14) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 12

நூல்கள்: ஏசு மரணிக்கவில்லை- ஒரு தெளிவான விளக்கம்

ஆவியல்ல! மனிதர் தான்!

தனது சீடர்களுக்கு ஏசு முறையாக முகமன் கூறிய பின்னர் பின்வருமாறு கூறுகின்றார்:

“நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே” என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.

லூக்கா 24:38-40

ஏசு இதன் மூலம் தெரிவிப்பது இது தான். அட அடிமுட்டாள்களா! ஆவிக்கு ஏது சதை? ஆவிக்கு ஏது எலும்பு? ஆவிக்கு ஏது இரத்தம் என்று சிந்தியுங்கள்; நான் சாகவில்லை; அதே ஏசு தான் அப்படியே வந்திருக்கிறேன் என்று தெளிவாகத் தெரிவிக்கின்றார்.

ஆவிக்கு சதையோ, எலும்போ கிடையாது என்பது எல்லோரும் ஏகோபித்து ஒத்துக் கொண்ட உண்மை. ஏசு அதைத் தான் தனது சீடர்களிடம் உணர்த்துகின்றார். எனவே இறந்தவர் மீண்டும் எழுந்து வந்தால் அவர் ஆவியாகத் தான் வருவார். அதே ஆளாக வர மாட்டார்.

அஹ்மத் தீதாத் அவர்கள் இவ்வாறு ஒரு கருத்தரங்கில் கூறிய போது ஒரு கிறித்தவ அழைப்பாளர் எழுந்து, “இறந்தவர் மீண்டும் உயிர் பெற்றால் அவர் ஆவியாகத் தான் வருவார் என்று யார் சொன்னது?” என்று கேட்டார். அதற்கு அஹ்மத் தீதாத், “ஏசு தான்” என்று பதில் கூறினார். “இது எங்கு இடம் பெறுகின்றது?” என்று கேட்டார். “இது பைபிளில் லூக்காவில் இடம் பெறுகின்றது. ஆவிக்கு சதையோ, எலும்போ கிடையாது என்று பைபிள் கூறுகின்றது” எனக் கூறிப் பின்வரும் விளக்கத்தை அளித்தார் அஹ்மத் தீதாத்!

ஒரு யூதப் பெண்ணுக்கு 7 கணவர்கள். யூதக் கலாச்சாரப்படி ஒருவர் குழந்தையில்லாமல் இறந்து விட்டால் அவரது சகோதரர் அந்த மனைவியைத் திருமணம் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு சகோதரரும் இறந்து கொண்டே இருந்தால் அடுத்தடுத்து உள்ள சகோதரர்கள் திருமணம் முடிக்க வேண்டும்.

ஏழு பேரையும் இந்தப் பெண் திருமணம் முடிக்கிறாள். அந்தப் பெண்ணும் இறந்து விட்டாள். பரலோக வாழ்வில் அந்த ஏழு பேரும் அந்தப் பெண்ணும் எழுப்பப்படுவார்கள். அப்போது ஏழு பேருமே அந்தப் பெண் தனக்கு என்று கோருவார்கள். அங்கு அந்தப் பெண் யாருடன் சேர்ந்து வாழ்வாள்? இது தான் ஏசுவுக்கு முன்னால் உள்ள கேள்வி.

அதற்கு ஏசு அளிக்கும் பதில்:

இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.

லூக்கா 20:36

அவர்கள் சாகாத ஆவிகளாகி விடுவார்கள். அவர்களுக்கு உணவு தேவையில்லை. உடை தேவையில்லை. பாலியல் உணர்வு தேவையில்லை. அவர்கள் வானவர்களுக்குச் சமமானவர்கள்.

இந்தச் சம்பவம் லூக்கா 20:27-36 வசனங்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த விளக்கத்தின்படி, தான் மீண்டும் உயிர் பெற்று வந்தவர் அல்ல! அதாவது ஆவி அல்ல! உடலும் உயிரும் சேர்ந்த அதே ஏசு தான். பசி, தாகம் உள்ள ஒரு ஜீவன் தான் என்பதையும் இங்கே ஏசு நிரூபித்துக் காட்டுகின்றார்.

அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், “உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டார். அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள் முன் அமர்ந்து உண்டார்.

லூக்கா 24:41-43

இவ்வளவும் எதற்காக? தான் ஓர் ஆவி என்பதை நிரூபிக்கவா? இல்லை! எலும்பும் சதையும் இணைந்த மனிதன் தான் என்பதை நிரூபிப்பதற்காக! அல்லது இவை அனைத்தும் நடிப்பு என்று கிறித்தவ உலகம் சொல்ல வேண்டும்.