11) வஹீ மட்டுமே மார்க்க ஆதாரம்
இவ்வளவு சான்றுகளை நாம் எடுத்துக் காட்டிய பின்னரும் இக்கருத்து முற்றிலும் சரியானது என்று மனசாட்சி அதை ஏற்றுக் கொண்ட பின்னரும் இதை ஏற்க சிலர் தயக்கம் காட்டுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க வேண்டும்.
முன்னர் வாழ்ந்த நபித்தோழர்களும் நல்லறிஞர்களும் இக்கருத்தைச் சொல்லவில்லையே? அவர்களுக்குத் தெரியாதவை இவர்களுக்குத் தெரிந்து விட்டதா என்ற எண்ணம் தான் அந்தக் காரணம்.
அல்லாஹ்வுடைய வேதத்திலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இது தான் என்று தெரிந்து விட்டால் அதற்கு முரணாக முன்னோர்களையும் பெரியார்களையும் கொண்டு வந்து நிறுத்தலாமா? இந்தப் பதிலை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? இதை சிந்தித்துப் பார்த்தால் இந்த தயக்கம் விலகி விடும்
இது பற்றி அல்லாஹ்வின் எச்சரிக்கை சிலவற்றை எடுத்துக் காட்டுகிறோம்.
வஹீ இல்லாமல் தேனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹராமாக்கியதையும், வஹீ இல்லாமல் மகரந்தச் சேர்க்கையை மறுத்ததையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொல், செயலைக் கூட வஹீ என்றும் வஹீ இல்லாதது என்றும் பிரித்துக் காட்டிய பின்னரும், வஹீயைப் பெறாத நபித்தோழர்களையும் முன்னோர்கலையும் முன்னிறுத்துவது சரியாகுமா?
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!
திருக்குர்ஆன் 7:3
என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 2:38
(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக!
திருக்குர்ஆன் 6:106
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
திருக்குர்ஆன் 24:51
“அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!” என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப் பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.
திருக்குர்ஆன் 24:54
“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங் களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 3:31
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 8:46
இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வ-யுறுத்துகிறான்.
திருக்குர்ஆன் 6:153
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண் பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.
திருக்குர்ஆன் 4:59
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.
திருக்குர்ஆன் 33:36
எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
திருக்குர்ஆன் 5:3
இந்த வசனங்கள் யாவும் இறைச் செய்தியை, குர்ஆனையும் நபிவழியையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
இவ்வாறு நாம் கூறும் போது ஸஹாபாக்களை மதிக்காத, திட்டுகின்ற கூட்டம் என்று நமக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுகின்றார்கள்.
நபித்தோழர்கள் சிறப்பு மிக்கவர்கள், நம்மை விட ஈமானில் சிறந்தவர்கள் என்றெல்லாம் வரக்கூடிய விஷயங்களில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. இதற்கு ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன.
இத்தகைய சிறப்புகள் நபித்தோழர்களுக்கு இருப்பதை நாம் எப்போதுமே மறுத்ததில்லை.
ஆனால் அதே சமயம் இத்தனை சிறப்புகள் உள்ளதால் நபித்தோழர்களின் கருத்துக்களை மார்க்கமாகக் கருதும் எந்தவொரு செயல்பாட்டையும் ஏற்றுக் கொள்ள முடியாது. குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டும் தான் மார்க்கத்தின் ஆதாரங்கள். நபித்தோழர்கள் சிறந்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அவர்களிடமும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும்.
இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை.
சில நபித் தோழர்களின் கருத்துக்களும் செயல்களும் குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக இருந்துள்ளன.
பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளன.
குர்ஆன், ஹதீஸில் இல்லாத சில விஷயங்களை அவர்களாக உருவாக்கினார்கள்.
என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற நூலில் இது குறித்து விரிவாக விளக்கியுள்ளோம்.
எனவே தான் குர்ஆனையும் நபிவழியையும் தவிர வேறு எதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறோம்.
உள்ளதை உள்ளபடி ஏற்று நடக்கும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக!