13) சுன்னத்தான விருந்துகள்

நூல்கள்: உணவு ஓர் இஸ்லாமிய பார்வை
திருமணம்

திருமணம் என்பது மனித வாழ்வின் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். அந்நிலையை அடையும் ஆண்மகன் தனது
மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்காக (வலீமா) விருந்தளிப்பது சுன்னத்தாகும். அது பற்றிய நபி (ஸல்) அவர்களின் கூற்றை நபித் தோழர் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் அவர்கள் கூறுகிறார்கள். எனது ஆடையில் நறுமணப் பொருளின் கறையைக் கண்ட
நபி (ஸல்) அவர்கள் நீ மணமுடித்து விட்டாயா? எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். யாரை? என்றார்கள். ஓர் அன்சாரிப் பெண்ணை என்றேன். மஹர் எவ்வளவு கொடுத்தீர்? எனக் கேட்டார்கள். ஒரு பேரீச்சங்கொட்டையின் எடைக்கு தங்கம் என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டையேனும் (அறுத்து) மண விருந்தளியும் என்றார்கள்.
அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரழி) நூல் : (புகாரி: 2048, 3780, 3781, 2049, 3937, 5072, 5155, 6082, 6386, 2049). (முஸ்லிம்: 2556, 2557, 2558) (திர்மிதீ: 1014, 1856) (நஸாயீ, அபூதாவூத், அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் கைபருக்கும், மதீனாவுக்கும் இடையில் (உள்ள சத்துஸ் ஸஹ்ஃபா எனுமிடத்தில் ஸஃபிய்யா பினத் ஹ{யய் அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு சபிய்யாவுடன் வீடு கூடினார்கள். அப்போது நபியின் வலீமாவுக்காக முஸ்லீம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் பிலாலிடம் தோல் விரிப்பை கொண்டு வருமாறு உத்தரவிட அது (கொண்டு வந்து) விரிக்கப்பட்டது.
பிறகு பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் ஆகியவற்றை வைத்து ஹைஸ் எனும் எளிய உணவைத் தயாரித்து
விருந்தளித்தார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : (புகாரி: 4213, 371, 2893) (முஸ்லிம்: 2561, 2564), (நஸாயீ: 3327, 3329). (அஹ்மத்: 11554, 12155, 12253).

விருந்தளிப்பது எப்போது?

திருமணம் முடிந்து இல்லறத்தில் ஈடுபட்ட பிறகு தான் விருந்தளிக்க வேண்டும் என்று சிலர்கூறி வருகின்றனர் சென்ற
அத்தியாயத்தில் சொல்லப்பட்ட நபி வழியை அதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர் சபிய்யா(ரழி) அவர்களை மணந்த போது நபியவர்கள் இல்லறத்தில் ஈடுபட்ட பின்னரே விருந்தளித்துள்ளார்கள்.எனவே நாமும் அவ்வாறு தான் நடந்து கொள்ள வேண்டும்
என்கின்றனர் நபி (ஸல்) அவர்களின் இந்த நடைமுறையை திருமண விருந்தின் ஓர் விதியாகக் கொள்ள முடியாது. அவ்வாறு
இருந்தால் திருமண விருந்து குறித்த தமது போதனைகளில் நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ அதை
வலியுறுத்தியிருப்பார்கள். உதாரணமாக அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்களின் திருமணச் செய்தி ஓர் சான்றாகும்.

திருமணம் செய்து கொண்டேன் என்று கூறிய அப்துர்ரஹ்மான் அவர்களிடம் விருந்து கொடுக்க கட்டளையிட்ட நபியவர்கள் மஹர் எவ்வளவு எனக் கேட்டார்களே தவிர இல்லறத்தில் ஈடுபட்டீரா? எனக் கேட்கவில்லை. திருமணத்திற்கு மஹர் அவசியம் என்பதால் அதைப் பற்றிக் கேட்டார்கள். திருமண விருந்துக்கு இல்லறம் அவசியம் என்றால் அதுகுறித்தும் கேட்டிருப்பார்கள். (அ) இல்லறத்தில்
ஈடுபட்ட பின் விருந்தளியும் என்று தெளிவுபடுத்தியிருப்பார்கள். இதிலிருந்து திருமண விருந்துக்கு இல்லறத்தில் ஈடுபட்டிருக்க வேண்டிய நிபந்தனை ஏதுமில்லை என்பதையும் திருமணம் முடிந்த பிறகு அன்றைக்கோ (அ) அடுத்தடுத்த நாட்களிலோ விருந்தளித்துக் கொள்ளலாம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

விருந்தின் செலவு

அனுமதிக்கப்பட்ட அனைத்து விருந்துகளையும் விட திருமண விருந்துக்கு சற்று கூடுதல் கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் ஒன்று திருமண விருந்து மிகக் குறைந்த செலவில் செய்யப்பட வேண்டும் என்பதாகும் எந்தத் திருமணத்தில் செலவு குறைவாக உள்ளதோ
அதுவே இறையருள் (பரகத்) அதிகம் உள்ளதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிக்ஷா (ரழி) நூல் : (அஹ்மத்: 23388)

திருமணச்செலவு என்பது ஓர் சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதன் செலவீனங்களுக்குப் பயந்து பல திருமணங்கள் தள்ளி போடப்படுகின்றன. தேவையற்ற இந்த தாமதத்தால் சமூகத்தில் பாலியல் ரீதியான ஒழுக்கக் கேடுகள் உருவாகின்றன. செலவு அதிகரிப்பதால் பரகத் எனும் இறையருளும் தடைபட்டுப் போகிறது. பணம் இருக்கிறது என்பதற்காக பகட்டாக திருமணம்
முடிப்போர் இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

விருந்து விதிவிலக்கா?

திருமணச் செலவு என்பதில் மண்டபம், வாகனம், உடை, அலங்காரம், நகை, அழைப்பிதழ் போன்றவற்றைத் தான்
கவனிக்க வேண்டும். விருந்து அதில் அடங்காது என்கின்றனர் சிலர். ஏனெனில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்களைப்
பார்த்து ஓர் ஆட்டையேனும் அறுத்து விருந்தளியும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப விருப்பம் போல் விருந்தளிக்கலாம் என்கின்றனர் இந்த வாதம் ஏற்புடையதல்ல. திருமணச்செலவு என்பது முதலில் விருந்து செலவைத் தான் குறிக்கும். அதன்பிறகு தான் மண்டபம், வாகனம் போன்றஅனைத்துமே.

ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் திருமணச் செலவு என்றால் அது விருந்துக்கு ஆகும் செலவு மட்டுமே இருந்தது. விருந்தைத் தவிர இன்று இருப்பதைப் போல் வேறெந்த செலவும் நபியவர்களின் காலத்தில் இருக்கவில்லை. எனவே, செலவைக் குறைத்தல் என்பதில் விருந்துச்செலவை தான் முதலில் கணக்கிட வேண்டும். மேலும் விருந்தின் அளவை பொறுத்துத் தான் மண்டபம், வாகனம்,தட்டுமுட்டுத் தளவாடச் சாமான்களின் செலவு சுருங்குவதும், பெருகுவதும் அமைகிறது என்பதையும் சிந்தித்தால்விருந்துக்கு விதிவிலக்கு ஏதுமில்லை என்பதை அறியலாம்.

பெருமானாரின் பிரம்மாண்ட விருந்து விருந்துக்கு தாராளமாகச் செலவு செய்யலாம் என்போர் மற்றுமோர் ஆதாரத்தைக் காட்டுகின்றனர் நபி (ஸல்) அவர்கள் ஜைனப் பின்த் ஜஹ்க்ஷ் (ரழி) அவர்களை மணமுடித்த போது ஏறத்தாழ 300 பேருக்கு
விருந்தளித்துள்ளார்கள். அந்தக் காலத்தில் 300 பேருக்கு விருந்து என்றால் அது மிகப் பெரும் விருந்தல்லவா? என கேள்வியெழுப்புகின்றனர் 300 பேர் கலந்து கொண்ட விருந்தென்பது மிகப்பெரியது தான் . அதுவும் நபி (ஸல் ) அவர்கள் காலத்து
மக்கட்தொகையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மிகப் பிரம்மாண்டமான விருந்து என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதிலும் நபி (ஸல்) அவர்கள் தாம் போட்டு வைத்த குறைந்த செலவு எனும் எல்லைக் கோட்டை தாண்டவில்லை. அதிகம் பேர் சாப்பிட்டார்கள் அதற்காக அதிகம் செலவு செய்யப்படவில்லை.

இவ்விருந்து இறை அற்பதத்தின் வெளிப்பாடாய் அமைந்த ஒன்று. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ஒரேயொரு ஆட்டை அறுத்துத் தான் இத்தனை பி ரம்மாண்டமான விருந்தளித்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜைனப் (ரழி) அவர்களை மணந்த போது அளித்த (வலீமா) விருந்தைப் போல் தம் மனைவியரில் வேறெவரை மணந்த போதும் அளிக்கவில்லை. அதில் ஒரு ஆட்டை மண விருந்தாக்கினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) நூல் : (புகாரி: 5168, 5171) (முஸ்லிம்: 2568, 2569)

நபி (ஸல்) அவர்கள் ஜைனப் (ரழி) அவர்களை மணந்து கொண்ட போது (என்னைப் பார்த்து) நீ சென்று சந்திக்கின்ற முஸ்லீம்களை எனது (விருந்துக்காக) அழைத்து வா என்றார்கள். நானும் சென்று சந்தித்தவர்களில் ஒருவர் விடாமல்அழைத்தேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சாப்பிட்டுச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது கையை உணவின் மீது வைத்து அல்லாஹ் நாடியவார்த்தைகளைக் கூறி பிரார்த்தித்தார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : (முஸ்லிம்: 2573, 2570, 2572), (புகாரி: 4793, 6238), (திர்மிதீ: 3142, 3143) (நஸாயீ: 3334) (முஸ்லிம்: 2572), (நஸாயீ: 3334) ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸில் அதன் அறிவிப்பாளர் அபூஉஸ்மான் அவர்கள் அனஸ் (ரழி) அவர்களிடம், அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள் எனக் கேட்க ஏறக்குறைய 300 பேர் இருந்தார்கள் என அனஸ் (ரழி) பதிலளித்தார்கள் என்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறைச்சியை பிரதான உணவாகக் கொண்டுள்ள சமூகத்தில் நபியவர்கள் அளித்த விருந்திலே மிகப்பெரியது ஒரேயொரு ஆடு தான் என்றால் அதன் மூலம் அவர்கள் அளித்த விருந்தின் எளிமை நமக்குப் புலனாகிறது. முந்நூறு பேர் கலந்து கொண்டாலும் அதற்காக
செய்யப்பட்ட செலவு ஒரு ஆடு தான் எனும் போது இதை சிக்கனம் என்பதா? (அ) செலவு நிறைந்த திருமணம் என்பதா?
எனச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும் ஓர் ஆட்டிறைச்சியில் முந்நூறு பேர் வயிறு நிரம்பியது நபித்துவத்தை மெய்ப்படுத்த இறைவன் நிகழ்த்திய அற்புதம். அதை மண விருந்திற்கு அளவுகோலாகக் கொள்ள முடியாது. இதைத் தவிர மற்ற திருமணங்கள் அனைத்திலும் நபியவர்கள் வழங்கிய விருந்து மிகச் சாதாரணமாக உள்ளதையும் கவனிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தமது மனைவி யரில் சிலரை திருமணம் செய்த போது, இரண்டு முத்து கோதுமையையே வலீமா விருந்தாக அளித்தார்கள். (ஒரு முத்து என்பது இரு கைகளையும், சேர்த்து ஒரு தடவை அள்ளும் அளவாகும்). அறிவிப்பவர் : சபிய்யா (ரழி) நூல் :(புகாரி: 5172)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய இரண்டு வலீமாவில் நான் கலந்திருக்கிறேன். அதில் எங்களுக்கு ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை வேறு என்ன தான்? (விருந்து) எனக் கேட்டேன். அதற்கு ஹைஸ் என்றார்கள். அதாவது பேரீத்தம்பழம், நெய், பாலாடை ஆகியவற்றின் கலவையாக இருந்தது.
அறிவிப்பவர் : அலீபின் ஜைத் (ரழி) நூல் : (அஹ்மத்: 11515, 13182, 13304), (புகாரி: 519) (இப்னு மாஜா: 1900)

விமர்சனத்துக்கு அஞ்சாமை

இன்றைய திருமண விருந்துக்காக லட்சங்களை அள்ளிக்கொட்டி விரயமாக்குகிறார்கள். இதற்கு முக்கிய காரணம். மக்களின் விமர்சனத்திற்கு அஞ்சுவது தான். பிறர் நம்மைப் பற்றித் தவறாக நினைப்பார்களோஇதுவெல்லாம் ஒரு விருந்தா? என கேலி பேசுவார்களோ என்ற அச்சம் தான் பல ஆயிரங்கள் போனாலும் பரவாயில்லை என செலவு செய்ய வைக்கிறது. இவர்கள் மனிதர்களின் விமர்சனத்திற்கு அஞ்சி அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகலாமா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
யாருக்கு அல்லாஹ் அருள்புரிந்து (முஹம்மதே) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ அவரிடம் உமது மனைவியை
உம்மிடமே வைத்துக் கொள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள் என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர். நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். (அல்குர்ஆன்: 33:37)

அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் நிற்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச்சொல்லுக்கு அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன் அறிந்தவன். (அல்குர்ஆன்: 5:54)

அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன்.                                (அல்குர்ஆன்: 9:13)

மக்கள் திருப்தி சாத்தியமா?

மனிதர்களை திருப்திபடுத்துவதற்காக அதிக பொருட்செலவில் நாம் செய்யும் திருமணத்தின் மூலம் மக்களின் திருப்தியைப் பெற்று விடமுடியுமா? எவ்வளவு ருசி மிக்க உணவையும் உப்பில்லை, புளியில்லை என உதாசீனம் செய்வோர் இருக்கத் தான்
செய்வர். சுவையாக இருக்கிறது என சுவைத்துச் சாப்பிட்டாலும் பணத்திமிரின் பகட்டு என்பர் வேறு சிலர்.
செலவு குறைத்து எளிமையாக்கினாலும் விடமாட்டார்கள். கஞ்சத் தனம் என கடுப்பேற்றுவார்கள். எப்படிப்பட்ட நிலையிலும் விமர்சனத்தை விட்டு விலகியிருக்க முடியாது எனும் போது அவர்களை திருப்திபடுத்த முயற்சித்து தோற்பதை விட முட்டாள் தனம்
வேறெவும் இருக்க முடியாது. எனவே, அல்லாஹ்வின் திருப்தியை நாடி திருமணத்தின் விருந்து முதல் அனைத்துச் செலவையும் குறைத்து எளிமையாக்குவது தான் அறிவுடையோர் செய்யும் காரியமாகும்.

திருமணவிருந்து யார் பொறுப்பு?

கடந்த அத்தியாங்களில் சொல்லப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது திருமணத்திற்கு விருந்தளிப்பது ஆண்களின் (மாப்பிள்ளை வீட்டார்) மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம். ஆனால், இன்று பரவலாக மாப்பிள்ளைவீட்டார்
கொடுப்பதைப் போல் பெண்வீட்டாரும் விருந்தளிக்கின்றனர் சில இடங்களில் பெண் வீட்டாரின் எண்ணிக்கைக்கு ஏற்ப
விருந்துச் செலவில் பங்கெடுத்துக் கொள்கின்றனர் சில இடங்களில் விருப்பத்தோடும் பல இடங்களில் விருப்பமில்லாமலும் நடைபெறும் இச்செயல் மார்க்கத்தின் பார்வையில் பெருங்குற்றமாகும்.

ஆண்மகன் மணப்பெண்ணுக்கு மஹர் கொடுக்க வேண்டும் என்ற கட்டளையில் பெண்ணிடமிருந்து எதையும் பெறக்கூடாது
என்பதும் அடங்கியுள்ளது.அதேபோன்று திருமணவிருந்தை ஆண் வழங்கவேண்டும் என்றால் பெண் வழங்கக் கூடாது என்பதும் அதில் அடங்கியுள்ளது. மாப்பிள்ளைவீட்டார், பெண்வீட்டாரை நிர்பந்திக்கா விட்டாலும், பெண்வீட்டார் தாங்களாக விரும்பி விருந்தளிப்பதும் கூடாது. விரும்பிச் செய்வது குற்றமாகுமா? என சிலர்குதர்க்க வாதம் பேசுகின்றார். அதிகாரிக்கு வழங்கப்படும் லஞ்சமும் வாங்கிய கடனுக்கு கொடுக்கப்படும் வட்டியும் பல நேரங்களில் விரும்பித்தான் கொடுக்கப்படுகிறது. அதை சரியென்று
கூறமுடியுமா?

ஒரு குறிப்பிட்ட கா ர ியத்தை மையப்படுத்தி கொடுக்கப்பட்டால் அது அதனுள் இருந்த மறைமுக நிர்பந்தத்தினால் கொடுக்கப்பட்டதாகத் தான் அர்த்தம். இதுவரை இல்லாத விருப்பம் திருமண நேரத்தில் திடீரென உதித்தது எப்படி? நேற்று கொடுக்காதவர் இன்றைக்கு கொடுப்பதன் நோக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. விருந்து கொடுக்காவிட்டால் அவர்களின் வீட்டிற்குச் செல்லும் நமது மகளின் நிலை எப்படியாகுமோ? விருந்து கூட வைக்கவில்லையே என சமூகம் நம்மைக் கேலிபேசுமோ என்ற அச்சம் தான் பெண்வீட்டு விருந்தின் பின்புலம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜகாத் வசூலிக்கும்)
அதிகாரியாக ஒருவரை நியமித்தார்கள். அந்த அதிகாரி தனது பணியை முடித்துவிட்டு நபியவர்களிடம் திரும்பி வந்து
அல்லாஹ்வின் தூதரே இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறி (பொருட்களை
பங்கு வைத்தார்). அவரிடம் உன் தந்தையின் வீட்டில் (அ) தாய்வீட்டில் உட்கார்ந்து கொண்டிரும். (அப்போது) உமக்கு
அன்பளிப்பு வழங்கப்படுகிறதா? இல்லையா? என்று பாரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ{மைத் அஸ்ஸாயிதீ (ரழி) நூல் : (புகாரி: 6636, 2597, 6979, 7174, 7197) (முஸ்லிம்: 3413, 3414) (அபூதாவூத்: 2557) (அஹ்மத்: 22492).

இந்த ஹதீஸில் அந்த மக்கள் விரும்பிக் கொடுத்த அன்பளிப்பை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கிறார்கள். காரணம் ஜகாத் வசூலின் போது அது கிடைத்துள்ளது. இந்த வசூல் இல்லையெனில் அந்த அன்பளிப்பும் இல்லை என்பது வெளிப்படை. எனவே, இது ஜகாத்தில் உள்ளது தான் என தீர்ப்பளிக்கிறார்கள். இதேபோல பெண்வீட்டார் வழங்கும் விருந்து திருமணத்திற்குத் தான். திருமணம் இல்லையேல் இவர்களின் விருந்தும் இல்லை. எனவே, எத்தனை வாதங்களை எடுத்து வைத்தாலும் அல்லாஹ் அனுமதிக்காத பெண் வீட்டு விருந்து பெருங்குற்றமே.

அகீகா

குழந்தைப் பிறந்த ஏழாம்நாள் செய்யவேண்டிய காரியங்கள் சிலவற்றை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். அதில் ஆடு அறுப்பதும் ஒன்று. ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவிற்கு அடமானமாக இருக்கிறது. அதன் ஏழாம்நாளில் அதற்காக (ஆடு) அறுக்கப்பட்டு அந்தக் குழந்தையின் தலைமுடி இறக்கப்பட்டு பெயர்வைக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : சமுராபின் ஜ{ன்துப் (ரழி)நூல் : (நஸாயீ: 4149), (திர்மிதீ: 1442) (அபூதாவூத்: 2454, 2455) (இப்னு மாஜா: 315) (அஹ்மத்: 19225, 19274, 19327, 19382) (புகாரி: 5471).

அறுக்கப்பட்ட ஆட்டை பிறருக்கு வழங்கும் போது சமைக்கப்படாத இறைச்சியாகவோ (அ) சமைக்கப்பட்ட விருந்தாகவோ விரும்பியவாறு வழங்கிக்கொள்ளலாம்.. குழந்தைகளின் பாலினம் ஆண் குழந்தையாக இருப்பின் இரண்டு ஆடுகளும், பெண்
குழந்தையாக இருப்பின் ஒரு ஆடும் அறுக்கப்பட வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண் குழந்தைக்கு
சம (வயதுடைய) இரண்டு ஆடுகளும் பெண் குழந்தைக்கு ஒரு ஆடும் (அறுக்கப்பட வேண்டும் என்று)
கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிக்ஷா(ரழி)நூல் : (திர்மிதீ: 1433, 1435) (இப்னு மாஜா: 3154)(அபூதாவூத்: 2451, 5452, 2453) (நஸாயீ: 4144, 4145, 4147)

ஆண் குழந்தை பிறந்து அதற்கு இரண்டு ஆடுகள் கொடுக்க வசதியில்லாதவர் ஒரு ஆடும் கொடுக்கலாம் ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தமது பேரக்குழந்தைகள் ஹஸனுக்கும், ஹீஸைனுக்கும் ஒவ்வொரு ஆட்டை அகீகா கொடுத்துள்ளார்கள் எனும் செய்தி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் வழியாக (அபூதாவூத்: 2458) வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

யார் கொடுப்பது?

அகீகாவை குறிப்பிட்ட இன்னார் தான் நிறைவேற்ற வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. அகீகாவை வலியுறுத்தும் ஹதீஸ்களில் அறுக்கப்பட வேண்டும் என செயப்பாட்டு வினைச் சொல்லைத் தான் நப ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். அதிலிருந்து குழந்தையின் பெற்றோரோ (அ) உறவினர்களோ யார் வேண்டுமானாலும் இதை நிறைவேற்றலாம் என்பதை புரிந்து
கொள்ள முடிகிறது. அலீ (ரழி) அவர்களின் பிள்ளைகள் ஹஸனுக்கும் ஹ{ஸைனுக்கும் பாட்டனாராகிய நபி (ஸல்) அவர்கள் தான்
அகீகா கொடுத்துள்ளார்கள் எனும் செய்தி மேலே கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒருவர் கொடுத்துவிட்டால் மற்றவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஆளாளுக்கு நான் கொடுக்கிறேன் நான் கொடுக்கிறேன் என்று அனைவரும் கொடுக்கிற புதிய வழிமுறையை உருவாக்கி விடக் கூடாது. அவ்வாறு செய்வது பெண்குழந்தைக்கு ஒரு ஆடு ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடு எனும் எண்ணிக்கையில் எல்லை
மீறும் செயலாக அமைந்துவிடும்.

எப்போது கொடுப்பது?

குழந்தை பிறந்த ஏழாம் நாள் இதை நிறைவேற்ற வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் அதற்காக (ஆடு) அறுக்கப்பட வேண்டும். அறிவிப்பவர் : சமுரா பின் ஜ{ன்துப் (ரழி) நூல் : (அபூதாவூத்: 2455, 2454) (திர்மிதீ: 1442)  (நஸாயீ: 4149) (இப்னு மாஜா: 315) (அஹ்மத்: 19225, 19274, 19327, 19382)

ஏழாம்நாளில் அதைச் செய்ய முடியவில்லை என்றால் அதற்காக வேறு நாட்களில் அதை நிறைவேற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தேதியைக் குறிப்பிட்டுச் சொன்ன பிறகு நமது வசதிக்காக அதை நாம் மாற்ற முடியாது. ஏழில் தவறிவிட்டது எனவே பத்தில் கொடுக்கிறேன் என்பதற்கு இது கட்டாயக் கடமை இல்லை விரும்பியோர் செய்துக்கொள்ளும் காரியம் தான்.யார் தனது குழந்தைக்காக அறுக்கப்படுவதை விரும்புகிறாரோ அவர் அதற்காக அறுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) நூல் : (நஸாயீ: 4141), (அபூதாவூத்: 2459), (அஹ்மத்: 6426, 6530).(பைஹகீ, தப்ரானீ, முஃஜமுஸ் ஸகீர்) ஆகிய நூற்களில் ஏழாம்நாள் (அ) பதினான்காம் நாள் (அ) இருபத்தியோராம் நாள் ஆகிய நாட்களில் அகீகா கொடுக்கலாம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகள் அனைத்தும் இஸ்மாயீல் பின் முஸ்லீம் என்பவர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் பலஹீனமானவர். குழப்பத்தோடு செய்திகளைச் செ ால்பவர் என ஹதீஸ்கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவர். இவர் வழியாக அறிவிக்கப்படும் இந்தச் செய்தியை, ஆதாரமாக ஏற்றுச் செயல்படுத்த முடியாது. தனக்குத்தானே அகீகா அதேபோன்று நபி (ஸல்) அவர்கள் நபியான பிறகு தனக்குத் தானே அகீகா கொடுத்துக் கொண்டதாக ஒரு செய்தி பைஹகீ, முஃஜமுல் அவ்ஸத் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விரு அறிவிப்புகளில் ஒன்றில் அப்துல்லாஹ் இப்னு முஹர்தர் என்பவரும் இன்னொன்றில் அப்துல்லாஹ் இப்னுமுஸன்னா என்பவரும் வருகிறார்கள். இவ்விருவரும் பலஹீனமானவர்கள் என குறை கூறப்பட்டுள்ளதால் இந்தச் செய்தியையும் ஆதாரமாக ஏற்க முடியாது.

இறைச்சி யாருக்கு?

அகீகாவின் இறைச்சியை இவ்வாறு தான் செலவிட வேண்டும் என்று திட்டவட்டமாக எந்த அறிவுரையும் சொல்லப்படவில்லை. எனவே அல்லாஹ்விற்காக குர்பானி கொடுக்கும் போது நாமும் சாப்பிட்டு, உறவினர்கள், ஏழை எளியவர்கள் என அனைவருக்கும் வாரி வழங்குவதைப் போன்று இதிலும் நடந்து கொள்ள வேண்டும்.

புது வீட்டு விருந்து

புதிதாக வீடுகட்டி குடியேறும் ஒருவர் மக்களை அழைத்து விருந்தளிக்க விரும்பினால் மார்க்கம் அதை அனுமதிக்கிறது.
இந்த அனுமதியை நபியவர்களைப் பற்றி மலக்குகள் சொன்ன ஒரு உவமையிலிருந்து விளங்கிக் கொள்கிறோம், (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது அவர்களிடம் வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார், என்றார். அதற்கு மற்றொருவர் கண் தான் உறங்குகிறது. உள்ளம் விழித்திருக்கிறது என்று கூறினார். பின்னர்அவர்கள் உங்களுடைய இந்த நண்பருக்கு ஒரு உதாரணம் இருக்கிறது.

அவருக்கு அந்த உதாரணத்தை கூறுங்கள் என்று பேசிக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் இவர் உறங்குகிறாரே என்றார். மற்றொருவர் கண் உறங்கினாலும்உள்ளம் விழித்திருக்கிறது என்றார். பின்னர் அவர்கள் இவரின் நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார். விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவில்லை. விருந்துஉண்ணவுமில்லை என்று கூறினார். பின்னர் அவர்கள் இந்த உவமையை விளக்கிக் கூறுங்கள் அவர் புரிந்து கொள்ளட்டும் என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் இவர் உறங்குகிறாரே என்று சொல்ல மற்றொருவர் கண் தான் தூங்குகிறது. உள்ளம் விழித்திருக்கிறது என்றார்.

அதைத் தொடர்ந்து அந்த வீடு தான் சொர்க்கம்.அழைப்பாளி முஹம்மது (ஸல்) அவர்கள். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்துவிட்டார். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்துவிட்டார். முஹம்மது (ஸல்) அவர்கள் மக்களைப் பகுத்துக்காட்டி விட்டார்கள் என்று
விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) நூல் : (புகாரி: 7281), (திர்மிதீ: 2787)

புதுவீடு கட்டி அதில் விருந்துக்கு அழைப்பது இங்கே உவமையாக கூறப்பட்டுள்ளது. மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றை வானவர்கள் உவமையாகக் கூட கூறமாட்டார்கள். எனவே, புதுமனை புகும்போது விருந்தளிக்கலாம் என்று விளங்குகிறது. இது அனுமதிக்கப்பட்டது தானே தவிர கட்டாயமானது இல்லை. இன்றைய சமூகத்தில் வீடு கட்டி குடியேறும் போது விருந்தோடு சேர்த்து ஏராளமான அனாச்சாரங்களும் அரங்கேறுகின்றன. பால் காய்ச்சுதல், பாத்திஹா ஓதுதல், பாங்கு சொல்லுதல், கத்தம் ஓதுதல், உப்பு, மிளகு வழங்குதல், பசுமாட்டை வீட்டிற்குள் கொண்டு வருதல், ஜமாஅத் தொழுகை நடத்துதல் என பலவித மூட நம்பிக்கைகள் மக்களிடம் காணப்படுகின்றன. இவற்றில் எதுவுமே மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது அல்ல. மாற்று சமுதாயத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டவை.

யார் பிற சமுதாய (சம்பிரதாயங்களுக்கு) ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னுஉமர் (ரழி) நூல் : (அபூதாவூத்: 3512).

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு மதத்தாரின் கலாச்சார சம்பிரதாயங்களைப் பின்பற்றுகிறவர் அந்த மதத்தைச் சேர்ந்தவராக கருதப்படுவார். இதில் பல காரியங்கள் நமது சமுதாயத்தார் மட்டுமே செயல்படுத்தும் காரியமாக இருந்தாலும் அவைகளும் பிற மதத்தாரின் சடங்குகளை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன என்பதை உணர வேண்டும்.

புறக்கணிக்க வேண்டிய விருந்துகள்

குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்காக விருந்தளிக்கலாம் என்பதையும் அவை என்னென்ன? என்பதையும் நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுப்படுத்திவிட்டார்கள். அவர்களுடைய வழிகாட்டுதலில் இல்லாத பல புதிய விருந்துகள் இன்று உருவாகியிருக்கின்றன.
அவற்றில் சில விருந்துகள் சமூக நிர்பந்தமாக உருவெடுத்து பொருளாதார ரீதியாக மக்களை பெரும் பாடுபடுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் சில விருந்துகள், மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் பெரும் முட்டுக்கட்டையாக மாறி நிற்கின்றன. இன்னும் சில விருந்துகள், மார்க்கத்தில் இல்லாத புதிய அனாச்சாரங்களாக உருவெடுத்துள்ளன.

இவைபோன்ற அனைத்து விருந்துகளும் புறக்கணிக்கப்பட வேண்டிய விருந்துகளாகும். இதுபோன்ற விருந்துக்கு ஏற்பாடு செய்வதும் கூடாது. அந்த விருந்திற்காக நாம் அழைக்கப்பட்டால் அதில் பங்கெடுக்கவும் கூடாது. மார்க்க முரணான விருந்துகளை ஏற்பாடு செய்பவர் எந்த அளவு பாவத்தை சுமப்பாரோ அதே அளவு பாவத்தை பங்கெடுப்பவரும் சுமப்பார் என்கிறது திருமறைக் குர்ஆன். அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்.

(அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும் (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். நமது வசனங்களில் (குறை காண்பதற்காக) மூழ்கிக் கிடப்பவர்களை நீர்காணும் போது அவர்கள் வேறு செய்தியில் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக! க்ஷைத்தான் உம்மை மறக்கச் செய்தால் நினைவு வந்தபின் அநீதி இழைத்த கூட்டத்துடன் நீர் அமராதீர். (அல்குர்ஆன்: 6:68)

அனுமதிக்கப்பட்ட விருந்தில் இஸ்லாத்தில் இல்லாத அனாச்சாரங்கள் அரங்கேறுமாயின் அவைகளும் புறக்கணிக்கப்பட வேண்டியவையே. உதாரணமாக திருமணத்தில் வரதட்சணை, பெண் வீட்டு விருந்து, ஃபாத்திஹா என கலப்படம் நடந்தால் அவற்றையும் புறக்கணித்திட வேண்டும். இதுபோன்ற தீமைகள் நடக்கும் சபைகளில் நாம் பற்கேற்கக் கூடாது பங்கேற்றால் அல்லாஹ்வின் பார்வையில் நாமும் அதைச் செய்தவர்களாகத் தான் கருதப்படுவோம். மேலும் தீமைகளைக் காணும் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற நபிகளாரின் போதனையை மீறியவர்களாகவும் ஆகிவிடுவோம்.

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கையால் தடுக்கட்டும் முடியாவிட்டால் நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்). இதுவே இறைநம்பிக்கையின் பலவீனமான நிலையாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரி (ரழி)நூல் : (முஸ்லிம்: 70), (திர்மிதீ: 2098) (நஸாயீ: 4922, 4923), (அபூதாவூத்: 963, 3777) (இப்னு மாஜா: 1265, 4003) (அஹ்மத்: 10651, 10723, 11034, 11068, 11090, 11442)

தீமையைக் காணும் போது புறக்கணித்தல் தான் ஈமானின் இறுதி நிலையாகும். ஒரு முஸ்லிம் அதையாவது கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும். மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படுகிற உணவு ஹலால் ஆனது தானே அதைச் சாப்பிடுவதில் தவறு என்ன நேர்ந்துவிடப் போகிறது? என்று சிலர் அதை ஆதரிக்கின்றனர் இத்தகையோருக்கு நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைபெற்ற ஓர் நிகழ்ச்சி மிகச்சிறந்த விளக்கமாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தமது மகள்) ஃபாத்திமா (ரழி) அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். உள்ளே செல்லாமல். (திரும்பிப் போய் விட்டார்கள்) அங்கே வந்த அலி (ரழி) அவர்களிடம். ஃபாத்திமா (ரழி) அவர்கள் விக்ஷயத்தைச் சொன்னார்கள். அலி (ரழி) அவர்கள் அதைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் ஃபாத்திமாவின் வீட்டுவாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச்சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால் தான் திரும்பி வந்துவிட்டேன்) என்று கூறினார்கள். அலி (ரழி) அவர்கள் பாத்திமாவிடம் வந்து நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரழி) அவர்கள் அந்தத் திரைச்சீலையின் விக்ஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் விரும்புவதை எனக்கு கட்டளையிடட்டும் (அதன்படியே நான் நடந்து கொள்கிறேன்) என்று கூறினார்கள். நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் அதை இன்ன வீட்டாரிடம் அனுப்பிவிடு அவர்களுக்குத் தேவையுள்ளது என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னுஉமர் (ரழி) நூல் : (புகாரி: 2613), (அபூதாவூத்: 3620) (அஹ்மத்: 4497)

பாத்திமா (ரழி) அவர்களின் வீட்டில் உள்ள உணவு ஹலால் ஆனது தான். அதை ஹராம் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறக்கணிக்கவில்லை. மாறாக அந்த இடத்தைப் பார்க்கும் போது தேவையற்ற அலங்காரமாக தோன்றிய காரணத்தினால்
தான் புறக்கணித்துள்ளார்கள். அங்கே கண்ட திரைச்சீலையும் கூட தடுக்கப்பட்டது அல்ல. அதனால் தான் பிறருக்கு அதைக் கொடுத்துவிடுமாறு கூறியுள்ளார்கள். இதுவே, புறக்கணிக்கப் போதுமானது என்றால் தடுக்கப்பட்ட தீமைகள் நடக்கும் சபையைப் பற்றி கூறத் தேவையில்லை.

