12) ஆதாரம் : 11
இயேசுவைத் தீர்க்க தரிசி எனக் குறிப்பிடும் பைபிள் வசனங்கள்
“தீர்க்கதரிசி” என்றால் “இறைத்தூதர்” என்று பொருளாகும். பைபிளின் ஏராளமான வசனங்களில் இயேசு தீர்க்கதரிசி என்ற வார்த்தையால் குறிப்பிடப்பட்டுள்ளார்.
என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
(மத்தேயு 5 : 11, 12)
இது இயேசு தனது சீடர்களுக்குச் செய்த உபதேசமாகும்.
“உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே” என்று இயேசு தமது சீடர்களுக்கு எடுத்துரைக்கிறார்.
முன்வாழ்ந்த இறைத்தூதர்களும், அவர்களைப் பின்பற்றிய மக்களும் எவ்வாறு சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்களோ அதுபோன்ற சோதனைகள் இயேசுவுக்கும், அவரைப் பின்பற்றிய மக்களுக்கும் ஏற்படும். அச்சோதனைகளைப் பொறுத்துக் கொண்டால் மறுமையில் பாக்கியங்களை அடையலாம் என்பதை இயேசு தமது சீடர்களுக்கு எடுத்துரைத்தாக இவ்வசனங்கள் குறிப்பிடுகிறது.
இயேசுவுக்கு முன் பல இறைத்தூதர்கள் இவ்வுலகிற்கு வந்துள்ளனர் என்பதும், அவ்வரிசையில்தான் இயேசுவும் இறைத்தூதராக வந்துள்ளார் என்பதையும் இவ்வசனம் எடுத்துரைக்கிறது.
இயேசு தனது சீடர்களுக்குச் செய்த இந்தப் போதனையிலிருந்து இயேசு இறைவனின் தூதர்தான் என்பதை இவ்வசனம் உறுதிப்படுத்துகிறது.