13) முடிவுரை
இவ்வுலகில் மனிதனை சுற்றி ஏராளமான படைப்பினங்கள் இருக்கின்றன. விலங்குகள், பறவையினங்கள், கடல்வாழ் உயிரினங்கள், உயிரற்ற படைப்புகளான, காடு, மலை, கடல், ஆகாயம், சூரியன், சந்திரன், இன்ன பிற கோள்கள்.. என நம்மை மலைக்க வைக்கின்ற வியத்தகு படைப்புகள் ஏராளம் ஏராளம்.
ஆனால், உண்மையில் அவை அனைத்தையும் விட வியத்தகு படைப்பு மனித படைப்பு தான். காரணம், அவைகளிடத்தில் வழங்கப்படாத மகத்தான பொக்கிஷமான பகுத்தறிகின்ற திறன் மனிதனுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றது.
அப்படியானால், நாம் இவ்வுலகில் செய்கின்ற காரியங்கள், நடந்து கொள்ளும் விதங்கள் என அனைத்துமே அந்த மகத்தான பொக்கிஷத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் தான் அமைந்திருக்க வேண்டுமே தவிர, அதனை இழிவு செய்கிற விதங்களில் அமையக் கூடாது என்பதில் தான் நாம் முழுமுதற் கவனத்தை செலுத்த வேண்டும்.
ஆன்மீகம் இதனை சோதிக்கின்ற மிக வலிமையான ஒரு ஊடகம்.
கடவுள் நம்பிக்கையை தெளிவாகவும் அறிவுப்பூர்வ மானதாகவும் நாம் ஆக்கிக் கொள்கையில் நாம் தேட விரும்புகின்ற ஆன்மீகப் பாதையும் தெளிந்த நீரோடையாகநம் வாழ்வை செம்மைப்படுத்த துவங்கும்.
கடவுள் நம்பிக்கை எனும் பெயரால் நாம் நம் பகுத்தறிவினை குறைபடுத்திக் கொண்டோமெனில், ஆன்மீகம் கேலிக்குரியதாகி விடுகிறது.
இதுவே நாம் நிதர்சனமாக கண் முன் காண்கின்ற பேருண்மை..!