14) மறுமையில் இழிவை விட்டும் பாதுகாக்க!

நூல்கள்: இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைகளும் அவை தரும் படிப்பினைகளும்

 

وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ

(உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுக்குள்ளாக்கி விடாதே!

(அல்குர்ஆன்: 26:87)

எல்லா மனிதர்களும் ஒருநாள் அழிக்கப்படுவோம்; இன்னும் இப்பூமி முழுவதும் அழிக்கப்படும். பின்னர் மஹ்ஷர் மன்றத்தில் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு உலகில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி விசாரிக்கப்படுவோம். இந்த உலகில் கண்ணியாமாக வாழ்ந்த பலர் நாளை மறுமையில் இழிவுக்குள்ளாவார்கள். அல்லாஹ்விற்கு முன்னால் கூனிக் குறுகி நிற்பார்கள். தனது நிலை என்னவாகும் என்று பதறுவார்கள். உற்றார் உறவினர்கள் ஒவ்வொருவரும் ஒருவரை விட்டு ஒருவர் ஓடுவார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் மறுமையில் நிகழும்.

அந்நாளில் யார் இழிவுக்கு உள்ளானார்களோ அவர்களின் மறுமை வாழ்க்கை கைசேதம்தான். யாரும் அவர்களைக் காப்பாற்ற முடியாது. அந்தக் கொடூரமான நிலையில் அல்லாஹ் யாரை இழிவுக்குள்ளாக்கினானோ அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதுதான் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

எனவே தான் இப்ராஹீம் நபி இவ்வாறு பிரார்த்தனை செய்கிறார்கள். நாமும் அந்த மறுமையில் வெற்றி பெற மறுமையில் ஏற்படும் இழிவைவிட்டும் பாதுகாக்க இப்ராஹீம் நபியைப் போன்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும்.