12) மக்களோடு மக்களாக

நூல்கள்: மனித குலத்தின் முன்னோடி நபிகள் நாயகம்
மக்களோடு மக்களாக…

நபி (ஸல்) அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது உணவுகள் குறைவாக
இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் இந்த ஆட்டைச் சமையுங்கள் என்று கூறினார்கள். நான்கு பேர்
சுமக்கக் கூடிய பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு
வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். உணவுத் தட்டைச் சுற்றி
அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர்.

கூட்டம் அதிகமாகச் சேர்ந்ததால் நபி (ஸல்) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம்
கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி “என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் என்னை அடக்குமுறை செய்பவனாகவும், மமதை
பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்” என்று
விடையளித்தார்கள்.
நூற்கள்: (அபூதாவூத்: 3773) (பைஹகீ: 14430)

ஒரு உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உயர்ந்த
நிலையில் உள்ளவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து அமர்வதை மரியாதைக் குறைவாகவே கருதுவார்கள். பலரும் கைகளைப் போட்டுச் சாப்பிடும் தட்டில் சாப்பிடுவதை அருவருப்பாகக் கருதுபவர்களும் உள்ளனர். ஆனால், நபி (ஸல்) அவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் கைகளைப் போட்டுச் சாப்பிடும் அதே தட்டில் தாமும் சாப்பிட்டார்கள். அது மட்டுமின்றி பொதுவாக சம்மணமிட்டு அமர்வது தான் சாப்பிடுவதற்குவசதியானது. மண்டியிட்டு அமர்வது வசதிக் குறைவானது என்பதை அறிவோம்.

மேலும் அன்றைய சமூக அமைப்பில் மண்டியிட்டு அமர்வது தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரியதாகக்
கருதப்பட்டு வந்ததால் தான் கிராமவாசி அதைக் குறை கூறுகிறார். தாம் ஒரு ஆட்சியாளர் என்றோ,
மதத்தின் தலைவர் என்றோ, வீட்டின் உரிமையாளர் என்றோ நபி (ஸல்) அவர்கள் நினைக்கவில்லை.
மற்றவர்களைப் போல் பசித்திருக்கக் கூடிய ஒரு மனிதராக மட்டும் தான் தம்மைக் கருதினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தமக்கு வந்த உணவைத் தான் மற்றவர்களுக்கு வழங்கினார்கள். எனவே வீட்டில்
தமக்கென எடுத்து வைத்துக் கொண்டு தனியாகச் சாப்பிட்டிருக்க முடியும்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் எந்த விதமான கவுரவமும் பார்க்கவில்லை. மண்டியிட்டு அமர்ந்து சாப்பிட்டது மட்டுமின்றி இன்னொருவர் அமரக்கூடிய இடத்தை ஆக்கிரமித்து வசதியாக அமர்வதைக் கூட அடக்குமுறையாக அவர்கள் கருதுகிறார்கள். பெருந்தன்மை மிக்க அடியானாக இருப்பது தான் தமக்கு விருப்பமானது எனவும் குறிப்பிடுகிறார்கள். இத்தகைய பண்பாளர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனி மரியாதை பெற்றார் எனக் கூற முடியுமா?