13) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 11

நூல்கள்: ஏசு மரணிக்கவில்லை- ஒரு தெளிவான விளக்கம்

பயந்து நடுங்கிய சீடர்கள்

எம்மாவுவைச் சேர்ந்த இருவரும் ஜெருஸலத்திற்கு வருகையளிக்கின்றனர்.

அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள்.

அங்கிருந்தவர்கள், “ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்” என்று சொன்னார்கள்.

அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும் போது அவரைக் கண்டுணர்ந்து கொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

லூக்கா 24:33-35

இங்கே லூக்கா சொல்கின்ற 11 பேர் என்ற கணக்கு தவறான கணக்காகும். ஏனெனில், ஏசு வருகையளித்த போது அவரது சீடர்களில் ஒருவரான தாமஸ் அங்கு இல்லை. (பார்க்க யோவான் 20:24)

மேலும் யூதாசும் அங்கு இல்லை. ஏனெனில் ஏசு திரும்ப வரும் போது யூதாசு உயிருடன் இல்லை. தற்கொலை செய்து விட்டான். (பார்க்க மத்தேயு 27:5)

எம்மாவுவைச் சேர்ந்தவர்களையும் சேர்த்து மொத்தம் 10 பேரைத் தாண்டாது. இங்கு லூக்கா 11 பேர் என்று குறிப்பிடுவது மாற்கு 16:14 வசனத்தைக் காப்பியடித்துத் தான். இந்த லட்சணத்தில் 1 கொரிந்தியர் 15:5 வசனத்தில், “அவர்கள் 12 பேர்’ என்று பவுல் குறிப்பிடுகின்றார். பவுலையும் சேர்த்தால் கூட 12 வராது.

பைபிள் எழுத்தாளர்களிடம் இந்த எண்ணிக்கைகளுக்குப் பெரிய மதிப்பு இருக்காது. இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், இவர்களுடைய அறிவிப்புக்களில் தான் எத்தனை தில்லுமுல்லுகள் என்பதைக் காட்டுவதற்காகத் தான். இப்போது விஷயத்திற்கு வருவோம்.

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சி, சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார்.

யோவான் 20:19

சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று அவர்களை வாழ்த்தினார்.

அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்.

லூக்கா 24:36-37

பயப்படக் காரணம் என்ன?

மகதலா மேரி பயப்படாமல் ஏசுவைக் காணச் செல்கின்றார். ஆனால் பத்து ஆண் சீடர்கள் பயந்து நடுங்குகின்றார்கள். ஒரு மகதலா மேரி என்ற பெண் நடுங்கவில்லை. அது மட்டுமின்றி பற்று மிகுதியால் அவரைப் பற்றிப் பிடிக்கவும் முனைகிறாள். ஆனால் பக்தி மிகு இந்தப் பத்து சீடர்கள் பயந்து நடுங்கிச் சாகின்றார்களே! ஏன்?

இதற்குப் பெரிய காரணம் ஒன்றுமில்லை. இந்தப் பத்து சீடர்களும் ஏசுவை நட்டாற்றில் விட்டு ஓடியவர்கள் என்று பைபிள் கூறுகின்றது.

அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.

மாற்கு 14:50

அந்தச் சீடர்கள் அனைவருமே ஏசு சிலுவையில் கட்டப்பட்டு இறந்து விட்டார் என்று மட்டும் தான் கேள்விப்பட்டிருந்தார்கள். ஏசு சிலுவையில் ஏற்றப்படும் போது, அவர் சிலுவையிலிருந்து இறக்கப்படும் போது, கல்லறையில் வைக்கப்படும் போது, அங்கிருந்து எழும் போது இவர்கள் ஏசுவுடன் இருக்கவில்லை. அதனால் அவர்கள் ஏசுவை ஆவியாகத் தான் பார்க்கிறார்கள்.

ஆனால் மகதலா மேரியோ ஏசுவை மனிதராகப் பார்த்தாள். காரணம், அவள் இறுதி வரை ஏசுவுடன் இருந்தவள். ஏசு இறக்கவில்லை, கல்லறைக்குள் உயிருடன் தான் இருந்தார் என்பது மகதலா மேரிக்குத் தெரியும். இது தான் சீடர்கள் பயந்ததற்கும், மகதலா மேரி பயப்படாமல் ஏசுவைத் தொட முயன்றதற்கும் காரணம்.