11) தொடர் உதிரப்போக்கு

நூல்கள்: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

11) தொடர் உதிரப்போக்கு

மாதவிடாய் மாதாமாதம் குறிப்பிட்ட நாட்கள் இரத்தம் வெளிப்பட்டு நின்று விடும். பின்னர் அடுத்தடுத்த மாதங்களிலும் இப்படி ஏற்படும். அதாவது மாதத்தில் சில நாட்கள் இரத்தப் போக்கும் பல நாட்கள் இரத்தப் போக்கு இல்லாமலும் இருக்கும். இது தான் மாதவிடாயில் சேரும்.

சில பெண்களுக்கு மாதம் முழுவதும் இரத்தப் போக்கு நிற்காமல் வந்து கொண்டே இருக்கும். தூய்மையாகுதல் என்பதே இவர்களுக்கு ஏற்படாது. இது மாதவிடாயில் சேராது. உதிரப் போக்கு எனும் நோயாகும். இது லட்சங்களில் ஒன்று அளவில் குறைவான பெண்களுக்கு ஏற்படும் நோயாகும்.

இவர்களுக்கு காலமெல்லாம் இரத்தம் போய்க் கொண்டு இருப்பதால் இவர்கள் காலமெல்லாம் தொழாமலும் நோன்பு நோற்காமலும் இருக்கக் கூடாது. இவர்கள் எப்படி நடந்து கொள்வது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கி உள்ளார்கள்.

 عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ امْرَأَةً كَانَتْ تُهَرَاقُ الدَّمَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَفْتَتْ لَهَا أُمُّ سَلَمَةَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: لِتَنْظُرْ عَدَدَ اللَّيَالِي وَالْأَيَّامِ الَّتِي كَانَتْ تَحِيضُ مِنَ الشَّهْرِ قَبْلَ أَنْ يُصِيبَهَا الَّذِي أَصَابَهَا فَلْتَتْرُكِ الصَّلَاةَ قَدْرَ ذَلِكَ مِنَ الشَّهْرِ، فَإِذَا خَلَّفَتْ ذَلِكَ فَلْتَغْتَسِلْ، ثُمَّ لِتَسْتَثْفِرْ بِالثَّوْبِ ثُمَّ لِتُصَلِّ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண் இரத்தப்போக்கு நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அவருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சட்ட விளக்கம் கேட்டபோது இந்த நோய் வருவதற்கு முன் அந்தப் பெண்ணுக்கு வழக்கமாக மாதவிடாய் வந்து கொண்டிருந்த நாட்களைக் கழித்து அந்த நாட்கள் முடிந்ததும் குளித்து விட்டுத் துணியால் இறுகக் கட்டிக் கொண்டு அவள் தொழ வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி),

நூல்: நஸாயீ

 جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ، إِنَّمَا ذَلِكِ عِرْقٌ، وَلَيْسَ بِحَيْضٍ، فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي – قَالَ: وَقَالَ أَبِي: – ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلاَةٍ، حَتَّى يَجِيءَ ذَلِكَ الوَقْتُ

பாத்திமா பின்த் அபீஹுபைஷ் என்ற பெண்மணி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் உயர் இரத்தப்போக்கு ஏற்படும் ஒரு பெண் ஆவேன்; நான் சுத்தமாவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள், “இல்லை! இது இரத்தக் குழா(யிலிலிருந்து வருவதே)யாகும். மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு; அது நின்றுவிட்டால் இரத்தத்தைக் கழுவி(குளித்து)விட்டுத் தொழுதுகொள்!” என்று கூறினார்கள்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அப்பெண்மனியிடம்) “பின்னர் அடுத்த மாதவிடாய் காலம் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூ செய்துகொள்!” என்றும் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

(புகாரி: 228)

இந்த நோய் வருவதற்கு முன் மாதம் தோறும் த்தனை நாட்கள் மாதவிடாய் வந்தத்தோ அத்தனை நாட்கள் தொழுகையை விட்டு விட்டு மற்ற நாட்களில் அவர்கள் தொழ வேண்டும்.

இந்த நோய் வருவதற்கு முன் மாதம் ஐந்து நாட்கள் மாதவிடாய் வந்து கொண்டு இருந்தால் இந்த நோய் வந்தவர்கள் அந்த ஐந்து நாட்களை மாதவிடாய் நாட்களாக அவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து இரத்தம் வந்து கொண்டு இருந்தாலும் அவர்கள் தொழ வேண்டும். ஆயினும் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்ய வேண்டும் என்பது இவர்களுக்கான சிறப்புச் சட்டமாகும்.

நோன்பைப் பொருத்தவரை இந்த நோயின் காரணமாக இவர்கள் நோன்பு நோற்க முடியாது. நோன்பு நோற்றால் பாதிப்பு ஏற்படும் என்று இருந்தால் நிரந்தர நோயாளிகளைப் போல் நோன்பு நோற்காமல் இருக்கலாம். நோன்பு நோற்பதால் பாதிப்பு ஏற்படாது என்றால் அவர்கள் நோன்பு நோற்க வேண்டும்.

சிலருக்கு சிறு நீர் கசிந்து கொண்டே இருக்கும். காற்று போய்க் கொண்டே இருக்கும். தொழுகையில் இருக்கும் போதே இப்படி நடக்கும். இந்த நிலையில் உள்ளவர்கள் சிறு நீர் கசியும் நிலையில் காற்று போய்க் கொண்டு இருக்கும் நிலையில் தொழலாம். ஆனால் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்ய வேண்டும்.

உதிரப்போக்கு ஒரு நோய் என்பது போல் இந்த நிலையும் ஒரு நோய் என்பதால் அதே சட்டம் இவர்களுக்கும் பொருந்தும்.