13) அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!

நூல்கள்: இணை கற்பித்தல் ஓர் விளக்கம்

நபிமார்களிலேயே அல்லாஹ் அதிகமாகப் புகழ்ந்து சொல்கின்ற ஒரு நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தான். ஒட்டுமொத்த மக்களிலேயே அவர்களை தான் அல்லாஹ் மிக உயர்ந்த இடத்தில் வைத்து தன்னுடைய நண்பர் எனவும் புகழ்ந்து கூறுகின்றான்.

தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான். (அல்குர்ஆன். 4:125)

இத்தகைய சிறப்புகளைப் பெற்ற இப்ராஹீம் நபியவர்கள் சில விஷயங்களை விரும்பினார்கள். ஆனால் அவர்கள் விரும்பியதையெல்லாம் அல்லாஹ் அவர்களுக்கு நிறைவேற்றி வைக்கவில்லை.

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான்

அல்குர்ஆன். 2:124

அல்லாஹ் அவருக்குப் பல சோதனைகளைக் கொடுத்தான். அதிலும் குறிப்பாக தான் பெற்ற மகனையே அறுத்துப் பலியிடச் சொன்னது தான் உச்சகட்ட சோதனை. அத்தனை சோதனைகளையும் அவர் வென்றதால் அவரை ஒட்டு மொத்த மனித குலத்துக்கே தலைவராகவும் நியமிக்கிறான். நமக்கெல்லாம் ஏகத்துவ இமாமாக நபி இப்ராஹீம் தான் திகழ்கிறார்கள்.

ஏகத்துவத்திற்கு, தவ்ஹீத் கொள்கைக்கு முன்மாதிரியாகவும் அவர்களைத் தான் அல்லாஹ் தேர்வு செய்துள்ளான். இன்றைய முஸ்லிம்கள் நான்கு பிரிவுகளாக பிரிந்து கொண்டு எனக்கு ஷாபி இமாம், எங்களுக்கு ஹனபி இமாம், எங்களுக்கு மாலிக் இமாம், எனக்கு ஹன்பலி இமாம் என ஒவ்வொருவரையும் தலைவர்களாக ஆக்கிக்கொண்டு அவர்களைப் பின்பற்றி வருகிறார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே இப்ராஹீமைப் பின்பற்றுமாறு தான் அல்லாஹ் கூறுகிறான். இத்தகைய சிறப்பைப் பெற்ற இப்ராஹீம் அவர்கள், தன்னை அனைத்து மக்களுக்கும் தலைவராக ஆக்கியதைப் போல், தன்னுடைய மகனையும் தலைவராக ஆக்குமாறு இறைவனிடம் முறையிட்டார்கள். ஆனால் அவர்களுடைய ஆசையை அல்லாஹ் நிறைவேற்றவில்லை. இதைப்பற்றி திருக்குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்.

“எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக)” என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன்: 2:124)

அதேபோல ஏகத்துவத்தை உறுதியான முறையில் சொல்லியும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத தமது தந்தைக்காக இப்ராஹீம் நபி பிரார்த்தனை செய்ததை அல்லாஹ் கண்டிக்கிறான். “நீ என்னுடைய உற்ற நண்பனாக இருக்கலாம். அதை வைத்துக் கொண்டு உன்னுடைய பிள்ளைகளையெல்லாம் தலைவனாக ஆக்க முடியாது. உன்னுடைய தந்தையை மன்னிக்கவும் முடியாது. என்னை ஏற்றுக் கொள்ளாதவனை மன்னிக்குமாறு என்னிடம் நீ எவ்வாறு கேட்கலாம்? நான் போட்ட எல்லையைத் தாண்டி நீ எவ்வாறு அவருக்காக மன்னிப்பு கேட்கலாம்?’ என்று அல்லாஹ் கேட்டவுடன், இப்ராஹீம் நபியவர்கள் பயந்து போய், “யா அல்லாஹ் நான் தெரியாமல் கேட்டு விட்டேன்” என்று பின்வாங்கி விடுகின்றார்கள்.

அதைப் பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்,

இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத்தன்மை உள்ளவர். (அல்குர்ஆன். 9:114)

அதே போல் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இப்ராஹீம். இஸ்ஹாக் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். இந்த இரண்டு மகன்களையும் அவருடைய தள்ளாத வயதில், இனிமேல் நமக்கு குழந்தை பிறக்காது என்று நினைக்கக்கூடிய சந்தர்ப்பத்தில் தான் அல்லாஹ் கொடுத்தான்.

அவர் அல்லாஹ்வின் உற்ற நண்பராக இருந்தார். எல்லா சோதனைகளிலும் வெற்றி பெற்றவராக இருந்தார். அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு செயலையும், சம்பவங்களையும் மார்க்கத்தில் நமக்கு வணக்கமாக்கி வைத்திருக்கிறான். அவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் கூட குழந்தை பாக்கியத்தையும் ஒரு சோதனையாக ஆக்கினான்.

ஒவ்வொரு மனிதனும் தனது இளமைப் பருவத்தில் அல்லது நடுத்தர வயதில் தனக்கு ஒரு சந்ததி வேண்டும் என்று ஆசைப்படுவான். இது போன்ற ஆசை இப்ராஹீம் நபியவர்களுக்கும் இருந்தது. அல்லாஹ்வின் நண்பர் என்பதால் அவர்களது ஆசையை அவர்களாகவும் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. அல்லாஹ்வும் நிறைவேற்றவில்லை. தள்ளாத வயதில் தான் அவர்களுக்கு இஸ்மாயில், இஸ்ஹாக் ஆகிய புதல்வர்களை அல்லாஹ் வழங்கினான்.

லூத் நபியவர்களுடைய சமுதாயம் ஓரினச் சேர்க்கையில் மூழ்கிக் கிடந்த போது அவர்களிடம் சென்று, “நீங்கள் பெண்களிடம் செல்வதற்குப் பதிலாக ஆண்களிடம் உங்களுடைய இச்சையை தீர்த்துக் கொள்கிறீர்களே’ என்று லூத் நபி பிரச்சாரம் செய்கிறார்கள். அம்மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் இருந்ததால் இறைவனிடத்தில் அவர்களை அழித்து விடுமாறு லூத் நபி கோரிக்கை வைத்தார்கள். அப்போது இறைவன் லூத் நபியுடைய கோரிக்கையை ஏற்று அம்மக்களை அழிப்பதற்காக மலக்குமார்களை அனுப்பினான். அப்போது தான் அத்துடன் நபி இப்ராஹீம் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் நற்செய்தியைக் கூறுவதற்காகவும் அம்மலக்குமார்களை அனுப்பினான். இதைப் பற்றி குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்,

அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம். “இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும் போது பிள்ளை பெறுவேனா? இது வியப்பான செய்தி தான்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன்: 11:71), 72)

“நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறினர். “எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்?” என்று அவர் கேட்டார். (அல்குர்ஆன்: 15:53), 54)

“அவர்களைப் பற்றிப் பயந்தார். பயப்படாதீர்!” என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர். உடனே அவரது மனைவி சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக் கொண்டு, “நான் மலட்டுக் கிழவியாயிற்றே” என்றார். (அல்குர்ஆன்: 51:29)

இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன். (அல்குர்ஆன்: 14:39)

ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படக் கூடிய வயதில் ஏன் ஒரு குழந்தையை அல்லாஹ் கொடுக்கவில்லை. எதை விரும்புகிறானோ, எப்போது விரும்புகிறானோ அப்போது செய்யும் அதிகாரம் படைத்த ரப்புல் ஆலமீன் என்பது தான் காரணம்.

இதிலிருந்து நாம் சிந்திக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், அவ்லியாக்களுக்கும், மகான்களுக்கும் குழந்தை தரக்கூடிய பாக்கியம் இருக்குமென்றால் அவர்களை விட உயர்ந்த அந்தஸ்தைப் பெற்ற நபிமார்களுக்கு இருக்குமல்லாவா? அதிலும் குறிப்பாக இறைவனின் உற்ற தோழரான இப்ராஹீம் நபிக்கு இருக்குமா? இல்லையா? அவருக்கு அந்த சக்தி இருந்தால் அவர்கள் ஏன் தள்ளாத வயதில் குழந்தையைப் பெற்றெடுத்தார்கள். அவர்கள் ஆசைப்பட்ட நேரத்தில் குழந்தை பாக்கியத்தைத் தானாகவே உருவாக்கியிருக்கலாமல்லவா? அந்த அதிகாரம் இல்லாததால் தான் இறைவனிடத்தில் முறையிடுகிறார்கள்.

ஆக மொத்தத்தில் எல்லா நபிமார்களுமே மனிதர்களாகத் தான் இருந்தார்கள். மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கவில்லை என்பது விளங்குகின்றது.

அதே போன்று இந்த உலகத்தில் அதிக காலம் வாழ்ந்த மனிதர் யாரென்றால் நபி நூஹ் (அலை) கூறலாம். இதற்குக் குர்ஆனிலேயே ஆதாரம் இருக்கிறது.

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெருவெள்ளம் பிடித்துக் கொண்டது.

(அல்குர்ஆன்: 29:14)

இவ்வாறு பல ஆண்டுகள் பிரச்சாரம் செய்த நூஹ் நபியவர்களுக்கு அவர்களுடைய மனைவியும், மகனும் எதிரிகளாக இருந்தனர். எந்த அளவுக்கென்றால் நூஹ் நபியைக் கேலி செய்வது, தொந்தரவு கொடுப்பது, அவருடைய பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடுவது இது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களில் அவருடைய மகனும் ஒருவனாக இருந்தான்.

அவர்களையே நூஹ் நபியவர்களால் நேர்வழிக்குக் கொண்டு வர முடியவில்லை. இந்தக் கால கட்டத்தில் தான் தன்னுடைய பிரச்சாரத்தை யாரும் ஏற்றுக் கொள்ளாததாலும், தனக்கு மிகப் பெரிய அளவில் தொல்லை கொடுத்ததாலும் அவர்களை அழித்து விடுமாறு இறைவனிடம் முறையிடுகிறார்கள். உடனே இறைவன், “நீ ஒரு கப்பலைத் தயார் செய்து, அதில் நீயும் உன்னை ஈமான் கொண்டவர்களையும், உனது ஊரில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் ஒவ்வொரு ஜோடியை ஏற்றுவீராக!’ என்று இறைவன் கட்டளையிட்டான்.

