12) குர்ஆன் கூறாத கிப்லா
“(முஸ்லிம்கள்) ஏற்கனவே இருந்த தமது கிப்லாவை விட்டும் ஏன் திரும்பி விட்டனர்?” என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்” என்று கூறுவீராக!
இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடுநிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை.அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.
(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை (கஅபா எனும்) புனிதப் பள்ளியின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! “இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை” என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.
இவர்கள் ஏற்கனவே திரும்பிக் கொண்டிருந்த கிப்லாவை விட்டும் ஏன் திரும்பி விட்டார்கள்? என்று அறிவீனர்கள் கேள்வி எழுப்புவதாக (அல்குர்ஆன்: 2:142) ➚ வசனத்தில் கூறப்படுகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், தோழர்களும் முன்னர் ஒரு கிப்லாவை நோக்கித் தொழுது விட்டு, பின்னர் வேறு கிப்லாவுக்கு மாறியது எதிரிகளின் விமர்சனத்துக்கு ஆளானதைக் கவனத்தில் கொள்ளவும்.
ஏற்கனவே இருந்த கிப்லாவை நாம் ஏற்படுத்தியிருந்தது ஏன் என்றால் இத்தூதரைப் பின்பற்றுவது யார்? பின்பற்ற மறுத்து வந்த வழியே செல்பவர் யார்? என்பதைத் தெளிவுபடுத்தவே என்று (அல்குர்ஆன்: 2:143) ➚ வசனம் கூறுகின்றது.
ஏற்கனவே இருந்த கிப்லாவை இறைவன் மாற்ற மாட்டானா? என்று ஏக்கத்துடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வானத்திலிருந்து செய்தி வருவதை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தனர். எனவே அவர்கள் விரும்பியது போலவே மஸ்ஜிதுல் ஹராமை நோக்கி இனிமேல் தொழுமாறு கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது. இந்த விபரங்கள் (அல்குர்ஆன்: 2:144) ➚ வசனத்தில் கூறப்பட்டுள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுகை நடத்தினார்கள். அதன் பின்னர் இது மாற்றப்பட்டு கஅபாவை நோக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதைத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றன என்று ஹதீஸ்களையும் மார்க்க ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் கூறுவார்கள்.
ஹதீஸ்களை மார்க்க ஆதாரங்களாகக் கொள்ளாதவர்களால் ஏற்கனவே இருந்த கிப்லா எது என்பதற்கு விளக்கம் கூற முடியாது. ஆயினும் கஅபா அல்லாத வேறொரு திசையை நோக்கித் தொழுது வந்தனர். பின்னர் கஅபாவை நோக்கித் தொழுமாறு கட்டளையிடப்பட்டனர் என்பதை மறுக்க முடியாது.
ஏனெனில் ஒரு கிப்லாவிலிருந்து மறு கிப்லாவுக்கு மாற்றப்பட்ட விபரம் இவ்வசனங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
குர்ஆன் மட்டும் தான் மார்க்க ஆதாரங்களாகும். நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல் அல்ல எனக் கூறுவோரிடம் நாம் கேட்க விரும்புவது இதுதான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் ஒரு திசையிலும் பின்னர் ஒரு திசையிலும் தொழுதார்கள் அல்லவா? இவ்விரண்டு காரியங்களில் கஅபாவை நோக்கித் தொழுமாறு இறைவன் பிறப்பித்த கட்டளை, உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புவீராக என்ற சொற்கள் மூலம் பிறப்பிக்கப்பட்டது. (அல்குர்ஆன்: 2:144) ➚
அதற்கு முன் மற்றொரு திசையை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதார்களே, அந்தத் திசையை நோக்கித் தொழ வேண்டும் என்ற கட்டளையும் குர்ஆனில் இருக்க வேண்டும். குர்ஆனில் இல்லாத எதுவும் மார்க்கமாக முடியாது என்பது உங்கள் கொள்கை.
