10) பரகத் நிறைந்த உணவு

நூல்கள்: உணவு ஓர் இஸ்லாமிய பார்வை

பரகத் என்பதை அபிவிருத்தி என தமிழில் மொழி பெயர்க்கிறோம். உண்மையில் அதன் பொருளை ஒற்றை வார்த்தையில் மொழி பெயர்ப்பது சற்று கடினமே. ஒரு பொருளிலிருந்து இயற்கையாக அடையும் பயனை விட அதிக அளவு பலன் கிடைத்தால் அது இறையருளால் நடந்ததாகும்.இந்த மறைமுக இறையருளுக்குத் தான் பரகத் என்று சொல்லப்படுகிறது.

ஒரு மணி நேரத்தில் எல்லோரும் செய்யும் வேலையை விட பத்து மடங்கு வேலையை ஒருவர் செய்தால் அந்த நேரத்தை பரகத் நிறைந்த நேரம் என்று கூறலாம். இருவருக்கு மட்டுமே போதுமானது என நாம் கருதுகிற உணவை நான்கைந்து பேர் சாப்பிட்டு வயிறு நிறைந்தால் அதை பரகத் நிறைந்த உணவு என்று கூறலாம். நம்மிடம் உணவு குறைவாக இருந்தாலும் நிறைவாக வாழ முடியும் அதில் பரகத் இருந்தால். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் எதைக் கேட்டாலும் அதில்
பரக்கத்தையும் சேர்த்துக் கேட்பார்கள்.

என் தந்தை நபி (ஸல்) அவர்களின் வாகனக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் செய்வாயாக! இவர்களை மன்னித்து அருள் புரிவாயாக! (என்று பிரார்த்தித்தார்கள்) அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் (ரழி) நூல்:  (முஸ்லிம்: 3805)(திர்மிதீ: 3500)(அபூதாவூத்: 3241), (அஹ்மத்: 17013, 17015, 17035).

அபூதல்ஹா (ரழி) அவர்கள் தமது வீட்டில் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளிப்பதற்காக உணவு தயாரித்து வைத்துக்கொண்டு நபியவர்களை அழைத்து வரச் சொன்னார்கள். நபியவர்களோ தம்முடனிருந்த தோழர்களையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள் . இத்தனை பேர் வந்துவிட்டார்களே உணவுக்கு என்ன செய்வது? என அபூதல்ஹாவும், அவரது மனைவியும் கவலை கொள்ள வீட்டிற்குள் அனுமதி கேட்டு உள்ளே நுழைந்த நபி (ஸல்) அவர்கள் இருக்கிற உணவை எடுத்து வைக்கச் சென்னார்கள்.

அதன் மீது கைவைத்து பரகத்திற்காக துஆச் செய்தார்கள். பின்பு வந்திருந்த தோழர்களைப் பத்துப் பத்துப் பேராக உள்ளே அழைத்து பிஸ்மில்லாஹ் கூறி சாப்பிடுமாறு கட்டளையிட்டார்கள். வந்திருந்த எழுபது எண்பது பேரும் வயிறு நிரம்ப சாப்பிட்டார்கள், நபியவர்களும் சாப்பிட்டார்கள். மீதமிருந்ததை வீட்டிலிருந்தோரும் சாப்பிட்டு முடித்தார்கள். ஹதீஸின் சுருக்கம் அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக்
(ரழி)நூல்: (முஸ்லிம்: 3802, 3801), (புகாரி: 3578, 5381, 5450, 6688), (திர்மிதீ: 3563), (அஹ்மத்: 1280, 12946, 13058).

இந்த நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்கள் பரகத்திற்காக பிரார்த்தனை செய்கிறார்கள். உடனடியாக அந்த இறையற்புதத்தைக் கண்டு அனுபவிக்கவும் செய்கிறார்கள்.