அவரும் அதன்படி ஒரு மிகப் பிரமாண்டமான கப்பலைத் தயார் செய்தார். பிறகு அல்லாஹ் வானத்திலிருந்து தொடர்ச்சியாக மழையை இறக்குகிறான். பூமியிலிருந்தும் தண்ணிர் பீறிட்டு அடிக்கிறது. கொஞ்சம் வெள்ளம் வந்தவுடன் தன்னுடைய மகனை நோக்கி, “நீயும் இந்தக் கப்பலில் ஏறிக் கொள்’ என்று சொல்கிறார். இந்தச் சம்பவத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் விரிவாகக் கூறுகிறான்,

“(ஏற்கனவே) நம்பிக்கை கொண்டோரைத் தவிர வேறு யாரும் உமது சமுதாயத்தில் (இனிமேல்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருப்பதற்காக நீர் கவலைப்படாதீர்! நமது கண்காணிப்பிலும் நமது கட்டளைப்படியும் கப்பலைச் செய்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்” என்று நூஹுக்கு அறிவிக்கப்பட்டது.

அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். “நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்” என்று அவர் கூறினார்.

“இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்!” (என்றும் கூறினார்)

நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது “ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!” என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்.

“இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறினார்.

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி “அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!” என்று நூஹ் கூறினார்.

“ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை” என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்.

“பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!” என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமானோர் எனவும் கூறப்பட்டது.

நூஹ், தம் இறைவனை அழைத்தார். “என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்” என்றார்.

“நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்” என்று அவன் கூறினான்.

“இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியாவிட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன்” என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன். 11. 37-47

ஒரு நபி தன்னுடைய மகனுக்காகக் கூட இறைவனிடம் பரிந்து பேச முடியவில்லை. அவ்வாறு பரிந்து பேசினால் அது அல்லாஹ்விற்குக் கோபத்தைத் தான் ஏற்படுத்துகிறது. அவன் எல்லாவற்றிற்கும் ஒரு அளவுகோல் வைத்திருக்கிறான். அதை மீறிச் செய்தால் அவன் பொறுத்துக் கொள்ள மாட்டான் என்பதற்கு இவை ஆதாரமாக இருக்கின்றன.

அதே போன்று நூஹ் நபியுடைய மனைவியையும், லூத் நபியுடைய மனைவியையும் அல்லாஹ், கெட்ட பெண்களுக்கு உதாரணமாகக் கூறுகிறான்.

நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான். இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர், எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர், எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை, இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.

(அல்குர்ஆன்: 60:10)

எந்த மனிதனாக இருந்தாலும் தன்னைக் காப்பாற்றுவதற்குப் பாடுபடுவான். தன்னுடைய மனைவி மக்களைக் காப்பாற்றுவதற்காகப் பாடுபடுவான். ஆனால் இந்த வசனத்தில் நூஹ் நபியால் தன்னுடைய மகனுக்காகவும். தன்னுடைய மனைவிக்காகவும் சிபாரிசு செய்ய முடியாத நிலையில் இருப்பதைப் பார்க்கிறோம்.

அப்படியானால் நாம் எப்படி யாரென்றே தெரியாத அவ்லியாக்களிடம் சென்று அவர் சிபாரிசு செய்தால் நாம் சொர்க்கத்திற்குச் சென்று விடலாம் என்று எவ்வாறு சொல்ல முடியும்? அவரும் நம்மைப் பார்த்தது கிடையாது; நாமும் அவரைப் பார்த்தது கிடையாது. அவருக்கும் நமக்கும் எந்த நட்பும் கிடையாது. இந்த நிலையில் அவரிடம் எப்படி நாம் நமக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யச் சொல்ல முடியும்? அப்படியே அவர்கள் அவ்லியாக்களாக இருந்தாலும், எவ்வளவு பெரிய நல்லடியார்களாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தானே தவிர அல்லாஹ்வின் அதிகாரம் பெற்றவர்கள் அல்லர் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதே போன்று நமக்கெல்லாம் முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் அனுப்பப்பட்டவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான். மனிதகுலம் அனைவருக்கும் மறுமை நாள் வரைக்கும் அனைத்து மொழி பேசக்கூடியவர்களுக்கும், நபியாக அனுப்பப்பட்டார்கள்.

(முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.

(அல்குர்ஆன்: 21:107)

(முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 34:28)

அதுமட்டுமல்லாமல் மறுமை நாளில் மற்ற எல்லோரையும் விட புகழப்பட்ட இடத்தில் உன்னை நான் எழுப்புவேன் என்றும் இறைவன் கூறுகிறான். இப்படிப்பட்ட சிறந்த அந்தஸ்தைப் பெற்றவர்கள் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

(முஹம்மதே!) உமக்கு உபரியாக இருக்கும் நிலையில் இரவில் இதன் மூலம் (குர்ஆன் மூலம்) தஹஜ்ஜுத் தொழுவீராக! புகழப்பட்ட இடத்தில் உமது இறைவன் உம்மை எழுப்பக் கூடும்.

அல்குர்ஆன் 17. 79

மறுமை நாளில் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யக் கூடிய சிறப்பை அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் வழங்கியிருக்கிறான். இப்படிப்பட்ட சிறப்பைப் பெற்ற நபியவர்களுக்கு இவ்வுலகத்தில் உள்ள மக்களின் வறுமையைப் போக்குவதற்கோ, கவலை மற்றும் நோயைத் தீர்ப்பதற்கோ குழந்தை பாக்கியத்தை அளிப்பதற்கோ எந்த ஒரு அதிகாரத்தையும் வழங்கவில்லை என்பதை குர்ஆனிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

“என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். உங்கள் கண்கள் இழிவாகக் காண்போருக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன்”

அல்குர்ஆன். 11:31

நான் அல்லாஹ்வால் நபியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன் என்று மக்களிடம் சொல்லும் போது இந்தக் கருத்தையும் சேர்த்தே சொல்லுங்கள் என்று நபியவர்களிடம் இறைவன் கூறுகின்றான். ஏனென்றால் உம்மைக் கடவுள் என்றோ, அல்லது அல்லாஹ்வின் அதிகாரம் படைத்தவர் என்றோ அந்த மக்கள் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு சொல்லச் சொல்கிறான்.

“நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக!

அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 72:21), 22

என்னையும், என்னுடன் உள்ளவர்களையும் அல்லாஹ் அழித்தால் அல்லது எங்களுக்கு அருள் புரிந்தால் துன்புறுத்தும் வேதனையிலிருந்து (ஏக இறைவனை) மறுப்போரைக் காப்பவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 67:28)

இதையெல்லாம் அல்லாஹ் சொல்லச் சொல்வதன் நோக்கம் அவர்கள் தங்களுக்கென பதவியை உண்டாக்கிக் கொள்வதற்கோ, தன்னை வணங்கக்கூடிய கூட்டத்தை உண்டாக்கிக் கொள்வதற்கோ, தங்களிடம் பிரார்த்தனை செய்யக்கூடிய கூட்டத்தை உண்டாக்கிக் கொள்வதற்கோ, அவர்களுக்கு நேர்ச்சை செய்யக்கூடிய கூட்டத்தை உண்டாக்கிக் கொள்வதற்கோ வரவில்லை. மாறாக இவை அனைத்தையும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும். அவன் தான் அனைத்து அதிகாரமும் படைத்தவன் என்று சொல்வதற்காகத் தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு மத்தியில் சொன்னார்கள். அவ்வாறு சொல்லும் போது மார்க்கத்தில் வளைந்து கொடுக்கக்கூடிய அளவுக்கு சில பேரங்கள் அவர்களிடத்தில் பேசப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் சில நேரங்களில் மனதில் சிறிது சலனம் ஏற்பட்டிருக்கிறது என்பதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

(முஹம்மதே!) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்கா விட்டால் அவர்களை நோக்கிச் சிறிதேனும் நீர் சாய்ந்திருப்பீர்! அவ்வாறு நீர் செய்திருந்தால் வாழும் போது உமக்கு இரு மடங்கும், மரணிக்கும் போது இரு மடங்கும் வேதனையை சுவைக்கச் செய்திருப்போம். பின்னர் நம்மிடம் உமக்காக எந்த உதவியாளரையும் காண மாட்டீர்.

(அல்குர்ஆன்: 17:74), 75

நபிமார்கள் அனைவரும் அவ்லியாக்களுக்கெல்லாம் சிறந்த அவ்லியாக்கள் என்பதில் யாருக்கும் எள்ள்ளவும் சந்தேகம் இல்லை. அவர்களுக்குப் பல படித்தரங்களையும், சிறப்புகளையும் அல்லாஹ் வழங்கியிருக்கிறான். நம்மில் யாருக்கும் கிடைக்காத பல அந்தஸ்துகளை மறுமை நாளில் அவர்களுக்கு வழங்க இருக்கிறான் என்றாலும் எந்தப் பிரச்சனைக்காவது முடிவெடுக்கக்கூடிய அதிகாரத்தை வழங்கியிருக்கிறானா? என்பது தான் இந்த வசனங்களில் சொல்லப்படுகின்றது.

“அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

அல்குர்ஆன் 10. 49

நல்ல விஷயமாக இருந்தாலும், கெட்ட விஷயமாக இருந்தாலும் எனக்கே நான் எதுவும் செய்ய முடியாது எனும் போது எப்படி உங்களுக்குச் செய்ய முடியும்?

என்னுடைய வறுமையை நான் போக்கிக் கொள்ள முடியாது. என்னுடைய நோயை நான் போக்கிக் கொள்ள முடியாது. எனக்குக் குழந்தை பாக்கியம் வேண்டுமென்றால் என்னால் உண்டாக்கிக் கொள்ள முடியாது. என்னுடைய வேலை வாய்ப்பை நான் உருவாக்கிக் கொள்ள முடியாது. என்னுடைய பட்டம். பதவி, புகழ் எதையும் நானாக உருவாக்கிக் கொள்ள முடியாது. இவை அனைத்தையும் எனக்கே நான் செய்ய முடியாது எனும் போது எப்படி பிறருக்குச் செய்ய முடியும் என்று அல்லாஹ் சொல்லச் சொல்கிறான்.

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்

(அல்குர்ஆன்: 10:107)

அல்லாஹ் உமக்கு துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன்: 6:17)

“அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 7:188)

அல்லாஹ்வின் அதிகாரத்தில் நபிமார்கள் உட்பட யாரும் தலையிட முடியாது என்பதைப் பார்த்து வருகிறோம். முஹம்மத் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிட முடியாது என திருக்குர்ஆன் தெளிவாகத் தெரிவிக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் மூலமாகவே இதை அல்லாஹ் அறிவிக்கச் சொல்கிறான்.

