11) மன்னிப்பை வேண்டுதல்
“எங்களை மன்னிப்பாயாக! நீயே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்”
எங்கள் இறைவனே! எங்களை மன்னிப்பாயாக!
உலகில் வாழும் பாவம் எல்லா மனிதர்களும் செய்யக்கூடியவர்கள்தான். பாவமே செய்யாத எந்த மனிதனும் உலகில் இல்லை. நபிமார்களாக இருந்தாலும் அவர்கள் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அவர்களிடமும் தவறுகள் குறைவாக நிகழலாம். சிறிய தவறுகள் நிகழலாம். ஆனால் அவர்கள் தவறே செய்யமாட்டார்கள் என்று சொல்லவே முடியாது. இதில் இறைத்தோழர் இப்ராஹீம் நபியும் விதிவிலக்கல்ல!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால் அல்லாஹ் உங்களைப் போக்கிவிட்டு பாவம் செய்கிற வேறொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவார்கள். அவர்களை அல்லாஹ் மன்னிப்பான்.
நூல்: (முஸ்லிம்: 5304)
நாம் பாவம் செய்யக் கூடியவர்களாக இருந்தாலும் நமது பாவத்திற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடவேண்டும் என மார்க்கம் கற்றுத் தருகிறது.
பாவம் செய்பவர் இப்ராஹீம் நபியாக இருந்தாலும், ஏனைய நபிமார்களாக இருந்தாலும் இன்னும் உலகில் வாழும் எந்த மனிதராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் அல்லாஹ்தான் மன்னிக்கவேண்டும்.
அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோருவீராக! அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.
எனவேதான் இப்ராஹீம் நபி அல்லாஹ்விடமே மன்னிப்பை எதிர்பார்க்கிறார்கள்.
இறுதித் தீர்ப்பு நாளில் அவன் என் குற்றங்களை மன்னிக்க வேண்டும் என அவனிடமே ஆதரவு வைக்கிறேன்.
ஆனால் இன்று சிலர் நபிமார்களிடமும், நல்லவர்களிடமும் மன்னிப்பை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இது மாபெரும் இணைவைப்பாகும். இறை நேசர் இப்ராஹீம் நபி அவர்களே இறைவனிடம் மன்னிப்பை எதிர்பார்க்கும்போது நாம் மற்றவர்களிடம் எப்படி மன்னிப்பை வேண்ட முடியும்?
இறைத்தோழர் இப்ராஹீம் நபியவர்கள் நம்மைப் போன்று பாவங்களில் மூழ்கித் திளைக்கவில்லை. பெரும், பெரும் பாவங்கள் செய்யவில்லை என்றாலும் தான் செய்த சில பாவங்களை நினைத்து அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்கிறார்கள். ஆனால் நமது நிலையோ பாவங்களின் மறு பெயராக வாழ்ந்து கொண்டிருந்தாலும் அதைப் பற்றிய எந்தக் கவலையுமின்றி, இறைத் தண்டனையையும் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நமது பாவத்திற்குப் பல்வேறு நியாயங்களைக் கூறிவருகிறோம். இவ்வாறு இருக்கும் நாம் இப்ராஹீம் நபியின் இந்த துஆவை படிப்பினையாக எடுத்துக்கொண்டு நமது பாவத்தை நினைத்து அல்லாஹ்விடம் அதிகமதிகம் மன்னிப்பு தேடவேண்டும். அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடுவதில் அலட்சியமாகவோ, அவ நம்பிக்கையாகவோ இருந்து விடாமல் அல்லாஹ்விடம் அதிகமாக மன்னிப்பு தேடுவோமாக!