11) மீஸான்-ஸுபுர்-ஃபுர்கான்
திருக்குர்ஆனின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவது எவ்வாறு அவசியமோ அது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதலுக்கும் செவி சாய்த்து, கட்டுப்படுவது அவசியமாகும். இதை எந்த ஒரு ஹதீஸையும் ஆதாரமாக முன்வைக்காமல் முழுக்க முழுக்க திருக்குர்ஆன் வசனங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு நாம் நிரூபித்தோம்.
இதை மேலும் வலுப்படுத்தக் கூடிய சில சான்றுகளை இப்போது காண்போம்.
அவர்கள் வேதத்தையும், எதனுடன் நமது தூதர்களை அனுப்பினோமோ அதையும் பொய்யெனக் கருதுகின்றனர். பின்னர் அறிந்து கொள்வார்கள்.
தூதர்களுக்கு வேதம் மட்டும் தான் அருளப்பட்டது, வேறு எதுவும் இறைவனால் அருளப்படவில்லை என்றால் இவ்வசனத்தில் இவ்வாறு இறைவன் கூறியிருக்க மாட்டான்.
! வேதத்தையும்
! எதனுடன் நமது தூதர்களை நாம் அனுப்பினோமோ அதனையும்
என்று இறைவன் கூறுகின்றான்.
எனவே வேதத்துடன் அதற்கு விளக்கவுரையான செய்திகளையும் கொடுத்தே இறைவன் தூதர்களை அனுப்புகின்றான். இரண்டுமே இறைவன் புறத்திலிருந்து கிடைத்த செய்திகளேயாகும்.
நாங்கள் வேதத்தை மட்டும் தான் ஏற்றுக் கொள்வோம். முஹம்மது (ஸல்) அவர்கள் எதனுடன் அனுப்பப்பட்டார்களோ அதை ஏற்க மாட்டோம் என்று யாரேனும் கூறினால் அதன் விளைவை அவர்கள் மறுமையில் அறிந்து கொள்வார்கள்.
“பின்னர் அறிந்து கொள்வார்கள்’ என்ற சொற்றொடரை “அவர்கள் நரகத்தையே அடைவார்கள்’ என்ற கருத்தில் திருக்குர்ஆன் பயன்படுத்துகின்றது. எனவே நபிகள் நாயகத்தின் விளக்கத்தை ஏற்க மறுப்போர் நரகவாசிகள் என்பதில் சந்தேகமே இல்லை.
அல்லாஹ்வே உண்மையை உள்ளடக்கிய வேதத்தையும், தராசையும் அருளினான். யுகமுடிவு நேரம்1 அருகில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?
வேதத்துடன் மீஸானையும் இறக்கியதாக அல்லாஹ் இங்கே கூறுகின்றான். மீஸான் என்பதற்கு நேரடிப் பொருள் எடை போடும் கருவி என்பதாகும். தராசை மீஸான் என்று கூறுவது இந்த அடிப்படையில் தான். நன்மை தீமைகளை மறுமையில் மதிப்பிடுவதையும் இறைவன் மீஸான் என்று கூறுகின்றான்.
மீஸானை இறக்குவதாகக் கூறும் போது தராசை இறக்குவதாகப் பொருள் கொள்ள முடியாது. உலகில் நன்மை தீமைகளை எடை போட்டுக் காட்டும் அறிவுரை என்றே பொருள் கொள்ள வேண்டும். வேதத்தை இறக்கியது போலவே மீஸானையும் இறக்கியதாக அல்லாஹ் கூறும் போது இரண்டில் ஒன்றை மறுப்பவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்?
குறிப்பாக இவ்வசனம் நபிகள் நாயகத்தையே நோக்கிப் பேசுகின்றது. “கியாமத் நாள் எப்போது என்பது உமக்கு எப்படித் தெரியும்?” என்று இவ்வசனம் முடிகின்றது. இதிலிருந்து முந்தைய நபிமார்களைப் பற்றி இது பேசவில்லை. நபிகள் நாயகத்தைக் குறித்தே பேசுகின்றது.
நபிகள் நாயகத்துக்கு வழங்கப்பட்ட “கிதாப்” எனப்படுவது குர்ஆன் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட “மீஸான்” என்பது என்ன?
இந்த இடத்திலும் தராசு என்றே பொருள் கொள்வார்களானால் அது முற்றிலும் தவறாகும். ஏனெனில் நபிகள் நாயகத்துக்கு முன்பே தராசு இருந்துள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. எனவே தராசையும், வேதத்தையும் இறக்கினோம் என்பதற்கு “குர்ஆனையும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் எடை போடக் கூடிய போதனைகளையும்’ என்பதே பொருளாக இருக்க முடியும்.
இது போல் மற்ற தூதர்களைப் பற்றிக் குறிப்பிடும் போதும் இது போன்ற வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான்.
நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலைநாட்ட தராசையும் இறக்கினோம். இரும்பையும் இறக்கினோம்.423 அதில் கடுமையான ஆற்றலும், மக்களுக்குப் பயன்களும் உள்ளன. தனக்கும், தன் தூதர்களுக்கும் மறைவாக உதவி செய்வோரை அல்லாஹ் அடையாளம் காட்டுவான். அல்லாஹ் வலிமை உள்ளவன்; மிகைத்தவன்.