நானும் உங்களைப் போல மனிதன் தான் என்பதையும், எனக்கும் உங்களைப் போல மறைவானதை அறிய முடியாது என்பதையும் அல்லாஹ் அந்த மக்களுக்கு புரிய வைக்கச் சொல்கிறான்.

ஈஸா நபி முதல் அதற்கு முந்தைய ஒவ்வொரு நபிமார்களையும் கடவுளாக ஆக்கிவிட்டார்கள். அந்த நிலை உங்களுக்கும் வரக்கூடாது என்றால், உங்களைப் பற்றியே நீங்கள் எச்சரிக்கை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதாக அல்லாஹ் சொல்கின்றான்.

“அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன். 7:188

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தமக்கே ஏதாவது செய்ய முடியுமா? செய்ய முடியாதா? என்பது இரண்டாவது விஷயம். மறைவானது ஒருவருக்கு தெரிந்திருந்தால் தான் இதையெல்லாம் செய்ய முடியும்.

எனக்கு ஒரு துன்பம் வரப் போகின்றது என்பது மறைவான விஷயம். நாளைக்கு என்னை ஒருவன் கொல்லப் போகின்றான் என்றால் அது மறைவான விஷயம். ஆனால் அதே நேரத்தில் என் கண் முன்னால் என்னைக் கொல்ல வருவது மறைவான விஷயம் அல்ல. அவன் நாளை என்னைக் கொல்ல வருவது எனக்கு இன்றைக்கே தெரிந்திருந்தால், என்னைக் கொல்வதற்கு இன்னின்ன திட்டங்களை தீட்டியிருக்கிறான், இன்னின்ன தயாரிப்போடு இருக்கிறான் என்று எனக்கு தெரிந்திருந்தால் என்னை அவன் கொல்ல முடியுமா? அவன் என்னைக் கொல்வதிலிருந்தும் தப்பித்து விடுவேன்.

ஆக ஒரு மனிதனுக்கு மறைவான விஷயங்கள் தெரிந்து விட்டால் அவனுக்கு எந்த ஒரு கஷ்டமுமே வராது. நாம் நம்முடைய வீட்டில் இருக்கிறோம். அவ்வாறு இருக்கும் போது இந்த வீடு இன்னும் சிறிது நேரத்தில் இடிந்து விழும் என்று நமக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் நாம் அந்த வீட்டில் இருப்போமா? அந்த இடத்தை விட்டே நாம் ஓடிவிடுவோம். இந்த மறைவான ஞானம் உலகில் உள்ள அனைவருக்கும் இருந்திருந்தால் இதுவரைக்கும் நடந்த நிலநடுக்கங்களில் யாராவது இறந்திருப்பார்களா? சுனாமிப் பேரலையில் சிக்கி யாராவது மரணமடைந்திருப்பார்களா? வாகன விபத்துக்களில் சிக்கி உயிரிழந்திருப்பார்களா? அவ்வாறு மறைவான ஞானம் இருந்தால் இயற்கை மரணத்தைத் தவிர வேறு விதமான உயிரிழப்புகளே ஏற்பட்டிருக்காது. ஆக நாளை நடப்பதை ஒருவன் அறிந்திருந்தால் அவனுக்கு எந்தக் கஷ்டமும் ஏற்பட்டிருக்காது.

இவ்வாறு தான் அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சொல்லச் சொல்கிறான்.

நீங்கள் அடிப்பதை நான் வாங்கிக் கொள்கிறேன். இரத்தம் சொட்டச் சொட்ட ஊரை விட்டு அடித்து விரட்டினீர்கள். ஓடத் தான் செய்தேன். தாயிப் நகரை விட்டு அடித்துத் துரத்தினீர்கள். கல்லை எறிந்தீர்கள், நான் நடக்கும் பாதையில் முள்ளை வைத்தீர்கள். நான் தொழுது கொண்டிருக்கும் போது ஒட்டகக் குடலை என் மீது போட்டீர்கள். என்னால் ஏதாவது செய்ய முடிந்ததா? இப்படியெல்லாம் என்னை சித்ரவதை செய்வீர்கள் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால் நான் இந்த சிரமத்தைத் தேடி வந்திருப்பேனா? இவை அனைத்தையும் விட்டும் நான் தப்பித்திருப்பேனல்லவா?

நான் உங்களைப் போல மனிதன் தான். மறைவானதையெல்லாம் அறியக் கூடிய சக்தி எனக்கு கிடையாது என்பதை அழைப்புப் பணி செய்யும் போது சேர்த்தே சொல்லச் சொல்கிறான்.

எனக்கும் எவ்வளவோ கஷ்டங்கள் வருகின்றன. அதை நீங்களும் பார்க்கத் தான் செய்கறீர்கள். இந்தக் கஷ்டங்கள் நானும் ஒரு மனிதன் தான் என்பதைக் காட்டவில்லையா? இந்தக் கஷ்டங்கள் உங்களிடமிருந்து வரும் என்பதை நான் முன் கூட்டியே அறிந்திருந்தால் இந்தக் கஷ்டங்களை நான் அடைந்திருப்பேனா? நீங்கள் என்னென்ன திட்டம் தீட்டியிருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியாது. நீங்கள் நாளை என்னை என்ன செய்வீர்கள் என்றும் எனக்குத் தெரியாது என்று நபிகளாரை சொல்லச் சொல்கிறான்.

ஒருவன் நாளை என்ன நடக்கும் என்பதை அறிபவனாக இருந்தால் அவன் நல்லதை மட்டுமே அடைவான். கெட்டது ஒன்றுமே வராது. உதாரணமாக நாம் ஒரு வியாபாரம் நடத்தி வருகிறோம். அந்த வியாபாரம் 10 வருடங்களுக்குப் பின் எந்த நிலையை அடையும் என்பதை நாம் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தால், அதாவது 10 வருடங்களுக்குப் பின் நஷ்டமடைந்து விடும் என்பதை நாம் அறிந்து வைத்திருந்தால் நாம் என்ன செய்வோம்? லாபம் வரும் வரைக்கும் வியாபாரம் நடத்திவிட்டு 10வது வருடத்தில் வியாபாரத்தை விட்டு விடுவோம். அப்போது நமக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது. ஆக நமக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் நமக்கு எவற்றிலெல்லாம் லாபம், நன்மை இருக்குமோ அதை மட்டும் அடைந்து கொள்வோம். எவற்றிலெல்லாம் நஷ்டம், தீமை இருக்குமோ அவற்றை விட்டும் விலகிக் கொள்வோம்.

இந்த மாதிரி நன்மையை மட்டும் அடைந்து, தீமையை விட்டும் விலகியவனாக நான் இருந்தேனா? என்று மக்களிடம் கேட்குமாறு அல்லாஹ் நபிகளாரைப் பார்த்துச் சொல்கிறான்.

நபி (ஸல்) அவர்களுடன் இருந்த மக்கள் அவ்வாறு நினைக்காவிட்டாலும் கியாம நாள் வரை உள்ள மக்களுக்கு, அதாவது யாரெல்லாம் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குகிறார்களோ, அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுகிறார்களோ அந்த மக்களுக்கு அறிவுரையாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக இதை சொல்லச் சொல்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாக இருந்தாலும், அவர்களுக்கும் கஷ்டங்கள் வருவதற்குக் காரணம், அந்தக் கஷ்டங்களைத் தடுக்க முடியாமல் போனதற்குக் காரணம் அவர்கள் மறைவானதை, நாளை நடப்பதை, அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை அறியாமல் இருந்தது தான்.

“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று கூறுவார்கள். “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!” என்று கேட்பீராக! “அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடினால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுப்பவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன். 39:38)

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பாகப் பல விஷயங்களை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வஹீயை இறக்குகிறான். அவர்கள் மீது அல்லாஹ் அதிகம் அன்பு வைத்திருக்கிறான். அருள் நிறைந்தவனாக இருக்கிறான் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. மறுமையில் அவர்களுக்கு எவ்வளவு பெரிய அந்தஸ்தைக் கொடுக்க இருக்கிறான், அவர்களை எவ்வளவு பெரிய உயர்வான இடத்தில் வைத்திருக்கிறான் என்பதையெல்லாம் நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.

அந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் கடுமையாக எச்சரிப்பதைப் பாருங்கள்.

சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக்கட்டியிருந்தால் வலது கையால் இவரைத் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம். உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர்.

அல்குர்ஆன். 69:44-47

நான் இந்த முஹம்மதுக்கு குர்ஆனைக் கொடுத்திருக்கிறேன். இதில் அவராக தன்னுடைய இஷ்டத்துக்கு எதையும் சேர்க்க மாட்டார். அவ்வாறு ஏதாவது ஒன்றைச் சேர்த்து விட்டாலும் நம்முடைய தூதர் தானே, நமக்கு வேண்டிய ஆள் தானே என்று விட்டு விட மாட்டேன் என்று இந்த வசனத்தில் சொல்கிறான்.

எந்த நபியாக இருந்தாலும் சரி தான்; என்னுடைய எல்லைக்குள் யாரும் வரமுடியாது. மனிதன் மனிதனாகத் தான் இருக்க வேண்டும். என்னுடைய அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது; தலையிடவும் கூடாது என்றெல்லாம் அல்லாஹ் நமக்குச் சொல்வதற்குக் காரணம் மனிதனின் எல்லை என்பதை நமக்குப் புரிய வைப்பதற்காகத் தான். நமது எல்லை என்ன என்பதைப் புரிந்தால் தான் நாம் அவ்லியாக்களை வணங்க மாட்டோம். அவர்களிடம் உதவி தேடமாட்டோம். அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம். அவனையே சார்ந்திருப்போம்.

தூதரைக் கண்டித்த தூயோன் அல்லாஹ்

சில சந்தர்ப்பங்களில் இறைவனின் வஹீ வருவதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக சில முடிவுகளை எடுத்தனர். இவ்வாறு எடுத்த போது இறைவனே கண்டித்து திருத்தியுள்ளதையும் குர்ஆனில் நாம் காண முடியும். சில சந்தர்ப்பங்களில் இறைவனிடமிருந்து வந்த (வஹீ) செய்திக்கு முரணாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில முடிவுகளை எடுத்தனர். இவ்வாறு எடுத்த போதும் இறைவன் கண்டித்துள்ளான்.

தேனை இறைவன் நமக்கு ஹலாலாக்கியுள்ளான். அல்லாஹ் திருமறைக்குர்ஆனில் தேனைப்பற்றி சொல்லும் போது,

“மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!” என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது.

