மரணமும் மறுமையும் -12
தீயவா்களின் கப்ர் வாழ்க்கை 2
நரகம் காட்டப்பட்டு அச்சுறுத்தப்படுவான்
மரணித்தவன் கெட்டவனாக இருந்தால் அவனுடைய கண்ணிற்கு முன்னால் நரகம் கொண்டு வந்து காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். அவன் செல்லவிருக்கும் நரகத்தைப் பார்த்து பயந்து கொண்டே நிம்மதியின்றி மண்ணறை வாழ்கையை அனுபவிப்பான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
’உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும், நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், ”அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகின்ற வரை இதுவே (கப்றே) உனது தங்குமிடம்” என்றும் கூறப்படும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
கெட்டவன் கைசேதம் அடைய வேண்டும் என்பதற்காக சொர்க்கம் அவனுக்கு முன்னால் காட்டப்படும். அதைப் பார்த்து பார்த்து கைசேதப்பட்டுக் கொண்டே மண்ணறை வாழ்வைக் கழிப்பான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சொர்க்கத்தின் வாசலை இவனுக்கு திறந்து காட்டுங்கள் என்று கூறப்படும். சொர்க்கத்தின் வாசல் அவனை நோக்கித் திறக்கப்படும். அப்போது அல்லாஹ்விற்கு நீ கட்டுப்பட்டு நடந்திருந்தால் இது தான் அல்லாஹ் உனக்குத் தயார் செய்த இடமாக ஆகியிருக்கும் என்று கூறப்படும். அவன் மேலும் கைசேதத்தையும், நஷ்டத்தையும் உணருவான்.
பிறகு இவனுக்கு நரகத்தின் வாசலை திறந்து விடுங்கள் என்று கூறப்படும். அவனை நோக்கி நரகத்தின் வாயில் திறக்கப்படும். இது தான் உனது இடம். அல்லாஹ் உனக்குத் தயார் செய்ததும் இது தான் என்று அவனிடம் சொல்லப்படும். அப்போது அவன் மென்மேலும் கைசேதத்தையும், நஷ்டத்தையும் உணருவான்.
அறி: அபூ ஹுரைரா (ரலி),
நூல் : தப்ரானி பாகம் : 3 பக்கம் : 105
மறுமையின் வேதனை இதை விடக் கடுமையானது
இந்த உலகத்தில் யாரும் அனுபவித்திருக்க முடியாத அளவிற்கு மண்ணறையின் வேதனை மிகக் கடுமையானதாகும். மண்ணறை வாழ்க்கை என்பது மறுமை வாழ்வின் முதல் நிலையாகும். மறுமை வாழ்வில் தீயவர்களுக்குக் கிடைக்கும் வேதனை எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதைக் குர்ஆன் விவரிக்கிறது.
அவர்களுக்கு (தீயவர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனை உண்டு. மறுமையின் வேதனை கடுமையானது. அவர்களை அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பவன் எவனும் இல்லை.
மறுமையின் வேதனை கடுமையானது; நிலையானது.
மறுமையின் வேதனை மிகவும் இழிவு படுத்தக் கூடியது.
மறுமையின் வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா?
வேதனையால் அலறுகிறார்கள்
தீயவர்கள் மண்ணறையில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேதனை தாங்க முடியாமல் அலறிக் கொண்டிருக்கிறார்கள்.
”(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் பனுந் நஜ்ஜார் குலத்தாருக்குச் சொந்தமான தோட்டமொன்றில் தமது கோவேறுக் கழுதையின் மீதிருந்தார்கள். அப்போது அவர்களுடன் நாங்களும் இருந்தோம். அப்போது அவர்களது கோவேறு கழுதை அவர்களைத் தூக்கியெறியும் அளவுக்கு வெருண்டோடியது.
அங்கு ஆறு அல்லது ஐந்து அல்லது நான்கு மண்ணறைகள் இருந்தன. (இவ்வாறு தான் சயீத் அல்ஜுரைரீ (ரஹ்) அவர்கள் அறிவித்து வந்ததாக இப்னு உலய்யா (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், ”இந்த மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களைப் பற்றி யார் அறிவார்?” என்று கேட்டார்கள். ஒரு மனிதர், ”நான் (அறிவேன்)” என்றார்.
நபி (ஸல்) அவர்கள், ”இவர்கள் எப்போது இறந்தார்கள்?” என்று கேட்டார்கள். அவர், ”இணைவைப்பு (கோலோச்சியிருந்த அறியாமை)க் காலத்தில் இறந்தனர்” என்று பதிலளித்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ”இந்தச் சமுதாயம் மண்ணறைகளில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் (இறந்தவர்களைப்) புதைக்காமல் விட்டு விடுவீர்கள் என்ற அச்சம் மட்டும் எனக்கில்லையாயின், நான் செவியுறும் மண்ணறையின் வேதனையை உங்களுக்கும் கேட்கச் செய்யும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்து இருப்பேன்” என்று கூறினார்கள்.
பிறகு எங்களை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி, ”நரக நெருப்பின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்றார்கள்.
மக்கள், ”நரக நெருப்பின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று கூறினர்.
பிறகு ”மண்ணறையின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்றார்கள். மக்கள், ”மண்ணறையின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று கூறினர்.
அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி),
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறையும் போது வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு, ”யூதர்கள் அவர்களது கப்றுகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஅய்யூப் (ரலி),
நபி (ஸல்) அவர்கள் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக வெளியில் சென்றார்கள். பிலால் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு மண்ணறையைக் கடந்து சென்றார்கள். அப்போது பிலாலே! நான் கேட்டுக் கொண்டிருப்பதை நீ கேட்கிறாயா? என்று கேட்டார்கள்.
அதற்கு பிலால் (ரலி) அவர்கள் எனக்கு எதுவும் கேட்கவில்லையே என்று கூறினார்கள். இந்தக் கப்ரில் உள்ளவர் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நபரைப் பற்றி விசாரிக்கப்பட்டது. அவர் ஒரு யூதனாக இருந்தார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
மனிதர்களால் உணர முடியாது
மண்ணறையில் பாவிகள் வேதனை செய்யப்படும் போது அவர்கள் எழுப்பும் அலறலை மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் செவியேற்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அவனிடம் ” நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
கப்ராளிகளின் ஓலத்தை மிருகங்கள் செவியேற்கின்றன
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக்கொண்டிருந்தபோது) “சவக் குழிகளில் புதைக்கப்பட்டிருப்போர் வேதனை செய்யப்படுகின்றனர்” என்று கூறினர். அவர்கள் இருவரும் கூறியதை நான் நம்ப மறுத்தேன். அவர்கள் கூறியதை நம்புவதற்கு என் மனம் இடம் தரவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.
அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! மதீனா யூத மூதாட்டியரில் இருவர் என்னிடம் வந்து “சவக்குழிகளில் புதைக்கப்பட்டிருப்போர் வேதனை செய்யப்படுகின்றனர்” என்று கூறினர்” என அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் சொன்னது உண்மையே. (சவக் குழிகளிலிருக்கும் பாவிகள்) கடுமையாக வேதனை செய்யப்படுகின்றனர். அந்த வேதனை(யால் அவர்களிடும் ஓலம்)தனை மிருகங்கள் செவியேற்கின்றன” என்று கூறினார்கள்.
அதற்குப் பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தத் தொழுகையிலும் சவக்குழியின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை.
கப்ரு வேதனையிலிருந்து பாதுகாவல் தேட வேண்டும்
கப்ரு வாழ்வில் தீயவனுக்கு கிடைக்கும் கடுமையான தண்டனைகளை நாம் அறிந்து கொண்டோம். இப்படிப்பட்ட படுமோசமான வாழ்வு நமக்கு அமைந்து விடாமல் இருப்பதற்காக நாம் அனைவரும் முயற்சி செய்வதுடன் கப்ரு வேதனையிலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு கேட்க வேண்டும். ஏனென்றால், மண்ணறை வேதனையை விட்டு பாதுகாப்புத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அவர்களுக்கு நல்ல வாழ்வையே! அல்லாஹ் தருவான் என்பது உறுதியான விஷயம். நன்மையான காரியங்களை நபி (ஸல்) அவர்கள் நம்மை விட பன்மடங்கு நிறையவே செய்து வந்தார்கள். என்றாலும் மண்ணறை வேதனை குறித்து அவர்கள் அச்சப்படாத நாள் இல்லை. தினந்தோறும் அல்லாஹ்விடம் மண்ணறை வேதனையை விட்டும் பாதுகாப்புத் தேடுபவராக இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ”இறைவா! நான் இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் பாதுகாப்புக் கோருகின்றேன். மேலும், வாழ்வின் சோதனையிலிருந்தும், இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன். மேலும், புதைகுழியின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று பிரார்த்திப்பது வழக்கம்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
நபி (ஸல்) அவர்கள் அடக்கவிட (கப்று) வேதனையை விட்டுப் பாதுகாப்புக் கோரியதைத் தாம் செவியுற்றதாக காரிரித் பின் சயீத் (ரலி) அவர்களுடைய ஒரு புதல்வி கூறுகிறார்.
அறி: மூசா பின் உக்பா (ரஹ்),
ஒரு யூதப் பெண் என்னிடம் யாசித்தபடி வந்தாள். அப்போது அவள் என்னிடம், ”அடக்கக் குழியின் (கப்று) வேதனையிலிருந்து அல்லாஹ் உம்மைக் காப்பாற்றுவானாக!” என்று கூறினாள். ஆகவே, நான் இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி, ”மனிதர்கள் தம் அடக்கவிடங்களில் வேதனை செய்யப்படுவார்களா?” என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அ(டக்கவிடத்தின் துன்பத்)திலிருந்து நானும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு அடக்கக்குழியின் (கப்று) வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு மக்களைப் பணித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். சவக்குழியின் வேதனையிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். (பெருங் குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். வாழ்வின் சோதனையிலிருந்தும், இறப்பின் சோதனையிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்.
அறி: அபூ ஹுரைரா (ரலி),