மனிதர்கள் நீதியை நிலைநாட்டுவதற்காகவும் நேர்வழி செல்வதற்காகவும் கிதாப், மீஸான் என்ற இரண்டு வழிகாட்டி நெறிகளை இறைவன் அனுப்பியுள்ளான். எனவே மீஸான் என்பது இறைத்தூதர்களின் விளக்கம் தவிர வேறு இருக்க முடியாது. (முந்தைய தொடர்களில் நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியம் என்பதை நாம் நிரூபித்துள்ளதைப் பார்வையிடுக)
நபிமார்கள் வேதத்தை மட்டும் இறைவனிடம் பெற்றுத் தருபவர்கள் அல்லர். வேதமல்லாத இன்னொரு வழிகாட்டுதலையும் இறைவனிடமிருந்து பெற்றுத் தந்தனர் என்பதற்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்.
(முஹம்மதே!) உம்மை அவர்கள் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளி வீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.105
அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் (தூதர்களை) பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளிவீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.
இறைத்தூதர்கள் இரண்டு வழிகாட்டி நெறிகளுடன் அனுப்பப்பட்டனர் என்று இவ்விரு வசனங்களில் அல்லாஹ் கூறுகின்றான்.
கிதாப் என்றாலும் ஸுபுர் என்றாலும் ஏடு என்பதே பொருளாகும். கிதாப் எனும் ஏட்டையும் ஸுபுர் எனும் ஏட்டையும் இறைத்தூதர்களுக்கு வழங்கியதாக அல்லாஹ் கூறுகின்றான்.
கிதாப் என்பதை வேதம் என்று நாம் புரிந்து கொள்கின்றோம். அப்படியானால் கிதாபுடன் அருளப்பட்ட ஸுபுர் என்பது என்ன? இறைவன் அனுப்பிய ஸுபுரை நிராகரிப்பது இறை வேதத்தையே நிராகரிப்பதாக ஆகாதா?
இரண்டு வகையான வஹீயை இறைவன் அருளியுள்ளதால் தான் கிதாபையும், ஸுபுரையும் அனுப்பினோம் என்று கூறுகின்றான்.
நீங்கள் நேர்வழி பெறுவதற்காக வேதத்தையும், (பொய்யை விட்டு உண்மையைப்) பிரித்துக் காட்டும் வழி முறையையும் மூஸாவுக்கு நாம் வழங்கியதை எண்ணிப் பாருங்கள்!
ஃபுர்கான் என்றால் அசத்தியத்திலிருந்து சத்தியத்தை வேறுபடுத்திக் காட்டுவது என்று பொருள். வேதமும் சில இடங்களில் ஃபுர்கான் என்று கூறப்பட்டாலும் இங்கே கிதாபையும், ஃபுர்கானையும் என இரண்டு வழிகாட்டி நெறிகள் மூஸா நபிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
மூஸா நபியவர்களுக்கு வேறு வகையில் அருளப்பட்ட வஹீ தான் இங்கே ஃபுர்கான் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
! கிதாபையும் ஹிக்மத்தையும்
! கிதாபையும் ஹுக்மையும்
! கிதாபையும் இன்னொரு செய்தியையும்
! கிதாபையும் மீஸானையும்
! கிதாபையும் ஸுபுரையும்
! கிதாபையும் ஃபுர்கானையும்
என்றெல்லாம் கிதாபுடன் இன்னொரு செய்தி இணைத்துக் கூறப்பட்டிருக்கும் போது ஒன்றை ஏற்று மற்றதை மறுப்பது குர்ஆனையே மறுப்பதாகும் என்பதில் சந்தேகமில்லை.
! உம்மை விளக்குவதற்காகவே அனுப்பியுள்ளோம்.
! விளக்குவதற்காகவே தவிர உம்மை அனுப்பவில்லை.
! இவர் வசனங்களை ஓதிக் காட்டி, வேதத்தைக் கற்றுத் தருவார்.
! எந்தத் தூதருக்கும் அவரது தாய்மொழியிலேயே வேதத்தை அருளினோம். அவர் விளக்குவதற்காகவே இவ்வாறு செய்தோம்.
! அவர் பேசுவதெல்லாம் வஹீ தான்.
! இறைவனின் வஹீ மூன்று வகைகளில் உள்ளன.
! தூதர்கள் அனுப்பப்படுவதற்கான நோக்கம்.
! அவரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது.
! தூதருக்கும் கட்டுப்படுங்கள்.
என்றெல்லாம் திருக்குர்ஆனில் கூறப்பட்ட பல சான்றுகளையும் ஆதாரங்களையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டி ஹதீஸ்களைப் பின்பற்றுவது அவசியத்திலும் அவசியம் என்பதைச் சந்தேகமற நிரூபித்தோம்.
முடிவாகச் சொல்வதென்றால் நபிகள் நாயகத்தின் விளக்கமாக அமைந்துள்ள ஹிக்மத்தை, மீஸானை, ஃபுர்கானை அதாவது ஹதீஸை யார் நிராகரித்தாலும் அவர்கள் மறுப்பது குர்ஆனைத் தான் என்பதில் ஐயமே இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய வழிகாட்டுதல் இன்றி வேறு வஹீ மூலம் நடைமுறைப்படுத்திய பல விஷயங்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் அங்கீகாரம் செய்துள்ளான். நபியின் கட்டளை தனது கட்டளையே என ஏற்றுள்ளான். அத்தகைய சட்டங்களை காண்போம்.
நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்போரின் கூற்று எந்த அளவுக்கு அறியாமை மிக்கது என்பது அதிலிருந்து உறுதியாகும்.