அல்குர்ஆன். 16:68, 69

ஆனால் தமது மனைவியின் மீதுள்ள கோபம் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இனி தேன் சாப்பிட மாட்டேன் என்று கூறி, தம் மீது தேனை ஹராமாக்கிக் கொண்டார்கள். ஆனால் இறைவன் இதைக் கண்டித்துத் திருத்துகிறான். அந்தச் சம்பவம் இதோ:

நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (அவர்களது அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். ஆகவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் “நபி (ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்” என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம். எங்களில் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவு தான். சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்ய மாட்டேன்” என்று கூறினார்கள். ஆகவே, “நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?” என்று தொடங்கி “நீங்கள் இருவரும் – இதற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)” என முடியும் (66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),(புகாரி: 5267)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தேனை ஹராமாக்கியதை யாருக்கும் அறிக்கவில்லை. யாரும் தேனை சாப்பிடாதீர்கள் என்று உத்தரவு போட்டதும் கிடையாது. தான் சாப்பிட மாட்டேன் என்று தான் தமக்குத் தாமே அதைத் தடை செய்து கொண்டார்கள். இது உலகத்திற்கே தெரியாத ஒரு இரகசியமான விஷயம் தான். அல்லாஹ் கண்டித்ததால் தான் நமக்குத் தெரிகிறதே தவிர அல்லாஹ் சொல்லவில்லையென்றால் நமக்குத் தெரியுமா? தெரியாது.

தன்னுடைய தூதர் தானே என்று கூட பார்க்காமல் தம்மைக் கண்டித்ததை மறைத்து விடாமல் நமக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை வெட்ட வெளிச்சமாக ஆக்கி விட்டான். கண்டிக்கும் அந்த வசனத்தை தம்முடைய வாயினாலேயே உலக மக்களுக்குச் சொல்லவும் வைக்கிறான்.

நபியின் விருப்பமும் நாயனின் கண்டனமும்

இன்றைக்குச் சிலர் மார்க்கத்தில் நன்மையைக் கருதி பல விஷயங்களில் வளைந்து கொடுப்பதை நாம் பார்க்கலாம். இதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்திலும் நடந்துள்ளது.

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் ஒரு சபையில் வைத்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத ஒரு பிரமுகரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கண் தெரியாத குருடர் ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொல்கின்றார். நபி (ஸல்) அவர்கள் அதைக் காதில் வாங்கியும் கண்டும் காணாதவர்களாக, அவர்களுக்குப் பதில் கூறாமல் முகம் சுளித்தவர்களாக திரும்பிக் கொண்டு அந்தப் பிரமுகரிடம் பேச்சைத் தொடர்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களை எதிர்த்தவர்களில் பெரும்பாலோர் நபியவர்கள் கூறுவது உண்மை என்பதை உள்ளூர அறிந்து வைத்திருந்தார்கள். ஆனாலும் தாழ்ந்த நிலையில் உள்ள மக்களையும் உயர்ந்த நிலையில் உள்ள தங்களையும் இவர் சமமாக நடத்துகிறாரே என்பது தான் உண்மையை அவர்கள் ஒப்புக் கொள்வதற்குத் தடையாக அமைந்தது. எனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் இவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும், தங்களையும் சமமாக நடத்தாமல் தங்களுக்குத் தனி மரியாதை அளித்தால் இஸ்லாத்தை ஏற்பதில் தங்களுக்குப் பிரச்சனை இல்லை என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின் இந்த மனநிலையை மாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் நபி (ஸல்) அவர்களும் இதில் சற்று உடன்பட்டார்கள். ஆனால் இறைவனுக்கு இது பிடிக்கவில்லை. இதைக் கண்டித்து கீழ்க்கண்டவாறு அறிவுரை கூறினான்.

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது. (அல்குர்ஆன்: 18:28)

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். (அல்குர்ஆன்: 80:1-10)

இறைநேசர்கள் என்றால் அவர்களுக்கு எல்லா அதிகாரமும் இருக்கின்றது. அவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எந்தச் சோதனையிலிருந்தும் காப்பாற்றி விடலாம்; நாம் தவறு செய்து விட்டால் கூட அல்லாஹ்விடம் அவர் பரிந்து பேசி, நமக்கு சொர்க்கத்தை வாங்கித் தந்து விடுவார் என்றெல்லாம் மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இறைநேசருக்கெல்லாம் பெரிய இறைநேசரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உலகத்தில் வாழும் போது அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த அதிகாரம் என்ன? என்பதைத் தெளிவாக விளக்கக்கூடிய சம்பவம் உஹதுப் போரில் நடந்த சம்பவம். அந்த உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்கள் செய்த ஒரு செயலை அல்லாஹ் கடுமையாகக் கண்டிக்கிறான்.

வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அதிகாரம்

உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பற்கள் உடைக்கப்பட்டு, அதன் காரணமாக அவர்களின் முகத்தில் இரத்தம் வடிந்த போது, “நபியின் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெற்றி பெற இயலும்?” என்று நபி (ஸல்) அவர்கள் சபித்தனர். ஆனால் நடந்தது என்ன? அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இறைவன் கூறிவிட்டான். மேலும் உஹதுப் போரில் எதிரிகளுக்கு வெற்றியையும் வழங்கினான். முஸ்லிம்களின் தரப்பில் பெரிய சேதத்தையும் ஏற்படுத்தினான்.

உஹதுப் போரில் அவர்களின் பல் உடைந்த போது, எதிரிகள் எப்படி உருப்படுவார்கள்? என்று கோபப்பட்டார்கள். (முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள். (3:128) என்ற வசனம் இறங்கியது

இந்தச் சம்பவம் முஸ்லிமில் 3346வது செய்தியாக இடம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த வார்த்தையை யாரையும் சபிப்பதற்காகச் சொல்லவில்லை. தனக்கு ஏற்பட்ட காயத்தின் வேதனையைத் தாங்க முடியாமல் இந்த வார்த்தையைச் சொல்லி விடுகிறார்கள். ஆனாலும் அல்லாஹ் இதனை அனுமதிக்கவில்லை.

முஹம்மது, என்னுடைய செய்தியை எடுத்துச் சொல்பவராக இருந்தாலும் சரி தான், எனக்கு விருப்பமானவராக இருந்தாலும் சரிதான். என்னுடைய அதிகாரத்தில் யாரும் பங்காளியாக – கூட்டாளியாக முடியாது. எதிரிகளைத் தோற்கடிப்பதா? வெற்றி பெற வைப்பதா என்பதைத் தீர்மானிப்பது உம்முடைய கையில் இருக்கிறதா? அவர்கள் உம்மை அடித்துக் காயப்படுத்தியதால் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என்பதை நீர் தீர்மானிக்கக் கூடியவரா? என்று அல்லாஹ் கடுமையாகக் கண்டிப்பதை நாம் பார்க்கிறோம்.

இங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட துன்பத்தின் தன்மையை அல்லாஹ் பார்க்கவில்லை. அவர்கள் பயன்படுத்திய வார்த்தையைத் தான் பார்க்கிறான். “இவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படிக் கூறலாம்? ஒருவரை வெற்றி பெற வைப்பதும், தோற்க வைப்பதும் எனது அதிகாரமல்லவா? அதில் எப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலையிடலாம் என்று உணர்த்திடவே “அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை” எனக் கூறுகிறான்.

நம்முடைய நேசராயிற்றே! உயிர் போகும் அளவுக்கு வேதனைப்படுகிறாரே! அந்த நேரத்தில் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டுமே என்றெல்லாம் அல்லாஹ் விட்டுவிடவில்லை. எந்த நேரத்திலும் அடிமைகள், அவர்களின் நிலைக்கு ஏற்ற வார்த்தைகளைத் தான் பேச வேண்டுமே தவிர அல்லாஹ்வுக்கே உரித்தான வார்த்தைகளைப் பேசக் கூடாது என்று கற்றுத் தருகிறான்.

என்னுடைய அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் கிடையாது. நான் நினைத்தால் அவர்களுக்கு நேர்வழியை வழங்கி அவர்களை மன்னிப்பேன். அவர்களைத் தண்டிப்பதும் அவர்களை மன்னித்து விடுவதும் என்னுடைய கையில் உள்ளது. உம்மை அடித்ததற்காக நீர் என்னிடம் பாதுகாப்பு தேடியிருக்கலாம்; உதவி தேடியிருக்கலாம். அவ்வாறு இல்லாமல் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என்று சொல்கின்ற அதிகாரத்தை உமக்கு வழங்கவில்லை என்று கடுமையாகக் கண்டிக்கிறான்.

இதுபோன்ற வார்த்தைகளைக் கூட சொல்லக்கூடாது என்று தூதரையே இறைவன் கண்டித்திருக்கும் போது, இந்த அவ்லியா குழந்தையைத் தருவார், செல்வத்தைத் தருவார், நமது பிரச்சனைகளையெல்லாம் தீர்ப்பார், நோய்களைக் குணப்படுத்துவார், நிம்மதியைத் தருவார் என்று நாம் எப்படி சொல்ல முடியும். இது அவனுடைய அதிகாரத்தில் நாம் தலையிடுவதாக இல்லையா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே இந்த ஆற்றலை, அதிகாரத்தைக் கொடுக்காத போது, நாம் யாரையெல்லாம் அவ்லியாக்கள், மகான்கள் என்று நினைத்திருக்கிறோமோ அவர்களுக்கு எப்படிக் கொடுப்பான்? நபி (ஸல்) அவர்களுடைய கால் தூசுக்குச் சமமாகாத இந்த அவ்லியாக்களுக்கு எப்படி தனது அதிகாரத்தில் பங்கு கொடுப்பான்?

நபிகள் நாயகம் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எந்த விதத்திலும் சமமாகாத, இறந்தவர்களிடம் நாம் நமது தேவைகளைக் கேட்கிறோம். நேர்ச்சை செய்கிறோம். மன அமைதிக்காக அங்கேயே படுத்து உறங்குகின்றோம். அவர்களுடைய அடக்கத்தலங்களை கஅபாவை தவாஃப் செய்வது போன்று சுற்றி சுற்றி வருகிறோம்.

