12) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 10

நூல்கள்: ஏசு மரணிக்கவில்லை- ஒரு தெளிவான விளக்கம்

நம்ப மறுக்கும் சீடர்கள்

மரியா அந்தத் தகவலை சீடர்களிடம் சொன்ன போது அவர்கள் நம்ப மறுக்கின்றனர்.

அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்ட போது அவர்கள் நம்பவில்லை.

மாற்கு 16:11

கல்லறையிலிருந்து கிளம்பிய ஏசு எம்மாவு என்ற ஊரை நோக்கிச் செல்கின்றார்.

அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு.

அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள்.

இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்ற போது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார்.

ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.

லூக்கா 24:13-16

பயணம் ஒரு கட்டத்தை அடைந்த போது, சீடர்களுடன் உணவும் சாப்பிடுகிறார்.

அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்த போது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்து போனார்.

லூக்கா 16:30, 31

இங்கு, அவர்களது கண்கள் திறந்தன என்று கூறப்படுவது, நேரடி அர்த்தத்தில் இல்லை. ஏனெனில் அவ்வாறு அர்த்தம் கொடுத்தால் இவ்வளவு நேரம் பயணம் செய்யும் போது கண்களை மூடியிருந்தார்கள் என்றாகி விடும். எனவே கண்கள் திறந்தன என்று கூறப்படுவது, ஏசுவை அடையாளம் கண்டு கொண்டார்கள் என்ற பொருளில் தான்.

இவர்கள் போய் இதர சீடர்களிடம் சொல்கிறார்கள். அவர்களும் நம்ப மறுக்கிறார்கள்.

காரணம், ஏசு உயிருடன் இருக்கிறார் என்ற ஆதாரத்தை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதே இரத்தமும் சதையும் உள்ள ஏசு! உணவு சாப்பிடும் ஏசு! அவர்களால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

ஆனால் இதே சீடர்களிடம் மகதலா மரியா, “ஏசுவின் ஆவியைக் கண்டேன்’ என்று கூறியிருந்தால் ஒப்புக் கொண்டிருப்பார்கள். ஏசுவுடன் ஒன்றாய் எம்மாவு என்ற ஊருக்கு வந்த இருவரும், அவரது ஆவியைக் கண்டேன் என்று சொன்னால் ஒப்புக் கொண்டிருப்பார்கள்.

இதற்குக் காரணம் அவர்கள் ஆவியை அதிகமதிகம் பார்த்தவர்கள். பன்றிக்குள் ஆவி புகுந்து இரண்டாயிரம் பேரைக் காலி செய்தது என்று நம்பியவர்கள்.

பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.

மாற்கு 5:13

மகதலா மரியாவிடமிருந்து ஏழு ஆவிகள் வெளியானதைப் பார்த்தவர்கள். அதனால் அவர்களுடைய வாழ்நாளில் நம்பப்படுபவற்றை, அவர்கள் நம்பத் தான் செய்தனர். ஆனால் உயிருடன் உள்ள ஏசுவை, அதிலும் உயிருடன், உடலுடன் உள்ள ஏசுவை அவர்களால் நம்ப முடியவில்லை. அதிலும் குறிப்பாக மரணத்தின் பிடியிலிருந்து தப்பிய ஏசுவை அவர்களால் நம்ப முடியவில்லை. காரணம் இவர்கள் நம்பிக்கை குன்றியவர்கள் என்று பைபிள் கூறுகின்றது. (பார்க்க மத்தேயு 6:30, 8:26, 14:31, 16:8, லூக்கா 12:28)

  1. ஏசு உயிருடன் இருக்கிறார் என்று மக்தலா மரியா சாட்சி சொல்கிறார்.
  2. ஏசு உயிருடன் இருக்கிறார் என்று எம்மாவுவின் இரு சீடர்கள் சாட்சி சொல்கின்றனர்.
  3. ஏசு உயிருடன் இருக்கிறார் என்று இரு வானவர்கள் சாட்சி சொல்கின்றனர்.
  4. ஏசு உயிருடன் இருக்கிறார் என்று பெண்ணுக்கு அருகில் நின்ற இரு மனிதர்கள் சாட்சி சொல்கிறார்கள். (லூக்கா 24:4,5)

இத்தனை பேர்களும் சொன்னதைக் கேட்காத இவர்கள், தங்களின் தலைவர் ஏசு சொல்வதையாவது கேட்பார்களா? இனி வரும் தலைப்புகளில் பார்ப்போம்.