14) ஸஃபிய்யா (ரலி)

நூல்கள்: நபிகள் நாயகத்தின் திருமணங்கள் விமர்சனங்களும் விளக்கங்களும்

வயது 17

விதவைப்பெண்மணி

திருமணத்தின் போது நபியின் வயது 61

நபியுடன் வாழ்ந்த காலம் 3 வருடம்

அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் யூதக் குடும்பத்தைச் சார்ந்த பனூ குரைளா என்ற கூட்டத்தின் தலைவியரில் ஒருவராவார். யூதக் குடும்பத்தில் இவர்களைத் தவிர வேறு எவரையும் நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.

மதீனாவில் வாழ்ந்த யூதர்களில் பனூ குரைளா கூட்டத்தினர் தான் வலிமை வாய்ந்தவர்கள். இவர்களின் தலைவராகத் தான் அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்களின் தந்தை ஹுயை திகழ்ந்தார்.

ஸஃபிய்யா (ரலி) அவர்கள் மதீனாவில் இருந்த போது, சிரியா செல்லும் வழியில் இருந்த கைபர் எனும் இடத்தில் வசித்து வந்த யூதர்கள், மதீனாவின் நகர்ப்புற யூதர்களுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எண்ணற்ற துன்பங்களைத் தந்து வந்தனர். இதற்கு முடிவு கட்ட நபி (ஸல்) அவர்கள் 1500க்கும் அதிகமான முஸ்லிம்களுடன் ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் புறப்பட்டுச் சென்று 10 நாட்களுக்கு மேல் கைபரை முற்றுகையிட்டு இறுதியில் ஸஃபர் மாதத்தில் வெற்றி கண்டார்கள்.

இப்போர்க்களத்தில் எதிரணியில் அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் தமது கணவருடன் கலந்து கொண்டார்கள். போரில் அவரது கணவர் கொல்லப்பட்டார். அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கைதியானார்கள்.

(பார்க்க (புகாரி: 371), (முஸ்லிம்: 2793)

கைதியாக வந்த அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் ஒரு பெரும் கூட்டத்தின் தலைவி என்பதால் அவர்களை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்வதே சிறந்தது என ஒரு நபித்தோழர் கூறிய போது அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

ஒரு தலைவியாகத் திகழ்ந்த ஒரு பெண் சாதாரண மனிதரோடு வாழ விரும்ப மாட்டாள். எனவே அப்பெண்ணின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வண்ணம் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நடந்திருக்கக் கூடும்.