கோயில்களில் தெய்வங்களைத் தேர்களில் வைத்து ஊர்வலம் வருவதைப் போல, நாமும் சந்தனக்கூட்டை வைத்துக் கொண்டு விழா எடுத்து வருகின்றோம். கடவுளாக அவர்களை நினைத்து வழிபட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம் சிந்திக்க வேண்டாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இந்த வார்த்தையைச் சொல்வதற்கே அனுமதிக்கவில்லை எனும் போது, நாம் ஒருவரைப் பார்த்து, இவர் அவ்லியா என்றோ, அவர் நமக்கு நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வார் என்றோ சொல்வதற்கு நமக்கு அல்லாஹ் அனுமதிப்பானா? அதனைச் சகித்துக் கொள்வானா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நேர்வழிப்படுத்தும் அதிகாரம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர் அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் தான். நபிகளாரை எடுத்து வளர்த்ததும் அவர் தான். நபிகளார், தாயின் வயிற்றில் இருக்கும் போதே அவர்களுடைய தந்தை இறந்து விடுகின்றார்கள். எட்டு வயதில் தாயும் இறந்து விடுகின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனாதையாக ஆனவுடன் அவர்கள் பாட்டனார் அப்துல் முத்தலிபுடைய பராமரிப்பில் தான் வளர்ந்தார்கள். அதற்குப் பிறகு அபூதாலிப் அவர்கள் நபிகள் நாயகத்தைத் தம்முடைய பராமரிப்பில் எடுத்து வளர்க்கிறார்கள். இப்படி அவர்களை வளர்த்து ஆளாக்கி, வியாபாரத்தைக் கற்றுக் கொடுத்து, அவர்களை செல்வந்தராக ஆக்கி, நல்ல நிலைக்குக் கொண்டு வந்தவர் தான் அபூதாலிப்.

அந்தச் சமூகத்தில் நபிகளாருடைய குலம் தான் மிகப் பெரிய அந்தஸ்து உடையது. குரைஷிக் குலத்தினர் தான் மிக உயர்ந்த ஜாதியினராக – அந்தஸ்து உடையவர்களாகக் கருதப்பட்டனர். அந்தக் குலத்தின் முக்கியமான பிரமுகராக அபூதாலிப் அவர்கள் இருந்ததால் நபிகளார் மீது யாரும் கை வைக்கவில்லை. அவர்கள் உயிரோடு இருக்கும் வரை, நபியவர்களை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களை மட்டுமே மக்கா காஃபிர்கள் வேதனை செய்தார்கள்; துன்புறுத்தினார்கள். ஆனால் நபியவர்கள் மீது கை வைப்பதற்குப் பயந்தார்கள்.

அபூதாலிப் மரணமடைந்த பிறகு தான் நபி (ஸல்) அவர்கள் மீது கை வைக்கத் துணிந்தார்கள்; தைரியம் பெற்றார்கள்; அவர்களை அடிக்கத் திட்டமிட்டார்கள். அந்த அளவுக்கு அபூதாலிபிற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்றிக் கடன்பட்டிருந்தார்கள்.

மரண வேளையில், கட்டிலில் படுத்த படுக்கையாக அபூதாலிப் கிடக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம் அறிவுரை சொல்வதற்காக வருகிறார்கள். அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டு “நீங்கள் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். நான் அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக சிபாரிசு செய்கிறேன். நீங்கள் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நான் ஏதாவது அல்லாஹ்விடத்தில் உங்களுக்காகப் பரிந்து பேச முடியும். இந்தக் கொள்கையை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நான் அவனிடத்தில் வாய் திறக்க முடியாது’ என்று கூறுகிறார்கள்.

இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போது நபியவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்த அபூஜஹ்ல், அபூதாலிபே! உன்னுடைய அப்பன் பாட்டன்மார்கள் இருந்த கொள்கையை விட்டு விட்டுப் புதிய கொள்கைக்குப் போய்விடப் போகிறீரா? முன்னோர்களுடைய மார்க்கம் வேண்டுமா? அல்லது பிள்ளைகளுடைய மார்க்கம் வேண்டுமா? என்று சொல்லி அவருடைய மனதில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டான்.

கடைசி வரைக்கும் நபிகளாருடைய பேச்சு எடுபடாமல் போனது. இறுதியில் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்னை வற்புறுத்தாதே! நான் என்னுடைய அப்பன் பாட்டன்மார்களுடைய மார்க்கத்திலேயே இருந்து விடுகிறேன்’ என்று சொல்லிவிடுகிறார். இறுதியில் இணைவைத்த நிலையிலேயே இறந்து விடுகிறார். நபியவர்களுக்கு இவ்வளவு பக்கபலமாக இருந்தும், அவர்களுக்கு ஆதரவாக இருந்தும் சத்திய மார்க்கம் அவருடைய உள்ளத்தைச் சென்றடையவில்லை. இதோ அந்தச் சம்பவம்:

முஸய்யப் பின் ஹஸ்ன் பின் அபீ வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி (ஸல்) அவர்கள், “என் பெரிய தந்தையே! “லா இலாஹ இல்லல்லாஹ்‘ – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை‘ என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை (நீங்கள் சொல்லி விட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்” என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், “அபூதாலிபே! (பெரியவர், உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், “(என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்)” என்று அவர்களிடம் சொன்னார். எனவே, நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவேன்; (அவ்விதம் பாவ மன்னிப்புக் கோரக் கூடாது என்று) எனக்குத் தடை விதிக்கப்படும் வரை” என்று சொன்னார்கள். அப்போது தான், “இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது தெளிவாகிவிட்ட பின்பும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர்களாயிருந்தாலும் கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை” என்னும் (9:113) திருக்குர்ஆன் வசனமும், “(நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்களால் நேர்வழியில் செலுத்தி விட முடியாது” என்னும் (28:56) திருக்குர்ஆன் வசனமும் அருளப்பட்டன.

(புகாரி: 3884)

அபூதாலிப் இஸ்லாத்தை ஏற்காமலேயே இறந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள். நாம் யார் யாருக்கெல்லாமோ இஸ்லாத்தை எடுத்துரைத்தோம். அவர்களெல்லாம் இஸ்லாத்தில் நுழைந்து விட்டார்கள். ஆனால் நம்முடன் நகமும் சதையுமாக இருந்து, ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து, நமக்கு எல்லா உதவிகளையும் செய்த, நம்முடைய எல்லா விஷயங்களையும் அறிந்த நம்முடைய பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லையே என்று கவலை அடைந்தார்கள்.

அந்த நேரத்தில் தான் இந்த வசனத்தை (28:56) அல்லாஹ் இறக்குகிறான். நீர் தூதராக அனுப்பப்பட்டிருக்கிறீர். உம்முடைய பணி எடுத்துச் சொல்வது மட்டும் தான். உள்ளத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பது உம்முடைய பணி அல்ல. நீர் சொன்னதால் மட்டுமே அவர் நேர்வழிக்கு வந்து விடுவாரா? நான் நாடியவருக்கு நேர்வழி காட்டுவேன். உம்முடைய பெரிய தந்தையாக இருக்கலாம். அதற்காக அவருக்கு நேர்வழி காட்டிவிட மாட்டேன். அதே நேரத்தில் உம்மைக் கொல்வதற்கு ஒருவன் வருவான். அவனுக்கு நான் நேர்வழி காட்டுவேன். ஒருவரை நேர்வழிக்குக் கொண்டு வருவதும், அவரை வழிகேட்டில் விடுவதும் என்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டது. இதற்காக நீர் ஏன் கவலைப்பட வேண்டும்? என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அடுத்ததாக, நான் உங்களுக்காக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கோருவேன் என்று தம்முடைய பெரிய தந்தைக்கு நபி (ஸல்) அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்களே அதனையும் கண்டித்து அல்லாஹ் வசனத்தை (9:113) இறக்குகிறான். இணை வைத்தவர்களுக்காகப் பாவமன்னிப்பு தேடக்கூடாது என்று நான் தடுத்து வைத்திருக்கிறேன். இப்ராஹீம் நபியே அவருடைய தந்தைக்காகப் பாவமன்னிப்பு தேடிய போது அதைத் தடுத்திருக்கிறேன். அப்படி இருக்கும் போது நீர் எவ்வாறு உம்முடைய பெரிய தந்தைக்காகப் பாவமன்னிப்பு தேடுவதாக வாக்குறுதி கொடுக்கலாம்? என்று இறைவன் கூறுகிறான்.

எதற்காக அல்லாஹ் இந்தச் சம்பவத்தை நமக்குச் சொல்கிறான்? ஏன் இந்தக் கண்டனத்தைப் பதிவு செய்கிறான்? எதற்காக இந்தச் செய்தியை வரலாற்று நூல்களில் அல்லாஹ் பாதுகாத்து வைத்திருக்கிறான் என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா? நபியாக இருந்தாலும் அவரால் ஒருவனுக்கு நேர்வழி காட்ட முடியாது. இறைவனால் மட்டுமே நேர்வழி காட்ட முடியும் என்பதை உணர்த்துவதற்காகத் தான்.

ஷெய்கு பார்த்தாலே நேர்வழி கிடைக்குமா?

இன்றைக்கு ஷெய்கு, முரீது என்று சொல்லிக் கொண்டு திரிகின்றார்கள். அவர் பார்த்தாலே நமக்கு நேர்வழி கிடைத்து விடும் என்று சொல்கிறார்கள். ஷெய்கு நமக்கு அறிவுரை சொன்னால் போதும்; அதைக் கேட்டாலே நம்முடைய உள்ளத்தில் நேரடியாகப் போய் பதிந்து, நாம் நேர்வழி பெற்று விடுவோம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தமது பெரிய தந்தையிடம் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார்கள். அவர்களுடைய பிரச்சாரம் அபூதாலிபின் உள்ளத்தில் பதிந்து நேர்வழி பெற்றாரா? அவர்களுடைய பிரச்சாரம் அவருடைய காது வரைக்கும் போனதே தவிர அவருடைய உள்ளத்தைச் சென்றடையவில்லை. ஆனால் இவர்கள் ஷெய்கு எனப்படுபவர்களை நபிமார்களுக்கும் மேலாக சக்தி வாய்ந்தவர்களாக நினைக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த வரைக்கும் அங்கு சொல்லிக் கொள்ளும்படியாக மிகப்பெரிய அளவில் வளர்ச்சி இல்லை. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் இருந்தார்கள். பெரிய அளவில் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வரவில்லை.

