11) மறைவான ஞானம் அல்லாஹ்விற்கே!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்து. அல்லாஹ்வைத் தவிர அவற்றை வேறு யாரும் அறிய மாட்டார்கள். நாளை நடப்பதையும், கருவில் உள்ளவற்றையும், மழை எப்போது பொழியும் என்பதையும், ஒரு ஆத்மா எப்போது மரணிக்கும் என்பதையும் மறுமை நாள் எப்போது நிகழும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்.
அறிவிப்பவர். இப்னு உமர் ரலி
நூல். (புகாரி: 4697)
–
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் அவர்களிடம்) எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள் (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார் என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல் என்று கூறினார்கள்.
நூல்: (புகாரி: 4001)
நாங்கள் மதீனாவில் ஆசூரா நாளன்று இருந்தோம். அப்போது சில சிறுமிகள் கஞ்சிராக்களை அடித்து பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ருபைய் பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். இது பற்றி அவர்களிடம் நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள், எனது திருமண நாளன்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது இரண்டு சிறுமிகள், பத்ருப் போரில் கொல்லப்பட்ட அவர்களின் முன்னோர்களைப் பற்றி புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தார்கள். அதில் எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார் என்று அவ்விரு சிறுமிகளும் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாதீர்கள். நாளை நடப்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல் ஹுஸைன்,
நூல்: (இப்னு மாஜா: 1897)