முன்னர் ஒரு திசையை நோக்கித் தொழுதார்கள் என்ற தகவல் தான் மேற்கண்ட வசனங்களில் உள்ளது. அந்தத் திசையை நோக்கித் தொழ வேண்டும் என்ற கட்டளை முழுக் குர்ஆனில் எந்த இடத்திலும் பிறப்பிக்கப்படவில்லை.
குர்ஆனில் கட்டளையிடப்படாத திசையை நோக்கி நபிகள் நாயகம் தொழுதது எதனடிப்படையில்? எந்த ஆதாரத்தின் அடிப்படையில்? இந்தக் கேள்விக்கு குர்ஆன் மட்டும் போதும் என வாதிடுவோர் கியாமத் நாள் வரையிலும் பதில் சொல்ல முடியாது.
பைத்துல் முகத்தஸை (அவர்கள் கருத்துப்படி ஏதோ ஒரு திசையை) நோக்கித் தொழுதது இறைவனின் வழிகாட்டுதலின் படி இல்லை, முஹம்மது நபியின் சொந்த அபிப்பிராயத்தின் படி தான் என்று இவர்கள் கூறுவார்களானால் இச்செயலை இறைவன் கண்டித்திருக்க வேண்டும். இதற்காக நபியவர்கள் கண்டிக்கப்பட்ட வசனத்தையும் இவர்களால் குர்ஆனில் எடுத்துக் காட்ட முடியாது.
இறைவன் இந்தக் கிப்லாவிலிருந்து வேறு கிப்லாவுக்கு மாற்ற மாட்டானா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடிக்கடி வானத்தை நோக்கியிருக்கிறார்கள் என்று (அல்குர்ஆன்: 2:144) ➚ வசனம் கூறுகின்றது. அப்படியானால் முதலில் அவர்கள் நோக்கிய கிப்லாவை அவர்களாக ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவர்களாக ஏற்படுத்தியிருந்தால் அவர்களாகவே அதை மாற்றியிருப்பார்கள். முதல் கிப்லா குறித்த கட்டளையையும் இறைவன் தான் பிறப்பித்திருக்கிறான் என்பதாலேயே அதை மாற்றுவதற்கான செய்தியை எதிர் நோக்கி வானத்தைப் பார்க்கிறார்கள் என்பதை அறியலாம்
எனவே மாற்றப்பட்ட முதல் கிப்லாவும் இறைவனின் கட்டளைப்படி தான் தொழும் திசையாக ஆக்கப்பட்டது என்பதைச் சந்தேகமற இதிலிருந்து அறிய முடியும்.
ஏற்கனவே இருந்த கிப்லாவும் இறைக் கட்டளைப்படி தான் தொழும் திசையாக ஆக்கப்பட்டிருப்பது சந்தேகமற உறுதியாகும் போது அதற்கான கட்டளை குர்ஆனில் நிச்சயமாக இருக்க வேண்டும். இவ்வசனத்தையே அதற்கான கட்டளை என்று கூறி சமாளிக்கக் கூடாது. பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுங்கள் என்று எந்தக் கட்டளையும் இங்கே கூறப்படவில்லை. நீங்கள் ஏற்கனவே பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதது எனது கட்டளையின் படி தான் என்ற தகவல் மட்டுமே இங்கே உள்ளது.
இங்கு தான் உண்மை தெளிவாகின்றது.
பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுமாறு கட்டளை பிறப்பித்தவன் இறைவன் தான் என்பது உண்மை. அந்தக் கட்டளை குர்ஆனில் இல்லை என்பதும் உண்மை. அப்படியானால் இறைவன் கூறுவது பொய் என இவர்கள் கூறப் போகின்றார்களா? (நவூதுபில்லாஹ்)
இறைவன் கட்டளை பிறப்பித்ததும் உண்மை, அக்கட்டளை குர்ஆனில் இல்லை என்பதும் உண்மை. இவ்விரு உண்மைகளிலிருந்து தெரியும் மூன்றாவது உண்மை, இறைவன் கட்டளை யாவும் குர்ஆனில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இறைத்தூதர்களின் உள்ளங்களில் ஜிப்ரீலின் துணையில்லாமல் தனது கருத்துக்களை இறைவன் பதியச் செய்வான். அதுவும் இறைக் கட்டளை தான் என்பதே அந்த மூன்றாவது உண்மை.