நபிகளார் மக்காவை விட்டுத் துரத்தியடிக்கப்பட்டு மதீனாவிற்குச் சென்றார்கள். அப்போது தான் மக்காவிலும் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்திற்கு மாறுகிறார்கள். ஆனால் மக்காவில் அப்போது இஸ்லாத்தைச் சொல்வதற்கு நபியவர்கள் அங்கு இல்லை. நபியவர்கள் அங்கு இருக்கும் போது பெரிய அளவில் வளர்ச்சி இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஊரை விட்டுச் சென்று விட்டார்கள். அவர்களை ஏற்றுக் கொண்டவர்களும் ஹிஜ்ரத் செய்து சென்று விட்டார்கள். ஒரு சிலர் தான் மிஞ்சியிருந்தார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் தான் மக்காவில் இஸ்லாத்தில் இணைவோரின் எண்ணிக்கை அதிகமானது. அல்லாஹ் நினைத்தால் யாரையும் இஸ்லாத்திற்குக் கொண்டு வந்து சேர்த்து விடுவான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தால் தான் இஸ்லாத்திற்கு அதிகமான மக்கள் வருவார்கள். நபிகளார் ஊரை விட்டுச் சென்றதால் மக்காவில் உள்ளவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் காஃபிராகவே மரணித்து விடுவார்கள் என்று தான் நாம் நினைப்போம். ஆனால் நபிகளார் மக்காவில் இல்லாத போதே அந்த மக்களுக்குச் செய்தி போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கிறது. எந்த அளவுக்கென்றால் அல்லாஹ் தன்னுடைய செய்தியை அவர்களுடைய காதுகளிலும் கொண்டு போய்ச் சேர்த்து, அவர்களுடைய உள்ளத்திலும் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டான். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தபோது இஸ்லாம் வளர்ந்ததை விட அவர்கள் இல்லாத போது மிக வேகமாக வளர்ந்தது. ஆக நேர்வழி காட்டுவது அல்லாஹ்வின் கையில் இருக்கிறது என்பது இதிலிருந்து விளங்குகிறதா? இல்லையா?

அல்லாஹ்வுடைய தூதரை நேரடியாகப் பார்த்து, அவர்களுடைய பிரச்சாரத்தை நேரடியாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த மக்கள் இஸ்லாத்திற்கு வரவில்லை எனும் போது, ஷெய்கு, ஆன்மீகு குரு என்றெல்லாம் ஊரை ஏமாற்றுபவர்கள் பார்த்தவுடன் ஹிதாயத் கிடைத்து விடும் என்பது எவ்வளவு பெரிய மோசடி என்பது விளங்கவில்லையா?

யாரும் யாருக்கும் நேர்வழி காட்டிவிட முடியாது. இன்றைக்கு நாமும் இணை வைப்பு, பித்அத் போன்றவற்றிற்கு எதிராக எவ்வளவோ அடுக்கடுக்கான ஆதாரங்களை வைக்கிறோம். குர்ஆனையே அவர்களிடமும் கொண்டு காட்டுகிறோம். எல்லோரும் திருந்துகின்றார்களா? நேர்வழி பெறுகிறார்களா? அல்லாஹ் சிலருடைய உள்ளங்களில் முத்திரை வைத்துவிட்டான். பிறகு எப்படி அவர்கள் திருந்துவார்கள்?

இன்னும் சிலர் நம்முடைய பிரச்சாரத்தைக் கேட்டு, “குர்ஆன் சொல்வதை நாம் கேட்டுத் தான் ஆக வேண்டும். குர்ஆன் ஆயத்துகளை இவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். நாம் அதன்படி நடக்கத் தான் வேண்டும்’ என்று தங்களை திருத்திக் கொள்கிறார்கள். இவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்.

ஆக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி, வேறு எந்த நபிக்கும் இந்த அதிகாரம், அதாவது ஒருவனை நேர்வழிப்படுத்தக்கூடிய அதிகாரம் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

ஒவ்வொரு மனிதருக்கும் தனது தாய் தந்தையர் மீது அன்பு, பாசம் இருக்கும். கெட்ட மனிதருக்கு வேண்டுமானால் பாசம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நல்ல மனிதர் எவருக்கும் தாய், தந்தை மீது பாசம் இல்லாமல் இருக்காது. அவன் தன்னுடைய பெற்றோர் இவ்வுலகில் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவான். அவர்கள் மரணித்து விட்டால் மறுமையில் அவர்கள் நன்றாக இருப்பதற்காக நம்மால் ஏதாவது செய்ய முடியுமா? என்று சிந்திப்பான். மார்க்கத்தை சரியாக விளங்கிக் கொள்ளாமல் இறந்தவர்களுக்காக கத்தம் பாத்திஹா ஓதுவது கூட அவர்களுக்கு மறுமையில் ஏதாவது நன்மை கிடைக்கட்டுமே என்ற ஆவலில் தான்.

பெற்றோரைக் காப்பாற்ற முடியாத நபிகள் நாயகம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய தகப்பனாரைப் பார்த்ததே கிடையாது. நபியவர்கள் தமது தாயாரின் வயிற்றில் இருக்கும் போதே அவர்களுடைய தகப்பனார் இறந்து விட்டார். தாயாரும் அவர்கள் ஆறு வயதை அடைந்த போது மரணித்து விடுகிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தாய், தந்தையின் மீது பாசம் இருந்தது.

ஒரு சமயம் மதீனாவிற்குப் பயணம் செய்து போகும் வழியில் தனது தாயார் இறந்த இடத்தைக் கடந்து செல்லும் போது அவருக்காகப் பாவ மன்னிப்பு தேட அல்லாஹ்விடம் அனுமதி கேட்கிறார்கள். எனது தாயார் நான் நபியாக அனுப்பப்படுவதற்கு முன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமலேயே மரணித்து விட்டார்கள். எனவே அவர்களுக்காக நான் பாவமன்னிப்பு கேட்கலாமா? என்று அனுமதி கேட்கிறார்கள். ஆனால் அல்லாஹ் அதனை மறுத்து விடுகின்றான். இணை வைக்கக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய பாவங்களை மன்னிக்க மாட்டேன். அது உம்முடைய தாயாக இருந்தாலும் சரியே என்று இறைவன் கூறிவிட்டான்.

ஆனால் இன்றைக்கு முஸ்லிம்கள் அனைத்து இணை வைப்புக் காரியங்களையும் செய்து விட்டு, தங்களை நபிமார்கள் காப்பாற்றுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்காக மறுமையில் சிபாரிசு செய்வார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் இணை வைப்பில் இறந்து போன தம்முடைய தாய் தந்தைக்கு நபியவர்களால் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்ய முடிந்ததா?

அதுவும் நபியவர்கள் அல்லாஹ்விடம் சொர்க்கத்திற்குப் பரிந்துரை செய்யவில்லை. “என்னுடைய தாய்க்கு பாவமன்னிப்பு தேட வேண்டும். அதற்கு அனுமதி கொடு’ என்று பாவமன்னிப்புத் தேட அனுமதி தான் கேட்கின்றார்கள். அதையும் அல்லாஹ் மறுத்துவிட்டான்.

இதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நான் இறைவனிடத்தில் எனது தாயாருக்கு பாவமன்னிப்புத் தேடுவதற்கு அனுமதி கேட்டேன். ஆனால் இறைவன் அதற்கு அனுமதி தரவில்லை. பிறகு அவருடைய அடக்கத்தலத்தை சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு இறைவன் அனுமதி கொடுத்தான்.

(முஸ்லிம்: 1621)

ஆக, பெற்ற தாய் இணை வைத்து விட்டால் கூட அவர்களுக்கு பாவமன்னிப்பு தேடுவதற்கும், பரிந்துரை செய்வதற்கும் நபிமார்களுக்கே அனுமதியில்லை எனும் போது நாம் இணை வைத்த நிலையில் மரணித்து விட்டால் நமக்கு இந்த அவ்லியாக்கள், மகான்கள் பரிந்துரை செய்ய முடியாது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

இன்னும் நபி (ஸல்) அவர்களுடைய தந்தைக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதுரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நரக) நெருப்பில்” என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்ற போது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில் தான் (இருக்கிறார்கள்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(முஸ்லிம்: 302)

தூதர் அனுப்பப்படாத கால கட்டத்தில் வாழ்ந்தால் கூட அவர்கள் ஏகத்துவத்தை விட்டு விட்டு இணை வைப்பில் இருந்தால் அவர்களை மன்னிக்க அல்லாஹ் தயாராக இல்லை எனும் போது தூதர்கள் அனுப்பப்பட்ட சமுதாயம் ஏகத்துவத்தை விட்டு விட்டால் நிலைமை என்னவாகும்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தந்தைக்குத் தூதர் அனுப்பப்பட்டாரா? அவர்களுடைய தாயாருக்குத் தூதர் வந்தாரா? அந்தத் தூதர் சொல்லி அதை அவர்கள் நிராகரித்தார்களா? இல்லையே! அப்படிப்பட்டவர்களுக்கே மன்னிப்பு இல்லை என்கிறான்.

ஆனால் நமக்குத் தூதர் வந்திருக்கிறார்; வேதம் இறக்கப்பட்டிருக்கின்றது; அது பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. அதில் ஏகத்துவத்தைப் போதிக்கும் வசனங்கள் திரும்பத் திரும்ப போதிக்கப்பட்டிருக்கின்றது. குர்ஆன் தமிழாக்கம் வந்திருக்கின்றது. ஹதீஸ் நூல்கள் வந்திருக்கின்றன. இதன் பிறகும் நாம் ஏகத்துவத்தைப் புறக்கணித்து விட்டு இணை வைப்பில் மூழ்கிக் கிடந்தால் நம்மை அல்லாஹ் எவ்வாறு மன்னிப்பான்? நமது நிலை என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டாமா?

ஆக, அல்லாஹ்வுடைய தூதராக இருந்தும் பெற்ற தாய் தந்தையை சொர்க்கத்தில் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. பெற்ற தாய் தந்தையருக்காக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடும் அதிகாரத்தை அல்லாஹ் கொடுக்கவில்லை. அந்த அதிகாரத்தை அவர்களிடமிருந்து பறித்து விட்டான். நான் எடுத்தது தான் முடிவு. அதை யாராலும் மாற்ற முடியாது என்று கூறிவிட்டான். மேலும் அவன் தனது எஜமான் தனத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டான் என்பதும் இதிலிருந்து விளங்குகின்றது.

நபிகளாரின் மரணம் தரும் படிப்பினை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி மக்களிடத்தில் பரவியவுடன், அந்தக் களத்தில் நின்ற அனைத்து ஸஹாபாக்களும் தங்களுடைய உயிரைக் கையில் பிடித்தவாறு. தப்பித்தால் போதும் என்று பின்வாங்கி ஓடுகின்றார்கள். அந்த நபித்தோழர்களைக் கண்டித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்குகிறான்.

