் செய்யாமல் மரணித்து விட்டால் அவர்களுக்காக அவர்களது பிள்ளைகள் ஹஜ் செய்யலாம். பெற்றோருக்கு ஹஜ் கடமையாக இல்லாத நிலையில் மரணித்து விட்டால் பெற்றோரை இது குறித்து அல்லாஹ் கேள்வி கேட்கமாட்டான். எனவே பெற்றோருக்கு கடமையாக இல்லாவிட்டால் அவருக்காக பிள்ளைகள் ஹஜ் செய்யக் கூடாது.
என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து ஹஜ் செய்யாமல் மரணித்து விட்டார். அவர் சார்பில் நான் ஹஜ் செய்யட்டுமா ஒரு பெண்மணி நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் உன் தாய் மீது கடன்ப் இருந்தால் நீதானே நிறைவேற்றுவாய்? எனவே அவருக்காக நீ ஹஜ் செய். அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்ற அதிக தகுதி உள்ளது என்றார்கள்.
(புகாரி: 1582, 7315) ➚
அல்லாஹ்வின் கடன் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்னதில் இருந்து கடமையான ஹஜ்ஜாக இருந்தால் தான் பிள்ளைகள் அதைச் செய்ய முடியும் என்று அறிந்து கொள்ளலாம்.
உம்ரா அப்படியல்ல.
உம்ராவைப் பொருத்த வரை அது ஹஜ் போல் கடமையான வணக்கம் அல்ல. உம்ரா செய்யாவிட்டால் அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான். எனவே மற்றவருக்காக உம்ரா செய்ய முடியாது.
ஆயினும் ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ரா செய்வதும் ஹஜ்ஜின் வகையில் ஒன்றாக உள்ளதால் பெற்றோருக்காக ஹஜ் செய்யும் போது அதனுடன் உம்ராவையும் செய்யலாம்.
அபூ ரஸீன் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை வயது முதிர்ந்த பெரியவராக இருக்கின்றார். அவரால் ஹஜ் செய்யவோ உம்ரா செய்யவோ பயணிப்பதற்கோ முடியாது என்றேன். உனது தந்தைக்காக நீ ஹஜ்ஜும் உம்ராவும் செய்துகொள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதீ: 852) ➚
பெற்றோருக்காக உம்ரா செய்யலாம் என்ற இந்த அனுமதி உம்ராவை மட்டும் தனித்து செய்வதற்கான அனுமதி இல்லை. மாறாக ஹஜ்ஜூடன் சேர்த்து உம்ராவை செய்யும் போது மட்டும் தான் இந்த அனுமதியாகும்.
இந்த ஹதீஸைத் தவறுதலாக புரிந்து கொண்டு, ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவை மட்டும் தனித்து செய்வதற்கு இந்த நபிமொழியை ஆதாரமாகக் காட்டக்கூடாது. மேலும், ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவை மட்டும் தனித்து செய்வதற்கு எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை. தனித்து உம்ரா செய்ய வேண்டும் என்பது நம்மீது கட்டாய கடமையும் இல்லை.