13) திருமணத்தில் நடைபெறும் பித்அத்கள்
மனித வாழ்க்கையில் மிக முக்கிய நிகழ்வு திருமணம். அத்திருமணம் குறித்த முழுமையான வழிகாட்டுதல்கள் இஸ்லாத்தில் உண்டு.
மணத் துணைகளை தேர்வு செய்தல், மணமக்களின் தகுதி, மணமக்களின் சம்மதம், மஹ்ர் முடிவு செய்தல், எளிமையான திருமணம், வலிமா என்று இவை போன்ற அனைத்து திருமண சட்டங்களையும் இஸ்லாம் நமக்கு எடுத்துரைக்கிறது.
அகிலத்துக்கு அருட்கொடையாக வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருமணம் குறித்த அழகிய வழிமுறைகளை நமக்கு காட்டித் தந்துள்ளார்கள். அதை விட்டு விட்டு இஸ்லாத்தில் இல்லாத பித்அத்களையும், மூடநம்பிக்கைகளையும் , பிறமதக் கலச்சாரங்களையும் இஸ்லாமியர்கள் தங்களின் திருமண நிகழ்ச்சிகளில் அரங்கேற்றி வருகின்றனர்.
திருமணங்களில் நுழைந்து விட்ட பித்அத்களில் சிலவற்றை உங்களுக்கு அறியத் தருகிறோம்.
📌நிச்சயதார்த்த பாத்திஹா
📌பந்தக்கால் நடும் போது பாத்திஹா ஓதுதல்
📌திருமணத்திற்காக பால் கிதாப் பார்த்தல்
📌பத்திரிக்கையில் முபாரக்கான வேளையில் என்று போடுதல்
📌திருமணத்தின் போது பாத்திஹா ஓதுதல்
📌 கருகமணி போடுதல்
📌 கருகமணி போடும் போது பிஸ்மில்லாஹ் கூறுதல்
📌 கபில்த்து நிகாஹகா வ தஜ்வீஜஹா என ஈஜாப் கபூல் அரபியில் ஓதுதல்
📌அல்லிப் பைனஹுமா என்ற துஆவை ஓதுதல்
📌 மவ்லித் பாடல்களை படித்தல்.
📌 கூட்டு துஆ ஓதுதல்.
📌 மாலைப் பாத்திஹா ஓதுதல்
📌 திருமணத்திற்கு முந்தைய தினங்களில் மஜ்லிஸ்களை ஏற்படுத்துதல்.
இவை போன்ற ஏராளமான பித்அத்களை இஸ்லாமியர்கள் தங்கள் திருமணங்களில் அரங்கேற்றி வருகின்றனர். இவை அனைத்தும் வழிகேடாகும்.
மார்க்கத்தில் ஒரு காரியத்தை முடிவு செய்யும் அதிகாரம் அல்லாஹ்விற்கே உண்டு. அவனன்றி வேறு யாருக்கும் அவ்வதிகாரமில்லை.
யாரேனும் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை விரும்பினால் அது அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்தோரில் (ஒருவராக) இருப்பார்.
நீங்கள் அவனுக்கு உங்கள் மார்க்கத்தை கற்றுக் கொடுக்கிறீர்களா?
திருமணச் சட்டங்கள் குறித்து அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் நமக்குத் தெளிவாக வழிகாட்டி இருக்கும்போது இஸ்லாத்தில் இல்லாத புதுமைகளைச் செய்வது பெரும் வழிகேடாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்: (புகாரி: 2697)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும், நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். செய்திகளில் மிகக் கெட்டது (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவானவையாகும், புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல் : (நஸாயீ: 1560)
திருமணங்களில் பித்அத்தான காரியங்களைச் செய்வோர் இவற்றை மார்க்கம் சொல்கிறது என நம்பியே செய்து வருகின்றனர். இது தவறான புரிதலாகும். எனவே திருமணத்தின் பெயரால் அரங்கேறும் பித்அத்களை தவிர்த்து நபிகளார் காட்டித் தந்த முறையில் திருமணங்களை நாம் மேற்கொள்ள வேண்டும் . இறைவன் அதற்கு கிருபை செய்வானாக.