முஹம்மத் தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி சென்று விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குகிறான்.

(அல்குர்ஆன்: 3:144)

இதே வசனத்தை இன்னொரு சம்பவத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

அதாவது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விடுகிறார்கள். அவர்கள் மரணித்த உடனே அங்கிருந்த ஸஹாபாக்கள் அனைவரும் தவ்ஹீதைத் தெளிவாக விளங்கிய பின்னரும், குர்ஆனை நன்றாகத் தெரிந்திருந்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விடுவார்கள் என்பது தெரிந்திருந்தும், அவர்கள் மீது வைத்த பாசத்தின் காரணமாக அவர்கள் மரணிக்கவில்லை என்று கூறிவிடுகிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் என்றால் சாதாரணமான ஆளா? அவர்கள் எப்படி மரணிக்கலாம்? அவர்களுக்கு மரணம் வருமா? என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. நபியவர்களின் கடைசிக் காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற ஸஹாபாக்கள் இவ்வாறு நினைத்தால் பரவாயில்லை. ஆரம்பத்திலேயே இஸ்லாத்தை ஏற்ற உமர் (ரலி) அவர்கள், நபியவர்கள் மரணிக்கவில்லை என்று வாதிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், தன்னுடைய கையில் வாளை எடுத்துக் கொண்டு, யாராவது நபியவர்கள் மரணித்துவிட்டார்கள் என்று சொன்னால் அவரது தலையை வெட்டி விடுவேன் என்றும் கூறுகிறார்கள்.

சிலர் மட்டும் நபியவர்கள் மரணித்துவிட்டார்கள் என்றே நம்புகிறார்கள். ஆனால் உமர் (ரலி) அவர்கள், அந்தச் சிலரையும் மிரட்டி தன்னுடைய கருத்துக்கு ஆள் சேர்க்கிறார்கள். அந்த அளவுக்கு நபிகளாரின் மீது பாசம் வைத்திருந்தார்கள். அந்த நேரத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் அந்த இடத்தில் இல்லை. அப்போது அவர்கள் மதீனாவில் இல்லை. பிறகு நபியவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அவர்களைப் பார்க்க வருகிறார்கள். அங்கு வந்த போது நடந்த நிகழ்ச்சியை கேள்விப்படுகிறார்கள். இதற்குப் பிறகு நடந்த சம்பவத்தைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

நபி (ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

என் தந்தை அபூபக்கர் (ரலி) மதீனாவிற்கு சற்று தொலைவிலுள்ள சுன்ஹ் என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்ற தகவல் எட்டுகிறது. அப்போது உமர் (ரலி) எழுந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான்- நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்றே தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி-ஸல்-அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்” என்று கூறினார்கள். அபூபக்கர் (ரலி) அங்கே வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, “தங்களுக்கு என் தந்தையும் தாயும் அர்ப்பணமாகட்டும். நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் நறுமணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதும் ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்ய மாட்டான்” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள்.

(வெளியே வந்தபின் உமர் அவர்களை நோக்கி) “நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லையென்று சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்” என்று கூறினார்கள். அபூபக்கர் (ரலி) பேசிய போது உமர் (ரலி) அவர்கள் அமர்ந்தார்கள்.

அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, “முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தவர், முஹம்மத் (ஸல்) இறந்து விட்டார் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர், அல்லாஹ் (என்றும்) உயிர் வாழ்பவன். அவன் இறக்க மாட்டான் என்பதை புரிந்து கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

மேலும், “(முஹம்மதே!) நீர் இறப்பவரே. அவர்களும் இறப்போரே.” எனும் (அல்குர்ஆன்: 39:30) வசனத்தையும், “முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்” என்னும் (அல்குர்ஆன்: 3:144) வசனத்தையும் ஓதினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அபூபக்கர் (ரலி) இந்த வசனத்தை ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இதனை இறக்கி வைத்ததை மக்கள் அறியாதது போல் இருந்தனர். அபூபக்கரிடமிருந்து அதை செவியேற்ற மக்கள் அதனையே திரும்பத் திரும்ப ஓதினர்.

(புகாரி: 3667, 3668)

இவ்வாறு அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறியவுடன் உமருடைய கையில் இருந்த வாள் கீழே விழுகின்றது. நாம் பெரிய தவறையல்லவா செய்துவிட்டோம். நபியவர்கள் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தினால் நாம் எதையும் சிந்திக்காமல் பேசி விட்டோமே என்று நினைக்கிறார்கள். அதுவரை உமர் (ரலி) அவர்களின் பக்கம் இருந்த மற்ற ஸஹாபாக்களும், அபூபக்கர் இவ்வாறு அடுக்கடுக்கான ஆதாரத்தையும், சான்றுகளையும் வைத்தவுடன் தாங்கள் செய்ததைத் தவறு என்று உணர்ந்தனர். அதற்கு பிறகு தான் நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்ற செய்தியை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

நாம் இங்கு இதனை குறிப்பிடுவதற்குக் காரணம், மனிதன் என்ற அடிப்படையில் இந்த மாதிரியான பலவீனம் வரும்போது கூட அதற்கும் ஒரு மறுப்பு கொடுக்கும் விதமாக அல்லாஹ் இந்தக் குர்ஆனை ஆக்கி வைத்திருக்கிறான். இந்தக் குர்ஆனுடைய வசனங்களை வைத்துத் தான் அந்த மக்கள் வழிகேட்டிற்குப் போகாமல் தப்பித்துக் கொண்டார்கள்.

அந்த வசனம் இன்றைக்கு வரைக்கும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் இந்த மக்களோ, அவ்லியாக்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். மவ்லுது ஓதினால் நபியவர்கள் வருவார்கள் என்று நம்புகிறார்கள். யா நபி ஸலாம் அலைக்கும் என்று ஓதினால் நபியவர்கள் தாங்கள் இருக்கும் சபைக்கு வந்து விடுவார்கள் என்று நம்புகிறார்கள். அப்படியென்றால், இவர்கள் குர்ஆனை எந்த அந்தஸ்தில் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள்?

நபியவர்கள் மீது அன்பு வைக்கின்றோம் என்ற பெயரில் இணை வைத்தல் காரியம் நடக்கிறது. நபியவர்கள் மீது அபூபக்கர் (ரலி) வைத்த அன்பு, பாசத்தை விட நாம் பாசம் வைத்துவிட முடியுமா? உலகத்தில் எவரும் நபியவர்கள் மீது அபூபக்கர் வைத்த அன்பை விடக் கூடுதலாக அன்பு வைத்துவிட முடியுமா?

தமது தோழர்களில் அபூபக்கருக்கு நிகராக யாரும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அல்லாஹ்வும் அவரை மட்டும் தான் நபியவர்களுடைய தோழர் என்று சொல்கின்றான். வேறு யாரையும் நபியவர்களுடைய தோழர் என்று சொல்லவில்லை. பின்வரும் ஹதீஸ் அதற்குச் சான்றாக அமைகிறது.

நபியவர்களை மக்கா காபிர்கள் கொல்வதற்கு தேடிய நேரத்தில் நபியவர்களும். அபூபக்கர் (ரலி) அவர்களும் ஸவ்ர் என்னும் குகையில் இருந்தனர்.

நான் (ஹிஜ்ரத் பயணத்தின்போது) நபி (ஸல்) அவர்களுடன் (“ஸவ்ர்‘ எனும்) அந்தக் குகையில் (ஒளிந்து கொண்டு)இருந்தேன். அப்போது நான் இணை வைப்பாளர்களின் (கால்) சுவடுகளைக் கண்டேன். நான், “அல்லாஹ்வின் தூதரே! (நம்மைத் தேடி வந்துள்ள) இவர்களில் ஒருவன் தன் காலைத் தூக்கி(க் குனிந்து நோக்கி)னால் நம்மைப் பார்த்துவிடுவானே!” என்று (அச்சத்துடன்) சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “எந்த இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றானோ அவர்களைப் பற்றி என்ன கருதுகின்றீர்?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ர் (ரலி)

(புகாரி: 4663)

நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டாலும் (ஏகஇறைவனை) மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றிய போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், “நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” என்று அவர் தமது தோழரிடம் கூறிய போதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான். தனது அமைதியை அவர் மீது இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். (தன்னை) மறுப்போரின் கொள்கையைத் தாழ்ந்ததாக அவன் ஆக்கினான். அல்லாஹ்வின் கொள்கையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 9:40)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்பட்டிருந்த போது)மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில், “அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது -இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கூறினான். அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்” என்று சொன்னார்கள். உடனே, அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிவிட்டதை உணர்ந்து) அழுதார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சுயாதிகாரம் அளிக்கப்பட்ட அடியாரைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு இவர் ஏன் அழுகிறார்?’ என்று நாங்கள் வியப்படைந்தோம். அல்லாஹ்வின் தூதர் தாம் அந்த சுயாதிகாரம் அளிக்கப்பட்ட அடியார். (நபி -ஸல்- அவர்களின் இறப்பையே இது குறிக்கிறது என்பதை அபூபக்ர் -ரலி- அவர்கள் அறிந்து கொண்டார்கள். ஏனெனில்,) அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தன் நட்பிலும் தன் செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூபக்ரேயாவார். என் இறைவனல்லாத வேறெவரையாவது நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத் தான் செய்கின்றன. (எனது இந்தப்) பள்ளி வாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூபக்ரின் வாசலைத் தவிர” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

(புகாரி: 3654)

நபிகளாருக்குப் பொருளாதார ரீதியாக அவ்வளவு உதவிகளைச் செய்தவர் அபூபக்கர் (ரலி) ஆவார்கள். துவக்கத்தில் மக்காவில் இருந்த காலத்தில் அவர் தான் அதிக அளவிலான பொருளாதார உதவி செய்தவர். அதுமட்டுமல்லாமல் நபிகள் நாயகம் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு செல்வதற்கு வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்தவரும் அவர் தான். அவருடைய பொருட்செலவில் தான் நபிகளாரை அழைத்துக் கொண்டு வந்தார்.

இப்படிப்பட்ட அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் மீது இந்த அளவுக்குப் பாசம் இருந்தும் கூட குர்ஆனுக்குக் கட்டுப்பட்டு, இறைத்தூதர் என்றால் அவர்களும் மனிதர் தான். அவர்களுக்கும் மரணம் ஏற்படும். மற்ற மனிதர்கள் மரணிப்பதைப் போல் அவர்களும் மரணிப்பார்கள். மரணிக்காத தன்மை இறைவனுடைய தன்மை, இதை நபியவர்களுக்கு ஒருபோதும் நாம் கொடுக்கக்கூடாது என்று மக்களிடம் அறிவிக்கின்றார்கள்.

இதைப் போன்று, நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நாம் சொல்லும் போது, “இவர்களுக்கு நபியவர்கள் மீது பாசம் இல்லை’ என்று நம்மை விமர்சிக்கின்றார்கள். நபிகள் நாயகம் மரணிக்கவில்லை என்று சொல்வது தான் அவர்கள் மீது காட்டும் அன்பு என்று தவறாக விளங்கி வைத்துள்ளார்கள்.

பெற்ற மகளையும் காப்பாற்ற முடியாது

நபியவர்களுக்கு ஆரம்பத்தில் இந்த ஏகத்துவப் பிரச்சாரத்தை அல்லாஹ் படிப்படியாகத் தான் கட்டளையிடுகின்றான். நபியாகத் தேர்ந்தெடுத்த மாத்திரத்திலேயே அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்று கட்டளையிடவில்லை. ஆரம்பத்தில் வந்த கட்டளை என்னவென்றால் “நீர் ஓதுவீராக” என்பது தான். மற்றவர்களுக்குப் பிரச்சாரம் செய்யச் சொல்லி எந்தக் கட்டளையும் வரவில்லை.

படைத்த உமது இரட்சகனின் பெயரால் ஓதுவீராக! (அல்குர்ஆன்: 96:1)

பிறகு இரண்டாவதாகத் தான், “உறவினர்களுக்குச் சொல்வீராக’ என்ற கட்டளை வந்தது.

“உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்” என்னும் (26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, “குறைஷிக் குலத்தாரே!‘ என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), “ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை (மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற முடியாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 2753, 4771)

இந்த செய்தியின் மூலம், இஸ்லாத்தை மக்களிடம் எடுத்துச் சொல்வது மட்டும் தான் உம்முடைய பணியே தவிர, அவர்களை நேர்வழிப்படுத்துவதும், அவர்களுக்காக இறைவனிடத்தில் பரிந்துரை செய்து அவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்றுவதும், மறுமையில் வெற்றி பெற வைப்பதும் உமது கடமையல்ல. அல்லாஹ் நாடினால் உமது மகளைக் கூட தண்டித்து விடுவான்; தண்டிக்காமல் விட்டும் விடுவான் என்பதை இறைவன் புரிய வைக்கிறான்.

ஆக, நபியவர்களுக்கே இந்த நிலைமை என்றால் நம்மை எவ்வாறு பெரியார்கள், மகான்கள், அவ்வலியாக்கள் எல்லாம் காப்பாற்றுவார்கள் என்று சொல்ல முடியும்? முரீது வாங்கினால் நம்மை சொர்க்கத்திற்குக் கொண்டு போய் சேர்த்து விடுவார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? முரீது கொடுக்கக் கூடியவன் சொர்க்கத்திற்குச் செல்வானா என்பதையே சொல்ல முடியாது. இன்னும் சொல்லப் போனால் முரீது கொடுத்து நம்மை ஏமாற்றிய காரணத்தினாலேயே அவன் நரகத்திற்குச் சென்றுவிடுவான்.

தமக்காக பாவ மன்னிப்பு தேடிய நபிகள் நாயகம்

நாம் எவ்வளவோ பாவம் செய்கிறோம். இதற்காக ஒவ்வொரு நாளும் நாம் பாவமன்னிப்பு தேடுகின்றோமா? இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் எல்லாப் பாவத்தையும் மன்னித்து விட்டான். பாவமன்னிப்பு தேடாவிட்டாலும் அவர்களை மன்னித்து விட்டான். இதைப்பற்றி இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும் அல்லாஹ் மகத்தான உதவியை உமக்கு செய்வதற்காகவும் இவ்வெற்றியை அளித்தான்.

(அல்குர்ஆன்: 48:2),3

இந்த வசனம் இறங்குவதற்கு முன்னால் நீ செய்த பாவத்தையும், இந்த வசனம் இறங்கிய பிறகு இனிமேல் நீ செய்கின்ற பாவத்தையும் நான் மன்னித்து விட்டேன் என்று அல்லாஹ் சொல்கிறான்.

நபியவர்களிடம் எந்தப் பாவங்கள் நிகழ்ந்திருந்தாலும் அதற்கு அல்லாஹ்விடத்தில் கேள்வி கிடையாது. ஏனென்றால் முன்தேதியிட்டே அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்துவிட்டான். இருந்தாலும், அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள், தாமும் மனிதன் தான், தம்மிடமும் பாவம் ஏற்படத் தான் செய்யும் என்று நினைத்து அல்லாஹ்விடத்தில் அதிகமாக பாவமன்னிப்பு தேடக்கூடியவர்களாக இருந்தார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் அஸ்தக்ஃபிருல்லாஹ் வ அதூபு இலைஹி என்று கூறுகின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 6307).(முஸ்லிம்: 4870, 4871)

நபியவர்களுடைய நிலை இவ்வாறு இருக்கும் போது, நாம் அவர்களிடம் போய், “அன்த்த கஃப்ஃபாருல் ஹதாயா” (நீர் தான் பாவங்களை மன்னிப்பவர்) என்று மவ்லீதை ஓதுகின்றோமே! இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

என்னைக் கவர்ந்த இஸ்லாம்

மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்

அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார்.

பிரசவ வேதனையில் இருந்த அவரிடம், “எனது பணி நேரம் முடிந்து விட்டது. அடுத்து வருகின்ற ஆண் மருத்துவர் உங்கள் பிரசவத்தைப் பார்ப்பார்’ என்று நான் சொன்னதும் அந்தப் பெண் அழவும் அலறவும் ஆரம்பித்து விட்டார். “ஆண் மருத்துவரா எனக்குப் பிரசவம் பார்க்கப் போகின்றார்? வேண்டாம். ஆண் மருத்துவர் வேண்டவே வேண்டாம்’ என்ற கதறல் அவரிடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

அந்தப் பெண்ணின் இந்த விவகாரம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது ஒரு புரியாத புதிராக எனக்குப் பட்டது.

“இத்தனை ஆண்டு காலமாக எனது மனைவியை, தனது வாழ்நாளில் தன்னுடைய தகப்பனார், தன் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள், ஒன்று விட்ட சகோதர, சகோதரிகள், சிறிய, பெரிய தந்தையர் போன்றோர் தவிர வேறு எந்த அந்நிய ஆடவரும் பார்த்தது கிடையாது’ என்று அப்பெண்ணின் கணவர் விளக்கம் சொன்னார். மிகக் கடுமையான ஆச்சரியத்தில் நான் சிரித்தேன்.

“என் முகத்தைப் பார்க்காத ஓர் ஆடவர் உண்டா?’ என்று என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

அவ்விருவரின் கோரிக்கையை என்னால் புறக்கணிக்க முடியவில்லை. அதனால் அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்தேன்; இணங்கினேன்.

குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற அவருக்கு ஆறுதல் அளிப்பதற்கு, அமைதியளிப்பதற்கு இரண்டாம் நாள் அவரிடம் வந்தேன்.

“பிரசவத்திற்குப் பின்னால் பெண்களுக்கு நாற்பது நாட்கள் அளவுக்கு இரத்தப்போக்கு இருக்கும். அமெரிக்க தம்பதியர்கள் இக்கால கட்டத்தில் காக்க வேண்டிய தடை, தடுப்புகளைத் தகர்த்தெறிந்து விட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி விடுகின்றனர்.

எனவே குறைந்தபட்சம் 40 நாட்களுக்கு தம்பதியர் பத்தியம் காக்க வேண்டும். உடலுறவுக்கு விடை கொடுத்து விடவேண்டும். இந்த 40 நாட்களுக்கு இடையே பாதுகாப்பான உணவு சாப்பிட வேண்டும். பாரமான, பளுவான பணிகள் எதையும் செய்யாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து நடைபெற்று வரும் நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் தான் இதைத் தெரிவிக்கிறேன்” என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்தேன்.

அந்த அரபியப் பெண் ஆசுவாசமாக, அமைதியாக, எவ்வித பரபரப்புமின்றி, “பிரசவமான பெண்ணின் இரத்தம் நிற்கின்ற வரையில் தாம்பத்தியத்திற்கு இஸ்லாம் தடை விதித்திருக்கின்றது” என்று தெரிவித்தார்.

“அத்துடன் மட்டுமல்லாமல் இக்கால கட்டத்தில் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களையும் இத்தகைய பெண்களுக்கு இஸ்லாம் ரத்து செய்துவிடுகின்றது” என்று அவர் தெரிவித்தது தான் தாமதம்! அவரது இந்த யதார்த்தமான பதில் என்னுள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நீண்ட, நெடிய ஆய்வுக்கூட அறிஞர்களின் ஆய்வை இஸ்லாம் தன் வாழ்க்கை நெறியில் சர்வ சாதாரணமாக இழையோடச் செய்திருக்கின்றது என்று எண்ணி பிரமித்துப் போய்விட்டேன்.

இந்த நேரத்தில் குழந்தைகள் நல பெண் மருத்துவர் வருகை தந்தார். குழந்தை நலன் தொடர்பான மருத்துவ அறிவுரைகளை மணிக்கணக்காக விவரிக்க ஆரம்பித்தார்.

“குழந்தைகளை அதன் வலது பக்கமாக உறங்க வைக்க வேண்டும். இதன் மூலம் அதனுடைய இதயத் துடிப்புகள் சீராக அடிக்கின்றன, அமைகின்றன” என்று சொன்னதும் குழந்தையின் தகப்பனார், “நல்ல காரியங்கள் அனைத்திலும் வலது பக்கம் தான் என்று நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி வலது பக்கமாகவே நாங்கள் உறங்க வைக்கின்றோம்” என்று சொன்னதும் மீண்டும் என்னுடைய உடலில் நாடி நரம்புகளில் அதிகமான அதிர்வலைகளைப் பாய்ச்சியது.

அவ்வளவு தான். மருத்துவமனைக்கு ஒரு மாதம் விடுப்பு போட்டேன். அருகில் உள்ள நகரத்தில் அமைந்திருக்கும் ஓர் இஸ்லாமிய மையத்திற்குச் சென்று விடை தேடினேன். ஏற்கனவே இருந்த மார்க்கத்திலிருந்து விடுதலையானேன். என்னை நான் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டேன்.

நன்றி: அல்ஆலமுல் இஸ்லாம், அரபி வார இதழ்