14) தொழுகையில் நடைபெறும் பித்அத்கள்
ஒரு முஸ்லிமிற்கு தொழுகை மிக அவசியமானதாகும்.
நம்பிக்கை கொண்டோருக்கு தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது.
அந்தத் தொழுகையை எவ்வாறு தொழ வேண்டுமென நபியவர்கள் நமக்கு தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள்.
என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஹூவைரிஸ் நூல்: (புகாரி: 631)
ஆனால் இன்றைய இஸ்லாமியர்கள் நபியவர்கள் காட்டித் தந்த தொழுகை முறைக்கு மாற்றமாக தங்களின் தொழுகை முறைகளை அமைத்துக் கொள்கின்றனர்.
இவை மார்க்கத்தில் இல்லாத பித்அத்கள் ஆகும். அவற்றில் சில பித்அத்களை உங்களுக்கு அறியத் தருகிறோம்.
📌 தொழுகைக்கு முன் நிய்யத்தை அரபியில் வாயால் மொழிதல்.
📌 வெள்ளிக்கிழமை சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதுதல்.
📌 ஜூம்ஆவிற்கு இரண்டு பாங்கு கூறுதல்.
📌 ஜூம்ஆவின் போது தமிழ், அரபி என இரண்டு பயான் செய்தல்.
📌 மிஃராஜ், பராஅத் முன்னிட்டு தொழப்படும் விசேஷ தொழுகைகள்.
📌 தஸ்பீஹ் தொழுகை தொழுதல்.
📌 தராவீஹ் என்ற பெயரில் 20 ரக்அத் தொழுதல்.
இது போன்ற பல பித்அத்தான நடைமுறைகளையும், நபியவர்கள் காட்டித்தராத பித்அத்தான தொழுகைகளையும் சிலர் நடைமுறைப் படுத்தி வருகின்றனர். இது பெரும் வழிகேடாகும்,
பித்அத்கள் குறித்த நபிகளாரின் எச்சரிக்கைகள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்: (புகாரி: 2697)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும், நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். செய்திகளில் மிகக் கெட்டது (மார்க்த்தின் பெயரால்) புதிதாக உருவானவையாகும், புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல் : (நஸாயீ: 1560)
தவறான புரிதலின் அடிப்படையிலும் அதுவே மார்க்கம் என எண்ணியும் தான் தொழுகையில் பித்அத்தான காரியங்களை மக்கள் செய்து வருகின்றனர். இது தவறாகும். எனவே நபியவர்கள் நமக்குக் காட்டித் தந்த தொழுகைகளையும், தொழும் முறைகளையும் மட்டுமே நாம் கடைபிடித்து இஸ்லாத்தில் இல்லாத பித்அத்களை விட்டொழிக்க வேண்டும். அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக.