13) சொந்த பந்தங்களுக்கு நலம் நாடுதல்

நூல்கள்: பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்

உறவுகளை இணைத்து வாழ வேண்டும், உறவினர்களுக்கு உதவ வேண்டும் என்று இஸ்லாம் கட்டையிடுகிறது. ஆனால். சின்னஞ்சிறிய அற்பமான விஷயங்களை எல்லாம் பாரதூரமாக எடுத்துக் கொண்டு உறவுகளை துண்டித்து வாழ்பவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு இல்லாமல் உறவினர்களுக்கு நலம் நாடி அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் நன்மைகளை செய்ய வேண்டும்.

‘எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். இன்னும் இரத்த பந்த உறவுகளை (சீர்குலைப்பதை) அஞ்சுங்கள். திண்ணமாக அல்லாஹ் உங்களைக் கண் காணித்துக் கொண்டிருக்கிறான்.” (அல்குர்ஆன்: 4:1)

நீதி, நன்மை,மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

(அல்குர்ஆன்: 16:90)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் சிலர் உள்ளனர். அவர்களுடன் நான் ஒட்டி உறவாடுகிறேன். ஆனால், அவர்கள் எனது உறவை முறிக்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன். ஆனால், அவர்கள் எனக்கு அபகாரம் செய்கிறார்கள். (என்னைப் புண்படுத்தும்போது) அவர்களை நான் சகித்துக் கொள்கிறேன். (ஆனாலும்) அவர்கள் என்னிடம் அறியாமையோடு நடந்து கொள்கிறார்கள்” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள். நீங்கள் சொன்னதைப் போன்று நீங்கள் நடந்திருந்தால், அவர்களது வாயில் நீங்கள் சுடு சாம்பலைப் போட்டவரைப் போன்றுதான். இதே நிலையில் நீங்கள் நீடித்திருக்கும்வரை இறைவனிடமிருந்து ஓர் உதவியாளர் அவர்களுக்கெதிராக உங்களுடன் இருந்து கொண்டேயிருப்பார் என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி),           நூல் : (முஸ்லிம்: 5000)