ஜிப்ரீல் வழியாக இல்லாமல் வேறு வழியில் பிறப்பித்த கட்டளையை அது குர்ஆனில் இல்லாத போதும் தனது கட்டளையாக இறைவன் கருதுவதே அறிவுடைய மக்களுக்குப் போதிய சான்றாகும்.
இதை நாம் அனுமானமாகக் கூட கூறவில்லை. அல்லாஹ்வே இதைத் தெளிவாகக் கூறுகின்றான்.
இத்தூதரைப் பின்பற்றுபவர் யார்? வந்த வழியே திரும்புபவர் யார் என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக முந்தைய கிப்லாவை நாம் ஆக்கினோம்.
எவ்வளவு அற்புதமான சொற்றொடர் பாருங்கள். குர்ஆன் மட்டுமே போதும் என்று கூறக் கூடிய இவர்களுக்காகவே இறங்கியது போல் இது இருக்கவில்லையா?
இந்தக் கட்டளை குர்ஆனில் இல்லை தான், ஆனாலும் நாம் தான் அந்தக் கிப்லாவையும் ஏற்படுத்தியிருந்தோம். குர்ஆனில் இல்லாவிட்டாலும் இத்தூதர் மனோ இச்சைப்படி பேச மாட்டார் என உறுதியாக நம்பி அதனடிப்படையில் செயல்பட முன் வருபவர் யார்? வந்த வழியே திரும்பிச் செல்பவர் யார்? என்பதை அடையாளம் காட்டவே இவ்வாறு செய்ததாக இறைவன் பிரகடனம் செய்கின்றான்.
அதாவது வேண்டுமென்றே தான் இக்கட்டளையை குர்ஆன் மூலம் பிறப்பிக்காமல் இறைத்தூதர் வழியாக அவன் பிறப்பித்துள்ளான். இறைத்தூதர் பிறப்பித்த கட்டளையைத் தனது கட்டளை எனவும் ஏற்றுக் கொள்கின்றான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கின்றோம்.
குறிப்பு: (அல்குர்ஆன்: 2:143) ➚ வசனத்தில் அடிக்கோடிட்ட பகுதிகள் தாம் சரியான மொழிபெயர்ப்பாகும். தமிழ் மொழி பெயர்ப்புக்களில் இந்த இடம் தவறாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கஅபாவை நோக்குமாறு இப்போது கட்டளையிட்டது நபியைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டவே, என்ற கருத்துப் பட அம்மொழி பெயர்ப்புக்கள் அமைந்துள்ளன. கஅபாவுக்கு முன் இருந்த பழைய கிப்லாவை ஏற்படுத்தியது நபியைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டவே என்று நாம் செய்துள்ள மொழிபெயர்ப்புத் தான் சரியானதாகும்.
அல்லதீ குன்த அலைஹா (நீர் ஏற்கனவே இருந்த கிப்லா) என்ற சொற்றொடரைக் கவனிக்காமல் இந்தத் தவறு தமிழ் மொழி பெயர்ப்புக்களில் காணப்படுகின்றது.
குர்ஆன் மட்டும் போதும், ஹதீஸ்கள் தேவையில்லை என்போருக்கு அல்முபீன் மாத இதழ் ஒரு அறைகூவல் விடுகின்றது.
பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுமாறு இறைவன் பிறப்பித்த கட்டளையைக் கூறும் குர்ஆன் வசனத்தை எடுத்துக் காட்டினால் ஐந்து லட்சம் ரூபாய்கள் அன்பளிப்பாக வழங்க நாம் தயாராக உள்ளோம்.
