12) பாவங்களை மன்னிப்பவன்
அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், எனது தொழுகையில் நான் பிரார்த்திக்க எனக்கு ஒரு பிரார்த்தனையை கற்றுத் தாருங்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்ஸீ ழுல்மன் கஸீரன், வலா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. ஃபஃக்ஃபிர்லீ மஃக்ஃபிரத்தம் மின் இந்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம்
இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்துவிட்டேன். உன்னைத் தவிர வேறெவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் தரப்பிலிருந்து எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! என் மீது கருணை காட்டுவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் கருணையாளனும் ஆவாய் என்று கூறுங்கள்! என்றார்கள்.
நூல் (புகாரி: 834)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹும்ம ! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூஉ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவ மன்னிப்புக் கோரலாகும்.
பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன்.
நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.
யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ, அவர் சொர்ககவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகின்றாரோ அவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.
அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி),
நூல்: (புகாரி: 6306)
பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடு! உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் வேறு யாருமில்லை (என்று தொழுகையில் நிற்கும் போது நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்)
நூல்: (முஸ்லிம்: 1419)