12) தீயவர்களுக்கு மலக்குகளின் வரவேற்பு

நூல்கள்: குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை

12) தீயவர்களுக்கு மலக்குகளின் வரவேற்பு

கெட்டவன் மரணித்தவுடன் அவனது உயிரை வானவர்கள் எடுத்துச் செல்லும்போது அவன் இழிவையும் அவமானத்தையும் அடையும் விதத்தில் வானவர்கள் அவனுக்கு மோசமான வரவேற்பு கொடுப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைமறுப்பாளன் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து மறுமையை நோக்கியவனாக இருக்கும் போது கருப்பு முகங்களைக் கொண்ட வானவர்கள் வானத்திலிருந்து அவனிடம் வருவார்கள். (உயிரைக் கொண்டு செல்வதற்காக) அவர்களுடன் துணிகள் இருக்கும். அவனது பார்வை எட்டும் தூரம் வரை வானவர்கள் அமர்ந்திருப்பார்கள். பின்பு உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமருவார்.

கெட்ட ஆன்மாவே அல்லாஹ்வின் கோபத்துடனும், அதிருப்தியுடனும் நீ வெளியெறு என்று கூறுவார். அப்போதுதான் அவன் உடலிலிருந்து உயிர் பிரித் தெடுக்கப்படும். ஈரமான கம்பளியில் உள்ள ரோமத்தை பிடுங்கு பவரைப் போல் வானவர் உயிரை வாங்குவார். உயிரை வாங்கிய பிறகு கண் சிமிட்டும் நேரம் கூட தன் கையில் வைத்திருக்காமல் உடனே அந்த துணிகளில் உயிரைச் சேர்த்து விடுவார்.

பூமியில் இறந்து அழுகிப்போன உடலிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போன்ற கெட்ட வாடை அதிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும். இந்த (கெட்ட) உயிருடன் (வானில்) வானவர்கள் ஏறிச் செல்வார்கள். அந்த உயிருடன் வானவர் கூட்டத்தை அவர்கள் கடந்து செல்லும் போதெல்லாம் இந்த கெட்ட ஆன்மா யாருடையது? என்று வானவர்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள். உலகில் அவன் அழைக்கப் பட்டுக் கொண்டிருந்த கெட்ட பெயரைக் கூறி இன்னாருடைய மகன் இன்னார் தான் என்று கூறுவார்கள்.

இறுதியாக அவன் இறுதி வானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவனுக்காக கதவைத் திறக்குமாறு கேட்கப்படும். ஆனால் அவனுக்கு கதவு திறக்கப்படாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த இடத்திலே) இந்த வசனத்தை ஓதிக் காட்டினார்கள். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்படமாட்டாது.

ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும்வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளை தண்டிப்போம் (7:40) கடைசி யில் பூமியில் உள்ள சிஜ்ஜீன் என்ற ஏட்டில் இவனது கணக்கை பதிவு செய்யுங்கள் என்று சங்கையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் அப்போது கூறுவான்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)

(அஹ்மத்: 17803)

ஓர் இறைமறுப்பாளரின் உயிர் பிரியும் போது அந்த உயிரிலிருந்து துர்வாடை கிளம்பும். வானிலுள்ளோர் அதை சபிப்பார்கள். வானுலகவாசிகள், “ஒரு தீய ஆன்மா பூமியிலிருந்து வந்திருக்கிறது” என்று கூறுவார்கள். அப்போது “இதை இறுதித் தஹ்ணை வரை கொண்டு செல்லுங்கள்” என்று கூறப்படும். இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகையில், தம்மிடமிருந்த மிருதுவான துணியை தமது மூக்குவரை “இப்படி” கொண்டு சென்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 5119)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: .

இறந்தவன் இறைமறுப்பாளனாக இருந்தால் வானவர்கள் அவனுடைய ஆத்மா வைத் துணியில் வைத்து வானத்தை நோக்கி கொண்டு செல்வார்கள். அப்போது (வானலோகத்தில் உள்ள) வானவர் கள் தங்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு கெட்ட ஆன்மா பூமியிலிருந்து வந்திருக்கிறது என்று கூறுவார்கள்.

வானவர்கள் அந்த ஆன்மாவுடன் மேலே ஏறிச் செல்வார்கள். அப்போது (கெட்ட ஆன்மாவே) அல்லாஹ்வின் வேதனையையும் இழிவையும் நற்செய்தியாகப் பெற்றுக் கொள் என்று கூறப்படும். பிறகு இறுதித் தவணை வரை கொண்டு செல்லுங்கள் என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)

நூல் : பைஹகீ (இஸ்பாது அதாபில் கப்ர்) (8)