இந்த வசனங்களைப் பற்றிக் குறிப்பிட்ட காரணத்தால் இதிலிருந்து எழுகின்ற வேறு சில கேள்விகளையும் எழுப்புவது பொருத்தமாக இருக்கும்,
இவ்வசனங்களில் எந்த இடத்திலும் தொழுகைக்காக மஸ்ஜிதுல் ஹராமை முன்னோக்குங்கள் எனக் கூறப்படவில்லை. மாறாக கிப்லா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹதீஸின் விளக்கத்தை ஓரம் கட்டிவிட்டு கிப்லாவுக்குப் பொருள் கொள்வது என்றால் முன்னோக்கும் திசை என்றே பொருள் கொள்ள வேண்டும்.
நீங்கள் எங்கே இருந்தாலும் அதன் திசையையே முன்னோக்குங்கள் என்று (அல்குர்ஆன்: 2:144) ➚ வசனம் கூறுகின்றது.
நீ எங்கிருந்து புறப்பட்டாலும் உனது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்பு என்று (அல்குர்ஆன்: 2:149) ➚ வசனம் கூறுகின்றது.
நீ எங்கிருந்து புறப்பட்டாலும் உனது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்பு, நீங்கள் எங்கே இருந்தாலும் அதன் திசையிலேயே உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என 150வது வசனம் கூறுகின்றது.
இவ்வசனங்களில் தொழும் போது இவ்வாறு செய்யுமாறு கூறப்படவில்லை.
பிரயாணம் செய்யும் போது கஅபாவை நோக்கியே பயணம் செய்ய வேண்டும் என்பது தான் ஹதீஸ் துணையின்றி விளங்கும் போது தெரியும் விஷயமாகும். எனவே இந்திய முஸ்லிம்கள் தமது வாழ்நாளில் எந்தப் பயணம் மேற்கொள்வதாக இருந்தாலும் ஏறத்தாழ மேற்கு நோக்கியே பயணம் செய்ய வேண்டும். அத்திசையில் தான் கஅபா உள்ளது என்று இவர்கள் வாதிடுவார்களா?
வடக்கு, தெற்கு, கிழக்கு திசைகளில் எந்தப் பயணமும் மேற்கொள்ளக் கூடாது. புறப்பட்டால் கஃபாவை நோக்கியே புறப்படு என்பது தான் மேலோட்டமாக இடப்பட்ட கட்டளை.
அது மட்டுமின்றி நாம் எங்கே இருந்தாலும் அதை மட்டுமே நோக்க வேண்டும் என்பதும் இவ்வசனங்களின் கட்டளையாகும். நாட்டின் பிரதமரை நாம் சந்திக்கச் செல்கின்றோம். அவர் மேற்கு நோக்கி அமர்ந்துள்ளார். நாமும் அவருக்கு முதுகைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்தால் தான் கஃபாவை நோக்க முடியும். எங்கிருந்த போதும் அத்திசையையே நோக்குங்கள் என்ற கட்டளையை அப்போது தான் செயல்படுத்த முடியும்.
இது தொழுகையில் எங்கே முன்னோக்குவது என்பது குறித்து அருளப்பட்ட வசனங்கள் எனக் கூறும் ஹதீஸ்களை அலட்சியப்படுத்தினால் இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும்.
தமிழ் மொழிபெயர்ப்புகளில் (தொழுகையின் போது) என்று அடைப்புக் குறிக்குள் போட்டிருப்பது அரபு மூலத்தில் இல்லாமல் மொழிபெயர்ப்பாளர் சேர்த்ததாகும்.
இதுபோன்ற கேள்விகள் அவர்களது குருட்டுக் கண்களைத் திறக்க உதவும் என்பதற்காக இதை நாம் குறிப்பிடுகின்றோம். முந்தைய கிப்லா பற்றிய கட்டளை குர்ஆனில் இல்லை என்பதே அடிப்படையான வாதம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.