சுன்னத்தான விருந்துகளில் சில தவறுகள் நடைபெற்றாலும் அதில் நபியின் சுன்னத்தும் பேணப்படுகிறதே. அதை கவனித்து
சென்று வரலாமே என சிலர் நினைக்கின்றனர். நல்லதும், கெட்டதும் கலந்திருந்தால் அதில் நல்லதும் இருக்கத்தானே செய்கிறது என்று பார்க்க நமக்கு அனுமதி இல்லை இஸ்லாத்தின் பார்வையில் நல்லது மட்டும் இருப்பது தான் நல்லதாகும். அதனுடன் கெட்டதும், சேர்ந்திருந்தால் அதைக் கெட்டது என்று தான் முடிவெடுக்க வேண்டும். சுவை மிகுந்த உணவில் சிறிதளவு விக்ஷம் கலந்திருந்தால் நல்ல உணவும், இருக்கத்தானே செய்கிறது என்று எந்த அறிவாளியும் முடிவெடுப்பதில்லை. ஒருவரிடம் இறை நம்பிக்கையோடு கொஞ்சம் க்ஷிர்க்கும் கலந்திருந்தால் அவரை முஃமீன் என அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை.
(அல்குர்ஆன்: 6:82, 3:71, 2:42)

புதுவீட்டு விருந்தில் மவ்லூது போன்ற தடுக்கப்பட்டவை இருந்தால் அனுமதிக்கப்பட்ட விருந்தைப் பார்க்க கூடாது. தடுக்கப்பட்ட மவ்லூதை தான் பார்க்க வேண்டும். வரதட்சணைத் திருமணத்தில் மணமகன் கொடுக்கும் வலீமாவை மட்டும் பார்க்கக் கூடாது. கேடுகெட்ட வரதட்சணையும் அதிலே கலந்திருக்கிறது என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு எந்தவொரு
விருந்திலும், அல்லாஹ் அனுமதிக்காத காரியங்கள் நடை பெற்றால் அதில் எத்தனை சுன்னத்துகள் பேணப்பட்டாலும்
மீறப்பட்ட சுன்னத்களை கவனத்தில் கொண்டு அவற்றைப் புறக்கணிக்க வேண்டும.

இறப்பு விருந்து

ஒருவர் இறந்துவிட்டால் அவரது வீட்டில் 3ம் நாள், ஏழாம் நாள், 40ம் நாள் என பல நாட்களுக்கு ஃபாத்திஹா ஓதப்பட்டு
விருந்தளிக்கப்படுகிறது. இது இஸ்லாத்தில் இல்லாத புதிய வழிமுறையாகும். நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடனிருக்கும் போது அவர்களின் தோழர்கள், உறவினர்கள், பிள்ளைகள் என பலரும் மரணத்தை தழுவியிருக்கிறார்கள். யாருக்காகவும்
நபி (ஸல்) அவர்கள் கத்தம், பாத்திஹா எதுவும் ஓதவில்லை விருந்தளிக்கவும் இல்லை. இது திதி , திவசம் என முஸ்லிமல்லாதவரின்
நடவடிக்கையின் மறுபதிப்பாகும். இறந்தவர் உயிருடனிருக்கும் போது எதை விரும்பிச் சாப்பிட்டாரோ அதுவே இந்த
விருந்திலும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஒருவிதத்தில் மாற்றாரின் படையலுக்கு ஒப்பாக இருக்கிறது இந்த ஏற்பாடு. ஏனெனில் அவர் விரும்பும் பொருளைஅவருக்காக வைக்கின்றனர் அதில் எதையும் அவர் சாப்பிடுவதில்லை. அவர் சாப்பிடமாட்டார் எனத் தெரிந்தும் அவர் விரும்பும் பொருளை வைப்பதன் நோக்கம் என்ன? என்பதை சிந்தித்தால், இதவும் ஒருவகைப் படையல் தான்
என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

மேலும், இறந்தவரின் வீட்டார் சோகத்தில் இருப்பார்கள். அவர்களின் துயரத்தில் பங்கெடுக்கும் விதமாக அண்டைவீட்டார் தமது வீடுகளில் உணவு சமைத்து அவர்களுக்குப் பாரிமாற வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். ஜஃபர் (ரழி) அவர்கள் மூத்தா போரில் கொல்லப்பட்ட செய்தியை நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். மேலும் ஜஃபரின் குடும்பத்தாருக்கு கவலை தரும் செய்தி வந்துவிட்டது அவரது குடும்பத்தாருக்காக உணவு சமைத்துக் கொடுங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரழி) நூல் : (திர்மிதீ: 919) (அபூதாவூத்: 2725) (இப்னு மாஜா: 1599).

விருந்து கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் அண்டை அயலார் கொடுக்காமல் இருப்பதே பிழை. அதைவிடக் கொடுமையாக அவர்களிடமே விருந்தைப் பெறுவது அதைவிடக் கொடுமையல்லவா? எனவே, ஃபாத்திஹா எனும் படையல் இருப்பதால் இந்த உணவு ஹராமானதாகும்.மேலும் அந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களின் கட்டளை மறுக்கப்படுவதால் அங்கே அமர்ந்திருப்பதும் குற்றமாகும்.

