13) ஏன் இந்த எளிய வாழ்க்கை….
நபி (ஸல்) அவர்கள் எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டதற்கு அவர்கள் வகுத்துக்
கொண்ட கொள்கையே காரணமாக இருந்தது. மாமன்னர் என்ற அடிப்படையில் இல்லாவிட்டாலும் வசதியில்லாத குடிமகன் என்ற முறையில் தமது அவசியத் தேவைக்காக அரசுப் பணத்தை நபி (ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களது நேர்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் காட்டிய ஆன்மீக நெறிக்கும் அது முரணாக இருக்காது.
அரசுப் பணத்தில் ஊதியமாகவோ, கடனாகவோ, பரிசாகவோ, தர்மமாகவோ எந்த ஒன்றையும்
பெறுவதில்லை என்பதை அவர்கள் ஒரு கொள்கையாகவே ஏற்படுத்திக் கொண்டார்கள். தாம் மட்டுமின்றி தமது மனைவி மக்களும் கூட அவ்வாறு பெறக் கூடாது என்று கொள்கை வகுத்தார்கள். இந்தக் கொள்கையை ஊரறியப் பிரகடனம் செய்தார்கள். இந்தக் கொள்கையில் கடைசி மூச்சு வரை உறுதியாக நின்றார்கள். இது தான் அவர்களின் எளிமையான வாழ்க்கைக்குக் காரணமாக இருந்தது.
இந்தக் கொள்கையில் அவர்கள் எந்த அளவு பிடிப்புடனும், உறுதியுடனும் இருந்தார்கள் என்பதற்குப்
பின்வரும் நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்களின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் என்னும் பொது நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபி (ஸல்) அவர்களின் பேரன் ஒருவர் அவற்றிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை நபி (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து துப்பு துப்பு என்று தமது பேரனிடம் கூறி, துப்பச் செய்தார்கள். அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. நாம் ஸகாத் (பொது நிதி) பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உமக்குத் தெரியாதா? என்று பேரனிடம் கேட்டார்கள்.
நூல்: (புகாரி: 1485, 1491, 3072)
நபிகளாரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு அரசியல்வாதியும் வாழ்ந்து காட்டினால் நாடு செழிக்கும் என்பதிலை ஐயமில்லை.