13) தீயவர்களுக்கான விசாரணை

நூல்கள்: குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை

13) தீயவர்களுக்கான விசாரணை

கெட்ட மனிதன் விசாரணைக்குச் செல்லும்போது அவனுக்கு பதட்டம் ஏற்படும். வானவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு அவன் சரியான எந்த பதிலையும் சொல்ல மாட்டான். பரீட்சையில் தோற்று விடுவான்.

கெட்ட மனிதன் நடுக்கத்துடனும் திடுக்கத்துடனும் மண்ணறையில் உட்கார வைக்கப்படுவான். எந்தக் கொள்கை யில் நீ இருந்தாய் என்று அவனிடத்தில் வினவப்படும். அதற்கு அவன் எனக்குத் தெரியாது என்று கூறுவான்.

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)

நூல்: இப்னுபாஜா-4258

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியானின் உடலை சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து “முஹம்மத் எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?” எனக் கேட்பார்.

நிராகரிப்போனாகவோ, நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், “எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்” என்பான். அப்போது அவனிடம் “நீயாக எதையும் அறிந்தது. மில்லை; குர்ஆனை ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும்.

பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 1338)