ஹஜ் பயண விருந்து

ஹஜ்ஜ{க்கு செல்லும் போதும் ஹஜ்ஜை முடித்து திரும்பும் போதும் விருந்து கொடுக்கும் பழக்கம் பரவலாகக்
காணப்படுகிறது. இதுபோன்ற ஓர் நடைமுறையை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தரவில்லை. இந்தப் பழக்கம் ஹஜ்ஜ{க்குச்
செல்வோ ர ின் எண்ணிக்கையை கணிசமா கக் குறைத்திருக்கிறது. சாதாரணமாக ஹஜ் செய்ய 1.5 லட்சம் செலவாகும்
என்றால் விருந்துச் செலவு 1 லட்சம் சேர்ந்து இரண்டரை லட்சம் வைத்திருப்போர் மட்டுமே அதை நிறைவேற்ற முடியும்
என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

மேலும் இறைவன் நம் மீது விதித்துள்ள கடமையை நிறைவேற்றச் செல்கிறோம் என்ற இறையச்ச உணர்வு குறைந்து பெருமைக்காக ஹஜ் செய்தல் எனும் நிலையை இந்த விருந்து ஏற்படுத்தி விடுகிறது. என்வே இது புறக்கணிக்க வேண்டிய விருந்தாகும்.

ஏழைகள் அழைக்கப்படா விருந்து

சமூகத்தில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் விதமாக செல்வந்தர்களை மட்டும் அழைத்து ஏழையைப் புறக்கணிக்கும் விருந்துகள் மகா கெட்டவையாகும். விருந்தில் மிகக் கெட்டது செல்வந்தர்கள் அழைக்கப்பட்டுஏழைகள் விடப்படும் (வலிமா) விருந்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரழி)நூல் : (புகாரி: 5177), (முஸ்லிம்: 2585, 2586) (அபூதாவூத்: 3251) (இப்னு மாஜா: 1903) (அஹ்மத்: 6978, 7305, 8893, 10009)

ஒருவரிடம் நட்பு கொள்வதற்கு பொருளாதாரத்தை அளவுகோலாகக் கொள்வதை விட கெட்ட அளவுகோல் வேறெதுவும் இருக்கமுடியாது. இவர்கள் பார்வையில் ஏழைகள் என்றால் கெட்டவர்கள் மரியாதை தெரியாதவர்கள் என்று பொருள். உண்மையில் நல்லவன், கெட்டவன் என்பதை ஒருவரிடம் உள்ள பணம் தீர்மானிப்பதில்லை. மேலும் கெட்டுப்போவதற்கு அதிக வாய்ப்புள்ளவர் யார் என சிந்தித்தால் ஏழையை விட செல்வந்தனே அதில்

முதலிடத்தைப் பெறமுடியும். ஏனெனில் தவறு செய்ய நினைத்தால் அதைச் செய்வதற்குரிய பொருள் வசதி இவரிடம் தான் உள்ளது. மேலும் ஏழ்மையில் பலர் தவறு செய்ய நினைத்தாலும் பெரும்பாலும் அவர்களின் ஏழ்மை அதற்குரிய வாய்ப்பை அவர்களுக்குத் தருவதில்லை. எனவே, பொருளாதார ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். ஒரு செல்வந்தர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இவரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு தோழர்கள் இவர் பெண் கேட்டால் மணமுடித்து வைக்கவும், பரிந்துரைத்தால் ஏற்கவும், பேசினால் செவிசாய்க்கவும் தகுதியானவர் என்று கூறினார்கள். சிறிதுநேரத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்களை ஒரு
ஏழை முஸ்லிம் ஒருவர் கடந்து சென்றார். இவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எனக் கேட்டார்கள். அதற்கு ஸஹாபாக்கள் இவர் பெண் கேட்டால் மணமுடித்து வைக்காமலும் பரிந்துரைத்தால் ஏற்கப்படாமலும் பேசினால் செவியேற்காமலும் இருக்கத் தகுதியானவர் என்று பதிலளித்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவரைப் போன்றவர்கள் இந்த பூமி நிரம்ப
இருப்பதை விட இவர் (ஏழை) சிறந்தவராவார். அறிவிப்பவர் : ஸஹ்ல் (ரழி) நூல் : (புகாரி: 5091, 6447) (இப்னு மாஜா: 4110)

மேலும் விருந்து என்பது செல்வச் செழிப்பில் உள்ள பலருக்கு பெரிய மகிழ்ச்சியைக் கொடுப்பதில்லை. ஏனெனில், அவர்களின் அன்றாட உணவே அறுசுவை நிறைந்ததாகத் தான் இருக்கும். அழைத்து விட்டார்களே என வேண்டா வெறுப்பாக கலந்து கொள்பவர்கள் தான் அதிகம் இருப்பார்கள். ஏழைகளாக இருப்பின் நமது அழைப்பை ஏற்று கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். நமது அழைப்பு யாருக்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ அவர்களை விட்டு விட்டு மற்றவர்களை அழைப்பது
அறிவார்ந்த செயலாகுமா?விருந்துக்கு வரத்தயாராக இருப்பவர்கள் தடுக்கப்பட்டு
மறுப்பவர்கள் அழைக்கப்படும் வலீமாவே விருந்தில் மிகக்கெட்டதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரழி) நூல் : (முஸ்லிம்: 2586).

எனவே நபி (ஸல்) அவர்களால் கெட்டது என வர்ணிக்கப்படும் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் விருந்துகள் யாவும் புறக்கணிக்கப்பட வேண்டியவையாகும். இவைபோன்று ஒரு பெண் வயதுக்கு வந்ததற்காக, (சுன்னத்) கத்னாவிற்காக, குழந்தை பிறந்த 40-ம் நாளுக்காக வளைகாப்புக்காக என நபியவர்களால் வழிகாட்டித் தரப்படாத காரியங்களை முன்னிட்டு வழங்கப்படும் விருந்துகள்
அனைத்தும் புறக்கணிக்கப்பட வேண்டியவையாகும்.